தமிழ் சினிமாவின் எவர் க்ரீன் ஹீரோயின் குஷ்பு! - பிறந்தநாள் சிறப்பு தொகுப்பு

‘நாளைக்கு உங்களுக்கும் எனக்கும் குழந்தை பிறந்தால் அது யார் மாதிரி இருக்கும்’ என்று சட்டென கேட்டபோது இருவருக்குமிடையே காதல் மலர்ந்திருக்கிறது. பலமுறை இருவருக்குமிடையே கடுமையான சண்டைகள் ஏற்பட்டு, பிரிந்துவிடலாம் என்று நினைத்தபோதிலும், அந்த காதல் 2000ஆம் ஆண்டு திருமணத்தில் முடிந்தது.

Update:2024-09-24 00:00 IST
Click the Play button to listen to article

பொழுதுபோக்கு என்றாலே முதலில் நினைவுக்கு வருவது சினிமாவாகத்தான் இருக்கும். அதிலும் தமிழ் ரசிகர்கள் சினிமாவையும் நடிகர்களையும் கொண்டாட தவறமாட்டார்கள். என்னதான் பல பெரிய பெரிய நடிப்பு ஜாம்பவான்கள் இருந்தாலும் ஒரு 80களின் நடிகைக்கு மக்கள் மத்தியில் இன்றுவரை மவுசு குறையவில்லை என்றால் அது குஷ்புதான். இட்லிக்கு பெயர் வைத்தது முதற்கொண்டு, ரசிகர்களால் கோயில் கட்டி கொண்டாடப்பட்ட நடிகை என பலரின் மனதிலும் இடம்பிடித்தவர் இவர். இந்தியை பூர்வீகமாகக் கொண்ட இவர், குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, அதனால் சிறுவயதிலேயே பல்வேறு சிக்கல்களை சந்தித்திருந்தாலும் தென்னிந்திய சினிமாவில் கால்வைத்த பிறகு வாழ்க்கையே தலைகீழாக மாறிவிட்டது. திரைப்படங்களில் நடிப்பது மட்டுமல்லாமல், ரியாலிட்டி ஷோக்களில் நடுவராக, ஆங்கராக மற்றும் சீரியல் நடிகையாக வலம்வந்ததுடன், கணவருடன் சேர்ந்து மாஸ் ஹிட் படங்களையும் தயாரித்து வருகிறார். அதுபோக, திமுக, காங்கிரஸ் மற்றும் பாஜக என பல கட்சிகளில் இணைந்து பணியாற்றிய இவர் சமீபத்தில் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் பதவியிலிருந்து சத்தமில்லாமல் விலகிவிட்டார். அரசியலில் ஒருபுறம் இருந்தாலும், 40 வருடங்களுக்கு மேலாக தென்னிந்திய திரையுலகில் கலக்கிவரும் குஷ்பு வருகிற செப்டம்பர் 29ஆம் தேதி 54வது வயதில் அடியெடுத்து வைக்கிறார். ஆரம்ப கால சினிமா முதல் அரசியல் வரை குஷ்பு கண்ட வெற்றிகள் மற்றும் சவால்கள் குறித்து ஒரு பார்வை...

