விரைவில் சிம்புவுக்கு திருமணம்! இம்முறை தகவல் உண்மை? - சினிமா டாக்ஸ்!

இப்போது மீண்டும், சிம்புவும் நிதி அகர்வாலும் காதலித்து வருவதாகவும் இருவரும் விரைவில் திருமணம் செய்துகொள்ளப்போவதாகவும் பேச்சுகள் அடிபடுகின்றன. ஆனால் இந்த தகவல் எந்த அளவிற்கு உண்மை என்பது அவர்கள் தரப்பிலிருந்து வரும் விளக்கத்தின்மூலம்தான் தெரியவரும்.

Update:2024-10-01 00:00 IST
Click the Play button to listen to article

சோஷியல் மீடியாவை திறந்தாலே பிரியங்கா சோப்ரா மற்றும் சமந்தாவின் புகைப்படங்கள் ஒருபுறம் என்றால், சிம்புவுக்கு கல்யாணமாம்! கமல் படம் இத்தனைக் கோடிக்கு விற்பனையா? என்பதுபோன்ற டாக்ஸ்தான். சரி இந்த வாரம் கோலிவுட் முதல் ஹாலிவுட் வரை என்னென்ன பேசுகிறார்கள்? வாங்க பார்க்கலாம்.

விரைவில் சிம்புவுக்கு திருமணம்

தமிழ் சினிமாவில் சில நடிகர்களையும், திருமண வதந்திகளையும் பிரிக்கவே முடியாது. அதில் எப்போதும் முதலிடத்தில் இருப்பவர் சிம்பு. கதாநாயகனாக அறிமுகமான ஆரம்பகாலத்திலிருந்தே காதல் சர்ச்சைகளில் சிக்கிவந்த இவர், நயன்தாரா, ஹன்சிகா போன்றோருடனான காதல்களை கடந்துவந்த பின்பு, சினிமாவிலிருந்து சிலகாலம் விலகியிருந்துவிட்டு, பின்னர் மீண்டும் ஆக்டிவாக நடித்துவருகிறார். இந்நிலையில் 2021ஆம் ஆண்டு சுசீந்திரன் இயக்கத்தில் வெளியான ‘ஈஸ்வரன்’ படத்தில் ஜோடியாக நடித்த நிதி அகர்வாலை சிம்பு காதலிப்பதாக அப்போதே வதந்திகள் பரவின.


நிதி அகர்வாலுடன் கிசுகிசுக்கப்படும் சிம்பு

ஆனால் அடுத்தடுத்த படங்களில் அவர் பிஸியானதால் அந்த பேச்சு அப்படியே மறைந்துபோனது. இந்நிலையில் இப்போது மீண்டும், சிம்புவும் நிதி அகர்வாலும் காதலித்து வருவதாகவும் இருவரும் விரைவில் திருமணம் செய்துகொள்ளப்போவதாகவும் பேச்சுகள் அடிபடுகின்றன. ஆனால் இந்த தகவல் எந்த அளவிற்கு உண்மை என்பது அவர்கள் தரப்பிலிருந்து வரும் விளக்கத்தின்மூலம்தான் தெரியவரும்.

எஸ்.பி.பி பெயரில் சாலை

பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி பாலசுப்பிரமணியம், கொரோனா தொற்று காரணமாக கடந்த 2020 ஆம் ஆண்டு செப்டம்பர் 25ஆம் தேதி மரணமடைந்தார். இந்நிலையில் எஸ்பிபியின் இல்லம் அமைந்திருக்கும் நுங்கம்பாக்கம் காம்தார் நகர் பிரதான சாலைக்கு எஸ்.பி. பாலசுப்பிரமணியம் சாலை என பெயரிடவேண்டி, அவருடைய மகன் எஸ்பிபி சரண் முதலமைச்சரிடம் மனு கொடுத்திருந்தார். அந்த மனுவை ஏற்றுக்கொண்ட முதலமைச்சர் அவரது 4வது நினைவு நாளான செப்டம்பர் 25ஆம் தேதியன்று, காம்தார் சாலைக்கு எஸ்.பி. பாலசுப்பிரமணியம் சாலை என பெயரிடப்பட்டிருப்பதாக அறிவிப்பு வெளியிட்டார்.


