வரணும்.. பழைய சந்தானமா வரணும்... எதிர்பார்க்கும் ரசிகர்கள்! பிறந்தநாள் சிறப்பு தொகுப்பு!

காமெடியன், கதாநாயகன் மற்றும் தயாரிப்பாளர் என பன்முகத்திறமைகளை கொண்ட நடிகர் சந்தானம், தமிழ் சினிமாவில் வெற்றிகரமாக தனது பயணத்தைத் தொடர்ந்து வருகிறார்.

Update:2025-01-21 00:00 IST
Click the Play button to listen to article

காமெடியன், கதாநாயகன் மற்றும் தயாரிப்பாளர் என பன்முகத்திறமைகளை கொண்ட நடிகர் சந்தானம், தமிழ் சினிமாவில் வெற்றிகரமாக தனது பயணத்தைத் தொடர்ந்து வருகிறார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான லொள்ளு சபா நிகழ்ச்சியின் மூலம் தமிழக மக்களுக்கு அறிமுகமான இவர், பின்னர் நடிகர் சிம்புவின் ஆதரவுடன் வெள்ளித்திரையில் காலடி வைத்தார். 2000களின் நடுப்பகுதியில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான விஜய், அஜித், கார்த்தி, தனுஷ், உதயநிதி ஸ்டாலின், ஆர்யா ஆகியோருடன் இணைந்து நடித்து, தனது நகைச்சுவை திறமையால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். பின் ஒரு கட்டத்தில் கவுண்டமணி, விவேக், வடிவேலு ஆகிய முன்னணி நகைச்சுவை நடிகர்களையே ஓவர்டேக் செய்யும் அளவுக்கு சிரிப்பில் உச்சம் தொட்டு தன்னை தனித்துவம் மிக்கவராக நிலை நிறுத்திக் கொண்டார். இப்படி சந்தானத்தின் காமெடியை அனைவரும் அதிகமாக ரசிக்க தொடங்கிய நேரத்தில் திடீரென நாயகனாக மாற்றம் பெற்றவர், அங்கும் தன் வெற்றி முத்திரையை பதித்தார். அதே வேளையில் மீண்டும் படங்களில் நகைச்சுவை நடிகராக வந்து நடிக்க வேண்டும் என பலரும் அவரிடம் கூறி வந்தனர். அந்த ஆசையை நிறைவேற்றும் படி சமீபத்தில் வந்த ‘மதகஜராஜா’ படத்தில் நகைச்சுவையில் கலக்கியுள்ள சந்தானம் இன்று(21.01.25) தன் 45-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அந்த வகையில் இந்த தொகுப்பில் சந்தானத்தின் திரைப்பயணம் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை குறித்த பல சுவாரஸ்யமான தகவல்களை இங்கே காணலாம்.

சந்தானத்தின் சினிமா பயணம்

மிகச்சிறந்த நகைச்சுவை நடிகராக நம் மனங்களில் அப்படியே பதிந்து போன நடிகர் சந்தானம் சென்னை பல்லாவரம் அருகே உள்ள பொழிச்சலூரில் 1980-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 21-ஆம் தேதி நீலமேகம் - பொன்னுகண்ணு தம்பதிக்கு மகனாக பிறந்தார். இந்த தம்பதிகளுக்கு ஒரே மகனாக இவர் இருந்ததால், சந்தானம் மிகுந்த செல்லமாக வளர்க்கப்பட்டார். சென்னை பொழிச்சலூரில் உள்ள மரிய நிவாஸ் மெட்ரிகுலேசன் பள்ளியில் தனது பள்ளிப் படிப்பை முடித்த சந்தானம், பம்மல் அருகிலுள்ள மீனாட்சி கிருஷ்ணன் பாலிடெக்னிக் கல்லூரியில் டிப்ளமோ பட்டம் பெற்றார். சிறுவயதிலேயே சுறுசுறுப்பும் சுட்டித்தனமும் கொண்டிருந்தாலும், படிப்பிலும் திறமைசாலியாக இருந்தார். அதனால் அவரது தந்தை நீலமேகம், மகனை ஒரு பொறியாளராகவோ அல்லது ஐ.டி. துறையில் உயர்ந்த பதவியில் அமர்த்த வேண்டுமென்றோ கனவு கொண்டிருந்தார். ஆனால் சந்தானம் பள்ளி நாட்களிலிருந்தே கலைகளில் அதிக ஆர்வம் கொண்டவராக இருந்தார். பாடல், நடனம் போன்ற விஷயங்களில் அவர் மிகுந்த ஈடுபாட்டுடன் செயல்பட்டார். பள்ளிகளில் படிக்கும் காலங்களிலும் சரி, கல்லூரி நாட்களிலும் சரி அங்கு நடைபெறும் நிகழ்வுகளில் கலந்து கொண்டு நடனம் ஆடி ஜெய்சங்கர், எஸ்.எஸ்.சந்திரன், எம்.சரோஜா போன்ற அன்றைய நட்சத்திரங்களின் கையால் பல பரிசுகளை பெற்றார். அந்த ஆர்வமே அவரை கலைத்துறைக்கு ஈர்த்தது. அவரது தீவிர முயற்சிகளின் பலனாகக் கிடைத்த முதலாவது வாய்ப்பு, வின் டிவியில் ஒளிபரப்பான "டீ கடை பெஞ்ச்" நிகழ்ச்சி. அதுதான் அவருடைய கலை வாழ்க்கையின் முதல் அடிக்கல்!


