பொங்கலன்று வெளியான சூப்பர் ஸ்டார்களின் திரைப்படங்கள் - ஒரு ஸ்மால் ரீவைண்ட்
தமிழர்களின் பாரம்பரிய திருவிழாக்களில் முக்கியமான இடத்தைப் பிடிக்கும் பொங்கல் பண்டிகை, தமிழ் சினிமாவுக்கும் தனித்துவமான சிறப்பு வாய்ந்த நாளாகும்.
தமிழர்களின் பாரம்பரிய திருவிழாக்களில் முக்கியமான இடத்தைப் பிடிக்கும் பொங்கல் பண்டிகை, தமிழ் சினிமாவுக்கும் தனித்துவமான சிறப்பு வாய்ந்த நாளாகும். தீபாவளி போல் ஒரே நாளில் மட்டுமின்றி, மூன்று நாட்கள் கொண்டாடப்படும் இந்த பண்டிகை, தமிழ் சினிமா ரசிகர்களுக்கு உண்மையான விருந்தாக அமைகிறது. பொங்கல் தினத்தில் குறைந்தபட்சம் மூன்று திரைப்படங்களை பார்த்தே நாள் நிறைவு பெறும் என்ற அளவுக்கு தமிழ் ரசிகர்களின் ஆர்வம் இந்நாளில் அதிகம். அதன்படி இந்த ஆண்டு மட்டும் இதுவரை 7 படங்கள் பொங்கலை முன்னிட்டு வெளியாகியுள்ளன. இது ஒருபுறம் இருக்க, தமிழ் சினிமா எப்படிப்பட்ட பொங்கல் பண்டிகைகளை கடந்து வந்துள்ளது? எந்தெந்த சூப்பர் ஸ்டார்களின் படங்கள் பொங்கல் திருநாளில் வெளிவந்து மிகப்பெரிய வெற்றியடைந்துள்ளது என்பதைப் பற்றி இத்தொகுப்பில் காணலாம்.
பரபரப்பு இல்லாத பிளாக் & ஒயிட் காலம்
தமிழகத்தில் பொங்கல் பண்டிகை என்பது வெறும் ஒரு திருநாளாக இல்லாமல், அது நம் வாழ்க்கை முறையின் ஒரு அங்கமாகவே உள்ளது. இப்பண்டிகையின் ஒவ்வொரு அம்சமும் நம் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தில் ஆழமாக பதிந்துள்ளது. புதிதாக துணி அணிந்து மகிழ்வது, கரும்பு சுவைத்து இனிப்பு அனுபவிப்பது, சர்க்கரைப் பொங்கல் செய்து அனைவரும் ஒன்றாக சேர்ந்து உண்பது போன்ற சிறப்பான பழக்கவழக்கங்கள் நம் வாழ்வில் இப்பண்டிகையின் மூலம் வேரூன்றியுள்ளன. இந்த பாரம்பரிய நிகழ்வுகளுக்கு ஒத்த முக்கியத்துவம் தமிழ் சினிமாவுக்கும் உள்ளது. தமிழ் சினிமாவின் பொங்கல் வரலாறு மிக நீளமானது. பல திரைப்படங்கள் பொங்கல் தினத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றுள்ளன. சில படங்கள் தமிழ் சினிமாவின் மைல்கற்களாக அமைந்துள்ளன. அந்த வரிசையில், தமிழ் சினிமாவின் பிதாமகன் என்று போற்றப்படும் கே. சுப்ரமணியம் இயக்கிய 'பக்த சேதா' (1940) மற்றும் 'கச்ச தேவயானி' (1941) ஆகிய படங்கள்தான் பொங்கல் பண்டிகையின் போது வெளியான முதல் முக்கிய திரைப்படங்களாக வரலாற்றில் இடம்பிடித்துள்ளன. இதில், 'கச்ச தேவயானி' திரைப்படம், டி.ஆர். ராஜகுமாரி எனும் கனவுக்கன்னியை தமிழ் சினிமாவிற்கு அறிமுகப்படுத்திய மிக சிறப்பான படமாகும். அதேபோல், தமிழ் சினிமாவின் முதல் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்பட்ட எம்.கே. தியாகராஜ பாகவதர், அந்நேரத்தில் பல படங்களில் நடித்திருந்தாலும், அவரது எந்த படமும் பொங்கல் நாளில் வெளியாகவில்லை. இருப்பினும், அவரது சமகாலத்தில் புகழ்பெற்ற நட்சத்திரமாக விளங்கிய பி.யு. சின்னப்பா நடித்த 'ஹரிச்சந்திரா' (1944) மற்றும் 'கிருஷ்ண பக்தி' (1949) ஆகிய படங்கள் பொங்கல் வெளியீடாக வந்து மிகுந்த வரவேற்பைப் பெற்றன.
