பெரிய ஹீரோக்கள் குறித்து வெளிப்படை பேச்சு - சர்ச்சையில் சிக்கிய டாப்ஸி!

இந்தி படங்களில் கவனம் செலுத்துவந்த டாப்ஸியின் கெரியரை உச்சத்திற்கு கொண்டுசென்றன ‘ஜுட்வா 2’, ‘ஷபாஷ் மித்து’ மற்றும் ‘டங்கி’ அகிய படங்கள். எந்தவொரு சினிமா பின்னணியும் இல்லாமல் பாலிவுட்டில் முன்னணி நடிகைகளில் ஒருவராக உருவாகியிருக்கும் டாப்ஸி அவ்வபோது வெளிப்படையாக கருத்துகளை தெரிவித்து சர்ச்சைகளில் சிக்குவதை வழக்கமாக கொண்டிருக்கிறார்.

Update:2024-11-12 00:00 IST
Click the Play button to listen to article

சமூக பிரச்சினைகள் குறித்தும் திரையுலகில் நடக்கும் பிரச்சினைகள் குறித்தும் வெளிப்படையாகவும் தைரியமாகவும் கருத்துக்களை தெரிவிக்கக்கூடிய நடிகைகளில் ஒருவர் டாப்ஸி பண்ணு. அதேபோல் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொண்ட கதைகளையே பெரும்பாலும் தேர்ந்தெடுத்து நடித்துவரும் இவர், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி என அனைத்து மொழிப் படங்களிலும் நடித்திருக்கிறார். தென்னிந்திய மொழிகளில் பட வாய்ப்புகள் குறைய தொடங்கிய சமயத்தில் பாலிவுட் பக்கம் சென்ற இவர், அங்கு தொடர்ந்து தனது மார்க்கெட்டை தக்கவைத்துக்கொண்டார். திரைப்படங்களில் மட்டுமல்லாமல் ஓடிடி தொடர்களிலும் பிஸியாக நடித்துவரும் இவர், கடந்த ஆண்டு, டென்மார்கை சேர்ந்த நபரை காதலித்து திருமணமும் செய்துகொண்டார். திருமணத்திற்கு பிறகு தொடர்ந்து நடித்துவரும் இவர், தான் அதிக சம்பளம் வாங்கியதாக பரவிவரும் வதந்திகள் குறித்தும், பாலிவுட்டில் நடிகர்கள்தான் தங்களுடைய படங்களுக்கு கதாநாயகிகளை தேர்ந்தெடுக்கிறார்கள் என்றும் கூறி மீண்டும் சர்ச்சையை கிளப்பியிருக்கிறார்.


 ‘ஆடுகளம்’ படம் மூலம் தமிழில் அறிமுகமான டாப்ஸி

டாப்ஸியின் இந்தி என்ட்ரி!

டெல்லியை பூர்விகமாகக் கொண்ட டாப்ஸி, 2008ஆம் ஆண்டு மாடலிங்கில் இறங்கினார். இரண்டு ஆண்டுகள் கோகோ கோலா, பாண்டலூன், மோட்டோரோலா, ஏர்டெல், டாபர் மற்றும் டாடா டோகோமோ உட்பட பல்வேறு நிறுவனங்களின் விளம்பரங்களில் மாடலாக தோன்றினார். அதன்பிறகு 2010ஆம் ஆண்டு வெளியான ‘ஜும்மண்டி நாடம்’ என்ற படத்தின்மூலம் தெலுங்கில் கதாநாயகியாக அறிமுகமானார். அடுத்த படமே தமிழில் தனுஷ் - வெற்றிமாறன் கூட்டணியில் 2011ஆம் ஆண்டு வெளியாகி தேசிய விருதுகளை அள்ளிக்குவித்த ‘ஆடுகளம்’தான். அறிமுக படத்திலேயே ஆங்கிலோ - இந்திய பெண்ணாக நடித்து தமிழ் ரசிகர்களின் ஆதரவைப் பெற்றார். இந்த படத்தின் மாபெரும் வெற்றியால் அதே ஆண்டு மொத்தம் 7 படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. மேலும் மம்முட்டி மற்றும் நதியா ஜோடியாக நடித்த ‘டபுள்ஸ்’ படத்தின்மூலம் மலையாளத்திலும் அறிமுகமானார். ‘ஆடுகளம்’ படத்திற்குபிறகு தமிழில் மிகப்பெரிய கதாநாயகியாக வலம்வருவார் என எதிர்பார்க்கப்பட்ட டாப்ஸிக்கு இங்கு வாய்ப்புகள் அமையவில்லை. இதனால் பாலிவுட்டில் வாய்ப்பு தேட ஆரம்பித்தார். அங்கு ஓரிரு ஆண்டுகள் போராட்டத்திற்கு பிறகு, ‘பேபி’ மற்றும் ‘பிங்க்’ ஆகிய படங்கள் வெற்றிப்படங்களாக அமைந்தன. திறமை இருந்தாலும் பாலிவுட்டில் ஜொலிக்க ஆதரவு தேவைப்படுகிறது என அங்குள்ள நெபோட்டிசம் குறித்து வெளிப்படையாகவே பேசி பலரின் வெறுப்பையும் சம்பாதித்த நடிகைகளில் டாப்ஸியும் ஒருவர். இருப்பினும் தனது கடுமையான உழைப்பு மற்றும் அயராத முயற்சியால் பாலிவுட்டில் பெயர் சொல்லும் நடிகைகளில் ஒருவராக உருவானார்.


