கல்பனா வீட்டில் அன்று நடந்தது என்ன? தற்கொலை முயற்சியா? திடீர் வீடியோ வெளியீடு!

கல்பனா ராகவேந்தர் குடும்ப பிரச்சினை காரணமாக தற்கொலைக்கு முயன்றதாக சமூக ஊடகங்களில் செய்திகள் பரப்பப்பட்டன. சுமார் 2 நாட்கள் வெண்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டதில் அவர் அபாய கட்டத்தைத் தாண்டிவிட்டதாக சொல்லப்பட்டது.;

Update:2025-03-11 00:00 IST
Click the Play button to listen to article

பிரபல பின்னணி பாடகி கல்பனா ராகவேந்தர் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஹைதராபாத்திலுள்ள அவரது வீட்டில் அதிகப்படியான தூக்கமாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றதாக செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. குடும்பத்துக்குள் இருக்கும் சண்டை மற்றும் கணவருடனான மனஸ்தாபம் போன்றவைதான் இதற்கு காரணம் என்றும், அதனால் மன அழுத்தம் தாங்காமல் அவர் தற்கொலைக்கு முயற்சித்ததாகவும் கூறப்பட்டன. ஹைதராபாத்திலிருக்கும் பிரபல மருத்துவமனை ஒன்றில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், அபாய கட்டத்திலிருந்து மீண்டிருப்பதாக சொல்லப்பட்டது. இந்நிலையில்தான் தனது தாயார் தற்கொலைக்கு முயற்சிக்கவில்லை எனவும், தூக்கம் வராததால் அடுத்தடுத்து 18 தூக்க மாத்திரைகளை சாப்பிட்டதால் சுயநினைவை இழந்துவிட்டதாகவும் அவருடைய மகள் தயா பிரசாத் பத்திரிகையாளர்களை சந்தித்து விளக்கமளித்தார். சுயநினைவு திரும்பி தற்போது நலமுடன் இருக்கும் கல்பனா, தன்னை பற்றி தவறான வதந்திகளை பரப்பவேண்டாம் என வீடியோ வெளியிட்டுள்ளார். ஹைதராபாத்திலுள்ள கல்பனா ராகவேந்தரின் வீட்டில் அன்று நடந்தது என்ன? விரிவாக பார்க்கலாம்.

பாரம்பரியமிக்க கலைக்குடும்பத்தை சேர்ந்தவர் கல்பனா!

கல்பனா ராகவேந்தர் ஒரு பின்னணி பாடகி என்பது அனைவரும் அறிந்ததே. இவர் சிறுவயதிலிருந்தே ..... கர்நாடக இசையை கற்றுத்தேர்ந்தவர். கல்பனாவின் அப்பா டி.எஸ். ராகவேந்திரா ஒரு இசைக்கலைஞர், பாடகர் மட்டுமல்லாமல் நடிகரும் கூட. இவரை பல படங்களில் பார்த்திருந்தாலும் ‘வைதேகி காத்திருந்தாள்’ படம் இவருக்கு நல்ல பெயரை பெற்றுத்தந்தது. கல்பனாவின் தந்தை மட்டுமல்லாமல் தாயார் சுலோச்சனாவும் ஒரு பின்னணி பாடகி, தங்கை பிரசன்னாவும் பாடகிதான். பிரபல கர்நாடக இசைக்கலைஞர் மதுரை டி. சீனிவாசனிடம் 5 வயதிலிருந்தே இசையை கற்றுக்கொண்டவர் கல்பனா. அவரிடம் கற்ற பலரும் திரைத்துறையில் கோலோச்சி வந்தாலும் கல்பனாவிற்கு கிடைத்த பாக்கியம் அவர்களில் பலருக்கும் கிடைக்கவில்லை என்பதுதான் உண்மை. எப்படியெனில் டி. சீனிவாசனின் மறைவுக்கு பிறகு அவருடைய இரங்கல் கூட்டத்தில் முன்பாக அமர்ந்து பாடும் வாய்ப்பு கல்பனாவிற்கு கிடைத்தது. இசைத்துறையில் மட்டுமல்லாமல் தனது 6 வயதிலேயே ‘புன்னகை மன்னன்’ படத்தில் குழந்தை நட்சத்திரமாகவும் நடித்திருந்தார். அதுபோக சிறுவயதிலிருந்தே தொடர்ந்து பாடல்களை பாடிவரும் கல்பனா, பிளாக் & ஒயிட் காலத்தில் பிரபலமாக இருந்த எம்.எஸ்.வி முதல், இளையராஜா, ஏ.ஆர் ரஹ்மான் என பெரிய லெஜண்ட்களின் இசையில் பாடியுள்ளார். 


