ரஜினி முதல் கவின்வரை ஜோடி! - நயன்தாராவின் இளமை ரகசியம் இதுதான்!

நயன்தார இந்த பெயரை கேட்டவுடனேயே அன்றைய 90'ஸ் கிட்ஸ்கள் துவங்கி இன்றைய 2கே கிட்ஸ்கள் வரை அனைவரின் இதயங்களும் லப்டப் லப்டப் என துடிப்பதை நம்மால் காண முடியும்.

Update:2024-07-30 00:00 IST
Click the Play button to listen to article

நயன்தாரா! இந்த பெயரை கேட்டவுடனேயே  90'ஸ் கிட்ஸ்கள் துவங்கி இன்றைய 2கே கிட்ஸ்கள்வரை அனைவரின் இதயங்களும் லப்டப் லப்டப் என துடிப்பதை நம்மால் உணர முடியும். இத்தனைக்கும் திருமணமாகி இரண்டு குழந்தைகளுக்கு தாயாக மாறிய பிறகும் கூட நயன்தாரா மீது உள்ள கிரேஸ் மட்டும் இங்கு குறையவே இல்லை. இதற்கு காரணம் அவரின் அழகிய தோற்றம் மட்டுமல்ல, தன்னுடைய திரைப்பயணத்தில் அவ்வப்போது பல அதிரடியான முடிவுகள் எடுத்து அவர் மேற்கொள்ளும் சில பல மாற்றங்களும்தான். அதன் தொடர்ச்சியே தற்போது கவினுக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கவுள்ளார் என வெளியாகியுள்ள அறிவிப்பும். 20 ஆண்டுகளை கடந்தும் இன்றும் இளமை மாறா அழகுடன், அறிமுக நடிகையை போன்ற தோற்றத்துடனேயே நயன்தாரா வலம் வருகிறார் என்றால் அது அவரால் மட்டுமே சாத்தியமானது. அப்படி இளமையான தோற்றத்துடனும், தன்னம்பிக்கையுடனும் தொடர்ந்து வலம்வர என்ன மாதிரியான யுக்திகளை நயன்தாரா இதுவரை கையாண்டுள்ளார் என்பது குறித்து இந்த தொகுப்பில் காண்போம்.

சீனியர் நடிகர்களுடன் ஜோடி

பொதுவாக ஒரு நடிகை திரைத்துறைக்குள் வந்து முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை எட்டி பிடிப்பது என்பது அவ்வளவு சாதாரண விஷயம் கிடையாது. 1980, 90 காலகட்டங்கள் தொடங்கி இன்றைய 2k வரையுமே நடிகைகளின் வருகையும், சில காலத்திற்கு பிறகு அவர்கள் காணாமல் போவதும் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கிறது. அதிலும் 80-களில் ஸ்ரீதேவி, ராதிகா, சுகாசினி, பூர்ணிமா, அம்பிகா, ராதா, ரேவதி என தொடங்கி 90-களில் அடுத்த தலைமுறை நடிகைகளான ரோஜா, பானுப்பிரியா, மீனாவரை பலரும் அன்றைய முன்னணி நட்சத்திர ஹீரோக்களுடன் ஜோடி போட்டு புகழ் மழையில் நனைந்தவர்கள்தான். இவர்களுக்குப் பிறகு 2 ஆயிரம் ஆண்டுகளின் தொடக்கத்தில் ஜோதிகா, திரிஷா, அசின், லைலா, சிம்ரன் என எத்தனையோ நடிகைகள் போட்டி போட்டு நடித்துக்கொண்டிருந்த வேளையில்தான் நயன்தாரா என்னும் அழகு பதுமையும் தமிழ் திரையுலகிற்குள் நுழைந்தது. அதற்கு முன்பே மலையாளத்தில் ஜெயராம் தொடங்கி மோகன்லால், மம்முட்டி என சீனியர் நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்திருந்த நயன்தாரா, தமிழிலும் சரத்குமார், ரஜினிகாந்த் போன்ற சீனியர் நடிகர்களுக்குதான் இணையாக நடிக்க வந்தார். எடுத்த எடுப்பிலேயே சூப்பர் ஸ்டார், சுப்ரீம் ஸ்டார் என நட்சத்திர நடிகர்களுக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு அமைந்தது அவருக்கு பாசிட்டிவாக இருந்தாலும், அதிலும் சில நெகட்டிவான விஷயங்கள் இருந்தன.