குழந்தை நட்சத்திரம் டூ ஹீரோயின் 

மும்பையில் மூன்று அண்ணன்களுக்கு அடுத்து கடைக்குட்டியாக பிறந்தவர் நக்கத் கான். வீட்டில் அண்ணன்கள் மற்றும் அம்மாவிடம் மிகவும் செல்லமாக வளர்ந்த நக்கத், எப்போதும் துருதுருவென அங்கும் இங்கும் ஓடிக்கொண்டிருப்பாராம். மூத்த அண்ணனும் பாலிவுட் நடிகை ஹேம மாலினியின் உறவினரும் நல்ல நண்பர்கள் என்பதால் அடிக்கடி அவருடைய வீட்டிற்கு சென்றுவருவதை வழக்கமாக வைத்திருந்திருக்கிறார் நக்கத். குறிப்பாக, ஹேம மாலினியை பார்க்கலாம் என்ற ஆசையில் அங்கு செல்லும் இவரை, ஒருநாள், இயக்குநர் ரவி சோப்ரா பார்த்து, நடிக்க வருகிறாயா? என்று கேட்க, ‘தினமும் ஒரு ஐஸ்க்ரீம் கொடுத்தால் வருகிறேன்’ என்று சொல்லியிருக்கிறார். அவரும் ஐஸ்க்ரீம் தர ஒத்துக்கொள்ள நடிக்க ஒத்துக்கொண்டார் நக்கத். சினிமாவுக்காக 8 வயது சிறுமியான நக்கத்தை ‘குஷ்பு’ என பெயர் மாற்றி, ‘தி பர்னிங் ட்ரெய்ன்’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகப்படுத்தினார் ரவி சோப்ரா. அங்கிருந்து குஷ்புவின் திரைப் பயணம் தொடங்கியது. கிட்டத்தட்ட 15 படங்கள் குழந்தை நட்சத்திரமாக நடித்த குஷ்புவால் தொடர்ந்து பள்ளிக்கு செல்ல முடியவில்லை. அதனால் 9ஆம் வகுப்பிலேயே பள்ளிப்படிப்பை நிறுத்தவேண்டிய சூழல் ஏற்பட்டது. தொடர்ந்து சினிமாவில் கவனம் செலுத்திவந்த குஷ்புவின் வாழ்க்கையில் பிரச்சினையாக உருவெடுத்தார் அவருடைய அப்பா.


பாலிவுட்டில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி ஹீரோயினாக உருவெடுத்த குஷ்பு

அப்பாவால் கிடைத்த கெட்டபெயர்

டீனேஜிலேயே நல்ல நல்ல கதைகளில் ஹீரோயினாக நடிக்க நிறைய வாய்ப்புகள் தேடிவந்தபோதும், யார் அதிக பணம் கொடுக்கிறார்களோ அந்த படத்தில்தான் நடிக்கவேண்டும் என ஆர்டர் போடுவாராம் குஷ்புவின் அப்பா. ஜாக்கி ஷெரஃப், அனில் கபூர், கோவிந்தா போன்ற பெரிய ஸ்டார்களின் படங்களில் நடித்தபோதும், தவறான கதைத்தேர்வால் அடுத்தடுத்த படங்கள் மோசமான தோல்வியை சந்தித்தன. இதனால் சிறுவயதில் பெற்ற அனைத்து நற்பெயர்களும் மறக்கப்பட்டு ராசியற்ற ஹீரோயின் என்ற பெயரை பெற்றார். இப்படி தனது அப்பாவால் தனது சினிமா வாழ்க்கை பறிபோவதை பொருத்துக்கொள்ள முடியாத குஷ்பு ஒரு கட்டத்தில் அவருடன் சண்டையிட்டு, அவர் வேண்டாம் என்று சொன்னாலும் கதை நன்றாக இருந்தால் அந்த படங்களில் ஒப்பந்தம் செய்து நடிக்கவும் ஆரம்பித்தார். இப்படி அப்பா - மகள் இடையே மோதல் போக்கு நீடித்துவந்த நிலையில் தென்னிந்திய திரையுலகிலிருந்தும் ஆஃபர்கள் தேடிவந்தன. தெலுங்கில் ‘கலியுக பண்டவுலு’ என்ற படத்தின்மூலம் அறிமுகமானார். தொடர்ந்து கிட்டத்தட்ட 6, 7 படங்கள் தெலுங்கிலேயே நடித்துவந்த குஷ்பு, இங்கும் தன்னை ராசியற்ற ஹீரோயின் என்று சொல்லிவிடக்கூடாது என பயந்து ஒரு கட்டத்தில், அதாவது தனது 14வது வயதில் அப்பாவை விட்டு பிரியும் முடிவை எடுத்தார். அதன்பிறகுதான் தமிழ் பட வாய்ப்பு குஷ்புவுக்கு கிடைத்தது. அதுதான் தன் வாழ்க்கையையே மாற்றும் என அப்போது அவர் நினைத்திருக்க மாட்டார்.