பல்வேறு மொழிகளில் பாடல்கள் மற்றும் இசைக் கச்சேரிகள் மூலம் பிரபலமான பாடகி கல்பனா ராகவேந்தர்

குறிப்பாக, தமிழில் இவர் பாடிய மதுர ஜில்லா மச்சான்தாண்டி, கடவுள் தந்த அழகிய வாழ்வு, ஜிகிரு ஜிகிரு, ஜிங்க் சக்கா, காத்தாடி போல ஏண்டி, பெண்ணே நீயும் பெண்ணா போன்ற பாடல்கள் இவருக்கு நற்பெயரை பெற்றுத்தந்தன. அதுபோக வெளிநாடுகள் உட்பட பல்வேறு இடங்களில் 3 ஆயிரத்துக்கும் அதிகமான இசைக்கச்சேரிகளில் பல்வேறு மொழிகளில் பாடியுள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற தென்னிந்திய மொழிகளை சரளமாக பேசக்கூடிய கல்பனா, நிறைய டிவி நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டுள்ளார். இதுபோக டப்பிங் ஆர்ட்டிஸ்டாகவும் பணிபுரிந்துவருகிறார்.

2 நாட்களாக பூட்டியே இருந்த கதவு!

இத்தகைய பெருமைகளைக் கொண்ட கல்பனா ராகவேந்தருக்கும், பிரசாத் என்பவருக்கும் திருமணமாகி தயா என்ற ஒரு மகளும் இருக்கிறார். கடந்த சில வருடங்களுக்கு முன்பு கணவன் மனைவி இருவருக்குமிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு கல்பனா தனது கணவரை பிரிந்திருப்பதாக சொல்லப்பட்டது. ஒரு கட்டத்தில் இருவரும் விவாகரத்து பெற்றுவிட்டதாகக்கூட செய்திகள் வெளியாகின. ஆனால் குடும்ப விவகாரம் குறித்து பொதுவெளியில் பேசுவதை பெரிதும் விரும்பாத கல்பனா, அதுகுறித்து பேசாமல் மௌனம் காத்தார். அப்போது தெலுங்கு திரையுலகம் பக்கம் பிஸியாக இருந்த இவர், அதன்பிறகு தமிழிலும் இசை நிகழ்ச்சிகளில் ஜட்ஜாக கலந்துகொண்டார். இப்படியிருந்த சமயத்தில்தான் மார்ச் 4ஆம் தேதி கல்பனா, ஹைதராபாத்திலிருக்கும் தனது வீட்டில் தற்கொலைக்கு முயன்றதாக செய்திகள் வெளியாகின. அதற்கு முன்பே இரண்டு நாட்களாக கல்பனாவின் வீடு பூட்டியே இருப்பதை பார்த்து சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் கதவை தட்டியுள்ளனர். அவருடைய செல்போனுக்கு போன் செய்தபோது ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது தெரியவந்தது. 


