இந்த வாரம் திரைத்துறையில் என்னென்ன ட்ரெண்ட்? - சினிமா செய்திகள்!

மணிரத்னம் இயக்கவுள்ள இந்தி படத்தில் அபிஷேக் - ஐஸ்வர்யா இருவரும் சேர்ந்து நடிக்கவிருப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன. இப்படி இருவரும் சேர்ந்து நடிக்கும்பட்சத்தில் இவர்களுடைய விவாகரத்து குறித்து வெளிவரும் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Update:2024-11-12 00:00 IST
Click the Play button to listen to article

கோலிவுட், டோலிவுட், பாலிவுட் என எங்கு திரும்பினாலும் புதுப்படங்கள் மற்றும் வெற்றிப்படங்கள் குறித்த பேச்சுகள்தான். கடந்த ஓரிரு வாரங்களில் வெளியான அனைத்துப் படங்களை காட்டிலும் சிவகார்த்திகேயன் - சாய் பல்லவி நடிப்பில் வெளியான ‘அமரன்’ திரைப்படம் பாக்ஸ் ஆபீஸ் ஹிட்டடித்திருப்பதுடன் ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்றிருக்கிறது. இதுதவிர, புதுப்படங்கள் குறித்த அறிவிப்புகள் தொடர்ந்து வெளியாகிவருகின்றன. இந்த வாரம் என்னென்ன சினிமா டாக்ஸ் ட்ரெண்டில் இருக்கிறது? பார்க்கலாம்!

விவாகரத்து கதையில் ஜெயம் ரவி?

‘பொன்னியின் செல்வன்’ படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் ஜெயம் ரவியின் மார்க்கெட் உயர்ந்தது. ஆனால் அதன்பிறகு வெளியான ‘இறைவன்’ மற்றும் ‘சைரன்’ ஆகிய படங்கள் தோல்வியை சந்தித்ததால் அடுத்து கட்டாயம் ஒரு வெற்றிப்படத்தை கொடுத்தே ஆகவேண்டும் என்ற நிலைமைக்கு தள்ளப்பட்டார் ஜெயம் ரவி. இந்நிலையில் ‘பிரதர்’ படத்தின் பாடல்கள் சூப்பட் ஹிட்டானதால் படமும் மிகப்பெரிய வெற்றியை பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக அப்படம் தோல்வியை தழுவியது. இருப்பினும் ஜெயம் ரவியின் கைவசம் நிறைய படங்கள் இருக்கின்றன.


விவாகரத்து கதையில் நடிக்கவிருக்கும் ஜெயம் ரவி

குறிப்பாக, இயக்குநர் ஷங்கரின் உதவியாளர் இயக்கவுள்ள படத்தில் ஜெயம் ரவி நடிக்கவிருப்பதாகவும், அப்படம் விவாகரத்து குறித்த கதையை மையமாகக் கொண்டு உருவாகவிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. ஏற்கனவே ஜெயம் ரவியின் நிஜ வாழ்க்கையிலும் விவாகரத்து சர்ச்சை சுற்றிக்கொண்டிருப்பதால் இப்படம் அவருடைய கெரியரில் ஓர் முக்கியப்படமாக அமையும் என்று சொல்லப்படுகிறது. இப்படம் குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

லைகா மீது ரஜினி அதிருப்தி?

ரஜினி நடிப்பில் கடைசியாக வெளியான ‘வேட்டையன்’ திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூல்ரீதியாக வெற்றிபெற்றது. லைகா நிறுவனம் தயாரித்த இப்படம் வெளியாவதற்கு முன்பே சில பிரச்சினைகள் இருந்ததாக கூறப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் ரஜினிக்கும் லைகா நிறுவனத்துக்குமிடையே மனஸ்தாபம் ஏற்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கு முன்பு ரஜினி + லைகா கூட்டணியில் உருவான ‘தர்பார்’ திரைப்படத்தின் நஷ்டத்தை ஈடுகட்ட, ரஜினி நடிக்கும் அடுத்த படத்தில் சலுகை வழங்குவதாக லைகா நிறுவனம் விநியோகஸ்தர்களுக்கு வாக்கு கொடுத்திருந்ததாகவும், அதை ‘வேட்டையன்’ ரிலீஸுக்கு சில நாட்களுக்கு முன்பு சத்தமில்லாமல் நிறைவேற்றியதாகவும் தகவல்கள் கசிந்தன.


சம்பள விஷயத்தில் லைகா நிறுவனத்தின்மீது அதிருப்தியில் ரஜினி

ஆனால் அந்த படத்திற்கு ரஜினிக்கு சம்பளம் மிகவும் தாமதமாக வழங்கப்பட்டதால் லைகா மீது ரஜினி அதிருப்தியில் இருப்பதாக செய்திகள் பரவிவருகின்றன. இருப்பினும் லைகா நிறுவனம் தயாரிக்கும் அடுத்த படத்திலும் ரஜினி நடிக்கவிருப்பதாக சொல்லப்படும் நிலையில் இந்த தகவல் எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை.

ஜிவிக்கு சிவகார்த்திகேயனின் பரிசு!

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவான ‘அமரன்’ திரைப்படம் மாபெரும் வெற்றிப்படமாக அமைந்திருக்கிறது. சிவகார்த்திகேயன் - சாய் பல்லவி நடிப்பில் உருவான இப்படம் இதுவரை ரூ.200 கோடிக்கும் மேல் வசூல்சாதனை புரிந்திருக்கிறது. இந்த படத்தின் வெற்றிக்கு ஜி.வி பிரகாஷ்குமாரின் இசையும் மற்றொரு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக இப்படத்தில் இடம்பெற்ற ‘மின்னலே’ மற்றும் ‘உயிரே’ போன்ற பாடல்கள் சூப்பர் டூப்பர் ஹிட் பாடல்களாக அமைந்திருக்கின்றன.


