செஸ் சாம்பியன் குகேஷிற்கு நடிகர்கள் வாழ்த்து - சினி பிட்ஸ்!

ஜாலியாக வலம்வரும் திரிஷாவுக்கு கிறிஸ்துமஸ் கொண்டாட்டமானது சோகமானதாக மாறிவிட்டது. திரிஷாவுக்கு பெட் அனிமல்ஸ் என்றாலே மிகவும் பிடிக்கும். அதிலும் குறிப்பாக நாய்க்குட்டிகளின்மீது அதிக பிரியம் வைத்திருக்கும் இவர், ஸோரோ என்ற நாயை தனது மகன்போலவே பாவித்து வளர்த்துவந்தார்.

Update: 2024-12-30 18:30 GMT
Click the Play button to listen to article

தங்களுடைய கடின உழைப்புக்கு கோடிகளில் சம்பளம் கிடைத்தாலும் அவர்களை என்றும் உயிர்ப்பிப்பதும் ஊக்குவிப்பதும் ரசிகர்களின் அன்பும் ஆதரவும்தான் என்பதை ஒவ்வொரு மேடைகளிலுமே அனைத்து நடிகர், நடிகைகளும் சொல்வதுண்டு. அப்படிப்பட்ட ரசிகர்களை மகிழ்ச்சியடைய செய்வதுதானே ஒரு கலைஞனின் வேலை. இந்த வாரம் பல நடிகர்கள் தங்களுடைய ரசிகர்களை பல்வேறு விதங்களில் மகிழ்ச்சிக்குள்ளாக்கி இருக்கின்றனர். அவற்றில் சிலவற்றை இங்கு காணலாம்.

மகிழ்ச்சியில் அஜித் ரசிகர்கள்

கிட்டத்தட்ட 2 ஆண்டுகளுக்கு பிறகு மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடித்திருக்கும் ‘விடாமுயற்சி’ திரைப்படம் பொங்கலுக்கு ரிலீஸாகவிருக்கிறது. இந்த படத்தில் மிகவும் ஃபிட்டான இளமையான அஜித்தின் புகைப்படங்கள் வெளியாகி அவருடைய ரசிகர்களை உற்சாகப்படுத்திவரும் நேரத்தில் படத்தின் டீஸரும் வெளியாகி மிரட்டியது. அதனைத் தொடர்ந்து தற்போது தனது ரசிகர்களுக்கு மற்றொரு இன்ப அதிர்ச்சியை கொடுத்திருக்கிறார் அஜித்.


‘விடாமுயற்சி’ இசை வெளியீட்டு விழாவில் அஜித் கலந்துகொள்வார்?

அதன்படி ‘விடாமுயற்சி’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் அஜித் கலந்துகொள்ளப்போவதாக தகவல்கள் கசிந்துவருகின்றன. பல ஆண்டுகளாக எந்தவொரு பொது நிகழ்ச்சிகளிலும் அஜித் கலந்துகொள்ளாமல் தவிர்த்துவந்த நிலையில் தற்போது வெளியாகியிருக்கும் இந்த செய்தி அவருடைய ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. டிசம்பர் 31ஆம் தேதி படத்தின் டீஸர் வெளியான நிலையில், ஜனவரி 3ஆம் தேதி இசை வெளியீட்டு விழா நடக்கப்போவதாக சொல்லப்பட்டிருக்கிறது.

திரிஷாவிற்கு நேர்ந்த சோகம்

தமிழ் சினிமாவில் இந்த ஆண்டு முன்னணி ஹீரோயின்களில் முதலிடத்தை பிடித்திருக்கும் திரிஷா, தொடர்ந்து பிஸியாக ஓடிக்கொண்டிருக்கிறார். அடுத்த ஆண்டும் இவர் நடிப்பில் பல்வேறு படங்கள் வெளிவரவிருக்கின்றன. 41 வயதாகியும் திருமணம் செய்துகொள்ளாமல் சிங்கிளாக ஜாலியாக வலம்வரும் திரிஷாவுக்கு கிறிஸ்துமஸ் கொண்டாட்டமானது சோகமானதாக மாறிவிட்டது. திரிஷாவுக்கு பெட் அனிமல்ஸ் என்றாலே மிகவும் பிடிக்கும். அதிலும் குறிப்பாக நாய்க்குட்டிகளின்மீது அதிக பிரியம் வைத்திருக்கும் இவர், ஸோரோ என்ற நாயை தனது மகன் போலவே பாவித்து வளர்த்துவந்தார்.