குஷ்புவை ஓரிரு ஆண்டுகளில் உயரத்திற்கு கொண்டுசென்ற தெலுங்கு மற்றும் கன்னட திரைப்படங்கள்

தென்னிந்திய சினிமாக்களில் டாப் ஹீரோயின்

ஆரம்பத்தில் இந்தியில் ரஜினியுடன் சேர்ந்து நடிக்கும் வாய்ப்பு கிடைத்தபோதும் அந்த படத்தில் ஹீரோயினுக்கு சம்பளம் குறைவு என்பதால் குஷ்புவின் அப்பா நோ சொல்லிவிட்டார். ரஜினியும் திரையுலகில் தனக்கான இடத்தை பிடிக்க போராடிக்கொண்டிருந்த காலம் அது. அதனால் அப்போதே ரஜினியுடன் சேர்ந்து நடிக்கும் வாய்ப்பு கிடைக்காமல்போனது. கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் கழித்து சூப்பர் ஸ்டாராக உருவாகியிருந்த ரஜினியின் படத்திலேயே தமிழில் அறிமுகமாகும் வாய்ப்பு குஷ்புவுக்கு கிடைத்தது. 1988ஆம் ஆண்டு வெளியான ‘தர்மத்தின் தலைவன்’ படத்தில் ரஜினிக்கு ஜோடியாக சுஹாசினி நடிக்க, பிரபு தனக்கு ஜோடியாக நடிக்க தெலுங்கில் டாப் ஹீரோயினாக வலம்வந்த குஷ்புவை பரிந்துரைத்திருக்கிறார். முதல் படத்திலேயே ‘குஷ்பு இட்லி’ என்ற பெயர் உருவாக காரணமாக இருந்தவர் பிரபு என குஷ்புவே பல பேட்டிகளில் சொல்லியிருக்கிறார். தமிழில் முதல் படம் அமைந்துவிட்டாலும் அடுத்தடுத்து தெலுங்கில் கமிட்டாகியிருந்த படங்களை முடிக்கவேண்டி இருந்தது. ஒரு ஆண்டில் கிட்டத்தட்ட 10 படங்கள் இவர் நடிப்பில் வெளியாகின. அடுத்து ‘ரணதீரா’ படம்மூலம் கன்னட அறிமுகம் கிடைத்தாலும் ஓரிரு படங்களுக்கு பிறகு மீண்டும் தமிழுக்கு வந்தார். ‘வருசம் 16’ மற்றும் ‘வெற்றிவிழா’ ஆகிய இரண்டு படங்களுக்குப் பிறகு, வரிசையாக 9 படங்கள் கன்னடத்தில் நடித்தார். அப்போதெல்லாம் தென்னிந்திய மொழிகள் எதுவும் தெரியாவிட்டாலும், டயலாக்குகளை மனப்பாடம் செய்து சூப்பராக நடித்து அசத்திவிடுவாராம். மேலும் குஷ்புவின் ஹேர் ஸ்டைல், ட்ரெஸ்ஸிங் என அனைத்துக்குமே நிறைய பெண் ரசிகைகள் இருந்தனர். 80களின் காலகட்டத்தில் ஒல்லியான பெண்கள்தான் அழகாக இருப்பார்கள், நன்றாக நடனம் ஆடுவார்கள் என்ற கருத்தை மக்கள் மனதில் மாற்றியதில் குஷ்புவுக்கு முக்கியப்பங்கு உண்டு.