'கச்ச தேவயானி' டி.ஆர். ராஜகுமாரி மற்றும் 'கர்ணன்' சிவாஜி கணேசன்
'அலிபாபாவும் நாற்பது திருடர்களும்' திரைப்படத்தின் மூலம் பொங்கல் திருவிழா வெளியீடுகளில் தனது இடத்தை உறுதிப்படுத்திய மக்கள் திலகம் எம்.ஜி.ஆர், தொடர்ந்து 'பணத்தோட்டம்', 'வேட்டைக்காரன்', 'மாட்டுக்கார வேலன்', 'எங்க வீட்டுப் பிள்ளை', 'தாய்க்குத் தலைமகன்', 'அன்பே வா', 'ரகசிய போலீஸ் 115' போன்ற பல வெற்றிப் படங்களை பொங்கல் வெளியீடாக வழங்கினார். குறிப்பாக, பொங்கலன்று வெளியான 'எங்க வீட்டுப் பிள்ளை' மற்றும் 'அன்பே வா' போன்ற படங்கள் மிகப்பெரிய வசூல் சாதனைகளை படைத்தன. இந்நிலையில், நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு, தீபாவளி வெளியீடுகளில் கிடைத்த வெற்றியளவிற்கு, பொங்கல் வெளியீடுகள் அதிகளவில் வெற்றியைத் தரவில்லை. சிவாஜி கணேசனின் முதல் பொங்கல் வெளியீடு 'காவேரி' திரைப்படமாக அமைந்தது. அதன் பின்னர், 'நல்ல வீடு', 'இரும்புத்திரை', 'நான் பெற்ற செல்வம்', 'கர்ணன்', 'எங்க மாமா', 'இரு துருவம்', 'அவன் ஒரு சரித்திரம்', 'மனிதனும் தெய்வமாகலாம்', 'உருவங்கள் மாறலாம்', 'ஞானப் பறவை', 'சாதனை' உள்ளிட்ட பல படங்கள் சிவாஜி நடிப்பில் பொங்கல் நாளில் வெளியாகின. இதில் 'இரும்புத்திரை' மற்றும் 'கர்ணன்' போன்ற படங்கள் மட்டுமே மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்தன.
ரஜினி, கமல் பொங்கல் மோதல்கள்
1970-களுக்கு பிறகு ரஜினி மற்றும் கமல் என்ற இரண்டு பெரும் நடிகர்கள் தமிழ் சினிமாவில் மிளிரத் தொடங்கிய பின், பொங்கல் வெளியீடு என்பது ஒரு பெரிய போட்டியாகவே மாறியது. குறிப்பாக, இவ்விருவரின் படங்களும் ஒரே நேரத்தில் பண்டிகை காலங்களில் வெளியானால், திரையரங்குகளில் மக்கள் கூட்டம் அலைமோதுவது மட்டுமல்லாமல், தங்கள் விமர்சனங்களையும் கருத்து வேறுபாடுகளையும் வெளிப்படுத்த காரசாரமான விவாதங்களும் அங்கு நடக்கும். அதன்படி ரஜினியின் முதல் பொங்கல் வெளியீடாக வந்த திரைப்படம் என்றால் 1979-ல் வெளியான 'குப்பத்து ராஜா' படம் தான். ஆனால், இப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை முழுமையாக நிறைவேற்ற முடியாமல், கலவையான விமர்சனங்களையே பெற்றது. இதற்கு பிறகு, 1982-ஆம் ஆண்டில் எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் ரஜினி நடித்த 'போக்கிரி ராஜா' பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியானது. இப்படம் ரசிகர்களிடம் சிறந்த வரவேற்பை பெற்று, ரஜினிக்கு ஒரு பெரிய வெற்றியைத் தந்தது. அதைத் தொடர்ந்து, 'பாயும்புலி' (1983), 'நான் மகான் அல்ல' (1984), 'மிஸ்டர் பாரத்' (1986), 'பணக்காரன்' (1990), 'தர்மதுரை' (1991), 'மன்னன்' (1992), 'பாட்ஷா' (1995) போன்ற ரஜினியின் பல திரைப்படங்கள் தொடர்ந்து பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகின. இவற்றில் பல படங்கள் பிளாக்பஸ்டர் வெற்றியை பெற்றன. குறிப்பாக, 'பாட்ஷா' திரைப்படம் ரஜினியின் திரையுலக வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது என்பது அனைவரும் அறிந்த ஒன்றே.
