‘கம்பன்...கூச்சங்கொண்டு எழுதா ஓர் உவமை’ - மனதை கொள்ளை கொண்ட மிருணாள் தாகூர்

தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக்கொண்டு இந்தி மட்டுமில்லாமல் தெலுங்கு திரையுலகிலும் கதாநாயகியாக பிரபலமாகி வருகிறார் மிருணாள்.

Update: 2023-11-06 18:30 GMT
Click the Play button to listen to article

இந்தி மட்டுமில்லாமல் தமிழ், தெலுங்கு என பலரின் மனதையும் தனது அழகிய சிரிப்பால் கொள்ளை கொண்டவர் மிருணாள் தாகூர். சீரியல் பார்த்த 90ஸ் கிட்ஸ்களுக்கு நன்கு பரிச்சயமானவர் இவர். இந்தியில் ஒளிப்பரப்பான பிரபல தொலைக்காட்சி தொடரான ‘கும் கும் பாக்யா’ சீரியலில் கதாநாயகியின் தங்கையாக நடித்திருந்தார் மிருணாள். அந்த தொடர் ‘இனிய இருமலர்கள்’ என்ற பெயரில் தமிழிலும் டப் செய்யப்பட்டு ஒளிபரப்பானது. பொதுவாக சின்னத்திரை நடிகர் நடிகைகள் பெரிய திரைக்குள் நுழைவது அவ்வளவு சாதாரண விஷயமல்ல. அப்படியே வாய்ப்புகள் கிடைத்தாலும் அதனை தக்கவைத்து கொள்வது என்பது அவ்வளவு எளிதல்ல. தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக்கொண்டு இந்தி மட்டுமில்லாமல் தெலுங்கு திரையுலகிலும் கதாநாயகியாக பிரபலமாகி வருகிறார் மிருணாள்.


சீரியல்கள் மற்றும் அறிமுகப்படங்களில்...

மிருணாளின் திரைப்பயணம்

மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த மிருணாள் தாகூர் 2012ஆம் ஆண்டு கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தபோதே, ‘முஜ்சே குச் கேஹ்தி... யேஹ் காமோஷியான்’ என்ற சீரியலில் நடித்தார். ஆனால் அந்த சீரியலைவிட அதற்கடுத்து 2014 - 16 காலகட்டத்தில் ஒளிபரப்பான, ‘கும்கும் பாக்யா’ நாடகத்தில்தான் மிகவும் பிரபலமானார். அதற்காக, சிறந்த துணை நடிகைக்காக இந்திய டெலிவிஷன் விருதையும் வென்றார். இந்த சீரியல்தான் தென்னிந்திய மொழிகளிலும் டப் செய்யப்பட்டு ஒளிபரப்பானது. அதன்மூலம் இந்திய அளவில் ரசிகர்களைப் பெற்றார் மிருணாள். தொடர்ந்து சீரியல்களில் நடித்துவந்தாலும் 2018ஆம் ஆண்டு வெள்ளித்திரை வாய்ப்பு தேடிவரவே, ‘லவ் சோனியா’ என்ற படத்தின்மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார். அந்தப் படம் பெரிய அளவில் கைகொடுக்காவிட்டாலும், 2019ஆம் ஆண்டு வெளியான வாழ்க்கை வரலாற்றுப் படங்களான ‘சூப்பர் 30’ மற்றும் ‘பாட்லா ஹவுஸ்’ போன்றவை மிருணாளுக்கு நல்ல பெயரை சம்பாதித்துக் கொடுத்தன.


‘சீதா ராமம்’ திரைப்படத்தில்...

அழகால் கொள்ளைக்கொண்ட சீதா!

அதன்பிறகு 2022ஆம் ஆண்டு துல்கர் சல்மானுடன் இணைந்து நடித்த ‘சீதா ராமம்’ திரைப்படம்தான் மிருணாளுக்கு திருப்புமுனையாக அமைந்தது. ஏற்கனவே சீரியல் மூலம் தென்னிந்திய ரசிகர்களிடையே பிரபலமாகியிருந்த மிருணாள், இந்த படம்மூலம் ஒட்டுமொத்த தென்னிந்திய ரசிகர்களின் கவனத்தையும் தன்பக்கம் ஈர்த்தார். குறிப்பாக, இத்திரைப்படத்தில் மதன் கார்க்கி இவரை வர்ணித்த ‘குருமுகில்’ மற்றும் ‘கண்ணுக்குள்ளே கரைந்த நிலவு’ போன்ற பாடல்கள் சோஷியல் மீடியாவில் காதல் புயலையே வீசியது என்றே சொல்லலாம்.

