முதல் படத்திலேயே விஜயகாந்த் காட்டிய அன்பு - மனம்திறக்கும் நடிகை மீனாகுமாரி

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் கயல் சீரியல் மூலம் கயலுக்கு அம்மாவாக வந்து நம்மையெல்லாம் மகிழ்வித்துக் கொண்டிருப்பவர்தான் நடிகை மீனாகுமாரி.

Update:2024-10-08 00:00 IST
Click the Play button to listen to article

கயல் சீரியல் மூலம் கயலுக்கு அம்மாவாக வந்து நம்மையெல்லாம் மகிழ்வித்துக் கொண்டிருப்பவர்தான் நடிகை மீனாகுமாரி. மறைந்த கேப்டன் விஜயகாந்த்தின் ‘கருப்பு நிலா’ படத்தின்மூலம் திரை துறையில் அறிமுகமான இவர் அன்றைய உச்சநட்சத்திரங்கள் பலருக்கும் தங்கையாக, அண்ணியாக, அக்காவாக நடித்து கவனம் பெற்றவர் ஆவார். திரைப்படங்கள் மட்டுமின்றி சின்னத்திரையிலும் ‘மர்ம தேசம்’ தொடங்கி ‘நிம்மதி’, ‘மலர்கள்’, ‘பைரவி’, ‘ஆவிகளுக்கு பிடித்த பெயர்’, ‘வைரநெஞ்சம்’ என பல தொடர்களில் நாயகியாக, அம்மாவாக என பல முக்கியமான வேடங்களில் நடித்திருக்கிறார். பெரிய திரையில், கதாநாயகி வேண்டாம்; எனக்கு கேரக்டர் ரோல் தான் செட் ஆகும் என்று தெளிவாக முடிவெடுத்ததாலோ என்னவோ இன்றும் இளமை மாறாமல் அதே குழந்தை முகத்தோடும், அழகான புண் சிரிப்போடும் கலைத்துறையில் தன்னை நீண்ட நாளாக நிலைநிறுத்தி வருகிறார். இந்த நிலையில், ராணி நேயர்களுக்காக கயல் தொடரின் படப்பிடிப்பு தளத்தில் அவரை சந்தித்து நடத்திய நேர்காணலில் அவரின் திரை அனுபவங்கள் பலவற்றை நம்மோடு பகிர்ந்து கொண்டார். அந்த நேர்காணலின் ஒரு பகுதியை இங்கே காணலாம்.

உங்களுடைய சினிமா பயணம் எப்படி தொடங்கியது?

எனது பூர்வீகம் தெலுங்காக இருந்தாலும் நான் அறிமுகமானது தமிழ் சினிமாவில்தான். முதல் படமே விஜயகாந்த் அவர்களுடைய கருப்பு நிலா படத்தில், அவருக்கு தங்கையாக நடித்திருந்தேன். இப்படத்திற்கு பிறகு தங்கை வேடங்கள் உள்ள நிறைய பட வாய்ப்புகள் வந்தன. அதன்படி தெலுங்கில் சிரஞ்சீவி, வெங்கடேஷ் ஆகியோருக்கும் தங்கையாக நடித்த நான் தமிழில் அடுத்த தலைமுறை உச்சநட்சத்திர நடிகர்களாக வலம் வந்த விஜய்க்கு ‘பத்ரி’ படத்தில் அண்ணியாகவும், ‘கிரீடம்’ திரைப்படத்தில் விவேக்குக்கு மனைவியாகவும், அஜித்துக்கு அக்காவாகவும் நடித்திருந்தேன். இப்படி பெரிய பெரிய ஹீரோக்களின் படங்களில் நடித்துக் கொண்டிருந்த சமயத்தில்தான் எனக்கு சின்னத்திரையான சீரியல் பக்கம் இருந்தும் வாய்ப்புகள் வந்தன. அதன்படி சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘மர்ம தேசம்’ என்ற மிகப்பெரிய ஹிட் தொடரில் நடித்தேன். இப்படி ஆரம்பித்த எனது திரைப்பயணம் எந்தவித தடங்கலும் இன்றி இன்றுவரை சிறப்பாக சென்று கொண்டிருக்கிறது.

