ரஜினியின் "கூலி" படத்தில் இணைந்த கமல் மகள்! - திரைத்துளிகள்

‘கைதி’ படத்திலிருந்தே லோகியுடன் சேர்ந்து வேலைசெய்ய காத்திருந்ததாகவும், இந்த படத்தில் நடிக்க ஆர்வமாக இருப்பதாகவும், தலைவருடன் சேர்ந்து நடிக்க ஆவலுடன் காத்திருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார். தனுஷின் ‘குபேரா’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துவரும் இவர், இப்போது ரஜினியுடனும் இணைகிறார்.

Update:2024-09-03 00:00 IST
Click the Play button to listen to article

கேரள திரைத்துறையில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் குறித்து ஹேமா குழு அறிக்கை வெளியானதிலிருந்து ஒவ்வொரு திரைத்துறையைச் சேர்ந்த பலரும் அதுகுறித்து கருத்து தெரிவித்து வருகின்றனர். தங்களிடம் பாலியல் அத்துமீறல் புரிபவர்களிடம் எப்படி நடந்துகொள்ளவேண்டும்? என்பது குறித்து காட்டமாக பேசிவருகின்றனர் நடிகர்கள். அதே நேரத்தில் தங்களுக்கு நேர்ந்த பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து பேச ஆரம்பித்திருக்கின்றனர் பல நடிகைகள். இந்த மோலிவுட் தகவலுடன், கோலிவுட், பாலிவுட் நிகழ்வுகளையும் சேர்த்து இந்த வார திரைத்துளியில் பார்க்கலாம்.

கதை திருட்டா? - மாரியின் பதில்

மாரி செல்வராஜ் இயக்கத்தில் தற்போது திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம் ‘வாழை’. தான் சிறுவயதில் அனுபவித்த கஷ்டங்களையும், தான் கடந்துவந்த வலியையும் படமாக்கி இருக்கும் மாரிக்கு பல்வேறு தரப்புகளிலிருந்தும் பாராட்டுகள் குவிந்துவருகின்றன. இந்நிலையில் ‘வாழை’ படத்தின் கதையை 10 வருடங்களுக்கு முன்பே தான் சிறுகதையாக எழுதிவிட்டதாகவும், மாரி செல்வராஜ் தனது கதையை திருடி படமாக எடுத்திருப்பதாகவும் கூறி பரபரப்பை கிளப்பியிருக்கிறார் சோ.தர்மன். நிறையப்பேர் தன்னை அழைத்து உங்களுடைய சிறுகதையை அப்படியே படமாக்கி இருக்கிறார்கள், பாருங்கள் என்று சொன்னதாக அவர் கூறியிருக்கிறார்.


எழுத்தாளர் சோ.தர்மனின் சிறுகதை பற்றி பகிர்ந்த இயக்குநர் மாரி செல்வராஜ்

மேலும் இன்று கொண்டாடப்படுகிற ஒரு கதையை தான் முன்பே எழுதியை நினைத்து சந்தோஷப்படுவதாகவும் தெரிவித்திருக்கிறார். சோ.தர்மனின் இந்த பதிவுக்கு பதில் கொடுத்திருக்கிறார் மாரி செல்வராஜ். அதில், வாழைக்காய் சுமை தூக்கும் தொழிலாளர்களை பற்றி வாழையடி என்ற பெயரில் சிறுகதை எழுதிய சோ.தர்மனுக்கு நன்றி. அந்த கதையை அவசியம் வாசியுங்கள் என்று குறிப்பிட்டிருக்கிறார்.

கூலி படத்தில் இணைந்த பிரபலங்கள்!

தமிழில் பெரிய நட்சத்திரங்களின் படங்கள் என்றாலே, அதில் பலமொழி பிரபலங்களை இணைப்பது என்பது ‘ஜெயிலர்’ படத்திற்கு பிறகு வழக்கமாகிவிட்டது. இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினியின் 171வது படமான ‘கூலி’ திரைப்படத்தில் ஹீரோவுக்கு இணையாக வில்லன் இருக்கவேண்டும் என லோகி தேடிவருவதாக கூறப்பட்ட நிலையில், தெலுங்கு நடிகர் நாகர்ஜுனாவும், ‘மஞ்சும்மெல் பாயஸ்’ பிரபலம் சௌபின் சாகிரும் இணைந்திருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி இருக்கிறது.