நடிகர் சிம்புவின் 'மன்மதன்' படத்தின் மூலம் சினிமாவில் என்ட்ரியான சந்தானம்

அதனைத் தொடர்ந்து சன் டிவியில் ஒளிபரப்பான ‘அண்ணாமலை’ தொடரில் நடித்தார். பின்னர் ஸ்டார் விஜய்யின் ‘சகலை வெஸ் ரகளை’ என்ற நிகழ்ச்சியில் பங்கேற்றார். அதன் பிறகு, அவருடைய தொடர்ச்சியான முயற்சிகளுக்கு மிகுந்த வெற்றியை கொண்டு வரும் வகையில் அமைந்த நிகழ்ச்சி, அதே ஸ்டார் விஜய்யில் 2003 முதல் 2004 வரை ஒளிபரப்பான ‘லொள்ளு சபா’ ஆகும். இந்த நிகழ்ச்சியில் சந்தானத்தின் கவுண்டர் காமெடிகள் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தன. இதனால் அவர் நடிகர் சிம்புவின் கவனத்தையும் ஈர்த்தார். இதன் அடிப்படையில், 2004ஆம் ஆண்டு, தானே இயக்கி நடித்த ‘மன்மதன்’ படத்தில் நடிகர் சிம்பு, சந்தானத்திற்கு நடிக்கும் வாய்ப்பை வழங்கினார். இந்த வாய்ப்பை மிகச் சிறப்பாகப் பயன்படுத்திய சந்தானம், பாபி என்ற கதாபாத்திரத்தில் தன்னுடைய தனித்துவமான நடிப்புத்திறனை வெளிப்படுத்தி, தனது முதல் படத்திலேயே தனக்கென்ற ஒரு அடையாளத்தை உருவாக்கினார்.

நகைச்சுவை நடிகர் டு கதாநாயகன்

சிம்புவின் ‘மன்மதன்’ படத்தில் கிடைத்த வரவேற்பால் அடுத்தடுத்து அப்போது உச்சத்தில் இருந்த விஜய், அஜித், ஆர்யா, சூர்யா, தனுஷ், ஜெயம் ரவி போன்றவர்களின் படங்களிலும் நடிக்கும் வாய்ப்பு கிடைத்து தன் கனவுக்கோட்டையை நோக்கி வெற்றிநடை போட ஆரம்பித்தார் சந்தானம். இத்தனைக்கும் அந்த சமயத்தில் தமிழ் சினிமாவில் வைகை புயல் வடிவேலு, சின்ன கலைவாணர் விவேக், கருணாஸ் போன்றவர்களும் நகைச்சுவையில் கோலோச்சி கொண்டிருந்தனர். இருப்பினும் எதை பற்றியும் கவலைப்படாமல் தன் திறமையையும், உழைப்பையும் மட்டுமே நம்பி விஜய்யுடன் ‘சச்சின்’, ‘அழகிய தமிழ் மகன்’, தனுசுடன் ‘பொல்லாதவன்’, எஸ்.ஜே.சூர்யாவுடன் ‘அன்பே ஆருயிரே’, ‘வியாபாரி’, ஜெயம் ரவியுடன் ‘இதயத்திருடன்’, ‘சம்திங் சம்திங்’, ‘சந்தோஷ் சுப்பிரமணியன்’, சூர்யாவுடன் ‘சில்லுன்னு ஒரு காதல்’, சிம்புவுடன் மீண்டும் ‘வல்லவன்’, ‘காளை’, ‘சிலம்பாட்டம்’, அஜித்துடன் ‘கிரீடம்’, ‘பில்லா’, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் ‘குசேலன்’, ‘எந்திரன்’, ‘லிங்கா’ இப்படி பல படங்களில் தனித்துவமாக தெரியும்படி தன் ரைமிங்.. டைமிங் காமெடியால் நகைச்சுவையில் பட்டையை கிளப்பி கவுண்டர் கிங் என்ற பட்டத்தையும் ரசிகர்களிடம் இருந்து பெற்றார்.