 மறைந்த பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் பெயரில் சாலை

இதற்கு நன்றி தெரிவிக்கும்விதமாக எஸ்பிபி சரண் தனது எக்ஸ் தள பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், முதலமைச்சரை நேரில் சந்திக்க முடியாவிட்டாலும், தலைமை செயலகத்திற்கு சென்று மனு கொடுத்த 36 மணி நேரத்திற்குள்ளாகவே தனது அப்பாவின் பெயரை சாலைக்கு சூட்டியதற்காக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கும், அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கும் நன்றி தெரிவித்துள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் உட்பட பல்வேறு மொழிகளில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடி உலகெங்கும் பிரசித்தி பெற்ற எஸ்பிபி, பத்மஸ்ரீ, பத்மவிபூஷன் உள்ளிட்ட பல மத்திய, மாநில விருதுகளை வென்றுள்ளார்.

டிஜிட்டல் ரைட்ஸே இவ்வளவா?

கமல்ஹாசன் - மணிரத்னம் கூட்டணியில் விரைவில் வெளியாகவிருக்கிறது ‘தக் லைஃப்’. 37 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இந்த கூட்டணி இணைந்திலிருந்தே படத்தின்மீதான எதிர்பார்ப்பானது எக்கச்சக்கமாக இருந்தது. ஆனால் மக்களவை தேர்தல் மற்றும் ‘இந்தியன் 2 & 3’ படப்பிடிப்பு என கமல் பிஸியாக இருந்ததால் படப்பிடிப்பு இடைவெளி விட்டு விட்டு நடந்து வந்தது. இந்நிலையில் செப்டம்பர் மாத இறுதிக்குள் படப்பிடிப்பு நிறைவடையும் என ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில் படப்பிடிப்பு ஒருவழியாக நிறைவடைந்துவிட்டது. படம் குறித்த அடுத்த அப்டேட்டுக்காக காத்திருந்த ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்திருக்கிறது படக்குழு.


‘தக் லைஃப்’ திரைப்படத்தில் இணைந்திருக்கும் கமல் - மணிரத்னம் கூட்டணி 

‘தக் லைஃப்’ திரைப்படத்தின் டிஜிட்டல் ரைட்ஸ் ரூ.149.7 கோடிக்கு விற்கப்பட்டுள்ளதாக தெரிவித்திருக்கிறது. இதுவரை டிஜிட்டலுக்கு விற்கப்பட்ட தமிழ் படங்களிலேயே அதிக விலைக்கு போன படம் என்ற சிறப்பை பெற்றிருக்கிறது இப்படம். இந்த மகிழ்ச்சியுடன் சேர்த்து கமல்ஹாசன் சினிமாவில் அறிமுகமாகி 65 ஆண்டுகள் நிறைவடைந்ததையும் கொண்டாடி சிறப்பித்திருக்கிறது படக்குழு.

96 இரண்டாம் பாக கதை இதுதான்!

‘96’ படத்தில் ராம் - ஜானுவின் காதலை இன்றுவரை ரசிகர்கள் கொண்டாடிவரும் நேரத்தில் அடுத்த பாகம் எடுக்கவிருப்பதாகக் கூறி கடந்த சிலவாரங்களுக்கு முன்பு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார் அப்படத்தின் இயக்குநர் பிரேம்குமார். இந்நிலையில் படத்தின் கதையை ஓரளவு எழுதிவிட்டதாகவும் அவர் கூறியிருந்தார். இதுவும் காதல் கதையாகத்தான் இருக்கும் என ரசிகர்கள் பேசிவந்த நிலையில், அதுகுறித்து அவரிடமே கேட்கப்பட்டது.