"சந்திரமுகி" திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் ஒரு பாடல் காட்சியில் நயன்தாரா 

ஏனெனில், சீனியர் நடிகர்களுக்கு ஜோடியாக நடிக்க ஆரம்பித்தால் வயது குறைவாக இருந்தாலும், மூத்த நடிகை என்கிற மாயபிம்பம் மிக எளிதில் ஒட்டிக்கொள்ளும். இதே சிக்கலை துவக்க காலத்தில் நயன்தாராவும் சந்தித்ததால் தானோ என்னவோ 'வல்லவன்' படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக இவர் நடித்திருந்தாலும், அவரை விட மூத்தவராகவே நயன்தாராவின் கதாபாத்திரம் அமைக்கப்பட்டிருக்கும். இதுதவிர, துவக்கத்தில் கொழு கொழுவென நயன்தாரா அழகாக இருக்கிறார் என வர்ணித்த அதே ரசிகர்கள் 'கஜினி', 'ஈ' போன்ற படங்களில் நயன்தாராவின் தோற்றத்தை கேலி செய்யவும் தயங்கவில்லை. இருப்பினும் இவற்றையெல்லாம் உடைத்து, நான் சாதாரண ஸ்டார் இல்லை... சூப்பர் ஸ்டார் என்பதை தனது அடுத்தடுத்த படத்தேர்வுகள் மற்றும் முடிவுகளின் மூலம் நிரூபித்துக்காட்டினார் நயன்தாரா.


'வல்லவன்' திரைப்படத்தில் நயன்தாராவின் இருமாறுபட்ட தோற்றங்கள்

சிக் என மாறிய நயன்

நடிக்க ஆரம்பித்த தொடக்க காலத்தில் இவர் கொஞ்சம் குண்டாக கொழுகொழு பேபியாக இருந்ததால், அதற்காக சில நெகட்டிவான விமர்சனங்களை சந்தித்தாலும், ரசிகர்கள் அவரை கைவிடவில்லை. தொடர்ந்து தமிழில் மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் மற்ற நடிகைகளை போன்று அங்கு முன்னணி ஹீரோக்களாக இருந்த அனைவருடனும் ஜோடி சேர்ந்து புகழ் என்னும் உச்சாணிக்கொம்பில் ஏறத் தொடங்கினார். இருந்தும் நம்மிடம் இருக்கும் கொழுகொழு குண்டு பெண் என்ற அடையாளத்தை மாற்றியாக வேண்டும் என்று நினைத்து உடல் அழகிலும் கவனம் செலுத்த ஆரம்பித்தார் நயன். எப்போதும் தன் வாழ்க்கை பயணத்தில் எவ்வளவு மோசமான விமர்சனங்களை சந்தித்தாலும், எடுக்கும் சில முடிவுகளை மட்டும் மிகத்தெளிவாக எடுத்து, அதனை சாதித்தும் காட்டும் பழக்கம் கொண்ட நயன்தாரா, திடீரென்று ஒருநாள் யாரும் எதிர்பார்க்காத வகையில், அஜித்தின் 'பில்லா' படத்தில் ஷாஷா என்னும் முக்கியமான கதாபாத்திரத்தில் உடல் மெலிந்து சிக்கென வந்து ஒட்டுமொத்த திரையுலக ரசிகர்களையும் தன் வசீகரிக்கும் அழகால் கட்டிப்போட்டார். 'பில்லா' திரைப்படம் வெளிவந்த சமயத்தில் எல்லோரும் பரபரப்பாக பேசியதும், ஆச்சர்யமாக பார்த்ததும், கொண்டாடி தீர்த்ததும் அஜித்தை மட்டுமல்ல நயன்தாராவையும்தான். காரணம் கொஞ்சம் குண்டாக காணப்பட்டவர் திடீரெனெ ஒல்லியாக அதுவும் கவர்ச்சியான தோற்றத்தில் வந்து ரசிகர்களுக்கு ஷாக் மேல் ஷாக் கொடுத்ததால்தான்.