80களில் தமிழ் சினிமாவையே கலக்கிய கதாநாயகியாக குஷ்பு

வாழ்க்கையையே மாற்றியமைத்த தமிழ் சினிமா

1990ஆம் ஆண்டுக்கு பிறகுதான் தமிழ் படங்கள்மீது கவனம் செலுத்த ஆரம்பித்தார் குஷ்பு. இங்கு கவனம் செலுத்த ஆரம்பித்த ஓரிரு ஆண்டுகளிலேயே குஷ்புவை ரசிகர்கள் கொண்டாட ஆரம்பித்தனர். அடுத்தடுத்த ஆண்டுகளில் வெளியான பல படங்கள் வெற்றியடைந்தாலும் ‘கிழக்கு வாசல்’, ‘மைக்கேல் மதன காமராஜன்’, ‘நடிகன்’, ‘சின்ன தம்பி’ போன்றவை மாபெரும் ஹிட் படங்களாக அமைந்தன. குறிப்பாக, ஆரம்பத்தில் க்ளாமர் ரோல்களில் மட்டுமே நடித்துவந்த குஷ்புவை ‘சின்ன தம்பி’ படத்தில் நடிக்கவைக்க இயக்குநர் பி.வாசு பரிந்துரைக்கையில் முதலில் வேண்டாம் என்று சொல்லியிருக்கிறார் படத்தின் தயாரிப்பாளர் பாலு. ஆனால் வாசுவும், பிரபுவும் தயாரிப்பாளரை சமாதானப்படுத்தி, ஒருவழியாக இவரை ஹீரோயினாக ஒப்பந்தம் செய்துள்ளனர். அந்த படம் குஷ்பு வாழ்க்கையில் மட்டுமல்ல; தமிழ் சினிமாவிலும் இன்றுவரை பெயர் சொல்லும் படங்களில் ஒன்றாக மாறியது. படத்தில் குஷ்புவின் உணர்ச்சிப்பூர்வமான நடிப்பு அனைவரையும் கவர்ந்ததுடன், கவர்ச்சி ஹீரோயின் என்ற பிம்பத்தையும் மாற்றியது. அதன்பிறகு க்ளாமர், ஹோம்லி என பலதரப்பட்ட ரோல்கள் இவருக்கு கிடைத்தன. அடுத்தடுத்து ‘ரிக்‌ஷா மாமா’, ‘சிங்காரவேலன்’, ‘அண்ணாமலை’, ‘நாட்டாமை’, ‘கருப்பு நிலா’ என பல ஹிட் படங்களை கொடுத்தார். அதிலும் குறிப்பாக, ‘நடிகன்’, ‘பிரம்மா’, ‘வெற்றிவேல் சக்திவேல்’ உட்பட சத்யராஜுடன் மொத்தம் 13 படங்கள் நடித்திருக்கிறார். இதுவரை கிட்டத்தட்ட 80களின் அனைத்து ஹீரோக்களுடனுமே குஷ்பு நடித்திருந்தாலும் இவருடன்தான் அதிகப்படங்கள் நடித்திருக்கிறார்.

சுந்தர் சியுடன் காதல்

திரையுலகில் நல்ல நட்பு வட்டாரத்தை வளர்த்து இன்றுவரை அனைவருடனும் அந்த நட்பை காப்பாற்றி வரும் குஷ்புவுக்கு ஆரம்ப காலத்திலிருந்தே கமல், பிரபு, கார்த்திக் போன்றோர் நல்ல நண்பர்களாக இருந்துள்ளனர். குறிப்பாக, கார்த்திக்கும் குஷ்புவும் காதலிப்பதாக பத்திரிகைகளில் எழுதும் அளவிற்கு இவர்களுடைய நட்பு வலுவாக இருந்திருக்கிறது. மேலும் தமிழில் முதல் படமான ‘தர்மத்தின் தலைவனி’ல் நடித்ததிலிருந்தே குஷ்புவுக்கும் பிரபுவுக்குமிடையே காதல் மலர்ந்ததாக கூறப்படுகிறது. ஏற்கனவே திருமணமாகியிருந்த போதிலும் குஷ்புவுடன் நெருக்கம் காட்டிவந்த பிரபு, தனது அடுத்தடுத்த படங்களில் குஷ்புவையே கதாநாயகியாக பரிந்துரை செய்ததாகவும், இப்படி 4 ஆண்டுகளாக தொடர்ந்த இவர்களது காதல், 1993அம் ஆண்டு பிரபல பத்திரிகையின் முதல் பக்கத்தில் செய்தியாகும்வரை தொடர்ந்ததாகவும் சொல்லப்படுகிறது. அந்த செய்தி வெளியான ஒரே நாளில் குஷ்பு கிட்டத்தட்ட 5 படவாய்ப்புகளை இழந்தாராம். பின்னர் இருதரப்பிலிருந்தும் பல்வேறு அழுத்தங்கள் வலுத்த நிலையில் பிரபுவுடனான காதலை குஷ்பு முறித்துக்கொண்டாராம்.