விஜயகாந்துடன் ‘கருப்பு நிலா’ படத்தில் நடிக்கக் கூடிய அந்த வாய்ப்பு உங்களுக்கு எப்படி கிடைத்தது?

நான் ஒரு தெலுங்கு பெண். எனக்கு தமிழ் சுத்தமாக தெரியாது. எனது சகோதரி விஜய ஸ்ரீ தென்னிந்திய அளவில் அறியப்பட்ட மிகப்பெரிய ஒளிப்பதிவாளராக இருக்கிறார். அவர் தான் என்னை சினிமாவுக்கு அழைத்து வந்தது மட்டுமின்றி ‘கருப்பு நிலா’ படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பையும் பெற்று கொடுத்தார். அந்த படத்தில் விஜயகாந்திற்கு தங்கையாக நடிக்க கேட்கிறார்கள், இவள் நடிக்கட்டும் என்று வீட்டில் பேசி அனுமதி பெற்று அழைத்து வந்தது அவர்தான். சினிமா பற்றி எதுவுமே தெரியாமல் வந்த என்னை பார்த்ததும் விஜயகாந்த் சார் ஓகே செய்தார். மேற்கொண்டு என் அருகில் அமர்ந்து முதல் படத்திலேயே ஒரு மிகப்பெரிய ஹீரோவின் படத்தில் நடிக்கிறீர்கள். அதுவும் எனக்கு தங்கையாக நடிக்கிறீங்க… இந்த படம் உங்களுக்கு நல்லதொரு அறிமுகத்தையும், மக்கள் மத்தியில் சிறப்பானதொரு அடையாளத்தையும் கொடுக்கும். இப்போது எனது தங்கையான உங்களை தோளில் தூக்கிபோட்டுக்கொண்டு ஒரு சண்டை காட்சி படமாக்கப்போகிறோம் என்று பேசிக்கொண்டிருந்தார். ஆனால், எனக்கோ தமிழ் தெரியாததால் ஒன்றுமே புரியவில்லை. என் சகோதரிதான் அவர் சொல்வது அனைத்தையும் கேட்டு தலையாட்டி கொண்டிருந்தார். நானும் எதுவும் ரியாக்ட் செய்யாமலே இருந்தால் தவறாகி விடும் என்று அவர் சொல்ல சொல்ல ஓகே சொன்னேன்.


‘கருப்பு நிலா ‘ திரைப்படத்தில் நடிகர் விஜயகாந்தின் தங்கையாக

அதற்கு முன்பு அந்த படத்தில் முதல் காட்சியே நான் அசைவ உணவு சாப்பிட வேண்டும். அதுவும் பிரியாணியுடன், மீன் சாப்பிட வேண்டிய காட்சி. எனக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. ஏனென்றால் நான் முழுக்கு முழுக்க வெஜிடேரியன். இதனால் நேராக இயக்குநர் அரவிந்தராஜிடம் சென்று சார் நான் கறி, மீன் போன்ற எந்த நான்வெஜ் ஐட்டங்களும் சாப்பிட மாட்டேன் என்று சொன்னதும் எப்படியோ மேனேஜ் செய்து அந்த காட்சியை எடுத்து முடித்தார்கள். அதன் பிறகு அந்த படத்தில் எனக்கு நீளமான வசனம் பேசும் காட்சி ஒன்றும் இருந்தது. “என்ன எங்க அண்ணனை எல்லோரும் கிள்ளுக்கீரை என்று நினைத்தீர்களா. அவரை மாதிரியே தான் என்னையும் வளர்த்து இருக்கார்” என்று பேசி சண்டை காட்சியிலும் நடித்தேன். அதன் பிறகுதான் வில்லன்கள் என்னை பெட்டியில் வைத்து அடைத்துவிட, பிறகு எனது அண்ணனான விஜயகாந்த் தேடி கண்டுபிடித்து தோளில்தூக்கிக் கட்டிக்கொண்டு சண்டையிடும் காட்சி வரும். படத்தில் மிகப்பெரிய சண்டை காட்சியான அதை கிட்டத்தட்ட 15-நாட்கள் வரை எடுத்தார்கள். அதில் ரோப் கட்டி எடுக்கப்பட்ட ஒரு காட்சியில் எங்கள் இருவரின் காலையும் கட்டிவிட்டார்கள். அப்போது ரோப் அறுந்து விழுந்து இருவருக்குமே லேசாக அடிபட்டுவிட்டது. பிறகு கொஞ்சம் ஓய்வு எடுத்துக்கொண்டு மீண்டும் அந்த காட்சியை நடித்து முடித்தோம். தமிழ் சினிமாவில் முதல் படமே அடிதடி சண்டையுடன் எடுக்கப்பட்டு அறிமுகமான நடிகை நானாகத்தான் இருப்பேன்.