ரஜினியுடன் ‘கூலி’ படத்தில் இணைந்த நாகர்ஜூனா

இப்படத்தில் ஸ்ருதி ஹாசன், சத்யராஜ் மற்றும் கன்னட ஸ்டார் உபேந்திரா போன்றோரும் இணைந்திருக்கும் நிலையில், ரஜினியுடன் இப்படத்தில் இணைந்தது குறித்து நாகர்ஜுனா தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். அந்த பதிவில், ‘கைதி’ படத்திலிருந்தே லோகியுடன் சேர்ந்து வேலைசெய்ய காத்திருந்ததாகவும், இந்த படத்தில் நடிக்க ஆர்வமாக இருப்பதாகவும், தலைவருடன் சேர்ந்து நடிக்க ஆவலுடன் காத்திருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார். தனுஷின் ‘குபேரா’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துவரும் இவர், இப்போது ரஜினியுடனும் இணைகிறார்.

பா.ரஞ்சித்தின் இந்தி எண்ட்ரி!

‘மெட்ராஸ்’, ‘கபாலி’, ‘காலா’, ‘சார்பட்டா பரம்பரை’ போன்ற படங்களால் தமிழ் சினிமாவில் நன்கு பரிச்சயமானவர் இயக்குநர் பா.ரஞ்சித். சமீபத்தில் விக்ரமை வைத்து இவர் இயக்கிய ‘தங்கலான்’ திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. செப்டம்பர் 6ஆம் தேதி இப்படம் இந்தியிலும் ரிலீஸாகவிருக்கிறது. அந்த படத்தின் இரண்டாம் பாகம் குறித்து பேச்சு அடிபட்டுவரும் நிலையில், பா.ரஞ்சித் இந்தி பக்கம் செல்வதாகவும் கூறப்பட்டது. சமீபத்திய நேர்க்காணல் ஒன்றில் இதுகுறித்து அவரிடம் கேட்டபோது, தான் ஒரு இந்தி படத்திற்கு ஒப்பந்தமாகி இருப்பதாக தெரிவித்திருக்கிறார்.


இந்தியில் படம் இயக்குவது குறித்து பா.ரஞ்சித் 

‘பிர்சா முண்டா’ எனப் பெயரிடப்பட்டிருக்கும் அப்படத்தின் ஸ்க்ரிப்ட்டை தனது நண்பருடன் சேர்ந்து எழுதியிருப்பதாகவும், தற்போது நடிகர்களை தேர்ந்தெடுத்து வருவதாகவும் தெரிவித்திருக்கிறார். ரன்வீர் சிங், அக்‌ஷய் குமார் போன்றோர் இப்படத்தில் நடிக்கவிருப்பதாக கூறப்படும் நிலையில் படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் அவர் கூறியிருக்கிறார்.

யோகிபாபு பகிர்ந்த நெகிழ்ச்சி போட்டோ!

நகைச்சுவை நடிகர் யோகி பாபு சமீபத்தில் எக்ஸ் தளத்தில் மொட்டை ராஜேந்திரனுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை பகிர்ந்து அதில், ‘my favourite still’ என்று குறிப்பிட்டிருந்தார். அதில் நடிகர் அஜித்குமாரை டேக் செய்திருந்தார். அந்த புகைப்படத்தின் பின்னணி குறித்து அவரிடம் கேட்டபோது ‘வேதாளம்’ திரைப்பட ஷூட்டிங்கின்போது அஜித் அந்த புகைப்படத்தை எடுத்துக்கொடுத்ததாக கூறியிருந்தார்.


