தமிழ் சினிமாவில் மறக்க முடியாத தீபாவளி பாடல்கள்...

சினிமாவில் தீபாவளிக்கு என்று ஒரு பாடல் இருந்தால் அதை நாம் மறக்கவே மாட்டோம். அதை நம் உதடுகள் அதிகம் முணுமுணுத்த காலங்களெல்லாம் உண்டு.

Update:2023-11-07 00:00 IST
Click the Play button to listen to article

தீபாவளி என்றாலே சந்தோஷம் தான். நம் வாழ்நாளில் எத்தனையோ தீபாவளியை கொண்டாடி இருப்போம். இருந்தும் நம் சிறு வயதில் கொண்டாடிய தீபாவளிகள் நம் மனதை விட்டு நீங்கவே நீங்காது. காரணம், புத்தாடைகள் அணிவது, பட்டாசு வாங்குவது , பலகாரங்கள் சுட உதவுவது, ஸ்வீட்ஸ்கள் வாங்க செல்வது என பல விஷயங்களில் நாம் பங்கேற்று மகிழ்ந்தது அந்த வயதில் தான். அப்படிப்பட்ட தீபாவளிக்கு இனிமை சேர்ப்பது சினிமா என்றுதான் சொல்ல வேண்டும். குறிப்பாக, சினிமாவில் தீபாவளிக்கு என்று ஒரு பாடல் இருந்தால் அதை நாம் மறக்கவே மாட்டோம். அதை நம் உதடுகள் அதிகம் முணுமுணுத்த காலங்களெல்லாம் உண்டு. இருந்தும் சமீபகாலமாக தீபாவளிக்கென்று ஸ்பெஷலான பாடல்கள் எந்த படத்திலும் பெரியளவில் இடம் பெறுவதில்லை. அந்த வகையில் தமிழ் சினிமாவில் இதுவரை மறக்க முடியாத தீபாவளி பாடல்கள் என்னென்ன வெளிவந்துள்ளன என்பதை இந்த தொகுப்பில் காணலாம்.

கல்யாணப் பரிசு - உன்னைக் கண்டு நான் ஆட

நம் வீடுகளில் பிளாக் அண்ட் ஒயிட் தொலைக்காட்சி கூட அறிமுகமாகாத காலத்தில், ஒவ்வொரு தீபாவளி நாளன்றும் வானொலியில் தவறாது ஒலிக்கும முதல் பாடல் என்றால் அது 'கல்யாண பரிசு' படத்தில் வரும் 'உன்னைக் கண்டு நானாட, என்னைக் கண்டு நீயாட, உல்லாசம் பொங்கும் இன்ப தீபாவளி' பாடலாகத்தான் இருக்கும். இயக்குனர் ஸ்ரீதரின் கைவண்ணத்தில் 1958 ஆம் ஆண்டு வெளிவந்த இந்த படத்தில் ஜெமினி கணேசன், சரோஜா தேவி மற்றும் விஜயகுமாரி ஆகியோர் நடித்திருந்தனர். இந்த படத்தில் தான் சரோஜாதேவி கதாநாயகியாக முதன் முதலில் அறிமுகமானார். அதோடு, அதுவரை பாடகராக மட்டுமே தமிழில் அறியப்பட்டிருந்த ஏ.எம். ராஜா ஒரு இசை அமைப்பாளராக அறிமுகமாகி பிரபலமானதும் இதற்குப் பிறகுதான். இப்படத்தில் இடம் பெற்றிருந்த 'காதலிலே தோல்வியுற்றான்' உட்பட அனைத்து பாடல்களும் தமிழ் சினிமா ரசிகர்களிடையே பெரும் புகழைப் பெற்ற பாடல்களாக இருந்தாலும், 'உன்னைக் கண்டு நானாட' பாடல் மட்டும் காலத்தால் அழிக்க முடியாத பாடலாக மாறிப்போனது. பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் எழுதிய வரிகளுக்கு, பி.சுசீலா பாடியிருந்த இந்த பாடலில் சிறு பெண்ணைப் போலத் துள்ளித் துள்ளி ஆடும் சரோஜா தேவி, தன் அக்கா குடும்பத்தினரான ஜெமினி கணேசன், விஜயகுமாரி மற்றும் அவர்களது மகனுடன் சேர்ந்து தீபாவளியை கொண்டாடடுவது போல் பாடல் காட்சி அமைக்கப்பட்டிருக்கும். குறிப்பாக, இப்பாடலில் தன் அக்கா மகனுக்கு அறிவுரையை கூறியவாறே, தீப ஒளி திருநாளின் பெருமையை சொல்வார் சரோஜா தேவி. அப்போது 'கன்னத்தில் ஒண்ணே ஒண்ணு கடனாகத் தாடா' என்று தன் உள்ளச் சோகத்தை அழுத்திக் கொண்டு, ஜெமினி கணேசனின் நினைவுகளை மறைத்தவாறே சரோஜா தேவி ஆடும் போது நம் உள்ளங்களும் சற்றுக் கரைந்துதான் போகும். இதேபடத்தில், பின்னர் பிரிவின் வலியோடு ஜெமினி கணேசன் இதே பாடலை சில வார்த்தைகள் மாற்றங்களோடு பாடியிருப்பார் என்பது குறிப்பிடத்தக்க ஒன்று.