 ‘காஞ்சனா 2’ படத்தில் ராகவா லாரன்ஸுடன் ரொமான்டிக் நடனம்

இதற்கிடையே, ‘காஞ்சனா 2’ மற்றும் ‘வை ராஜா வை’ போன்ற தமிழ் படங்களில் வந்துபோனார். இதில் ராகவா லாரன்ஸுடன் ‘வாயா என் வீரா’ பாடலில் டாப்ஸியின் ரொமான்டிக் நடனம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. தொடர்ந்து இந்தி படங்களில் கவனம் செலுத்திவந்த டாப்ஸியின் கெரியரை உச்சத்திற்கு கொண்டுசென்றன ‘ஜுட்வா 2’, ‘ஷபாஷ் மித்து’ மற்றும் ‘டங்கி’ அகிய படங்கள். எந்தவொரு சினிமா பின்னணியும் இல்லாமல் பாலிவுட்டில் முன்னணி நடிகைகளில் ஒருவராக உருவாகியிருக்கும் டாப்ஸி, அவ்வப்போது வெளிப்படையாக கருத்துகளை தெரிவித்து சர்ச்சைகளில் சிக்குவதை வழக்கமாக கொண்டிருக்கிறார். இருப்பினும் திரைப் பிரபலங்களுடன் காதல் சர்ச்சைகளில் சிக்காத நடிகையாக வலம்வருவது எப்படி? என கேட்கப்பட்ட நிலையில்தான் டாப்ஸியின் ரகசிய காதல் வெளிச்சத்திற்கு வந்தது.

காதல் திருமணம்

டென்மார்க்கை சேர்ந்த மத்யாஸ் போ என்பவரை கிட்டத்தட்ட 10 வருடங்கள் ரகசியமாக காதலித்துவந்த டாப்ஸி, கடந்த ஆண்டு அவரை திருமணமும் செய்துகொண்டார். இந்த திருமணத்தில் திரையுலகைச் சேர்ந்த யாரையும் அவர் அழைக்கவில்லை. நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் நடந்த தனது திருமணத்தின் புகைப்படங்கள் எதையும் சமூக ஊடகங்களில் அவர் பதிவிடாமல் தவிர்த்துவந்தார். இருப்பினும், டாப்ஸி திருமண கோலத்தில் இருக்கும் புகைப்படம் ஒன்று சமூக ஊடகங்களில் கசிந்ததால் அவர் அப்செட்டில் இருப்பதாகவும், தனது திருமண நிகழ்வு முழுவதையும் ஓடிடிக்கு நல்ல விலைக்கு விற்க திட்டமிட்டிருந்ததாகவும் கூறப்பட்டது. திருமணத்தைக்கூட பிசினஸாக்கி காசு பார்க்க நினைக்கிறாரே என அப்போது பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளானார்.


காதல் கணவர் மத்யாஸ் போவுடன் டாப்ஸி

இந்நிலையில் ‘ஃபிர் ஆய் ஹாசின் தில்ருபா’ படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் தனது காதல் குறித்து மனம்திறந்திருந்தார். அதில், “முதன்முதலாக 2013ஆம் ஆண்டு மத்யாஸ் போவை நான் சந்தித்தேன். டென்மார்க்கிற்கு போக புதிதாக விசா எடுக்கவேண்டி இருந்ததால் எங்கு சந்திக்கலாம் என முடிவெடுக்குமாறு அவர் என்னிடம் கூறினார். சரி துபாயில் சந்திக்கலாம் என்று நானும் கூறிவிட்டேன். இதுகுறித்து என் நண்பர்களிடம் சொன்னபோது, முதன்முதலாக அறிமுகம் இல்லாத வெளிநாட்டவரை சந்திக்கிறாய். எச்சரிக்கையாக இரு என்று கூறினார்கள். நானும் பதற்றத்துடன் அவரை சென்று சந்தித்தேன். ஆனால் அவரை சந்தித்த அடுத்த நிமிடமே, அவர்தான் என் வாழ்க்கையின் நம்பிக்கைக்குரியவர் என்று தோன்றியது. அதன்பிறகு தொடர்ந்து சந்திக்க ஆரம்பித்தோம். அவர் என்னிடம் தனது காதலை சொன்னார். பிறகு காதலர்களாகி திருமணமும் செய்துகொண்டோம்” என்று கூறினார்.


