தடைகளைத் தாண்டி உருவான ‘தக் லைஃப்’ - கமலை கைதூக்கிவிடுமா?

கொரோனா ஊரடங்கு, கிரேன் விபத்து, பட்ஜெட் பிரச்சினை, லைகா - ஷங்கரிடையே மோதல் என பல்வேறு தடைகளுக்கு மத்தியில் பல ஆண்டுகளாக நடைபெற்றுவந்த ‘இந்தியன்’ படத்தின் இரண்டாம் பாகத்தின் இறுதிகட்ட படபிடிப்பில் கமல் கலந்துகொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதால் கமல்ஹாசன் நடிக்கவேண்டிய காட்சிகளைத் தவிர, மற்ற நடிகர்களின் பகுதிகளை எடுத்துமுடித்தார் மணிரத்னம்.

Update:2024-11-19 00:00 IST
Click the Play button to listen to article

கமல்ஹாசன் - மணிரத்னம் கூட்டணியில் 1987ஆம் ஆண்டு வெளியான கல்ட் கிளாசிக் திரைப்படம் ‘நாயகன்’ இன்றுவரை மஸ்ட் வாட்ச் லிஸ்ட்டில் இடம்பெற்றிருக்கிறது. இந்த கூட்டணியில் அடுத்த படம் எப்போது என கேட்டுவந்த ரசிகர்களுக்கு கிட்டத்தட்ட 36 ஆண்டுகளுக்கு பிறகு பதில் கிடைத்திருக்கிறது. அதுதான் கடந்த ஆண்டு வெளியான ‘தக் லைஃப்’ அறிவிப்பு. மீண்டும் மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடிப்பில் ஒரு படம் என்றால் நிச்சயம் அது மாஸ் ஹிட்டடிக்கும் என்று ஆவலுடன் எதிர்பார்த்துவந்த ரசிகர்களின் பொறுமையை சோதிக்கும்விதமாக படப்பிடிப்பு தாமதம், நடிகர்கள் விலகல், வேறு படத்தில் கமல் பிஸி என செய்திகள் வெளியாகின. குறிப்பாக, கமலின் 69வது பிறந்தநாளை முன்னிட்டு இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி படத்தின்மீதான எதிர்பார்ப்பை மிகவும் அதிகரித்தது. இருப்பினும், இந்த ஆண்டு இறுதிக்குள் படம் வெளியாகும் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியிருந்தாலும் கமலின் 70வது பிறந்தாளை முன்னிட்டு வெளியாகியிருக்கும் ரிலீஸ் தேதி டீஸர் சற்று ஆறுதலை கொடுத்திருக்கிறது. அதன்படி, கமலின் 234வது படமாக வெளிவரவிருக்கும் ‘தக் லைஃப்’ அடுத்த ஆண்டு ஜூன் 5ஆம் தேதி வெளியாவதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இப்படம் தொடங்கியதிலிருந்தே உருவான பிரச்சினைகள் முதல் படப்பிடிப்பு நிறைவு வரை சற்று திரும்பி பார்க்கலாம்.