'கல்யாண பரிசு' படத்தில் காதல் மன்னன் ஜெமினி கணேசன், சரோஜா தேவி 

பூவே பூச்சூடவா - பட்டாசு சுட்டு சுட்டு போடட்டுமா

1984-ஆம் ஆண்டு பாசில் இயக்கத்தில் வெளிவந்த `நோக்காத தூரத்து கண்ணும் நாட்டு’ என்கிற மலையாள திரைப்படம், தமிழில் 'பூவே பூச்சூடவா' என்கிற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. 1985-ஆம் ஆண்டு வெளிவந்த இப்படத்தில் நாட்டியப்பேரொளி பத்மினிக்கு பேத்தியாக, சுந்தரி என்னும் கதாபாத்திரத்தில் நடித்து தமிழில் முதன் முதலில் அறிமுகமானார் நதியா. முதல் படத்திலேயே அவரது திறமையை நிரூபிக்கும் விதமாக நடிப்பிற்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரத்தில் நடித்திருந்த இவர் படத்தின் முதல் பாதியில் குறும்புத்தனத்தையும், இரண்டாம் பாதியில் அனைவரையும் கலங்க வைக்கும் இயல்பான நடிப்புத் திறனையும் வெளிப்படுத்தி புதுமுக நடிகை என்று சொல்ல முடியாத அளவிற்கு அனைவரின் பாராட்டையும் பெற்றார். அப்படிப்பட்ட இப்படத்தில் தான் பாடகி சித்ராவும் 'சின்னக்குயில் பாடும் பாட்டு கேட்குதா' என்ற பாடலின் மூலம் இசைஞானி இளையராஜாவால் தமிழில் அறிமுகப்படுத்தப்பட்டார். இது தவிர மற்றொரு முக்கிய பாடலான 'பட்டாசு சுட்டு சுட்டு போடட்டுமா' பாடலையும் சித்ரா இப்படத்தில் பாடியிருந்தார். கவிஞர் வைரமுத்துவின் வரிகளுக்கு துள்ளலான நடனமாடிய நதியா, தன் சிறார் நண்பர்களுடன் சேர்ந்து பாட்டியை மகிழ்விக்கும் விதமாக தீபாவளி கொண்டாட்டத்தில் ஈடுப்படுவது போல் பாடலின் காட்சி அமைக்கப்பட்டிருக்கும். அப்போது கையில் கம்பி மத்தாப்போடு நதியா போடும் ஆட்டம், அவரின் ஸ்டைலை போலவே பலரின் கவனம் பெற்றது. அந்த சமயத்தில்தான் தமிழகத்தில் வண்ணத் தொலைக்காட்சிகள் பிரபலமாக துவங்கிய காலம் என்பதால், தீபாவளி தினத்தை வண்ண தீபாவளியாக ஒவ்வொரு வீடுகளிலும் மாற்றிய முதல் பாடல் என்றால், அது இந்த பாடலாகத் தான் இருக்க முடியும்.