'பாட்ஷா' ரஜினிகாந்த் மற்றும் 'விருமாண்டி' கமல்ஹாசன்
பின்னர், நீண்ட இடைவெளிக்குப் பிறகு, 2019-ஆம் ஆண்டில் ‘பேட்ட’ மற்றும் 2020-ஆம் ஆண்டில் ‘தர்பார்’ ஆகிய ரஜினிகாந்தின் திரைப்படங்கள் பொங்கல் பண்டிகை நாளில் வெளியாகின. ‘குப்பத்து ராஜா’ தொடங்கி ‘தர்பார்’ வரை ரஜினியின் 12 திரைப்படங்கள் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வந்துள்ளன. இதில் இரண்டு படங்களை தவிர மற்ற அனைத்து படங்களும் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளன. உலகநாயகன் கமல்ஹாசனின் படங்களைப் பார்க்கும்போது, ‘மீண்டும் கோகிலா’ (1981), ‘ஒரு கைதியின் டைரி’ (1985), ‘இந்திரன் சந்திரன்’ (1990), ‘மகாநதி’ (1994), ‘சதிலீலாவதி’ (1995), ‘அன்பேசிவம்’ (2003), ‘விருமாண்டி’ (2004), ‘விஸ்வரூபம்’ (2013) போன்ற திரைப்படங்களே பொங்கல் பண்டிகை நாளில் வெளியாகின. இதில்,1990-ஆம் ஆண்டில் வெளியான ரஜினியின் ‘பணக்காரன்’ மற்றும் கமலின் ‘இந்திரன் சந்திரன்’, 1995-ஆம் ஆண்டில் வெளியான ரஜினியின் ‘பாட்ஷா’ மற்றும் கமலின் ‘சதிலீலாவதி’ ஆகிய படங்கள் நேரடியாக பொங்கல் நாளில் மோதியவை. இதில் பெரும்பாலான வேளைகளில் ரஜினியின் படங்களே அதிக வசூல் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.
தெறிக்கவிட்ட தல, தளபதி பொங்கல்
1990-களுக்குப் பிறகு தமிழ் திரைப்பட உலகில் முன்னணி நடிகர்களாக மாறிய விஜய் மற்றும் அஜித், பெரும்பாலும் தங்கள் படங்களை பொங்கல் பண்டிகை காலத்தில் வெளியிடுவது என்பது ஒரு வழக்கமாகியுள்ளது. இவர்கள் படங்கள் ஒரே நேரத்தில் திரைக்கு வந்தால், ரசிகர்கள் தங்கள் விருப்பமான நடிகரின் படத்துக்கு ஆதரவு தெரிவித்து, சமூக ஊடகங்களில் விவாதங்கள் மற்றும் போட்டிகளை உருவாக்கி பரபரப்பை ஏற்படுத்துவார்கள். இதில் தளபதி விஜய்யின் முதல் பொங்கல் ரிலீஸ் திரைப்படம் 1996ஆம் ஆண்டு வெளியான 'கோயம்புத்தூர் மாப்பிளை' ஆகும். இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இதனைத் தொடர்ந்து, 2001-ஆம் ஆண்டு பொங்கலன்று வெளியான 'ப்ரெண்ட்ஸ்' திரைப்படம் மாபெரும் வெற்றியை பெற்றது. அதன் பிறகு 'திருப்பாச்சி', 'போக்கிரி', 'காவலன்', 'நண்பன்', 'மாஸ்டர்' போன்ற பல படங்கள் பொங்கல் பண்டிகை நாளில் வெளிவந்து விஜய்க்கு திருப்புமுனையாக அமைந்தன. இருப்பினும், ஒவ்வொரு நடிகரின் திரை வாழ்க்கையிலும் ஏற்ற இறக்கங்கள் இருப்பது போல, விஜய்யின் பொங்கல் பயணத்திலும் சில தோல்விகள் இருந்தன. உதாரணமாக, 'காலமெல்லாம் காத்திருப்பேன்', 'கண்ணுக்குள் நிலவு', 'வில்லு' போன்ற படங்கள் பெரிய வெற்றியை அடையாதவையாகும். ஆனால், 'ஆதி', 'பைரவா', 'வாரிசு' போன்ற படங்கள் கலவையான விமர்சனங்களை சந்தித்தாலும், வசூலில் லாபத்தை வழங்கின.