தக் லைஃப் அறிவிப்பு

மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ‘பொன்னியின் செல்வன்’ இரண்டு பாகங்களின் வெற்றிக்குப் பிறகு அடுத்து யாரை வைத்து என்ன மாதிரியான கதையை எடுக்கப்போகிறார் என கேட்கப்பட்டு வந்த சமயத்தில்தான் வெளிவந்தது ‘தக் லைஃப்’ குறித்த அறிவிப்பு. இந்த படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ், உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவீஸ், மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் ஆகிய மூன்று நிறுவனங்கள் இணைந்து தயாரிப்பதாகவும், மணிரத்னத்தின் ஆஸ்தான இசையமைப்பாளரான ஏ.ஆர் ரஹ்மான்தான் இந்த படத்திற்கும் இசையமைப்பதாகவும் அந்த அறிவிப்பில் கூறப்பட்டிருந்தது. கமல்ஹாசன் - மணிரத்னம் - ரஹ்மான் கூட்டணி என்றதுமே படத்தின் மீதான எதிர்பார்ப்பானது எக்கச்சக்கமாக அதிகரித்தது. அதனைத்தொடர்ந்து படத்தில் யார் யார் இடம்பெறப் போகிறார்கள் என காத்திருந்த ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும்விதமாக கிடைத்தது காஸ்ட்டிங் அப்டேட். இப்படத்தில் திரிஷா, ஜெயம் ரவி, துல்கர் சல்மான், ஐஸ்வர்யா லட்சுமி, ஜோஜூ ஜார்ஜ், கௌதம் கார்த்திக் மற்றும் ‘விருமாண்டி’ அபிராமி போன்ற பெரிய நட்சத்திர பட்டாளமே ஆரம்பத்தில் இடம்பெற்றிருந்தது. ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் இடம்பெற்ற நிறையப்பேர் இந்த படத்தில் இடம்பெற்றிருந்ததால் அந்த படத்தைப் போன்றே இதுவும் மிகவும் பிரம்மாண்டமாக இருக்கும் என்று கூறப்பட்ட நிலையில், இந்த படம் கேங்க்ஸ்டர் பின்னணியில் உருவாகிவருவதாக கூறப்பட்டது. ஆரம்பகட்ட படப்பிடிப்பானது சென்னையில் துவங்கப்பட்டு சில நாட்கள் நடைபெற்றது. அதன்பின்னர் தனது சொந்த வேலை காரணமாக கமல்ஹாசன் அமெரிக்காவிற்கு சென்றிருந்தார்.


‘தக் லைஃப்’ படத்தில் இணைந்த சிம்பு மற்றும் அருண் விஜய்

அதனைத் தொடர்ந்து மக்களவை தேர்தல் நெருங்கியதால், தேர்தல் பிரசாரத்தில் மும்முரமாக ஈடுபட்டிருந்தார். இதனால் படத்தில் இடம்பெற்றிருந்த சில முக்கிய நடிகர்களின் மற்ற படங்களின் கால்ஷீட்டில் சிக்கல்கள் ஏற்பட்டதால் மணிரத்னத்துக்கு படப்பிடிப்பில் நெருக்கடி ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து துல்கர் சல்மான் மற்றும் ஜெயம் ரவி ஆகிய இருவரும் ‘தக் லைஃப்’ படத்திலிருந்து விலகினர். அவர்களுக்கு பதிலாக துல்கர் நடிக்கவிருந்த கதாபாத்திரத்தில் சிம்புவும், ஜெயம் ரவி நடிக்கவிருந்த கதாபாத்திரத்தில் அருண் விஜய்யும் நடிக்கவிருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. அதற்கு முன்பே கமல்ஹாசன் தயாரிப்பில், ராஜ்குமார் பெரியசாமி இயக்கி சமீபத்தில் வெளியாகி வெற்றிநடை போட்டுவரும் ‘அமரன்’ படத்தில் சிம்புவை நடிக்கவைக்க பேச்சுவார்த்தைகள் நடைபெற்ற நிலையில், ‘தக் லைஃப்’ படத்தில் கமல்ஹாசனுடன் இணைந்து நடிக்க விருப்பம் தெரிவித்தார் சிம்பு. அதேபோல் பாலாவின் இயக்கத்தில் சூர்யா நடித்துவந்த ‘வணங்கான்’ படத்தில் ஏற்பட்ட மனஸ்தாபத்தால் அந்த படத்திலிருந்து சூர்யா விலகிய நிலையில் அந்த கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருந்த அருண் விஜய், ‘தக் லைஃபி’லும் இணைந்தார். இப்படி இடையில் நின்றுபோன ‘தக் லைஃப்’ படபிடிப்பு மீண்டும் சூடுபிடிக்க ஆரம்பித்தது.