‘சீதா ராமம்’ திரைப்படத்தின் வெற்றி மற்றும் பயணம் குறித்து மிருணாள் கூறுகையில், “என் வாழ்நாளில் இவ்வளவு அன்பை நான் அனுபவித்தது இல்லை. 2020ஆம் ஆண்டு இந்த படத்தில் நடிக்க ஒப்பந்தமானேன். ஆனால் கொரோனா மற்றும் வேறுசில காரணங்களால் படம் தள்ளிப்போனது. அதனால் மிகவும் வருத்தப்பட்டேன். நான் தெலுங்கில் நடிக்கப்போகிறேன் என்று சொன்னபோது, ‘பொதுவாக தெலுங்கில் நடித்துவிட்டு பாலிவுட்டுக்கு வருவார்கள். ஆனால் நீ ஏன் தெலுங்கு படத்தில் நடிக்கிறாய்?’ என்று கேட்டார்கள். எனக்கு இந்த படத்தின் கதையின்மீதும் எனது கதாபாத்திரத்தின்மீதும் மிகுந்த நம்பிக்கை இருந்தது. குறிப்பாக, 1940 மற்றும் 1960-களின் சகாப்த காதலுக்கு பார்வையாளர்களை கொண்டுசெல்லும் திரைப்படம் என்பதால் இந்த கதையை தேர்வுசெய்தேன். சீதாராமம் படப்பிடிப்பின்போது அங்கு குளிர் மைனஸ் 22 டிகிரியில் இருந்தது. எனக்கு மூக்கில் ரத்தக்கசிவு, காயங்கள் மற்றும் அலர்ஜி போன்ற பிரச்சினைகள் ஏற்பட்டன. மிகவும் சவாலான வானிலையில் மிகுந்த சிரமங்களுக்கு மத்தியில்தான் இந்தப் படத்தில் நடித்துமுடித்தேன்” என்று கூறியிருந்தார்.


வெப் தொடர்களில் மிருணாள் தாகூர்

கவர்ச்சி நாயகி

பொதுவாகவே இன்றைய நடிகர், நடிகைகள் தங்கள் மார்க்கெட்டை தக்கவைத்துக் கொள்வதில் ஜாக்கிரதையாகவே நடந்துகொள்கின்றனர். குறிப்பாக, குறிப்பிட்ட கதாபாத்திரம், திரைப்படங்கள், பிளாட்ஃபார்ம்கள் என தங்களை சுருக்கிக்கொள்வதில்லை. மிருணாளும் தனது திரை வாழ்க்கையில் அதுபோன்ற முடிவுகளை எடுப்பதிலும் ரசிகர்களை தக்கவைத்துக்கொள்வதிலும் சற்று கவனமாகவே நடந்துகொள்கிறார். ‘சீதா ராமம்’ வெற்றிக்குப் பிறகு, ‘லஸ்ட் ஸ்டோரீஸ் 2’ வெப் தொடரில் கவர்ச்சி காட்டிய மிருணாள், தொடர்ந்து சோபிதா துலிபாலா, அர்ஜூன் மாத்தூர் மற்றும் ராதிகா ஆப்தேவுடன், ‘மேட் இன் ஹெவன் சீசன் 2’ என்ற தொடரிலும் நடித்தார். “குறிப்பிட்ட மொழிக்குள் சிக்க விரும்பவில்லை; எல்லா மொழிகளிலும் வெவ்வேறு விதமான கதாபாத்திரங்களில் நடிக்க விரும்புகிறேன். கதை மற்றும் கதாபாத்திரங்கள்தான் முக்கியம்” என்கிறார்.


'ஹாய் நான்னா’ திரைப்படத்தில் மிருணாள்

தெலுங்கை தொடர்ந்து தமிழிலும் மிருணாள்?

தொடர்ந்து தெலுங்குப் படங்களில் ஆர்வம் காட்டிவரும் மிருணாள். நானியுடன் இணைந்து நடிக்கும் ‘ஹாய் நான்னா’ திரைப்படம் டிசம்பரில் வெளியாகவுள்ளது. பொதுவாக நல்ல கதைக்களங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் நானியின் 30வது படம் இது. தெலுங்கு, இந்தி, தமிழ், மலையாளம் மற்றும் கன்னடம் என பான் இந்தியா படமாக உருவாகியுள்ள இத்திரைப்படத்தில் நானியுடன் முத்த காட்சிகளில் அசால்டாக நடித்திருக்கிறார் மிருணாள். இந்த படத்தின் டீசரே நல்ல வரவேற்பு பெற்றிருக்கும் நிலையில் படத்தின்மீதான எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது என்றே சொல்லலாம். தொடர்ந்து ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக மிருணாள் தாகூர் நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 2020ஆம் ஆண்டு வெளியான ‘தர்பார்’-க்கு பிறகு ஏ. ஆர். முருகதாஸ் இயக்கும் இப்படத்தின்மூலம் கோலிவுட்டிலும் இறங்கவிருக்கிறார் மிருணாள். கண்ணுக்குள்ளே கரைந்த நிலவு தமிழ் ரசிகர்களின் இதயத்தைத் திருடுமா என்பது விரைவில் தெரியவரும்.

Tags:    

மேலும் செய்திகள்