கிறிஸ்துமஸ் தினத்தன்று இறந்த திரிஷாவின் செல்ல நாய் ஸோரோ

அந்த நாய் கிறிஸ்துமஸ் தினத்தன்று காலை இறந்துவிட்டதாகவும், அதனால் தனது குடும்பமே சோகத்தில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் இதிலிருந்து மீண்டுவர தனக்கு நிறைய காலம் எடுக்குமென்றும் அவர் தனது பதிவில் கூறியுள்ளார். இந்த பதிவுடன் தனது ஸோரோவை அடக்கம்செய்த புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார். திரிஷாவின் இந்த பதிவிற்கு அவருடைய ரசிகர்கள் வருத்தம் தெரிவித்துவருகின்றனர்.

செஸ் சாம்பியனை பாராட்டிய நடிகர்கள்  

சிங்கப்பூரில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன் போட்டியில் வெற்றிபெற்ற தமிழக வீரர் குகேஷிற்கு பல்வேறு தரப்புகளிலிருந்தும் பாராட்டுகள் குவிந்துவருகின்றன. அவருக்கு கிடைத்த பரிசுத்தொகைக்கான வரி குறித்து பல்வேறு கருத்துகள் முன்வைக்கப்பட்ட நிலையில், தனக்கு பணம் ஒரு பொருட்டல்ல என்று கூறி பேச்சுகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் குகேஷ். இந்நிலையில் அவரை நடிகர் சிவகார்த்திகேயன் நேரில் அழைத்து பாராட்டியதுடன், விலைமதிப்பான கைக்கடிகாரம் ஒன்றையும் பரிசாக அணிவித்துள்ளார்.


செஸ் சாம்பியன் குகேஷுக்கு பரிசளித்த நடிகர் சிவகார்த்திகேயன்

இதற்கு முன்பே, குடியரசுத் தலைவர் உட்பட, முதலமைச்சர், நடிகர் ரஜினிகாந்த் முதலானோர் அவரை நேரில் அழைத்து பாராட்டினர். இந்நிலையில் நடிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். மேலும் அரசு சார்பில் விழா நடத்தப்பட்டு ரூ. 5 கோடிக்கான காசோலையும் பரிசாக வழங்கப்பட்டது.

பூஜா ஹெக்டேவுக்கு அடித்த அதிர்ஷ்டம்

கடந்த ஓரிரு ஆண்டுகளாக பூஜா ஹெக்டேவிற்கு சரியான படங்கள் அமையவில்லை. மேலும் தனது நடிப்பில் வெளியான படங்களும் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு ஓடவில்லை என்பதால் மிகுந்த மன வருத்தத்தில் இருந்ததாக சொல்லப்பட்டது. இந்நிலையில் விஜய்யின் கடைசிப்படமான ‘தளபதி 69’-இல் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. இந்த படத்தில் கமிட்டானபிறகு தொடர்ந்து அடுத்தடுத்த பெரிய பட வாய்ப்புகள் பூஜாவிற்கு கிடைத்திருக்கின்றன.


அடுத்தடுத்த படங்களை கைவசம் வைத்திருக்கும் பூஜா ஹெக்டே

அதன்படி, சாஹித் கபூர் ஹீரோவாக நடிக்கும் ‘தேவா’, ஆர்.ஜே பாலாஜி இயக்க சூர்யா நடிக்கும் ‘ரெட்ரோ’, துல்கர் சல்மானுக்கு ஜோடியாக ஒரு படம் மற்றும் ‘காஞ்சனா 4’ என அடுத்தடுத்து பெரிய ஸ்டார்களின் படங்களில் ஹீரோயினாக நடிக்கிறார் பூஜா ஹெக்டே. தளபதிக்கு ஜோடி என்றாலே அதிர்ஷ்டம் வராமலா இருக்கும் என்று சமூக ஊடகங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர் விஜய் ரசிகர்கள்.

