‘துருவ நட்சத்திரம்’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி வெளியீடு
‘துருவ நட்சத்திரம்’ படம் இந்த ஆண்டு நவம்பர் 24 அன்று படம் வெளியாக இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
7 வருடங்களுக்கு பிறகு 'துருவ நட்சத்திரம்' திரைப்படம் வெளியாக உள்ள தேதியை அப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் இன்று வெளியிட்டுள்ளது.
சமூக ஊடகங்களின் இன்றைய ஹாட் டாப்பிக் சியான் விக்ரம். தூள், அருள், சாமி, பிதாமகன், அந்நியன், மகான், தெய்வத்திருமகள், ஐ, சமீபத்தில் பொன்னியின் செல்வன் 1 மற்றும் 2 ஆகிய படங்களில் நடித்து தமிழ் ஹீரோக்களில் ஹிட்டாக இருந்து வருபவர் சியான் விக்ரம். ‘துருவ நட்சத்திரம்’ படத்தின் படப்பிடிப்பு 2016 இல் தொடங்கப்பட்டு 7 வருட காலமாக நிதி பற்றாக்குறையினால் திரையிட முடியாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், ‘துருவ நட்சத்திரம்’ படம் பல தடைகளை தாண்டி இந்த ஆண்டு நவம்பர் 24 அன்று படம் வெளியாக இருப்பதாக சியான் விக்ரமின் மகனான, துருவ் விக்ரமின் பிறந்த நாளான இன்று படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் விக்ரம், ‘ஜான்’ என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். மேலும் இந்த திரைப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், சிம்ரன், ராதிகா சரத்குமார், விநாயகன், பார்த்திபன், அர்ஜுன் தாஸ் ஆகியோரும் நடித்துள்ளனர். இப்பட பாடல்களில் ஒன்றான ‘ஒரு மனம் நிற்க சொல்லுதே…’ என்ற பாடல் 2 வருடத்திற்கு முன்பு வெளியாகி இருந்தாலும் இன்றும் மக்கள் மனதை கரைத்து ஹிட்டான காதல் பாடலாக வளம் வந்து கொண்டிருக்கிறது. இது தவிர சமீபத்தில் பால் டப்பா என்பவரால் எழுதி பாடப்பட்ட ‘His name is John…’ என்ற பாடலும் மக்களிடையில் பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது. பாடல்களை தவிர்த்து இப்படத்தின் டீசரும் மக்களிடம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. 7 நாடுகளில் படம்பிடிக்கப்பட்டு 7 வருடத்திற்கு பின் திரையிட இருக்கும் இந்த முழு திரைப்படமும் ஒரு ஸ்பை திரில்லர் படமாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.