கோலிவுட்டா? பாலிவுட்டா? - போட்டிபோடும் திரையுலகங்கள்!

படத்திலும் நிஜத்திலும் கர்ப்பிணியாக இருக்கும் தீபிகாவிற்கு மேடை ஏறி இறங்கவும், உட்காரவும் அமிதாப், பிரபாஸ் போன்றோர் போட்டிப்போட்டு உதவும் வீடியோக்கள் சமூக ஊடகங்களை கலக்கிவருகின்றன. மிகப்பெரிய பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டிருக்கும் இப்படம் ஜூன் 27ஆம் தேதி உலகளவில் ரிலீஸாகிறது.

Update:2024-06-25 00:00 IST
Click the Play button to listen to article

பிற மொழிப் படங்களில் நடிப்பது எந்த அளவிற்கு சவாலானதோ அதே அளவிற்கு பிற மொழிப் படங்களை இயக்குவதிலும் சிரமம் இருக்கும். அப்படி தமிழிலிருந்து இந்திக்கு சென்று ஹிட் கொடுத்த இயக்குநரின் அடுத்த படைப்பு குறித்த செய்திகள், பிரபலங்களின் தனிப்பட்ட வாழ்க்கை, சினிமா டூ அரசியல் பிரவேசம் எடுக்கும் நடிகர்களின் அதிரடி ஆக்‌ஷன்கள் போன்றவை கடந்த வாரம் ட்ரெண்டாகி பரவலாக பேசப்பட்டன. அவற்றை கொஞ்சம் ஷார்ட்டாக பார்க்கலாம்.

இணையத்தை தெறிக்கவிடும் ‘கல்கி 2898 AD’ நிகழ்ச்சி!

நாக் அஸ்வின் இயக்கத்தில் அமிதாப் பச்சன், பிரபாஸ், கமல்ஹாசன் மற்றும் தீபிகா படுகோன் போன்ற மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கும் திரைப்படம்தான் ‘கல்கி 2898 AD’. இப்படத்தின் ட்ரெய்லரே மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகள் கலைகட்ட தொடங்கியிருக்கின்றன. மும்பையில் நடைபெற்ற புரமோஷன் நிகழ்ச்சியில் படக்குழுவினர் கலந்துகொண்டு ஒருவரையொருவர் மாறி மாறி புகழ்ந்த வீடியோ இணையங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது.


பிரம்மாண்டமாக நடைபெற்ற ‘கல்கி 2898 AD’ நிகழ்ச்சி

குறிப்பாக, படத்திலும் நிஜத்திலும் கர்ப்பிணியாக இருக்கும் தீபிகாவிற்கு மேடை ஏறி இறங்கவும், உட்காரவும் அமிதாப், பிரபாஸ் போன்றோர் போட்டிப்போட்டு உதவும் வீடியோக்கள் சமூக ஊடகங்களை கலக்கி வருகின்றன. மிகப்பெரிய பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டிருக்கும் இப்படம் ஜூன் 27ஆம் தேதி உலகளவில் ரிலீஸாகிறது.

அட்லீ இயக்கத்தில் ரன்வீர் சிங்?

பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கரிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்து ‘ராஜா ராணி’ படத்தின்மூலம் இயக்குநராக அறிமுகமானவர் அட்லீ. தொடர்ந்து விஜய்யை வைத்து ‘மெர்சல்’, ‘பிகில்’ மற்றும் ‘தெறி’ என வரிசையாக மூன்று படங்களை இயக்கினார். இவர் இயக்கிய அனைத்துப் படங்களுமே சூப்பர்ஹிட் படங்களாக வெற்றிபெற்ற நிலையில், அடுத்து பாலிவுட் பக்கம் சென்றார்.


ரன்வீர் சிங் மற்றும் சல்மான் கானை வைத்து படம் இயக்கும் முயற்சியில் இயக்குநர் அட்லீ

ஷாருக்கானை வைத்து இவர் இயக்கிய ‘ஜவான்’ திரைப்படமும் மெஹா ஹிட் படமாக அமைந்த நிலையில், பாலிவுட்டில் அடுத்தடுத்து பிஸியாகி வருகிறார். அடுத்து ரன்வீர் சிங் மற்றும் சல்மான் கானை வைத்து ஒரு படம் இயக்கவிருப்பதாகவும், இதுகுறித்து அவர்களிடம் பேசிவருவதாகவும் செய்திகள் வெளியாகி வருகின்றன. இப்படம் உறுதியானால் பாலிவுட்டின் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக அட்லீ உருவாவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்த பிரியங்கா சோப்ரா

தமிழில் அறிமுகமாகி இருந்தாலும் பாலிவுட்டின் முன்னணி நட்சத்திரமாக ஜொலித்தவர் பிரியங்கா சோப்ரா. பிரபல பாடகர் நிக் ஜோனஸை காதலித்து திருமணம் செய்துகொண்ட இவர், அதன்பிறகு அமெரிக்காவிலேயே செட்டிலாகிவிட்டார். தொடர்ந்து ஹாலிவுட்டில் பிஸியாக ஓடிக்கொண்டிருக்கும் இவர், சமீபத்தில் ரத்த காயங்களுடன் இருக்கும் வீடியோ கிளிப் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.