காதல் திருமணம் செய்துகொண்ட குஷ்பு - சுந்தர் சி ஜோடி 

இந்தசூழலில் 1995ஆம் ஆண்டு அறிமுக இயக்குநர் ஒருவரின் படத்தில் நடிக்க ஒப்பந்தமானார் குஷ்பு. அந்த சமயத்தில் குஷ்பு எப்போது ஷூட்டிங்கிற்கு போனாலும் அவருடைய வளர்ப்புத்தாயாக பார்க்கப்படுகிற அத்தை கூடவே இருப்பாராம். அவரைத் தாண்டி குஷ்புவை நெருங்கவே முடியாதாம். அப்படிப்பட்ட நேரத்தில்தான் அந்த அறிமுக இயக்குநரின் அறிமுகம் கிடைத்திருக்கிறது. ‘முறைமாமன்’ படம் அது. ஷூட்டிங்கிற்கு கோயம்புத்தூருக்கு சென்றிருந்தபோது, அங்கு ஒருநாள் இரவு குஷ்புவின் அத்தை அவரை பார்த்து, ‘உனக்கும் 25 வயது ஆகிறது. சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கோ!’ என்று சொன்னதுடன், ‘இதோ சிவப்பா ஒரு பையன் நம்ம ரூமை தாண்டிப்போனாரே... அவரைப்போல ஒரு மாப்பிள்ளை கிடைத்தால் சூப்பரா இருக்கும்’ என்று சொல்லியிருக்கிறார். அப்போதுதான், அவர்தான் படத்தின் இயக்குநர் சுந்தர் சி என தனது அத்தையிடம் கூறியிருக்கிறார் குஷ்பு. இப்படி பார்த்தவுடன் அவருக்கு பிடித்துப்போக, மற்றொரு புறம் தனக்கு குஷ்புவை மிகவும் பிடித்திருப்பதாகவும், அவரைத்தான் கல்யாணம் செய்யப்போவதாகவும் யூனிட் முழுக்க கூறிவந்த சுந்தர் சி, ஒருநாள் இரவு மொட்டை மாடியில் அமர்ந்து படத்தின் கதை குறித்து பேசிக்கொண்டிருந்தபோது, ‘நாளைக்கு உங்களுக்கும் எனக்கும் குழந்தை பிறந்தால் அது யார் மாதிரி இருக்கும்’ என்று சட்டென கேட்டபோது இருவருக்குமிடையே காதல் மலர்ந்திருக்கிறது. பலமுறை இருவருக்குமிடையே கடுமையான சண்டைகள் ஏற்பட்டு, பிரிந்துவிடலாம் என்று நினைத்தபோதிலும், அந்த காதல் 2000ஆம் ஆண்டு திருமணத்தில் முடிந்தது. அதன்பிறகு, குடும்பம், குழந்தைகள் என ஒருபுறம் கவனம் செலுத்தினாலும், மற்றொருபுறம் சினிமாவையும் விட்டுவிடவில்லை. ஒரு உண்மையான காதல் இருவரையும் வளர்ச்சிப்பாதையில் கொண்டுசெல்லும் என்பதற்கு குஷ்பு - சுந்தர் சி ஜோடி மிகச்சிறந்த உதாரணம். கணவருடன் சேர்ந்து அவ்னி சினிமாஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கி அதன்மூலம் சீரியல் மற்றும் படங்களை தயாரித்து வருகிறார் குஷ்பு. ‘கிரி’, ‘கலகலப்பு’, ‘அரண்மனை 2 & 3 & 4’, ‘கலகலப்பு 2’ போன்றவை அவ்னி தயாரிப்பின்கீழ் உருவான ஹிட் படங்கள்.