மொழி தெரியாமல் முதல் படத்தில் நடித்த அனுபவம் எப்படி இருந்தது?


ராணி ஆன்லைனுக்கு பேட்டியளித்தபோது

விஜயகாந்த் சார் பெரிய ஹீரோ என்றெல்லாம் எனக்கு அப்போது தெரியாது. அவர் என் அருகில் அமர்ந்து என்னை யார் என்று உங்களுக்கு தெரியுமா? என்னுடைய படங்களை பார்த்து இருக்கீங்களா? என்று கேட்ட பொழுது தெரியாது என்று சொன்னால் அசிங்கமாகிவிடுமே என்று ‘சார் உங்களை தெரியும்’ என சொல்லி சமாளித்துவிட்டேன். பிறகு, அந்த படத்தில் பணியாற்றிய தொழில்நுட்ப கலைஞர்கள் ஒவ்வொருவரிடமும் விஜயகாந்த் சார் குறித்து நிறைய கேட்டு தெரிந்து கொண்டேன். இந்த படத்தில் ஸ்ரீவித்யா, நம்பியார், குஷ்பூ, ரஞ்சிதா, ஆர்.சுந்தர்ராஜன் என்று மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தார்கள். யாரும் என்னை புதுப்பெண், குழந்தைத்தனமாக இருக்கிறேன் என்றெல்லாம் ஒதுக்கி வைக்கவில்லை. எல்லோருமே என்னை நன்கு ஊக்குவித்தார்கள்.

முதல் படத்திலேயே விஜயகாந்த், ஸ்ரீவித்யா என்ற இரண்டு லெஜெண்ட்ரி நடிகர்களுடன் நடிச்சு இருக்கீங்க. இன்றைக்கு அவங்க இரண்டு பேருமே இல்லை. அவங்க கூட மறக்க முடியாத அனுபவம் ஏதும் இருக்கிறதா?

விஜயகாந்த் சாரோட நடிச்ச சண்டை காட்சியை என்னால் மறக்க முடியாது. அதைவிட படப்பிடிப்பு தளத்திற்கு வந்ததும் பெரிய நடிகர், சின்ன நடிகர் என்ற எந்த பாகுபாடும் இல்லாமல் அவருக்கே உரித்தான அந்த தோரணையுடன் சாப்டீங்களா? என்று அவர் மிகுந்த அக்கறையோடு விசாரிப்பார். அதை எப்போதும் மறக்க முடியாது. அதேபோன்றுதான் நடிகை ஸ்ரீவித்யா அம்மாவும், நான் எப்படி எல்லாம் மேக்கப் போட வேண்டும், நடிக்க வேண்டும் என்றெல்லாம் சொல்லி தருவார்கள். அந்த வயதில் எனக்கு அது புரியவில்லை. பின்னாளில், இந்த துறையில் அனுபவம் அதிகமாக அதிகமாக நானே நிறைய முறை உணர்ந்து இருக்கிறேன். அன்றைக்கே நான் நன்றாக வர வேண்டும் என்றுதான் இதெல்லாம் ஸ்ரீவித்யா அம்மா எனக்கு சொல்லி கொடுத்து இருக்கிறார்கள் என்று.