'சச்சின்' திரைப்படத்தில் ஜெனிலியாவுடன் சந்தானம்

இப்படியே உச்சத்தை நோக்கி பயணிக்க ஆரம்பித்தவரின் திரைவாழ்க்கையில் பல படங்கள் என்றுமே மறக்க முடியாத படங்களாகவும் ரசிகர்களின் மனதில் அப்படியே பதிந்து போயின. அப்படி நடிகர் ஜீவாவுடன் ‘சிவா மனசுல சக்தி’, ஆர்யாவுடன் ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’, உதயநிதியுடன் ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’, கார்த்தியுடன் ‘ஆல் இன் ஆல் அழகுராஜா’, விமலுடன் ‘கலகலப்பு’, பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசன் மற்றும் சேதுவுடன் இணைந்து நடித்த ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ போன்ற படங்கள் சந்தானத்தின் நகைச்சுவை காட்சிகளை மீண்டும் மீண்டும் தேடிச்சென்று பார்க்கும் அளவுக்கு பிரம்மிப்பை ஏற்படுத்தும் படங்களாக அமைந்தன. அதுமட்டுமின்றி இந்த படங்களில் எல்லாம் அவரின் நடிப்பிற்காக சிறந்த காமெடியன் விருதுகளையும் அள்ளி குவித்திருக்கிறார். இப்படி நகைச்சுவையில் இனி சந்தானத்தின் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது என எண்ணும் அளவுக்கு உயரத்தில் பறந்து கொண்டிருந்த நேரத்தில் வந்ததுதான் கதாநாயகன் வாய்ப்பு. 2008-ஆம் ஆண்டு ‘அறை எண் 305-ல் கடவுள்’ படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான சந்தானத்திற்கு அந்த படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியை கொடுக்கவில்லை. இருப்பினும் அடுத்த ஹீரோ வாய்ப்புக்காக காத்திருக்காமல் தொடர்ந்து பிற ஹீரோக்களுடன் இணைந்து காமெடியிலும் கலக்கி வந்தார். இந்த நேரம் 2013-ஆம் ஆண்டு ஹேண்ட் மேடு (handmade) பிலிம் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி அதில் முதல் படைப்பாக ‘கண்ணா லட்டு தின்ன அசையா’ என்ற படத்தினை தயாரித்து நடித்தார். இப்படத்தில் சந்தானத்துடன் இணைந்து நடிகர்கள் பவர் ஸ்டார், விசாகா சிங், சேது, கோவை சரளா ஆகியோர் காமெடியில் கலக்கியிருந்தனர். படமும் ஓரளவு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

இனி ஹீரோ மட்டும்தான்


‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’ திரைப்படத்தில் ஹீரோவாக நடிகர் சந்தானம் 

2013 வரை தன் காமெடியால் மக்கள் மனங்களை கவர்ந்து வந்த சந்தானம், அதன் பிறகு ஹீரோக்களுடன் இணைந்து நடிப்பதை குறைத்துக்கொண்டு இனி நடித்தால் ஹீரோவாக மட்டும்தான் நடிப்பேன்; காமெடியனாக நடிக்க மாட்டேன் என்று அறிவித்தார். அவரின் இந்த அறிவிப்பு அவர் ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை கொடுத்தது மட்டுமின்றி அவருக்கு எதிராக விமர்சனங்களும் எழுந்தன. இந்த விமர்சனங்கள் அவர் எப்படியான நிலையில் இருந்து சினிமாவுக்குள் வந்தார் என்பதை மறந்துவிட்டு இப்படியொரு அறிவிப்பை கொடுத்திருப்பது போன்ற உணர்வை அந்த சமயம் பலருக்கும் ஏற்படுத்தியது. இருப்பினும் எதை பற்றியும் கவலைப்படாமல் தான் எடுத்த முடிவில் இருந்து பின்வாங்கவும் செய்யாமல் கடந்த 2014-ஆம் ஆண்டு ‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’ என்ற படத்தின் மூலமாக மீண்டும் ஹீரோவாக அதுவும் சோலோ ஹீரோவாக களமிறங்கினார். இந்த படம் ஓரளவுக்கு வெற்றிப்படமாக அமைந்ததை தொடர்ந்து,  தான் ஒத்துக்கொண்ட படங்களில் மட்டும் காமெடியனாக நடித்து கொடுத்துவிட்டு பிறகு ஒரேடியாக ‘இனிமே இப்படித்தான்’, ‘டகால்டி’, ‘பிஸ்கோத்’, ‘பாரிஸ் ஜெயராஜ்’, ‘டிக்கிலோனா’, ‘சபாபதி’, ‘தில்லுக்கு துட்டு’, ‘ஏஜென்ட் கண்ணாயிரம்’, ‘டிடி ரிட்டன்ஸ்’, ‘கிக்’, ‘வடக்குப்பட்டி ராமசாமி’ என பல்வேறு படங்களில் ஹீரோவாக நடித்தார். இருப்பினும், இந்த எல்லா படங்களுமே ஓர் அளவிற்கு தான் கை கொடுத்தன. இதில் ‘தில்லுக்கு துட்டு’, வடக்குப்பட்டி ராமசாமி போன்ற ஒரு சில படங்கள் மட்டும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுக் கொடுத்தன. காமெடியனாக முழுமையான சக்ஸஸ் கொடுக்க முடிந்த சந்தானத்தால் ஹீரோவாக அவ்வளவு வெற்றிகளை கொடுக்க முடியாவிட்டாலும் தன் நிலையில் இருந்து மாறாமல் அப்படியே இருந்து வருகிறார்.