இளம்வயது குறித்து தனுஷ்

நடிப்பு, இயக்கம் என மாறி மாறி பிஸியாக ஓடிக்கொண்டிருக்கிறார் தனுஷ். இவர் இயக்கத்தில் ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ என்ற திரைப்படம் வெளியான கையோடு, தானே இயக்கி நடிக்கும் ‘இட்லி கடை’ திரைப்படமும் வெளியாகவிருக்கிறது. இதனைத் தொடர்ந்து ‘குபேரா’ என்ற தெலுங்குப் படத்திலும் நடித்துவருகிறார். ஏற்கனவே பாலிவுட், ஹாலிவுட் என நடித்திருக்கும் இவர் மீண்டும் ஹாலிவுட்டில் நடிக்கவிருக்கிறார்.


கடந்தகால நினைவலைகளை பகிர்ந்த தனுஷ்

இப்படி நிற்க நேரமில்லாமல் பிஸியாக ஓடிக்கொண்டிருக்கும் தனுஷ், தனது கடந்தகால வாழ்க்கையை சமீபத்திய ஒரு பேட்டியில் நினைவுகூர்ந்திருக்கிறார். ‘துள்ளுவதோ இளமை’ திரைப்படம் வெளியானபோது தான் கடுமையான விமர்சனங்களை சந்தித்ததாகவும், 2002ஆம் ஆண்டு தேசிய விருது வெல்வேன் என்றோ, ஹாலிவுட் படங்களில் நடிப்பேன் என்றோ கூறியிருந்தால் அனைவரும் கண்டிப்பாக சிரித்திருப்பார்கள் என்றும் கூறினார். மேலும் தன்மீதே தான் நம்பிக்கை வைத்ததாக அவர் கூறிய வீடியோ க்ளிப் பலராலும் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

சிவாண்ணாவிற்கு கேன்சர் அறுவைசிகிச்சை

பிரபல கன்னட நடிகர் சிவ ராஜ்குமார் சிறுநீரகப்பை புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக சமீபத்தில் செய்திகள் வெளிவந்த நிலையில், சிகிச்சைக்காக பெங்களூருவிலிருந்து கடந்த 18ஆம் தேதி அமெரிக்காவிற்கு சென்றிருந்தார். மியாமியில் இருக்கும் கேன்சர் இன்ஸ்டிடியூட்டில் டிசம்பர் 25ஆம் தேதி தனக்கு அறுவைசிகிச்சை நடக்கவிருப்பதாகவும், மருத்துவர் முருகேஷ் மனோகர் தலைமையில் சிகிச்சை அளிக்கப்படுவதாகவும் அவர் கூறியிருந்தார்.


கன்னட சூப்பர் ஸ்டார் சிவ ராஜ்குமாருக்கு நடந்துமுடிந்த அறுவைசிகிச்சை

இந்நிலையில் திட்டமிட்டபடி, அறுவைசிகிச்சை வெற்றிகரமாக நடந்துமுடிந்திருக்கிறது. பாதிக்கப்பட்ட சிறுநீரகப்பை அகற்றப்பட்டு, அவருடைய குடலிலிருந்தே செயற்கை சிறுநீரகப்பை உருவாக்கப்பட்டு பொருத்தப்பட்டிருப்பதாக அவருக்கு சிகிச்சையளித்த மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் சிவாண்ணா என்று அவருடைய ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் இவருடைய உடல்நலத்திற்காக பிரார்த்தித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளனர் அவருடைய குடும்பத்தினர். ரஜினியின் ‘ஜெயிலர்’ படத்தில் சிறப்புத் தோற்றத்தில் அசத்தியிருந்தார் இவர். 

Tags:    

மேலும் செய்திகள்