‘96’ இரண்டாம் பாகம் குறித்து இயக்குநர் பிரேம்குமார் கொடுத்த அப்டேட்

அதற்கு முதல் பாகம் முழுக்க முழுக்க காதல் கதையாக இருந்தாலும் இரண்டாம் பாகம் அப்படியிருக்காது என்று கூறி, ரசிகர்களின் கனவுக்கோட்டையை உடைத்துவிட்டார். அதேசமயம், இப்படம் காதல் மட்டும் என்றில்லாமல் குடும்ப பிரச்சினைகளை மையமாகக்கொண்ட ஒரு உணர்வுப்பூர்வமான கதையாக இருக்கும் என்று கூறி ரசிகர்களை ஆறுதல்படுத்தியிருக்கிறார். இரண்டாம் பாகத்திலும் விஜய் சேதுபதியும், திரிஷாவும் சேர்ந்து நடிக்கவிருப்பதாக கூறப்படும் நிலையில் அடுத்தடுத்த அப்டேட்ஸுக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

இந்தியாவின் பணக்கார திரைக்குடும்பம்

இந்திய சினிமாவில் சொத்துமதிப்பு அதிகமுள்ள குடும்பங்கள் யார் என்று கேட்டாலே அனைவரும் கைகாட்டுவது அக்கினேனி மற்றும் கபூர் குடும்பங்களைத்தான். இவர்களுடைய குடும்பங்களில் மூன்று தலைமுறைக்கும்மேல் அனைவருமே சினிமாவில் ஜொலித்துவருகின்றனர். பொதுவாகவே பிற திரைப்படத்துறைகளுடன் ஒப்பிடுகையில் தெலுங்கு திரையுலகில் நிறைய பணக்கார குடும்பங்கள் இருக்கின்றன. அந்த வரிசையில் அக்கினேனி மற்றும் கபூர் குடும்பத்தை பின்னுக்கு தள்ளி அதிக சொத்துமதிப்புக்கொண்ட குடும்பம் என்ற பெயரை பெற்றிருக்கிறது சிரஞ்சீவி குடும்பம்.


நாட்டின் பணக்கார சினிமா குடும்பம் என பெயர்பெற்றிருக்கும் அல்லு - கொனிடேலா குடும்பம்

அதாவது அல்லு - கொனிடேலா குடும்பம் என்று அழைக்கப்படுகிற இவர்களது குடும்பம்தான் இப்போது நாட்டின் பணக்கார சினிமா குடும்பமாம். இவர்களுடைய சொத்துமதிப்பு ரூ.6000 கோடியாம். 1950களிலேயே மிகவும் பிரபலமாயிருந்த அல்லு ராமலிங்கய்யாவின் மகளான சுரேகாவைத்தான் சிரஞ்சீவி திருமணம் செய்திருக்கிறார். சுரேகாவின் சகோதரர் அரவிந்தும் தயாரிப்பாளர். இவர்களுடைய வாரிசுகள்தான் அல்லு அர்ஜூன், ராம் சரண், நாகேந்திர பாபு, வருண் தேஜ் சாய் போன்றோர்.

இணையத்தில் கலக்கும் நடிகைகள்!

விவாகரத்துக்கு பிறகு திரைப்படங்களில் தொடர்ந்து கவனம் செலுத்திவந்த சமந்தா, மயோசிட்டிஸ் நோய் பாதிப்புக்கு பிறகு சிலகாலம் திரைப்படங்களில் நடிப்பதற்கு ப்ரேக் எடுத்திருந்தாலும் சிட்டாடல் என்ற வெப் தொடரில் மட்டும் தொடர்ந்து நடித்துவந்தார். இந்தியில் எடுக்கப்பட்ட இந்த தொடரில் வருண் தவான் ஜோடியாக சமந்தா நடித்திருக்கிறார். முதலில் சிட்டாடல் வெப் தொடரானது ஹாலிவுட்டில் எடுக்கப்பட்டு, பின்னர்தான் இந்தியில் ரீமேக் செய்யப்பட்டது.


இணையத்தில் வைரலாக பரவிவரும் பிரியங்கா சோப்ரா - சமந்தா புகைப்படம்

ஹாலிவுட்டில் பிரியங்கா சோப்ரா மற்றும் ரிச்சர் மேடன் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இந்த தொடர் விரைவில் ஓடிடியில் வெளியாகவுள்ள நிலையில், இதன் சிறப்பு காட்சி லண்டனில் நடைபெற்றது. அதில் பிரியங்காவும், சமந்தாவும் கலந்துகொண்டு ஒருவரையொரு கட்டித்தழுவி நலம் விசாரித்துக்கொண்ட போட்டோஸ் மற்றும் வீடியோஸ் சமூக ஊடகங்களில் பரவி டிரெண்டாகி வருகிறது. 

Tags:    

மேலும் செய்திகள்