அதிகப்படியான தூக்கமாத்திரைகளால் சுயநினைவிழந்த நிலையில் பாடகி கல்பனா

ஆனால் வீடு உட்புறம் பூட்டப்பட்டிருந்தும் கதவு திறக்கப்படாததால் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின்பேரில் வந்த போலீசார் வீட்டின் முன்பக்க கதவை உடைக்க முயன்றபோது முடியாததால், கிச்சன் கதவை உடைத்து உள்ளே சென்றனர். மேடம், மேடம் என கூப்பிட்டுக்கொண்டே ஒவ்வொரு அறையாக சென்ற போலீசார், மாடியிலிருந்த பெட்ரூமுக்கு சென்றபோது அங்கு சுய நினைவிழந்து மயங்கிய நிலையில் கிடந்த கல்பனாவை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக அவரை மீட்டு, மருத்துவமனைக்கு கொண்டுசென்று சேர்த்தனர். மருத்துவர்கள் பரிசோதித்ததில் அவர் அதிகப்படியான தூக்க மாத்திரைகளை சாப்பிட்டிருப்பதாகவும், எனவே இது தற்கொலை முயற்சியாக இருக்கலாம் எனவும் சொல்லப்பட்ட நிலையில், போலீசாரின் தரப்பில் தற்கொலை முயற்சிக்கான காரணம் என்னவென்று தெரியவில்லை என்று சொல்லப்பட்டது. ஆனால் கல்பனா ராகவேந்தர் குடும்ப பிரச்சினை காரணமாக தற்கொலைக்கு முயன்றதாக சமூக ஊடகங்களில் செய்திகள் பரப்பப்பட்டன. சுமார் 2 நாட்கள் வெண்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டதில் அவர் அபாய கட்டத்தைத் தாண்டிவிட்டதாக சொல்லப்பட்டது. சுய நினைவு திரும்பிய கல்பனாவிடம் போலீசார் விசாரணை நடத்தியதில், தனக்கு ஒழுங்காக தூக்கம் வராததால் அடுத்தடுத்து 8 மாத்திரைகளை எடுத்துக்கொண்டதாகவும், ஆனால் அப்போதும் தூக்கம் வரவில்லை என்ற காரணத்தால் மீண்டும் 10 மாத்திரைகளை போட்டுக்கொண்டதாகவும் கூறினார். மாத்திரைகளை உட்கொண்டபிறகு தனக்கு என்ன நடந்தது என்றே தெரியவில்லை என்றும் கூறியிருந்தார். மேலும் தான் தற்கொலைக்கு முயற்சிக்கவில்லை என்றும் விளக்கமளித்திருந்தார்.


தனது தாயாரின் உடல்நலம் குறித்து தயா பிரசாத் விளக்கம்

கல்பனாவின் மகள் விளக்கம்!

இந்நிலையில் கல்பனாவின் மகள் தயா பிரசாத் இச்சம்பவம் குறித்து பத்திரிகையாளர்களை சந்தித்து விளக்கமளித்தார். அதில், “என்னுடைய அம்மா இப்போது நலமுடன் இருக்கிறார். அவருக்கு எந்த பிரச்சினையுமில்லை. என்னுடைய அப்பா அம்மா இடையேயும் எந்த பிரச்சினையும் இல்லை. அவர்கள் மகிழ்ச்சியாகத்தான் இருக்கின்றனர். மன அழுத்தத்திற்காக, மருத்துவரின் பரிந்துரைப்படி அளிக்கப்பட்ட மாத்திரையை அம்மா தினமும் எடுத்துவந்தார். அப்படி தினமும் எடுத்துக்கொள்ளும் மாத்திரையை சற்று அதிகமாக எடுத்துவிட்டதால் ஓவர் டோஸ் ஆகிவிட்டதே தவிர, அவர் தற்கொலைக்கு முயற்சிக்கவில்லை. எங்களுடைய குடும்பத்தில் எந்த பிரச்சினையும் கிடையாது. நாங்கள் அனைவருமே மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறோம். தயவுசெய்து எங்களை குறித்து தவறான வதந்திகளை பரப்பாதீர்கள். அது எங்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்துகிறது. அம்மாவை 2, 3 நாட்களில் வீட்டுக்கு கூட்டிச் செல்லலாம் என மருத்துவர்கள் கூறியிருக்கின்றனர்” என்று விளக்கமளித்தார்.

