குழந்தைகளுக்காக குரல் கொடுக்கும் பிரபலங்கள் - இந்த வார சினிமா டாக்ஸ்!

மூக்குத்தி அம்மனாக நயன்தாரா அல்லது திரிஷாவை நடிக்கவைக்க பேச்சுவார்த்தைகள் நடந்துவருவதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Update:2024-06-04 00:00 IST
Click the Play button to listen to article

புதுப்படங்கள், நடிகர் நடிகைகளின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்த அப்டேட் மேல் அப்டேட்கள் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகின்றன. தற்போது சிறிய மற்றும் பெரிய பட்ஜெட்டில் பல படங்கள் தயாரிக்கப்படுவதால் நடிகர்களும் ஒருபடம் கூட இல்லையே என வருத்தப்படாமல் தொடர்ந்து பிஸியாக ஓடிக்கொண்டிருக்கின்றனர். இந்த வாரம் அதிகம் பேசப்பட்ட சினிமா டாப்பிக்குகளை ஷார்ட்டாக பார்க்கலாம்.

நயன்தாரா இல்லேனா திரிஷா!

2020ஆம் ஆண்டு ஆர்.ஜே பாலாஜி இயக்கத்தில் வெளிவந்த ‘மூக்குத்தி அம்மன்’ திரைப்படத்தில் நயன்தாரா அம்மனாக தோன்றினார். அப்படத்தில் நயன்தாராவின் நடிப்பு, காஸ்டியூம் மற்றும் லுக் போன்றவை ரசிகர்களை வெகுவாக கவர்ந்தன. இப்படத்திற்கு கிடைத்த வரவேற்பால் அடுத்து ‘பதாய் ஹோ’ என்ற இந்திப்படத்தை தமிழில் ரீமேக் செய்து தானே கதாநாயகனாகவும் நடித்தார் பாலாஜி. ஆனால் அப்படம் எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை. அடுத்து நடித்த ‘சிங்கப்பூர் சலூன்’ திரைப்படமும் கைகொடுக்கவில்லை.


‘மூக்குத்தி அம்மன்’ இரண்டாம் பாகத்தில் அம்மனாக நயன்தாரா அல்லது திரிஷா நடிக்கவுள்ளதாக தகவல்

இந்நிலையில் தற்போது ‘மூக்குத்தி அம்மன்’ இரண்டாம் பாகத்தை எடுக்க தயாராகிவிட்டார் ஆர்.ஜே பாலாஜி. இப்படம் முதல் பாகத்தின் தொடர்ச்சியாக இருக்காது எனவும், வேறு கதைக்களத்தில் உருவாக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது. இப்படத்தில் மூக்குத்தி அம்மனாக நயன்தாரா அல்லது திரிஷாவை நடிக்கவைக்க பேச்சுவார்த்தைகள் நடந்துவருவதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிரதீப்புக்கு ஜோடியாகும் ‘பிரேமலு’ நாயகி

‘லவ் டுடே’ படத்தின்மூலம் இயக்குநராக இருந்து நடிகனாகவும் ப்ரமோட் ஆனவர் பிரதீப் ரங்கநாதன். இவர் அதற்கு முன்பு ஜெயம் ரவியை வைத்து ‘கோமாளி’ என்ற படத்தை இயக்கியிருந்தார். இரண்டுமே பாக்ஸ் ஆபீஸ் ஹிட்டடித்த நிலையில், தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ‘எல்ஐசி’ என்ற படத்திலும் அஸ்வத் மாரிமுத்துவின் இயக்கத்தில் ‘டிராகன்’ என்ற படத்திலும் ஹீரோவாக நடித்துவருகிறார் பிரதீப். இந்நிலையில் இவருடைய அடுத்த படத்தை சுதா கொங்கராவிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய கீர்த்தீஸ்வரன் என்பவர் இயக்கவுள்ளாராம்.


புதிய படத்தில் இணையவுள்ள பிரதீப் ரங்கநாதன் - மமிதா பைஜூ

இப்படத்தில் ‘பிரேமலு’ நாயகி மமிதா பைஜு இவருக்கு ஜோடியாக நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கவுள்ளதாகவும், படப்பிடிப்பானது விரைவில் தொடங்கப்படுமென்றும் கூறப்பட்டுள்ளது. தமிழ் மற்றும் மலையாளத்தில் சூப்பர் ஹிட் படங்களை கொடுத்துவரும் பிரதீப் - மமிதா இருவரும் இப்படத்தில் இணைவதால் படத்தின்மீதான எதிர்பார்ப்பானது மிகவும் அதிகரித்திருக்கிறது.

கவினுக்கு அடிச்ச அதிர்ஷ்டம்!

சின்னத்திரையில் பிரபலமாகி அதன்மூலம் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு சென்ற கவினுக்கு, அதன்பிறகு வெள்ளித்திரையில் வாய்ப்பு கிடைத்தது. இவர் நடிப்பில் வெளியான ‘டாடா’, ‘ஸ்டார்’ போன்ற படங்கள் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்ற நிலையில் முன்னணி ஹீரோக்களுக்கு போட்டியாகிவிட்டார் கவின். தற்போது நான்கு படங்களை கைவசம் வைத்திருக்கும் இவருக்கு அடுத்தடுத்த வாய்ப்புகள் வந்த வண்ணம் உள்ளன. அதன்படி, நெல்சன் தயாரிக்கும் ‘ப்ளடி பெக்கர்’, வெற்றிமாறன் தயாரிக்கும்‘மாஸ்க்’ மற்றும் நடன இயக்குநர் சதீஷ் இயக்கும் மற்றொரு படம் என கமிட்டாகி இருக்கிறார்.