டாப்ஸியின் ஃபிட்னெஸ் மற்றும் அழகின் ரகசியம்

அழகின் ரகசியம்

திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து படங்களில் நடித்துவரும் டாப்ஸி, ஆரம்பத்தில் திரையுலகில் காலடி எடுத்து வைத்தபோது ஃபிட்டாக இல்லை. ஆனால் பாலிவுட் அறிமுகத்திற்கு பிறகு தொடர்ந்து ஃபிட்னெஸில் கவனம் செலுத்திவருகிறார். அவரிடம், இதுகுறித்து கேட்கப்பட்டபோது, 30 வயதிற்கு பிறகு பெண்கள் தங்களது உடல்நலனில் கவனம் செலுத்தவேண்டுமென்றும், குறிப்பாக, எலும்பு வலிமையை அதிகரிக்க வேண்டுமென்றும் கூறியிருந்தார். மேலும் தனது சரும பராமரிப்பு குறித்து கேட்டபோது, காலையில் எழுந்ததும் தனது சருமத்திற்கு ஏற்ற ப்ராடக்ட்ஸை பயன்படுத்தி சிடிஎம் முறையை தவறாமல் செய்துவிடுவாராம். அதனைத் தொடர்ந்து இஞ்சி மற்றும் மஞ்சள் சேர்த்த டீடாக்ஸ் வாட்டரை காலையில் குடிப்பதால் சருமம் இளமையான தோற்றத்தை பெறுவதாக கூறுகிறார். அதேபோல் மேக்கப்பை நீக்காமல் தூங்க செல்லமாட்டாராம். அதற்கு மேக்கப் ரிமூவராக ரோஸ் வாட்டரை பயன்படுத்துவதால் சருமத்திற்கு ஈரப்பதம் கிடைப்பதாக கூறுகிறார். கெமிக்கல் ப்ராடக்ட்ஸை முகத்தில் தடவுவதில்லை என்றும், தயிர், கடலை மாவு பேக்குகளை மட்டுமே போடுவதாகவும் கூறியுள்ளார். பழங்கள், கீரைகள் என ஹெல்தியான உணவுகளை மட்டுமே சாப்பிடும் பழக்கம் வைத்திருக்கும் டாப்ஸி, எண்ணெய் மற்றும் பொரித்த உணவுகளை தொடுவதே இல்லை என்கிறார். உடற்பயிற்சி தவிர ஃபேஸ் யோகாவும் செய்வதோடு 8 மணி நேரம் நன்றாக தூங்குவதால் சருமம் பளபளப்பாகவும், ஆரோக்கியமாகவும் இருப்பதாக கூறியுள்ளார்.


பாலிவுட்டில் கதாநாயகிகள் தேர்வு குறித்து பேசிய டாப்ஸி

 பாலிவுட் நடிகர்கள் குறித்து கருத்து

திருமணம், உடல் ஆரோக்கியம் என கவனம் செலுத்திவந்த டாப்ஸி, சமீபத்தில் தன்னைப்பற்றி எழுந்த வதந்திகள் குறித்து வெளிப்படையாக பேசியிருக்கிறார். அந்த பேட்டியில், “வருண் தவானுடன் நான் நடித்த ‘ஜுட்வா 2’ மற்றும் ஷாருக்கானுடன் நடித்த ‘டங்கி’ போன்ற படங்களுக்கு நான் அதிகம் சம்பளம் வாங்கியதாக என்னை குறித்து செய்திகள் வெளியாகி வருகின்றன. மேலும் அந்த படங்களுக்கு பிறகு நான் சம்பளத்தை கணிசமாக உயர்த்திவிட்டதாகவும் பேசிவருகின்றனர். ஆனால் உண்மையில் நான் லீட் ரோலில் நடித்த ‘ஹசீன் தில்ரூபா’ படத்திற்கு வாங்கிய சம்பளத்தைவிட இந்த படங்களில் எனக்கு சம்பளம் குறைவுதான். பெரிய ஹீரோக்களின் படங்களில் ஹீரோயினாக நம்மை நடிக்கவைப்பதே அவர்கள் நமக்கு செய்யும் உதவியாக நினைக்கின்றனர். ஏற்கனவே பெரிய ஹீரோ இருக்கும்போது, அதிக சம்பளம் வாங்கும் ஹீரோயின் எதற்கு? என்றுதான் யோசிக்கிறார்கள். இதுபோன்ற எண்ணங்களை மாற்றத்தான் நான் தினமும் போராடுகிறேன். பெரிய ஹீரோக்கள் தங்கள் படங்களில் யாரை கதாநாயகியாக நடிக்கவைக்க வேண்டும் என்பதை அவர்கள்தான் முடிவு செய்கிறார்கள் என்பது பார்வையாளர்களுக்கே தெரியும்” என்று கூறினார். டாப்ஸியின் இந்த பேட்டிக்கு பிறகு பெரிய ஹீரோக்கள்தான் தங்கள் படங்களுக்கு கதாநாயகியை தேர்வு செய்கிறார்களா? என்ற கேள்விதான் இப்போது ஊடகங்களில் சுழன்று சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. 

Tags:    

மேலும் செய்திகள்