‘வைர நெஞ்சம்’ தொடரில் சக்தியாக வரும் மீனாகுமாரி 

தமிழில் சத்யராஜ் நடித்து வெளிவந்த ‘மிலிட்டரி’ படத்தின் தெலுங்கு வெர்ஷனில் சிரஞ்சீவிக்கு தங்கையாக நடித்த அனுபவம் பற்றி கூற முடியுமா?

தெலுங்கில் சிரஞ்சீவி நடிப்பில் வெளிவந்த ‘ஹிட்லர்’ திரைப்படத்தில் 5 தங்கைகளில் கடைக்குட்டி தங்கையாக நடித்து இருந்தேன். அந்த படம்தான் தமிழில் சத்யராஜ் சார் நடித்து 2003-ஆம் ஆண்டு ‘மிலிட்டரி’ என்ற பெயரில் வந்தது. அப்போது சிரஞ்சீவி சாரோடு நடித்த அனுபவத்தை மறக்க முடியாது. தமிழிலும் என்னை நடிக்க சொல்லி அழைத்து இருந்தார்கள். ஆனால், அந்த சமயம் நான் வேறொரு படத்தில் நடித்துக் கொண்டிருந்ததால் என்னால் அதில் நடிக்க முடியாமல் போய்விட்டது. புதுமுக நடிகை என்ற போதிலும் எல்லாமே பெரிய ஹீரோக்களின் படங்களாக அமைந்தது மட்டுமின்றி, இரண்டாம் நிலை கதாபாத்திரங்கள் என்றாலும் அந்த படங்களில் எனக்கான முக்கியத்துவம் என்பது சிறப்பாகவே கிடைத்தது. இதுதவிர, இந்த நேரம் எனக்கு ஹீரோயின் வாய்ப்புகளும் வந்தன. ஆனால், எனக்கென்னவோ ஹீரோயின் ஆவதில் பெரிதாக ஆர்வம் இல்லை. நான் அதற்கு செட் ஆக மாட்டேன் என்ற மனநிலை ஏற்பட்டுவிட்டது. அதனால் அதை தவிர்த்து இரண்டாம் நிலை நாயகி அதாவது கேரக்டர் ஆர்டிஸ்ட்டாவே இன்றுவரை பயணித்துக் கொண்டிருக்கிறேன்.

‘பத்ரி’ பட வாய்ப்பு உங்களுக்கு எப்படி வந்தது?


விஜய்க்கு அண்ணியாக ‘பத்ரி’ திரைப்படத்தில் 

அப்போது நிறைய படங்களில் நடித்துக் கொண்டிருந்த தருணம் என்பதால் எல்லா வாய்ப்புகளையும் போல்தான் ‘பத்ரி’ பட வாய்ப்பும் எனக்கு வந்தது. அதில் விஜய்யின் அண்ணி என்பதற்காக ஒத்துக்கொள்ளவில்லை. நம் கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் இருக்கிறதா என்பதை பார்த்துதான் நடிக்க ஒத்துக்கொண்டேன். அதில் நான் எதிர்பார்த்தது போல் என் வேடத்திற்கு முக்கியத்துவம் தரப்பட்டிருந்தது. இப்போதுதான் தெரிகிறது அதெல்லாம் நமக்கு எவ்வளவு பெரிய பொக்கிஷம் என்று. அதிலும் படத்தில் இடம்பெறும் ‘கலகலக்குது கலகலக்குது’ என்ற அந்த ஒருபாடல் விஜய்யோடு சேர்த்து என்னையும் பட்டிதொட்டியெல்லாம் பேச வைத்து பிரபலமாக்கியது. அந்த பாடலில் அம்மா இல்லாத ஒரு வீட்டுக்குள் அண்ணி என்பவள் அம்மாவாக வந்தால் ஒரு மச்சினர் எவ்வளவு சந்தோஷப்படுவார் என்பதை மிக அழகான வரிகளாக சொல்லி இருப்பார்கள். நான் அம்மாவான பிறகும் கூட அந்த பாடலை எப்போது கேட்டாலும் நம்மையே அறியாத ஒரு உணர்வு உள்ளிருந்து வரும். அதுவும் அண்ணி ஸ்தானத்தில் இருக்கும் ஒவ்வொருவருக்கும் கண்டிப்பாக அந்த பாடல் பிடிக்கும்.

