ஒரு படம்... பல நட்சத்திரங்கள்... - தமிழ் சினிமாவில் இப்போ இதுதான் ட்ரெண்டு போல!

இருவரும் திருப்பதியில் வைத்து திருமணம் செய்துகொள்ள போவதாகவும், அதற்கான ஏற்பாடுகள் நடந்துவருவதாகவும் கூறப்பட்டது. மேலும், திருமணத்தில் தங்க ஜரிகையால் செய்யப்பட்ட பட்டுப்புடவையை அவர் அணிந்துகொள்ள இருப்பதாகவும், இந்த திருமணம் ரகசியமாக நடைபெறவுள்ளதாகவும் செய்திகள் பரவின.

Update:2024-05-14 00:00 IST
Click the Play button to listen to article

ரிலீஸுக்கு தயாராகி வரும் படங்கள் ஒருபுறமிருக்க, ஆண்டு தொடங்கியதிலிருந்து ஒரு தமிழ்ப்படம்கூட எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லையே என்ற ரசிகர்களின் ஏக்கத்தை தீர்க்கும்வகையில் அடுத்தடுத்து சில படங்கள் ஹிட்டடித்து வருகின்றன. இந்த வாரம் சினிமா சுவாரஸ்யங்களிலிருந்து சில துளிகள்...

மீண்டுமொரு ப்ளாக் பஸ்டர்!

இளன் இயக்கத்தில் கவின் நடித்திருக்கும் ‘ஸ்டார்’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது. ட்ரெய்லர் கொடுத்த ஹைப் அளவிற்கு படத்தில் வேகம் இல்லாவிட்டாலும் சாதிக்க துடிக்கும் ஒவ்வொரு இளைஞனையும் ஊக்குவிக்கும்விதமாக கதைக்களம் அனைவருக்கும் பிடிக்கும் வகையில் அமைந்திருப்பதாக விமர்சனங்கள் தெரிவிக்கின்றன. இதற்கு முன்பு கவின் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற ‘டாடா’ படத்திற்கு இப்படம் ஈடுகொடுக்குமா? என கேள்விகள் எழுப்பப்பட்ட நிலையில், ‘ஸ்டார்’ திரைப்படமும் கவினின் சினிமா கெரியரில் மீண்டுமொரு ப்ளாக் பஸ்டர் படமாக அமைந்திருக்கிறது.


வெற்றி மழையில் நனையும் கவினின் ‘ஸ்டார்’ திரைப்படம்

குறிப்பாக, யுவனின் பின்னணி இசைக்கு தனி ரசிகர் பட்டாளமே மீண்டும் உருவாகும் என கூறப்படுகிறது. தமிழ் சினிமாவில் இப்படம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என திரையுலகினரே பாராட்டி வருகின்றனர்.

எனக்கா? திருமணமா?

பாலிவுட் ஹீரோயினும் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகளுமான ஜான்வி கபூர் இப்போது தெலுங்கு மற்றும் தமிழ் திரையுலகில் நடிக்க ஆயத்தமாகி வருகிறார். இந்நிலையில் அவரும், மகாராஷ்டிர மாநில முன்னாள் முதல்வர் சுஷில் குமார் ஷிண்டேயின் பேரனும் நடிகருமான சிக்கரும் காதலித்து வருவதாகவும், இருவரும் விரைவில் திருமணம் செய்யவிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின. அதனை உறுதிசெய்யும்விதமாக ஷிக்கரை தனக்கு மிகவும் பிடிக்கும் என ஜான்வியின் தந்தை போனி கபூர் கூறியிருந்தார். இந்நிலையில் இருவரும் திருப்பதியில் வைத்து திருமணம் செய்துகொள்ள போவதாகவும், அதற்கான ஏற்பாடுகள் நடந்துவருவதாகவும் கூறப்பட்டது.