'பூவே பூச்சூடவா' படத்தில் பட்டாசு சுட்டு சுட்டு போடட்டுமா பாடலில் நடிகை பத்மினி மற்றும் நதியா

நாயகன் - நான் சிரித்தால் தீபாவளி

இத்தனை ஆண்டுகளாக, எத்தனையோ தமிழ் படங்களில், எத்தனையோ ஆயிரம் பாடல்கள், எத்தனையோ பாடலாசிரியர்களால் எழுதப்பட்டிருக்கின்றன. ஆனால், 'தீபாவளி' என்று சொன்னாலே முதலில் நினைவுக்கு வரக்கூடிய ஒரே பாடல் என்றால், அது 1987 ஆம் ஆண்டு வெளிவந்த 'நாயகன்' படத்தில் வரும் 'நான் சிரித்தால் தீபாவளி' பாடலாகத் தான் இருக்க முடியும். காரணம், 90களின் துவக்கத்தில் தூர்தர்ஷன் என்ற ஒரே ஊடகம் மட்டுமே பிரதான பொழுதுபோக்கு அம்சமாக பலரது வீடுகளிலும் இருந்து வந்தது. இதனால் அதில் ஒளிபரப்பட்ட ஒவ்வொரு நிகழ்ச்சிகளும் பசு மரத்து ஆணி போல 80, 90களை கடந்து வந்தவர்களுக்கு இன்றளவும் இருந்து வருகிறது. அதிலும் குறிப்பாக ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் இரவில் ஒளிபரப்பாகும் 'ஒலியும் ஒளியும்' நிகழ்ச்சியை அவ்வளவு எளிதில் யாரும் மறந்திருக்க மாட்டார்கள். அந்த நிகழ்ச்சியை பார்ப்பதற்காகவே, அடுப்படி வேலைகளை தடாலடியாக முடித்துவிட்டு அமரும் இல்லத்தரசிகளும், பக்கத்து வீட்டில் கேட்காமலேயே படார் என நுழைந்த சிறார்களும் இன்றளவும் அதனை நினைவு கூறுவார்கள். அப்படிப்பட்ட 'ஒலியும் ஒளியும்' நிகழ்ச்சியில் பல ஆண்டுகளாக தீபாவளி என்று வந்தாலே முதலில் ஒளிபரப்பப்படும் பாடல் என்றால் அது 'நான் சிரித்தால் தீபாவளி' பாடலாகத்தான் இருந்தது. இத்தனைக்கும், இந்த பாடலில் நான் சிரித்தால் தீபாவளி என துவக்கத்தில் மட்டுமே 'தீபாவளி' என்ற வார்த்தையை பயன்படுத்தி விட்டு, பாடல் முழுவதுமே ஆண்களை வசீகரித்து மயக்கி அழைக்கும் வரிகளாக பாடலாசிரியர் புலமைப்பித்தன் எழுதியிருப்பார். காரணம் படத்தில் ஒரு முக்கியமான நிகழ்விற்கு பிறகு கமல்ஹாசனை அவரது நண்பரான ஜனகராஜ் ஒரு இடத்திற்கு அழைத்து செல்வார். பெண்கள் நிறைந்திருக்கும் அந்த இடத்தில் நடனமாடும் மங்கைகள் பாடுவதாகத்தான் இந்த பாடல் காட்சி அமைக்கப்பட்டிருக்கும். இளையராஜா இசையில் கே. ஜமுனா ராணி மற்றும் எம்.எஸ் ராஜேஸ்வரி எனும் இரு பழம்பெரும் பாடகிகள் பாடிய இந்த பாடல் அன்று பட்டி தொட்டியெல்லாம் கலக்கியதோடு, இன்றும் தீபாவளி என்றாலே நினைவுக்கு வரக்கூடிய அடையாளமாகவும் இருந்து வருகிறது.