விஜய், விஜய் சேதுபதி நடிப்பில் 'மாஸ்டர்' மற்றும் அஜித்தின் ‘வீரம்’
இவரை போலவே தமிழ்த்திரை ரசிகர்களால் ‘தல’ என்ற செல்லப் பெயரால் அழைக்கப்படும் அஜித்தின் முதல் பொங்கல் வெளியீடு, அகத்தியன் இயக்கத்தில் உருவான ‘வான்மதி’ திரைப்படம்தான். இந்த படம், அஜித்தின் திரையுலகப் பயணத்தில் மிக முக்கியமான திருப்பமாக அமைந்தது. பின்னர் பொங்கல் பண்டிகை நேரத்தில் வெளியான அஜித்தின் ‘தீனா’, ‘வீரம்’ போன்ற பல படங்கள் வெற்றி பெற்றன. ஆனால், அவற்றுக்கெல்லாம் மேலாக, மிகப் பெரிய வெற்றியை ஈட்டிய படம் என்றால் அது சிறுத்தை சிவா இயக்கிய ‘விஸ்வாசம்’ திரைப்படம்தான். இந்த திரைப்படம் அஜித் ரசிகர்களிடையே பேராதரவைப் பெற்றதுடன், பெரிய அளவில் கொண்டாடப்பட்டது. இதேசமயம், 2002-ஆம் ஆண்டு வெளியான ‘ரெட்’, 2006-ஆம் ஆண்டு வெளியான ‘பரமசிவன்’, 2007-ஆம் ஆண்டு வெளியான ‘ஆழ்வார்’ ஆகிய பொங்கல் வெளியீட்டு படங்கள் பெரிய தோல்வியை சந்தித்தன. இது அஜித்தின் ரசிகர்களுக்கு சற்று ஏமாற்றமாகவே இருந்தது. பொங்கலுக்கு அஜித், விஜய் படங்கள் பல முறை ஒரே நாளில் மோதியுள்ளன. கடைசியாக, 2023 பொங்கலில், விஜய்யின் ‘வாரிசு’ மற்றும் அஜித்தின் ‘துணிவு’ ஒரே நேரத்தில் திரையரங்குகளை வந்தடைந்தன. இந்த வெளியீடு, அஜித் மற்றும் விஜய் ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியது.
'விடாமுயற்சி' அஜித், 'கேம் சேஞ்சர்' ராம் சரண்
இந்த வரிசையில் இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, அஜித் குமாரின் ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்திருந்த 'விடாமுயற்சி' திரைப்படம் பற்றிய முக்கிய அறிவிப்பு சில நாட்களுக்கு முன் வெளியானது. நீண்ட இடைவெளிக்கு பிறகு இந்த படம் பொங்கல் ரிலீசுக்கு வருவதாக கூறப்பட்டதால், தமிழ் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் பல படங்கள் பொங்கல் வெளியீட்டில் இருந்து விலகி நேரம் மாற்றிக் கொண்டன. ஆனால், 'விடாமுயற்சி' படத்தின் போஸ்ட் புரொட;frன் பணிகள் முடிவடையாத காரணத்தால், படக்குழுவினர் பொங்கல் வெளியீட்டில் இருந்து பின் வாங்குவதாக அறிவித்தனர். இது அஜித் ரசிகர்களுக்கு பெரிய அதிர்ச்சியையும் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து, பொங்கல் ரேஸில் இருந்து விலகிய படங்கள் தற்போது வெளியாகியுள்ளன. அந்த வகையில், இந்த ஆண்டு பொங்கலுக்கு இயக்குநர் பாலா மற்றும் நடிகர் அருண் விஜய் சுட்டணியில் உருவாக்கியுள்ள 'வணங்கான்', 12 ஆண்டுகளாக பல்வேறு பிரச்சினைகளால் கிடப்பில் இருந்த நடிகர் விஷாலின் 'மதகஜராஜா', ஜெயம் ரவி மற்றும் நித்யா மேனன் நடிப்பில் காதல் கதையாக உருவாக்கியுள்ள 'காதலிக்க நேரமில்லை', கலையரசன் நடிப்பில் உருவாக்கியுள்ள 'மெட்ராஸ்காரன்', ஆகாஷ் முரளி நடித்துள்ள 'நேசிப்பாயா', இயக்குநர் ஷங்கர் மற்றும் ராம் சரண் கூட்டணியில் 'கேம் சேஞ்சர்', மற்றும் சமூகப்படமாக வெளிவந்துள்ள 'தருணம்' என மொத்தம் ஏழு படங்கள் திரைக்கு வந்துள்ளன. இந்த படங்களுடன், கடைசி நேரத்தில் மேலும் சில படங்கள் பொங்கல் வெளியீட்டில் இணைய வாய்ப்பு உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.