12 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் காமெடியனாக


12 ஆண்டுகளுக்கு பிறகு காமெடியனாக ‘மத கஜ ராஜா' திரைப்படத்தில் விஷாலுடன் தோன்றிய சந்தானம் 

‘மண்ணவன் வந்தானடி’, ‘சர்வர் சுந்தரம்’ ஆகிய படங்கள் தற்போது முடிந்து நீண்ட நாட்களாக ரிலீஸ் ஆகாமல் உள்ள நிலையில், சந்தானம் கன்னட படம் ஒன்றில் கதாநாயகனாக நடிக்கவுள்ளதாக தகவல் வெளியானது. இந்த நேரத்தில்தான், மீண்டும் சந்தானத்தின் பழைய நகைச்சுவையை நினைவுபடுத்தும் விதமாக சமீபத்தில் ‘மத கஜ ராஜா’ திரைப்படம் ரிலீஸ் ஆகி சூப்பர் ஹிட் ஆகியுள்ளது. 2012-ஆம் ஆண்டே சுந்தர்.சி இயக்கத்தில் விஷாலுடன் இணைந்து ‘மத கஜ ராஜா' என்ற படத்தில் அவருக்கு நண்பராக சந்தானம் நடித்திருந்தார். அப்போதே வெளிவர வேண்டிய அந்த படம் தனிப்பட்ட சில சிக்கல்களால், எப்போது வெளியாகும் என்றே தெரியாத அளவுக்கு கிடப்பில் போடப்பட்டிருந்தது. இருப்பினும் உழைப்பு உண்மையாக இருந்தால் அதற்கான அங்கீகாரம் எப்படியும் கிடைத்துவிடும் என்பதற்கு ஏற்ப 12 ஆண்டு போராட்டத்திற்கு பிறகு 2025 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த 12-ஆம் தேதி திரைக்கு வந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. குறிப்பாக சந்தானம் மற்றும் மறைந்த நடிகர் மனோபாலாவின் நகைச்சுவை, இப்படத்தில் ரசிகர்களால் வெகுவாக ரசிக்கப்படுகிறது. படத்தின் ஹீரோ விஷால் ஒரு மேடையில் பேசும்போது, இந்த படத்தில் இருக்கும் காமெடி நடிகர் சந்தானத்தை இயக்குநர்கள் பலரும் மிஸ் பண்ணுவதாக கூறியிருந்தார். மீண்டும் காமெடியனாக வந்தால் நன்றாக இருக்கும் என்பது போன்றும் பேசியிருந்தார். தமிழ் சினிமா ஒரு திறமையான காமெடியனை எப்போதும் இழக்க விரும்பாது. சந்தானமும் இந்த விஷயத்தை ஒரு முறை பரிசீலிக்க வேண்டும் என்று அவரது ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். ‘வரணும்.. பழைய பன்னீர் செல்வமா வரணும்’ என்கிற சத்ரியன் பட வசனத்தை போல மீண்டும் சந்தானம் நகைச்சுவையில் கலக்குவார் என நம்பி, இன்று தனது பிறந்த நாளைக் கொண்டாடும் அவர், எப்போதும் மகிழ்ச்சியுடனும் வெற்றியுடனும் வாழ நாமும் வாழ்த்துவோம்!

Tags:    

மேலும் செய்திகள்