இந்தியன் 2 ரிலீஸ் தாமதத்தால் தக் லைஃபிற்கு ஏற்பட்ட பிரச்சினைகள்


இதனிடையே ஏற்கனவே கொரோனா ஊரடங்கு, கிரேன் விபத்து, பட்ஜெட் பிரச்சினை, லைகா - ஷங்கரிடையே மோதல் என பல்வேறு தடைகளுக்கு மத்தியில் பல ஆண்டுகளாக நடைபெற்றுவந்த ‘இந்தியன்’ படத்தின் இரண்டாம் பாகத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பில் கமல் கலந்துகொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதால் கமல்ஹாசன் நடிக்கவேண்டிய காட்சிகளைத் தவிர, மற்ற நடிகர்களின் பகுதிகளை எடுத்துமுடித்தார் மணிரத்னம். இதனிடையே மக்களவை தேர்தல் முடிந்த கையோடு ‘இந்தியன் 2’ திரைப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அப்படத்தை இரண்டு பாகங்களாக எடுக்க முடிவுசெய்தார் ஷங்கர். அதனால் மனீஷா கொய்ராலா, எஸ்.ஜே சூர்யா உள்ளிட்ட சிலரும் கதையில் இணைந்தனர். ஆரம்பத்தில் ‘இந்தியன் 2’ ஏப்ரல் மாதமும், அதன் மூன்றாம் பாகம் ஆக்ஸ்ட் அல்லது டிசம்பரிலும் வெளியாகும் என்று கூறப்பட்ட நிலையில், போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகளில் ஏற்பட்ட தாமதத்தால் இரண்டாம் பாகத்தை ரிலீஸ் செய்வதில் தாமதம் ஏற்பட்டது. ஒருவழியாக அப்படம் ஜூலை 12ஆம் தேதி வெளியானது.


‘இந்தியன் 2 மற்றும் ‘கல்கி 2898ஏடி’ ஆகிய படங்களில் கமல்

ஆனால் படம் மிகவும் மோசமான விமர்சனங்களுக்கு உள்ளான நிலையில் ரூ.100 கோடி கொடுத்து ஓடிடி உரிமையை பெற்றிருந்த நெட் ப்ளிக்ஸ் அந்த தொகையை குறைக்குமாறு கேட்டு வாதிட்டது. இருப்பினும் ஓடிடியிலும் படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. இப்படி இரண்டாம் பாகம் வாங்கிய அடியால் மூன்றாம் பாகம் குறித்து ரசிகர்களிடையே பல்வேறு கேள்விகள் எழுந்தன. அதனால் மூன்றாம் பாகத்தின் ரிலீஸ் தேதியானது தள்ளிவைக்கப்பட்டது. கமல்ஹாசனின் கெரியரில் ரீ-என்ட்ரியாக அமைந்த ‘விக்ரம்’ படத்தின் பாக்ஸ் ஆபீஸ் வெற்றிக்குப் பிறகு அடுத்தடுத்த படங்கள் கைதூக்கிவிடும் என எதிர்பார்த்த கமலுக்கு பெரும் அடியாக அமைந்தது ‘இந்தியன் 2’. எனவே மூன்றாம் பாகத்தை தியேட்டர்களில் ரிலீஸ் செய்யாமல் நேரடியாக ஓடிடியில் வெளியிட திட்டமிடப்பட்ட நிலையில், அடுத்து ஒரு ஹிட் படத்தை கொடுத்துவிட்டுதான் ‘இந்தியன் 3’ஐ ரிலீஸ் செய்யவேண்டுமென கமல் ஸ்ட்ரிக்ட்டாக சொல்லிவிட்டதாக தகவல்கள் கசிந்தன. இதனிடையே பான் இந்தியா படமான ‘கல்கி 2898ஏடி’யிலும் சிறப்பு தோற்றத்தில் நடித்தார் கமல்ஹாசன்.