என் கணவர் மட்டும் இல்லையென்றால்... - கல்பனா உருக்கம்

சிகிச்சைக்குப் பிறகு தற்போது நலமுடன் இருக்கும் கல்பனா தன்னைப் பற்றியும் தனது கணவரை பற்றியும் பரவும் வதந்திகள் குறித்தும், தனது உடல்நலம் குறித்தும் விளக்கமளித்து வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அந்த வீடியோவில், “வணக்கம் நான் உங்கள் கல்பனா ராகவேந்தர். என்னைப் பற்றியும், எனது கணவரை பற்றியும் செய்திகளிலும், மீடியாக்களிலும் ஒரு தவறான வதந்தியை பரப்பிக்கொண்டிருப்பதால் அதை பற்றி விளக்கமளிக்கவே நான் இந்த வீடியோவை பதிவிடுகிறேன்.


தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தது குறித்து கல்பனா விளக்கம்

இந்த வயதில் (44) நான் பி.ஹெச்டி, எல்.எல்.பி மற்றும் நிறைய விஷயங்களை படித்துக்கொண்டிருக்கிறேன். கூடவே என்னுடைய மியூசிக் கெரியரின்மீதும் தீவிர ஈடுபாட்டுடன் செயல்பட்டு வருகிறேன். இதனால் மன அழுத்தம் மிகவும் அதிகமானாதால் பல வருடங்களாகவே எனக்கு சரியாக தூக்கம் இல்லை. தூக்கமின்மை பிரச்சினைக்கு மருத்துவரிடம் சிகிச்சையெடுத்துக்கொண்ட போது எனக்கு இன்சோம்னியா பிரச்சினை இருப்பதாகச் சொல்லி மருந்துகள் பரிந்துரைத்தனர். அந்த மருந்தை குறிப்பிட்ட ஒரு நாளில் டோஸேஜ் அதிகமாக எடுத்ததால் நுரையீரல் தொற்று ஏற்பட்டு, நான் சுயநினைவை இழந்துவிட்டேன். ஆனால் இன்றைக்கு நான் உயிருடன் திரும்பிவந்து உங்கள் அனைவருடனும் பேசுகிறேன் என்றால் அதற்கு ஒரே காரணம் என் கணவர் அன்றைக்கு எனக்காக பட்டப்பாடு, என்னை காப்பாற்றுவதற்காக அவர் பட்ட கஷ்டம்தான். அவர் வெளியூரில் இருந்தபோதும், சரியான நேரத்தில் போலீஸ், மீடியா, ஆம்புலன்ஸ் என அனைத்திற்கும் தகவல் கொடுத்ததால்தான் என்னை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தார்கள். அதனால்தான் நான் உயிர்பிழைத்தேன். அதனால் எந்த வதந்திகளையும் தயவுசெய்து நம்பாதீர்கள். எனக்கு தனிப்பட்ட பிரச்சினைகள் எதுவும் கிடையாது. கடவுளின் அருளால் என் வாழ்க்கையில் நடந்த அழகான, உன்னதமான ஒரு விஷயம் பிரசாத் பிரபாகர் எனக்கு கணவராக கிடைத்ததும், இவ்வளவு அன்பாக இருக்கிற தயா பிரசாத் எனக்கு மகளாக கிடைத்ததும்தான். அதனால் தவறான வதந்திகளை நம்பாதீர்கள். எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை” என்று விளக்கமளித்து வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார் கல்பனா ராகவேந்தர்.

Tags:    

மேலும் செய்திகள்