யோகிபாபுவை போட்டோ எடுக்கும் அஜித்குமார்

2015ஆம் ஆண்டு வெளியான இப்படத்தில் யோகிபாபு ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தபோதிலும் அஜித் தன்னுடன் அன்பாக பேசியதாகவும், பழகியதாகவும் ஏற்கனவே பல நேர்காணல்களில் அவர் தெரிவித்திருக்கிறார். நடிகர் அஜித்துக்கு கார் ரேஸை தவிர, போட்டோஸ் எடுப்பது மிகவும் பிடிக்கும் என்பது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் கிட்டத்தட்ட 9 ஆண்டுகளுக்கு பிறகு அஜித் தனக்கு எடுத்துகொடுத்த புகைப்படத்தை பதிவிட்டு தனது நெகிழ்ச்சி தருணத்தை வெளிப்படுத்தி இருக்கிறார் யோகி பாபு.

மரியாதை முக்கியம்! - கங்கனா ரனாவத்

எப்போதும் பெண்ணியம் மற்றும் பெண்களின் மதிப்பு மரியாதை குறித்து பொதுவெளிகளில் பேசக்கூடிய நடிகை கங்கனா ரனாவத், சமீபத்தில் தனது அனுபவம் ஒன்றை பகிர்ந்திருக்கிறார். தானே இயக்கி, தயாரித்து நடித்திருக்கும் ‘எமர்ஜென்சி’ படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட இவர், அக்‌ஷய் குமார் படத்தில் நடிக்கும் வாய்ப்பை மறுத்தது ஏன்? என்பது குறித்து வெளிப்படையாக பேசினார்.


அக்‌ஷய் குமாருடன் நடிக்க மறுத்தது குறித்து பேசிய கங்கனா ரனாவத்

‘சிங் ஈஸ் பிளிங்’ என்ற படத்தில் நடிக்க அழைத்தும் தான் மறுத்தது குறித்து அக்‌ஷய் குமார் ஒருமுறை நேரில் சந்தித்து கேட்டபோது, அந்த கதாபாத்திரம் பெண்களை இழிவுபடுத்துவதாக இருந்ததால்தான் மறுத்ததாகவும், மற்றபடி உங்களுடன் நடிக்க எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை எனவும், பெண்களின் கண்ணியம் தனக்கு முக்கியம் என்று அவரிடமே கூறியதாகவும் தெரிவித்திருக்கிறார். கங்கனா மறுத்த அந்த கதாபாத்திரத்தில் எமி ஜாக்சன் நடித்தார். இப்படி அக்‌ஷய் குமார், சல்மான் கான் போன்ற பெரிய ஸ்டார்களின் படங்களுக்குக்கூட கங்கனா நோ சொல்லியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

பகீர் தகவல்களும் பிரபலங்களின் ரியாக்‌ஷன்களும்!

கேரள திரைத்துறையில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் குறித்த ஹேமா குழு அறிக்கை வெளியானதிலிருந்து பல்வேறு அதிர்ச்சிகரமான குற்றச்சாட்டுகளை திரைத்துறை பெண்கள் பலரும் முன்வைத்து வருகின்றனர். தொடர்ச்சியான புகார்களை அடுத்து கேரள திரைப்பட அகாடமியின் முக்கிய பொறுப்பிலிருந்து நடிகர்கள் சித்திக், மோகன்லால் மற்றும் இயக்குநர் ரஞ்சித் ஆகியோர் திடீரென விலகியுள்ளனர்.


பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்த மலையாள நடிகை அஞ்சலி அமீர்

இதுகுறித்து சென்னையில் பேசிய தமிழ் நடிகர் சங்க பொதுச்செயலாளர் விஷால், தன்னிடம் தவறாக நடக்க முயற்சிக்கும் ஆண்களை, பெண்கள் செருப்பால் அடிக்க வேண்டும் என்று கூறியதுடன், தமிழ் சினிமாவிலும் இதுபோன்ற புகார்கள் காலங்காலமாக இருந்துவருவதாகவும் கூறியிருக்கிறார். மேலும் ஹேமா கமிட்டி போன்றே இங்கும் ஒரு கமிட்டி அமைத்து விசாரிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார். இதற்கிடையே ஷகீலா, அஞ்சலி அமீர் போன்ற நடிகைகள் தங்களுக்கும், தங்களுடைய சக நடிகைகளுக்கும் நேர்ந்த அவலங்களை வெளிப்படையாக பேசியுள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்