ஒருவழியாக முடிந்த படபிடிப்பு

இப்படி பல்வேறு சிக்கல்கள் அடுத்தடுத்து ஏற்பட்டாலும் ‘தக் லைஃப்’ படப்பிடிப்பும் பிஸியாக நடைபெற்றது. ‘தேர்தல் பிரசாரத்திற்கு பிறகு இந்த படத்தின் படப்பிடிப்பில் முழுமையாக ஈடுபடுவேன்’ என ஏற்கனவே கமல் தெரிவித்திருந்த நிலையில், தேர்தலுக்கு பிறகு சிம்பு மற்றும் அருண் விஜய் என புதிதாக இணைந்த நடிகர்களுடன் சேர்ந்து படப்பிடிப்பு தீவிரமாக நடைபெற்றது. மே மாதத்தில் படத்தில் சிம்பு இணைந்திருப்பதாக அவருக்கு அறிமுக வீடியோ ஒன்றையும் வெளியிட்டது படக்குழு. தொடர்ந்து செர்பியா, அயர்லாந்து, கோவா, ராஜஸ்தான், டெல்லி மற்றும் சென்னை என பல்வேறு லொகேஷன்களில் படப்பிடிப்பு நடைபெற்று ஒருவழியாக செப்டம்பர் மாதம் நிறைவடைந்தது. தொடர்ந்து கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் டப்பிங் பணிகள் நடைபெற்றன. இந்நிலையில்தான் கமல்ஹாசனின் 70வது பிறந்தநாளை முன்னிட்டு ‘தக் லைஃப்’ படத்தின் ரிலீஸ் தேதி டீஸர் வெளியிடப்பட்டது. அதில் கமல் மற்றும் சிம்பு ஆகிய இருவரின் ஆக்‌ஷன் காட்சிகள் மட்டும் இடம்பெற்றிருக்கின்றன. படத்தின் அறிவிப்பானது 2022ஆம் ஆண்டு கமலின் பிறந்தநாளன்று வெளியான நிலையில் 2023ஆம் ஆண்டு ஜனவரி மாதம் படப்பிடிப்பு தொடங்கப்பட்டது. அதே ஆண்டு கமலின் பிறந்தநாளன்று படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகரித்தது.


கடந்த ஆண்டு கமல் பிறந்தநாளன்று வெளியான ‘தக் லைஃப்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்

ஆனால் இடையிடையே அடுத்தடுத்த படங்கள், வெளிநாட்டு பயணம், தேர்தல் பிரசாரம் என கமல் பிஸியானதால் படப்பிடிப்பில் மிகவும் தாமதம் ஏற்பட்டு, ஒருவழியாக முடிந்த நிலையில் இந்த ஆண்டு கமலின் பிறந்தநாளன்று படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதன்படி, 2025ஆம் ஆண்டு ஜூன் 5ஆம் தேதி ‘தக் லைஃப்’ திரைப்படம் திரையரங்குகளில் ரிலீஸாகவிருக்கிறது. தியேட்டர் ரிலீஸுக்கு முன்பே படப்பிடிப்பு முடிந்த கையோடு இதன் டிஜிட்டல் உரிமையை ரூ.149 கோடியே 70 லட்சத்துக்கு வாங்கியிருக்கிறது நெட்ஃப்ளிக்ஸ். ‘இந்தியன் 2’ படத்தால் ஏற்பட்ட விமர்சனங்களை ‘தக் லைஃப்’ படத்தின்மூலம் சரிசெய்துவிடலாம் என்ற நம்பிக்கையில் இருக்கிறாராம் கமல்ஹாசன். அதனால் படத்தின் ஒவ்வொரு பணியையுமே அவரே கண்காணித்து கருத்துகளை தெரிவித்து வருவதாகவும் படக்குழு தரப்பிலிருந்து சொல்லப்படுகிறது. ‘விக்ரம்’ படத்தின் வெற்றிக்கு பிறகு தனது வயதுக்கு ஏற்ற கதைகளில் மட்டுமே கமல் நடிக்க முடிவெடுத்திருப்பதாக சொல்லப்பட்ட நிலையில், அந்த படத்தை போன்றே கதாநாயகி இல்லாத கதைகளில்தான் கமல் இனிமேல் நடிப்பார் என்று செய்திகள் வெளியான நிலையில் ‘தக் லைஃப்’ படத்திலும் கமலுக்கு ஜோடி இல்லை என்றே சொல்லப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்