கவினுக்கு ஜோடியாக நடிக்கவிருக்கும் நடிகை நயன்தாரா

இந்நிலையில் லோகேஷ் கனகராஜிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த விஷ்ணு எடவன் இயக்கும் படத்தில் கவினுக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கவுள்ளாராம். இந்த படத்தில் நடிப்பதற்காக கவினுக்கு 8 கோடி சம்பளம் தரப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கவின் கடைசியாக நடித்த படத்திற்கு 2 கோடி சம்பளம் வழங்கப்பட்ட நிலையில் இது அவருக்கு அடித்த அதிர்ஷ்டம் என்கின்றனர் திரையுலகினர்.

மூன்றாவது குழந்தையை வரவேற்ற சிவகார்த்தியேன்!

நடிகர் சிவகார்த்தியேனுக்கு கடந்த 2010ஆம் ஆண்டு திருமணமானது. டிவி தொகுப்பாளராக இருந்துவந்த இவருக்கு திருமணத்திற்கு பிறகு ஹீரோவாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. தற்போது சூப்பர் ஸ்டார்களுக்கே டஃப் கொடுக்கும் வகையில் பிஸியாக ஓடிக்கொண்டிருக்கிறார். ஏற்கனவே இவருக்கு ஆராதனா மற்றும் குகன் தாஸ் என இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில், சிவகார்த்திகேயனின் மனைவி ஆர்த்தி தற்போது மூன்றாம் குழந்தையை பெற்றெடுத்துள்ளார். இதையடுத்து ரசிகர்கள் சிவகார்த்திகேயனுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.


ஏற்கனவே 2 குழந்தைகள் உள்ள நிலையில் 3-வது குழந்தையை பெற்றெடுத்துள்ள சிவகார்த்திகேயன்-ஆர்த்தி தம்பதி

இமயமலைக்கு பயணித்த சூப்பர்ஸ்டார்!

ஆண்டுதோறும் தனது ஒவ்வொரு படத்தின் படப்பிடிப்பு முடியும்போதும் இமயமலைக்கு சென்றுவருவதை வழக்கமாக வைத்திருக்கிறார் நடிகர் ரஜினிகாந்த். சமீபத்தில் ‘வேட்டையன்’ படப்பிடிப்பு முடிந்த நிலையில், ஓய்விற்காக அபுதாபி சென்றார். ஐக்கிய அரபு அமீரகம் இவருக்கு கோல்டன் விசா வழங்கி கௌரவித்தது.


இமயமலைக்குச் சென்ற நடிகர் ரஜினிகாந்த்

அங்கு சுமார் இரண்டு வாரம் ஓய்வெடுத்த நிலையில் மீண்டும் ஒருவார கால பயணமாக இமயமலைக்கு சென்றார். கொரோனா காரணமாக ஓரிரு ஆண்டுகள் அங்கு செல்லாமல் இருந்த அவர், கடந்த ஆண்டும் இதேபோல தனது நண்பர்களுடன் பத்ரிநாத், கேதார்நாத், பாபாஜி குகை போன்ற இடங்களுக்கு சென்று வழிபட்டார். 

பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக...

பல வருடங்களாக நீடித்துவந்த இஸ்ரேல் - பாலஸ்தீன பகை கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்திலிருந்து போராக வெடித்தது. ஆரம்பத்தில் ஹமாஸ் அமைப்பினரும் இஸ்ரேல் ராணுவமும் மாறி மாறி தாக்குதல் நடத்திய நிலையில் ஒரு கட்டத்தில் இஸ்ரேலின் கை ஓங்கிவிட்டது. சமீபத்தில் காசாவின் தெற்கு பகுதியான ராஃபாவில் ஹமாஸ் அமைப்பினர் பதுங்கியிருப்பதாகக் கூறி அதன்மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதில், பொதுமக்கள் முகாமில் தங்கியிருந்த குழந்தைகள் உட்பட 45 பேர் பலியாகினர்.


சமூக ஊடகங்களில் பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக களமிறங்கிய சமந்தா, திரிஷா உள்ளிட்ட பிரபலங்கள்

இதற்கு உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துவரும் நிலையில், All Eyes On RAFAH என பதிவிட்டு காசாவிற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் இந்தியாவிலும் பல நடிகர் நடிகைகள் இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். பாலிவுட் நடிகர்களான பிரியங்கா சோப்ரா, வருண் தவான், ஆலியா பட், சோனக்‌ஷி சின்ஹா, தென்னிந்திய நடிகைகளான சமந்தா, திரிஷா, ராஷ்மிகா போன்றோரும் பாலஸ்தீனத்துக்கு ஆதரவு தெரிவித்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளனர். அந்த பதிவுகள் அனைவரின் கவனத்தையும் பெற்றுவருகின்றன.

Tags:    

மேலும் செய்திகள்