"பில்லா" திரைப்படத்தில் ஷாஷாவாக சிக்கென வந்து அசத்திய நயன்தாரா  

தொடர்ந்து தனுஷுடன் 'யாரடி நீ மோகினி', விஷாலுடன் 'சத்யம்', விஜய்யுடன் 'வில்லு', அஜித்துடன் 'ஏகன்', சூர்யாவுடன் 'ஆதவன்' என அன்றைய முன்னனி ஹீரோக்கள் மற்றும் நட்சத்திர நாயகர்கள் அனைவருடனும் இணைந்து நடிக்க ஆரம்பித்தவர், அதிலும் தனி முத்திரை பதித்தார். இந்த நேரத்தில் எல்லாம் நயன்தாரா திரைத்துறைக்கு வந்து 8 ஆண்டுகள் கடந்துவிட்டன. பொதுவாகவே தமிழ் திரைத்துறையை பொறுத்தவரை ஒரு நடிகையின் ஆயுட்காலம் என்பது அதிகபட்சம் 10 ஆண்டுகள்தான் இருக்கும். அதன் பிறகு திருமணம் செய்து சினிமாவிலிருந்து விலகி விடுவார்கள் அல்லது அக்கா, அண்ணி கதாபாத்திரங்களில் நடித்து தனது இருப்பை தக்கவைத்துக் கொள்ளவார்கள். அதற்கு உதாரணமாக 80-களில் பிரபலமாக இருந்த ராதா, அம்பிகா 90-களில் இங்கு பிரபலமாக இல்லை. 90களில் நட்சத்திரங்களாக விளங்கிய குஷ்பூவும், சுகன்யாவும் கூட 2000 ஆம் ஆண்டுக்கு பிறகு கதாநாயகிகளாக எந்தப் படத்திலும் நடிக்கவில்லை. எனவே நயன்தாரா தொடவேண்டிய உச்சத்தை எல்லாம் தொட்டுவிட்டார். இனி பெரிய அளவில் எந்த வாய்ப்புகளும் அவரை தேடி வராது என பலரும் நினைத்த நேரத்தில்தான் தனது ரூட்டை மாற்றி அடுத்த இன்னிங்ஸிற்கு தயாரானார் நயன்தாரா.


"வில்லு" திரைப்படத்தில் விஜய்யுடன் பாடல் காட்சியில்

அதிரடிகாட்டி ஆச்சர்யம் அளித்த நயன்

2010-ஆம் ஆண்டிற்கு பிறகு கதை தேர்வுகளில் அதிக கவனம் செலுத்த ஆரம்பித்த நயன்தாரா, நடித்தால் நட்சத்திர நடிகர்களுக்கு மட்டும்தான் ஜோடியாக நடிப்பேன் என அடம் பிடிக்காமல் தனது கதாபாத்திரம் பிடித்திருந்ததால், வளர்ந்து வரும் நடிகர்களுக்கும் இணையாக நடிக்க ஆரம்பித்தார். உதாரணமாக 2010-ஆம் ஆண்டு தெலுங்கில் மூத்த நடிகரான பாலகிருஷ்ணா நடிப்பில் வெளிவந்து மிகப்பெரிய வெற்றி பெற்ற 'சிம்ஹா' படத்தில் ஜோடியாக நடித்திருந்த நயன்தாரா, அதே காலகட்டத்தில் தமிழில் வெளிவந்த 'பாஸ் என்கிற பாஸ்கரன்' படத்தில் அன்றைய வளர்ந்து வரும் நடிகராக இருந்த ஆர்யாவுக்கும் காதலியாக நடித்து ரசிகர்களின் மனநிலையில் ஒரு அலையை ஏற்படுத்தினார். இது போலவே 'ஆரம்பம்' படத்தில் அஜித்துக்கு ஜோடி, 'ராஜா ராணி' படத்தில் ஜெய் மற்றும் ஆர்யாவிற்கு இணை, மலையாளத்தில் சூப்பர் ஹிட் ஆன 'பாஸ்கர் தி ராஸ்கல்' படத்தில் மம்மூட்டிக்கு ஜோடி, அதே நேரம் தமிழில் வெளிவந்த 'தனி ஒருவன்' படத்தில் ஜெயம் ரவிக்கு இணை என மாறி மாறி நடித்து தனது கதாநாயகிக்கான இருப்பையும், நட்சத்திர அந்தஸ்தையும் தொடர்ந்து தக்கவைத்துக் கொண்டார்.