'நாயகன்' படத்தில் நான் சிரித்தால் தீபாவளி பாடல் காட்சியில் கமல்ஹாசன்  

இந்த பாடல்கள் தவிர, 'குரு' படத்தில் பள்ளி பிள்ளைகளுடன் கமல்ஹாசன் குதூகலமாக பாடும் 'ஆடுங்கள் பாடுங்கள் பிள்ளை பொன்வண்டுகள்' பாடல், 'மூன்றாம் பிறை' படத்தில் ஸ்ரீதேவி தன் கல்லூரி நண்பர்களுடன் கடற்கரையில் பாடும் 'வானெங்கும் தங்க விண்மீன்கள்' பாடல், 'புதுக்கவிதை' படத்தில் தன் காதல் நினைவுகளை கண்ணீரோடு பகிர்ந்தவாறே, ரஜினிகாந்த் தன் தங்கை மகளுடன் தீபாவளி கொண்டாடும் 'வா வா வசந்தமே' பாடல், 'மூன்று தெய்வங்கள்' படத்தில் சிவாஜிகணேசன் தன் குடும்பத்தினருடன் கொண்டாடும் 'தாயெனும் செல்வங்கள் தாலாட்டும் தீபம்' பாடல், 'நான் புடிச்ச மாப்பிள்ளை' படத்தில் ஜனகராஜ் தன் மகள் மற்றும் மாப்பிள்ளையோடு இணைந்து தலை தீபாவளி கொண்டாடும் 'தீபாவளி தீபாவளிதான்' பாடல், 'விரலுக்கேத்த வீக்கம்' படத்தில் வடிவேலு, லிவிங்ஸ்டன், விவேக் குடும்பத்தினர் இணைந்து குதூகலமாய் ஆடும் 'அல்லி அல்லி தீபாவளி' பாடல், 'ரமணா' படத்தில் விஜயகாந்த் குடும்பத்தினர் காலனி மக்களோடு இணைந்து சந்தோஷமாக கொண்டாடும் 'வானம் அதிரவே... வானம் வெடிக்கலாம்' பாடல் என எண்ணற்ற பாடல்கள் இன்றளவும் தீபாவளி நினைவுகளை ஏந்தி பல இடங்களில் அவ்வப்போது ஒலித்து வருகிறது.


தமிழ் சினிமாவில் 1980 மற்றும் 90-களில் வெளிவந்த தீபாவளி பாடல்கள்

இருப்பினும் இத்தகைய பாடல்கள் இன்றைய 2கே கிட்ஸ்களுக்கு பெரியளவில் தெரியாமல் இருந்தாலும், தல அஜித் நடிப்பில் வெளிவந்த 'அட்டகாசம்' படத்தில் வரும் 'எட்டுத்திக்கும் என்ன பத்தி கேளு' பாடலையும், தளபதி விஜய் நடிப்பில் வெளிவந்த 'சிவகாசி' படத்தில் வரும் 'தீபாவளி தீபாவளி ' பாடலையும் அவ்வளவு எளிதில் அவர்கள் மறந்திருக்க மாட்டார்கள். இது தவிர தன் காதலி வீட்டுக்கு வந்த நாளை தீபாவளியாக கொண்டாடும் 'சண்டக்கோழி' படத்தில் வரும் 'தாவணி போட்ட தீபாவளி' பாடலும் இன்றைய 2கே கிட்ஸ்களுக்கு ஓரளவு தெரிந்த பாடலாக இருக்கிறது. இருந்தும், முதலில் சொன்ன மூன்று பாடல்களே இன்றளவும் 'தீபாவளி' என்ற வார்த்தைக்கு முக்கிய அடையாளமாக காலம் கடந்தும் இருந்து வருகின்றன.


2000-த்தின் தொடக்கத்தில் அஜித் மற்றும் விஜய் படங்களில் இடம்பெற்ற தீபாவளி பாடல்கள் 

Tags:    

மேலும் செய்திகள்