அரசியல்வாதியாக மேடையில் பேசியபோது...

அரசியல் பேச்சுகளும் சர்ச்சைகளும்

சினிமாவில் முன்னணி ஹீரோயினாக வலம்வந்த காலத்திலேயே ஜெயா டிவியில் ஒளிபரப்பான ‘ஜாக்பாட்’ என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். அதற்காக ஜெயலலிதாவால் பாராட்டுகளையும் பெற்றார். அதனால் எப்படியும் அதிமுகவில் இணைவார் என்று எதிர்பார்த்த நேரத்தில்தான் 2010 ஆம் ஆண்டு திமுகவில் இணைந்தார். அதன்பிறகு கட்சியின் தலைமை குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை முன்வைத்ததால் அக்கட்சியினரால் பல்வேறு விமர்சனங்களுக்கு ஆளான நிலையில், திமுகவிலிருந்து விலகி, 2014ஆம் ஆண்டு காங்கிரஸில் இணைந்தார். ஆனால் தன்னை காங்கிரஸ் கட்சியினர் மதிக்கவில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைத்துவந்த குஷ்பு, முத்தலாக் தடை சட்ட விவகாரம், பொது சிவில் சட்டம் போன்ற சர்ச்சைகளுக்கு பிறகு அந்த கட்சியிலிருந்தும் விலகி பாஜகவில் இணைந்தார். அதன்பிறகு தமிழ்நாட்டின் ஆளுங்கட்சிகள் குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்து சர்ச்சைகளில் சிக்குவதை வழக்கமாக வைத்திருக்கிறார். அனைத்து அரசியல் சர்ச்சைகள் மற்றும் பிரச்சினைகள் குறித்தும் முதல் ஆளாக கருத்து தெரிவிக்கும் குஷ்பு, மணிப்பூர் பிரச்சினை உள்ளிட்ட சில பிரச்சினைகள் குறித்து வாய் திறக்காதது ஏன்? என பலரும் கடுமையாக விமர்சித்த நிலையில், சமீபத்தில் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் பதவியிலிருந்து சத்தமின்றி விலகினார். அதற்கான காரணத்தை அவர் வெளிப்படையாக கூறாவிட்டாலும், மக்களவைத் தேர்தலில் பாஜகவில் அவருக்கு சீட் வழங்கப்படாததாலும், கட்சி அவரை பல முக்கிய நிகழ்வுகளில் புறக்கணித்ததாலும் அந்த பதவியிலிருந்து விலகியதாக கூறப்பட்டது. கடந்த சட்டமன்ற தேர்தலில் ஆயிரம் விளக்கு தொகுதியில் திமுகவுக்கு எதிராக போட்டியிட்டு தோல்வியை தழுவியதாலேயே மக்களவை தேர்தலில் அவருக்கு சீட் வழங்கப்படவில்லை என்றும் கூறப்பட்டது. இப்படி தொடர்ந்து வதந்திகள் பரவிவந்த நிலையில், முழுநேர அரசியலில் ஈடுபட தயாராகிவிட்டதால்தான் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் பதவியிலிருந்து விலகியதாகவும், இனிமேல் முழு மனதுடன், சுதந்திரமாக சேவையாற்ற போவதாகவும் தெரிவித்திருக்கிறார் குஷ்பு. மேலும் பாஜகவுக்கு விசுவாசத்துடனும், நம்பிக்கையுடனும் இருக்கப்போவதாகவும் தெரிவித்திருக்கிறார். திமுக, காங்கிரஸ் மற்றும் பாஜக என சுமார் 14 ஆண்டுகளாக தன்னை அரசியலில் ஈடுபடுத்திவரும் குஷ்பு, எந்த கட்சியில் இருந்தாலும் எப்போதும் பெண்களுக்கு ஒரு பிரச்சினை என்றால் கட்டாயம் அதுகுறித்து குரல் கொடுப்பவராகவும், தனது கருத்தை தைரியமாக வெளிப்படையாக பேசக்கூடியவராகவும் இருந்து வருகிறார். 

Tags:    

மேலும் செய்திகள்