ஜி.வி. பிரகாஷ் குமாருக்கு சிவகார்த்திகேயனின் அன்பு பரிசு

இந்நிலையில் இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ஜி.வி பிரகாஷ்குமாருக்கு ஒன்றரை லட்சம் மதிப்புள்ள காஸ்ட்லி வாட்ச் ஒன்றை சிவகார்த்திகேயன் பரிசளித்திருக்கிறார். இதுகுறித்து ஜி.வி தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். இதேபோன்று ‘விக்ரம்’ பட வெற்றியின்போது ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்த சூர்யாவுக்கு ரோலக்ஸ் வாட்ச் ஒன்றை கமல்ஹாசன் பரிசளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

சமந்தாவை அடுத்து ஸ்ரீலீலா

2021ஆம் ஆண்டு அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான தெலுங்கு படமான ‘புஷ்பா தி ரைஸ்’ படம் மாபெரும் வெற்றிபெற்றது. இந்த படத்தில் ‘ஊ சொல்றியா மாமா’ என்ற ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட்டார் நடிகை சமந்தா. அந்த பாடல் இந்தியா முழுக்க ட்ரெண்டாகி சமந்தாவின் மார்க்கெட்டை உயர்த்தியது. ‘புஷ்பா’ படம் தொடங்கப்பட்டபோதே இரண்டு பாகங்களாக வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் படத்தின் இரண்டாம் பாகம் ‘புஷ்பா தி ரூல்’ என்ற பெயரில் டிசம்பர் 5ஆம் தேதி உலகளவில் ரிலீஸாகவிருக்கிறது.


சமந்தா போன்று ஆட்டம் போடவிருக்கும் ஸ்ரீலீலா

இந்த படத்திலும் ‘ஊ சொல்றியா’ போன்று ஒரு பாடல் இடம்பெற்றிருப்பதாகவும், அதில் ஸ்ரத்தா கபூர் ஆடவிருப்பதாகவும் தகவல்கள் வெளியான நிலையில், தற்போது அந்த பாடலுக்கு ஸ்ரீலீலா ஆடவிருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும் அந்த பாடலுக்கு ‘கிஸ்சிக்’ என்றும் பெயரிடப்பட்டிருப்பதாக மைத்ரி மூவி மேக்கர்ஸ் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருக்கிறது.

சோப்ராவை புகழ்ந்த சமந்தா!

சமந்தா நடித்திருக்கும் ‘சிட்டாடல் ஹனி பன்னி’ வெப் தொடர் சமீபத்தில் வெளியானது. ஏற்கனவே கடந்த ஆண்டு பிரியங்கா சோப்ரா நடிப்பில் ‘சிட்டாடல்’ வெப் தொடர் ஆங்கிலத்தில் வெளியாகி உலகளவில் ரசிகர்களின் கவனத்தை பெற்றது. இந்நிலையில் இத்தொடரின் வெற்றி விழாவில் பேசிய சமந்தா, “உலகளவில் ரசிகர்களை கவர்ந்த வெப் தொடர் ‘சிட்டாடல்’. இதில் நானும் முக்கிய பங்காற்றியிருப்பதை நினைத்து மகிழ்ச்சியடைகிறேன்.


பிரியங்கா சோப்ரா குறித்து சமந்தா

பிரியங்கா சோப்ரா போன்ற அதிகாரம் மற்றும் ஆளுமைமிக்க பெண்களை சந்திப்பதும், அவர்களுடன் பழகுவதும் மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. அவர் பெண்களுக்கு சிறந்த ரோல் மாடலாக திகழ்கிறார். இதுபோன்ற திறமைசாலிகளுடன் பழகும்போது நமக்கான சவாலும் அதிகரிக்கிறது” என்று பிரியங்கா சோப்ரா குறித்து புகழ்ந்திருக்கிறார்.

மீண்டும் இணையும் அபிஷேக் - ஐஸ்வர்யா?

மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ‘குரு’ படத்தில் நடித்தபோது காதலித்து திருமணம் செய்துகொண்ட நட்சத்திர ஜோடிதான் அபிஷேக் பச்சன் - ஐஸ்வர்யா ராய். இவர்கள் இருவருக்குமிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டிருப்பதாகவும், தனித்தனியாக பிரிந்து வாழ்வதாகவும் கடந்த ஓராண்டு காலமாக தொடர்ந்து செய்திகள் பரவிவருகின்றன. அதனை உறுதி செய்யும்விதமாக இவர்கள் இருவருமே தனித்தனியாகத்தான் பொதுவெளிகளில் தலைகாட்டுகின்றனர்.


அபிஷேக் பச்சன் - ஐஸ்வர்யா ராய் ஜோடி

இந்நிலையில் மணிரத்னம் இயக்கவுள்ள இந்தி படத்தில் அபிஷேக் - ஐஸ்வர்யா இருவரும் சேர்ந்து நடிக்கவிருப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன. இப்படி இருவரும் சேர்ந்து நடிக்கும்பட்சத்தில் இவர்களுடைய விவாகரத்து குறித்து வெளிவரும் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது கமல்ஹாசனின் ‘தக் லைஃப்’ படத்தில் பிஸியாக இருக்கும் மணிரத்னம் அடுத்து இப்படம் குறித்த அறிவிப்பை வெளியிடுவார் என்று சொல்லப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்