ஷிக்கர் - ஜான்வி கபூர் திருமணம் குறித்து பரவிய வதந்தி

மேலும், திருமணத்தில் தங்க ஜரிகையால் செய்யப்பட்ட பட்டுப்புடவையை அவர் அணிந்துகொள்ள இருப்பதாகவும், இந்த திருமணம் ரகசியமாக நடைபெறவுள்ளதாகவும் செய்திகள் பரவின. அதனை மறுக்கும்விதமாக இன்னும் என்னவெல்லாம் வதந்தி பரப்ப இருக்கிறீர்கள்? என்ற நோக்கில் ஜான்வி கேள்வி எழுப்பியுள்ளார். இதன்மூலம் அவர் இப்போதைக்கு திருமணம் செய்யப்போவதில்லை என்பது உறுதியாகி இருக்கிறது.

ரசிகர்களின் பாராட்டு மழையில்...

நடிகைகள் என்றாலே மேக்கப் போட்டுக்கொண்டுதான் வெளியே தலைகாட்டுவார்கள் என்ற கருத்தையே முற்றிலும் மாற்றி ட்ரெண்ட்செட்டராக இருக்கிறார் நடிகை சாய் பல்லவி. சினிமாவில்கூட மேக்கப் போடுவதை விரும்ப மாட்டார் அவர். இந்நிலையில் அவரை சமீபத்தில் அழகுசாதன பொருட்கள் தயாரிக்கும் நிறுவனமொன்று விளம்பரப்படத்தில் நடிக்க அணுகியதுடன், ரூ. 2 கோடி சம்பளமும் தருவதாக கூறியிருக்கிறது. ஆனால் அந்த விளம்பர படத்தில் நடிக்கமுடியாது என சாய் பல்லவி திட்டவட்டமாக கூறிவிட்டாராம். ஏற்கனவே சில ஆண்டுகளுக்கு முன்பு அளித்த பேட்டியில், காஸ்மெட்டிக் மற்றும் அழகுசாதன விளம்பரங்களில் ஏன் நடிக்கமாட்டார் என்பதற்கான காரணத்தை பகிர்ந்திருந்தார்.


காஸ்மெட்டிக் விளம்பரத்தில் நடிக்க மறுத்த சாய் பல்லவி

சாய் பல்லவியின் சகோதரி பூஜா அவரைவிட சற்று நிறம் குறைவாக இருப்பதால் சிறுவயதில் எப்போதும் அவரிடம் அதுபற்றி கேட்டுக்கொண்டே இருப்பாராம். ஒருநாள் சாய் பல்லவி “பழங்கள், காய்கறிகள் சாப்பிட்டால் நீயும் கலராகிவிடுவாய்” என்று கூறினாராம். தனக்கு பிடிக்காவிட்டாலும் தான் கலராக வேண்டும் என்பதற்காக அவருடைய தங்கை பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிட்டாராம். நிறம் ஒருவருடைய மனதில் எவ்வளவு ஆழமாக தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை அப்போதே புரிந்துகொண்ட சாய்பல்லவி இதுபோன்றவற்றிலிருந்து விலகியே இருக்கிறாராம்.

சிம்புவால் ‘தக் லைஃப்’பிற்கு கூடிய மவுசு

கமல் - மணிரத்னம் கூட்டணியில் உருவாகி வரும் திரைப்படம் ‘தக் லைஃப்’. ஜெயம் ரவி, துல்கர் சல்மான், திரிஷா, அபிராமி, ஐஸ்வர்யா லட்சுமி, கவுதம் கார்த்தி, ஜோஜு ஜார்ஜ் என பெரிய நட்சத்திர பட்டாளத்தையே இப்படத்தில் இறக்கியிருந்தார் மணிரத்னம். தேர்தல் காரணமாக இப்படத்தின் படப்பிடிப்பு தள்ளிப்போய்க்கொண்டே இருந்ததால் கால்ஷீட் பிரச்சினை காரணமாக ஜெயம் ரவியும், துல்கரும் இப்படத்திலிருந்து விலகிக்கொள்ள, அவர்களுக்கு பதிலாக சிம்புவும், அருண் விஜய்யும் இக்கூட்டணியில் இணைந்தனர்.