இதன் மூலம் விஜய் சாரோட நானும் ஒரு படம் நடித்திருக்கிறேன் என்ற பெருமை எனக்கு இருக்கிறது. இன்னைக்கும் ‘பத்ரி’, ‘ஹிட்லர்’ ஆகிய படங்கள் வாரத்துக்கு ஒரு முறையாவது தொலைக்காட்சிகளில் போட்டுவிடுகிறார்கள். அதன் மூலமாகவும் இன்று உள்ளவர்களுக்கு நான் அறியப்படும் நடிகையாக தெரிந்துவிடுகிறேன். நான் நடித்த ஹீரோக்களான விஜயகாந்த், சிரஞ்சீவி எல்லோருமே அரசியலுக்கு வந்து விட்டார்கள். இவர்களை தொடர்ந்து இப்போது விஜய்யும் அரசியலுக்கு வந்து இருக்கிறார். சினிமாவில் நடித்தது போதும்; நம்மை உயரத்துக்கு கொண்டுபோன மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்து வருகிறார்கள். வரட்டும்; நல்லது செய்யட்டும். பழைய நடிகைகள் எப்படி எம்ஜிஆர், சிவாஜி கூட நடித்ததை பெருமையாக சொல்லிக் கொள்கிறார்களோ; அதேபோன்று நாங்களும் விஜய், விஜயகாந்துடன் நடித்து இருக்கிறோம் என்பதை நாளை பெருமையாக சொல்லிக் கொள்வோம்.

விஜய்க்கு அடுத்தபடியாக அஜித்துடன் ‘கிரீடம்’ படத்தில் நடித்தீர்கள்? அது பற்றி சொல்லுங்களேன்?


‘கிரீடம்’ திரைப்படத்தில் விவேக் மனைவியாக நடிக்க யோசித்தேன் - மீனா குமாரி 

அந்த படத்தையும் ஒரு தெலுங்கு பட தயாரிப்பு நிறுவனம்தான் எடுத்திருந்தது. முதலில் என்னிடம் கதை சொல்லும்போது விவேக் சாருக்கு மனைவி, அஜித்துக்கு அக்கா என்று சொன்னார்கள். அக்கா ஓகே; ஆனால், விவேக் சாருக்கு மனைவி எப்படி என்று கொஞ்சம் தயக்கமாக இருந்தது. ஏனென்றால் ஒவ்வொரு நகைச்சுவை நடிகர்களும் அவரவருக்கு என்று ஒரு பாணியை கையாளுவார்கள். விவேக் சார் எப்போதும் மற்றவர்களை கேலி செய்து காமெடி செய்பவராச்சே அதனால் நம்மையும் கிண்டல் செய்வாரோ என்ற தயக்கம் இருந்தது. ஆனால், நான் பயந்தது போல் இல்லாமல் முழுக்க முழுக்க குடும்ப செண்டிமெண்ட் கதையாக சென்றதால் அந்த பிரச்சினைகள் எதுவும் வரவில்லை.. பிறகு விவேக் சாருடன் நான் மிகவும் நல்ல தோழியாகிவிட்டேன். அவர் இன்று நம்முடன் இல்லை என்பதை இப்போதும் என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அவரை போன்ற ஒரு நல்ல மனிதர் இன்னும் கொஞ்ச காலம் நம்மோடு இருந்திருக்கலாம். 

Tags:    

மேலும் செய்திகள்