நடிகை பிரியங்கா சோப்ராவின் வைரலான வீடியோ க்ளிப்

அதைப் பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சியடைந்த நிலையில், ‘தி பிளப்’ என்ற படத்தின் சண்டைக்காட்சியில் நடித்தபோது தனக்கு காயங்கள் ஏற்பட்டதாக விளக்கமளித்திருக்கிறார் பிரியங்கா. எங்கு சென்றாலும் தற்போது தனது மகள் மல்டி மேரியையும் உடன் அழைத்துச் செல்லும் இவர், அந்த போஸ்ட்டிலேயே தனது மகளுடன் இருக்கும் புகைப்படங்களையும் சேர்த்து பகிர்ந்திருக்கிறார். பிரியங்காவின் இந்த அர்ப்பணிப்பை ரசிகர்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

ஜெயம் ரவி - ஆர்த்தி விவாகரத்து?

கோலிவுட்டில் தனுஷ் - ஐஸ்வர்யா, ஜி.வி பிரகாஷ் - சைந்தவி போன்றோர் அடுத்தடுத்து தங்களது பிரிவு குறித்து அறிவித்து ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்தனர். இந்நிலையில் நடிகர் ஜெயம் ரவி தனது மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்யப்போவதாக சமூக ஊடகங்களில் செய்திகள் வலம்வந்தன.


ஜி.வி. பிரகாஷ் - சைந்தவி பிரிவு மற்றும் ஜெயம் ரவி - ஆர்த்தி விவாகரத்து குறித்து பரவும் தகவல்

இந்நிலையில் ‘ஜெயம்’ படம் வெளியாகி 21 ஆண்டுகள் நிறைந்தவடைந்த நிலையில், அந்த படத்தின் போஸ்டரை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து ‘காதல் என்னும் வார்த்தை; அது வார்த்தை அல்ல வாழ்க்கை’ என பதிவுசெய்து வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார் ஆர்த்தி. ஆர்த்தியும், ஜெயம் ரவியும் பல ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் கடந்த 2009ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.

விஜய்யின் அதிரடி உத்தரவு!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் தனது கட்சியை தொடங்கியபிறகு அதில் பிஸியாக ஓடிக்கொண்டிருக்கிறார். தொடர்ந்து தனது கட்சி சம்பந்தமான பணிகளில் ஈடுபட்டுவரும் இவர், சமீபத்தில் கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் குடும்பங்களை சந்தித்து ஆறுதல் கூறியதுடன், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களையும் நேரில் போய் பார்த்து, வேண்டிய உதவிகளை செய்தார்.


கள்ளக்குறிச்சி மருத்துவமனைக்கு நேரில் சென்று ஆறுதல் கூறிய விஜய் - த.வெ.க பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அறிக்கை

இதனால் ஜூன் 22ஆம் தேதி தனது பிறந்தநாளை விமரிசையாக கொண்டாடுவதை தவிர்க்குமாறும், அதற்கு பதிலாக தனது கட்சித் தொண்டர்கள் மற்றும் ரசிகர்களை கள்ளக்குறிச்சி சம்பவத்தால் பாதிக்கப்பட்டோருக்கு உதவி செய்யுமாறும் கேட்டுக்கொண்டார். இதுகுறித்து த.வெ.க பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இதனால் த.வெ.கவைச் சேர்ந்தவர்கள் கள்ளக்குறிச்சியில் தீவிரமாக இறங்கி செயல்பட்டனர்.

பிரபல ஹாலிவுட் நடிகர் மரணம்!

‘மாஷ்’, ‘க்ளூட்’, ‘ஆர்டினரி பீப்பிள்’ மற்றும் ‘ஹங்கர் கேம்ஸ்’ போன்ற படங்களால் உலகளவில் பிரபலமானவர் நடிகர் டொனால்டு சதர்லேண்ட். 1970களில் மிகவும் பிரபலமான நடிகராக வலம்வந்த இவர் பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்காற்றியிருக்கிறார். இந்நிலையில் 88 வயதான இவர் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். 


மறைந்த ஹாலிவுட் நடிகர் டொனால்டு சதர்லேண்ட் குறித்து அவரது மகனின் பதிவு

இதுகுறித்து அவரது மகன் கீஃபர் சதர்லேண்ட் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். அதில், தனது அப்பா எத்தகைய கதாபாத்திரத்திலும் நடிக்க தயங்காதவர் எனவும், ஒரு விஷயத்தை பிடித்தால் மட்டுமே செய்வார் எனவும் குறிப்பிட்டிருக்கிறார்.

மேலும் தனிப்பட முறையில் திரைப்பட வரலாற்றில் அவரை ஒரு முக்கியமான நடிகராக நினைப்பதாகவும் கூறியிருக்கிறார். இவர் 1960 முதல் 2020 வரையிலும் தொடர்ந்து திரைப்படங்களில் பங்காற்றியிருக்கிறார்.

Tags:    

மேலும் செய்திகள்