‘தக் லைஃப்’ படத்தில் சிம்பு இணைந்திருப்பதை அதிகாரப்பூர்வமாக போஸ்டர் மூலம் அறிவித்த படக்குழு

‘மாநாடு’க்கு கிடைத்த மாபெரும் வெற்றிக்குப் பிறகு தனது மார்க்கெட்டை உயர்த்தியிருக்கும் சிம்பு இந்த படத்தில் இணைந்ததிலிருந்தே படத்திற்கான மவுசும் கூடியிருக்கிறது. ஆரம்பத்தில் ‘தக் லைஃப்’ படத்திற்காக வெளிநாட்டு டிஜிட்டல் உரிமம் 45 கோடிக்கு விற்கப்பட்டிருந்த நிலையில், சிம்பு இணைந்தபிறகு 60 கோடியாக உயர்ந்திருக்கிறது. படம் வெளியாவதற்கு முன்பே சிம்புவால் இப்படம் லாபம் ஈட்டியிருப்பதாக கொண்டாடி வருகிறது படக்குழு.

தளபதி படத்தில் இவர் கெஸ்ட் ரோல்?

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துவரும் ‘கோட்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது. இப்படத்தில் விஜய் மூன்று கெட்டப்களில் நடித்திருப்பதாக கூறப்படுகிறது. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு செப்டம்பர் 5ஆம் தேதி இப்படம் வெளியாகும் என கூறப்பட்டுள்ள நிலையில், பணிகள் விறுவிறுப்பாக நடந்துவருகின்றன. இப்படத்தில் ஏற்கனவே ஒரு ஐட்டம் பாடலுக்கு குத்தாட்டம் போட ஸ்ரீலீலாவை அணுகிய படக்குழுவுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.


விஜய்யின் ‘கோட்’ படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்திருக்கும் சிவகார்த்திகேயன்

இந்நிலையில் இந்த படத்திற்காக ஒரு கெஸ்ட் ரோல் நடித்து கொடுத்திருக்கிறாராம் சிவகார்த்திகேயன். அந்த காட்சியில் நடிக்க எவ்வளவு சம்பளம் வேண்டுமென விஜய் கேட்டதற்கு, “உங்களுடன் ஒரு காட்சியில் நடித்ததே ஒரு கோடி சம்பளம் வாங்கியதற்கு சமம்” என கூறி ஒரு பைசா கூட வேண்டாம் என பெருந்தன்மையாக கூறிவிட்டாராம் சிவகார்த்திகேயன்.

தள்ளிப்போகும் ‘இந்தியன் - 2’ ரிலீஸ்!

28 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது ‘இந்தியன் - 2’ திரைப்படம் மூலம் மீண்டும் இணைந்திருக்கிறது கமல் - ஷங்கர் கூட்டணி. இந்த படத்தில் கமலுடன் பிரியா பவானி சங்கர், காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத்ப் சிங், பாபி சிம்ஹா, சமுத்திரக்கனி மற்றும் சித்தார்த் போன்ற பல பிரபலங்கள் இணைந்திருக்கின்றனர். அனிருத் இசையமைக்க, லைகா மற்றும் ரெட் ஜெயண்ட் நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கும் இப்படம் ஜூன் மாதம் ரீலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது.


தள்ளிப்போனது கமல் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘இந்தியன் - 2’ ரிலீஸ் தேதி

ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டபிறகு, இறுதிகட்ட பணிகளுக்கு மத்தியில் ‘இந்தியன்’ படத்தில் கமலுக்கு ஜோடியாக நடித்த மனீஷா கொய்ராலாவும் ஒருசில காட்சிகளில் இணைந்திருப்பதாகக் கூறப்பட்டது. அனைத்துப் பணிகளும் முடிந்து படம் ஜூன் மாதம் ரிலீஸாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பட வெளியீட்டை ஆகஸ்ட் மாதத்திற்கு தள்ளிவைத்திருப்பதாக உறுதியான தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. படத்தில் நிறைய கிராபிக்ஸ் காட்சிகள் இருப்பதால் அவற்றை முடிக்க தாமதமாவதாக படக்குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. 

Tags:    

மேலும் செய்திகள்