நயன்தாராவின் "ராஜா ராணி" மற்றும் "நானும் ரௌடிதான்" திரைப்பட காட்சிகள் 

பிறகு 'நானும் ரௌடிதான்' படத்தில் விஜய் சேதுபதி, 'இது நம்ம ஆளு' படத்தில் சிம்பு, 'திருநாள்' படத்தில் ஜீவா என இளையதலைமுறை நடிகர்களுடன் அடுத்தடுத்து ஜோடி சேர்ந்தவர். 'விஸ்வாசம்', 'தர்பார்', 'அண்ணாத்த', 'பிகில்' போன்ற படங்களில் ரஜினி, அஜித், விஜய் என நட்சத்திர நடிகர்களுக்கும் இணையாக நடிக்க தவறவில்லை. இதில் உட்சபட்சமாக 'வேலைக்காரன்', 'மிஸ்டர் லோக்கல்' போன்ற படங்களில் சிவகார்த்திகேயனுக்கும் ஜோடியாக நடித்ததன் மூலம் குட்டீஸ்களின் பேராதரவையும் பெற்றார். இப்படி அவர் முன்னெடுத்த வித்தியாசமான திரைப்பயணமே அவரின் இளமையை தக்கவைக்க பெரிதும் உதவியது எனலாம். இந்த யுக்தியை இதுவரை எந்த நடிகைகளும் தமிழ் சினிமாவில் பின்பற்றவில்லை, ஏன் த்ரிஷாவும் கூட இதனை கையில் எடுத்திருந்தாலும் ஓரளவுக்கு மேல் அவரால் வெற்றிக் கொடுக்க முடியவில்லை. இது தவிர 'அறம்' துவங்கி 'அன்னபூரணி' வரை சோலோ ஹீரோயினாக கலக்கிவரும் நயன்தாரா, அதிலும் தனக்கென ஒரு தனி ஸ்டைலை உருவாக்கி உள்ளார்.

இப்போது கவினுக்கு ஜோடி

'ஜவான்' படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடித்து இந்திய அளவில் கவனம் பெற்றுள்ள நயன்தாரா, அடுத்தடுத்து அஜித்துடன் 'குட் பேட் அக்லி', ஜெயம் ரவியுடன் 'தனி ஒருவன் 2', சோலோ ஹீரோயினாக 'மூக்குத்தி அம்மன் 2' போன்ற பல படங்களை கையில் வைத்துள்ளார். இந்த நேரத்தில்தான் அடுத்த ரவுண்டுக்கு தயாராகியுள்ள நயன்தாரா, கவினுக்கும் ஜோடியாக நடிக்கவுள்ளார். சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்து இன்று வளர்ந்து வரும் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் கவின். இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமாகி 2021-ஆம் ஆண்டு வெளிவந்த ‘லிஃப்ட்’ என்ற படத்தில் கதாநாயகனாக அறிமுகமானவர். இப்படம் கவினுக்கு ஓரளவுக்கு நல்ல அடையாளத்தை பெற்று தர, அதன் பிறகு ‘டாடா’ என்றொரு படத்தில் நடித்தார். அப்படம் அவருக்கு பிளாக் பஸ்டர் வெற்றியை பெற்று தரவே, வளர்ந்து வரும் நட்சத்திரம் என்ற முன்னணி நிலைக்கு சென்றார். இப்படியான நிலையில்தான் அடுத்ததாக ‘ஸ்டார்’ என்றொரு படத்தில் நடித்தார். மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் வந்த இப்படம் சுமாரான வெற்றியையே பெற்றாலும், கவினின் நடிப்பை பலரும் பாராட்டியிருந்தனர். இதற்கு பிறகு, கவினை நோக்கி வரிசையாக பட வாய்ப்புகள் வர, அதன்படி அவர் தற்போது ‘கிஸ்’, ‘மாஸ்க்’, ‘பிளடி பக்கர்’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.


நடிகர் கவினுக்கு ஜோடியாக களமிறங்கும் நயன்தாரா

இப்படியான சூழலில்தான் லோகேஷ் கனகராஜின் உதவியாளராக இருந்த விஷ்ணு இடவன் என்பவர் இயக்கவுள்ள முதல் படத்தில் ஹீரோவாக நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார் கவின். செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் கவினுக்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டாரான நயன்தாரா நடிக்கிறார் என்பதுதான் இங்கு ஹைலைட். அது உண்மைதான் என்பதை நிரூபிக்கும் விதமாக கடந்த 23-ஆம் தேதி, கவின் - நயன்தாரா இருக்கும் புகைப்பட போஸ்ட்டரை இருவரும் தங்களின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 'ஹாய்' என்ற ஹேஷ் டேக்குடன் வெளியிட்டிருந்தனர். இந்த அறிவிப்பு பலருக்கு ஆச்சரியத்தை கொடுத்தாலும், கவினுக்கு ஜோடியாக நயன்தாராவா என்று கோலிவுட் வட்டாரமே அதிரவும் செய்தது. ஏனெனில் வயதிலும் சரி, அனுபவத்திலும் சரி கவின், நயன்தாரவை விட மிக மிக இளையவர் என்பதால்தான். தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் அப்புகைப்படம் குறித்து நெட்டிசன்கள் சிலர் தங்களது கருத்துக்களை கொஞ்சம் நெகட்டிவ்வாகவே பதிவிட்டு வந்தாலும், இதுவும் நயன்தாரா தனது இளமையை தக்கவைக்க முன்னெடுக்கும் அடுத்த முயற்சியாகவே பார்க்கப்படுகிறது.


Tags:    

மேலும் செய்திகள்