ரஜினி, கமல் போன்றோர் டூப்பை எதிர்பார்க்காமல் ரிஸ்க்கான காட்சிகளிலும் நடிப்பார்கள்! - ஸ்டண்ட் கலைஞர் குன்றத்தூர் பாபு
1980 மற்றும் 90-களில் ரஜினி - கமல் தொடங்கி, விஜயகாந்த், அர்ஜுன், விஜய், அஜித், சூர்யா என பெரிய பெரிய நட்சத்திர ஹீரோக்களின் படங்களில் வைக்கப்படும் பிரமாண்டமான சண்டை காட்சிகள் எல்லாம் பார்க்கும் நமக்கு பிரமிப்பையையும், ஆச்சர்யத்தையும் ஏற்படுத்தும்.
1980 மற்றும் 90-களில் ரஜினி - கமல் தொடங்கி, விஜயகாந்த், அர்ஜுன், விஜய், அஜித், சூர்யா என பெரிய பெரிய நட்சத்திர ஹீரோக்களின் படங்களில் வைக்கப்படும் பிரம்மாண்டமான சண்டை காட்சிகள் எல்லாம் பார்க்கும் நமக்கு பிரம்மிப்பையும், ஆச்சர்யத்தையும் ஏற்படுத்தும். மேலும், மலையில் இருந்து குதிப்பது, உயரமான கட்டிடங்களின் நுனியில் நின்று சண்டை போடுவது, காரை பறக்கவிட்டு மோத விடுவது போன்ற சில ரிஸ்க்கான காட்சிகளை பார்க்கும் போது ஹீரோவே நேரடியாக இதுபோன்ற காட்சிகளில் தங்களின் உயிரை பணயம் வைத்து நடித்திருக்கிறார்களோ என்ற எண்ணத்தை உண்டாக்கும். ஆனால், அதுதான் உண்மையில்லை. இந்த மாஸ் ஹீரோக்கள் காட்டும் ஒவ்வொரு மாஸ் நிகழ்வுகளுக்கு பின்னாலும் சண்டை பயிற்சியாளர் என்று சொல்லப்படும் ஸ்டண்ட் கலைஞர்களின் வலி நிறைந்த வாழ்க்கை உள்ளது. இவர்கள் செய்யும் தியாகங்கள்தான் ஒரு சாதாரண ஹீரோவையும் மாஸ் ஹீரோவாக மாற்றுகிறது. அப்படி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் உச்ச நட்சத்திரங்களுடன் பணியாற்றி ஒரு சிறந்த ஸ்டண்ட் கலைஞராக அடையாளம் பெற்ற குன்றத்தூர் பாபு தனது திரை அனுபவங்கள் குறித்த தகவல்களை நம்மோடு பகிர்ந்துகொண்டார். நமது ராணி நேயர்களுக்காக அவர் பகிர்ந்துகொண்ட தகவல்களின் சில சுவாரஸ்யமான தொகுப்பை இங்கே காணலாம்.
குன்றத்தூர் பாபு என்பவர் யார்? உங்களுக்கான ஸ்டண்ட் பயணம் எப்படி தொடங்கியது?
காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூரில் பிறந்து வளர்ந்த நான் படித்தது சென்னை பாரிஸ் கார்னரில் உள்ள அரண்மனைக்காரன் தெருவில் இயங்கி வந்த செயின் மேரிஸ் பள்ளியில்தான். குன்றத்தூரில் கறிக்கடை நடத்தி வந்த எனது தந்தை நம்மை போல் இல்லாமல். நமது பிள்ளைகள் நன்கு படிக்க வேண்டும், அதுவும் மற்ற பணக்கார வீட்டு பிள்ளைகளை போல நன்கு ஆங்கிலம் பேசும் ஒரு பள்ளியில் படிக்க வேண்டும் என்று என்னை கான்வென்ட் பள்ளியில் சேர்த்துவிட்டார். இன்று சினிமாவில் ஸ்டண்ட் துறையில் பயணிக்கும் நான் நன்கு ஆங்கிலம் பேசுகிறேன் என்றால் அதற்கு முழுக்க முழுக்க காரணம் அப்பா மட்டும்தான். குன்றத்தூரில் இருந்து சென்னை பாரிஸிற்கு இன்று 88k, அன்று 88c என்ற பேருந்தில் கிட்டத்தட்ட ஒன்றரை மணிநேரம் பயணம் செய்துதான் வந்து படித்துச் சென்றேன். இப்படி ஒருவழியாக படித்து முடித்த சமயத்தில் ஒருமுறை, அதாவது 1973-ஆம் ஆண்டு ப்ரூஸ்லீ நடித்து வெளிவந்த ‘என்டர் த டிராகன்’ படத்தை பார்க்க நேர்ந்தது. கராத்தேவை முன்னிறுத்தி வெளிவந்த அப்படம் என்னை வெகுவாக கவர்ந்தது. அதுவரை தமிழ் நாட்டில் கராத்தே பற்றி யாரும் பெரிதாக அறிந்திருக்க வாய்ப்பில்லை. இப்படத்திற்கு பிறகு கராத்தே மிகவும் பிரபலமானது. நானும் அதை கற்றுக்கொள்ள வேண்டும் என்று ஆசைப்பட்டேன். அப்பாவும் கம்பு சண்டை, பாக்ஸிங் போன்றவற்றில் ஓரளவு அனுபவம் பெற்றவர் என்பதால் மறுப்பேதும் சொல்லாமல் அதை கற்றுக்கொள்ள அனுமதித்தார்.
கராத்தே குறித்து நேர்காணலின்போது பகிர்ந்துகொண்ட குன்றத்தூர் பாபு
அதற்காக சென்னை புரைசைவாக்கம் சென்று அங்கு ஆலன் திலக் என்ற கராத்தே பள்ளியில் சேர்ந்து அக்கலையை பயில ஆரம்பித்தேன். அதற்காக பேருந்தில் தினமும் சென்று வர பணம் தேவைப்பட்டது. அதற்காக அப்பாவிடம் கறிக்கடையில் நின்று உதவி செய்துவிட்டு அவருக்கே தெரியாமல் கல்லாவில் இருந்து 5 ரூபாயை எடுத்து போட்டுகொண்டு கிளம்பிவிடுவேன். இப்படி ஒவ்வொரு கலையாக கற்றுக்கொள்ள ஆரம்பித்தபோது எங்கள் வீட்டிற்கு அருகில் சங்கர் என்ற அண்ணன் ஒருவர் சினிமாவில் எலெக்ட்ரீஷியனாக பணியாற்றி வந்தார். அவரிடம் சென்று சினிமா ஷூட்டிங் பார்க்க வேண்டும் என்று கேட்ட போது, அவர் என்னை அழைத்துச் சென்றார். அப்போதெல்லாம் சினிமா ஷூட்டிங் பார்ப்பது ஒரு புதுவித அனுபவமாக, புதுமையாக இருக்கும். அப்படி சென்ற இடத்தில் அங்கு எடுக்கப்படும் காட்சிகளை பார்த்துவிட்டு நானும் ஒரு ஓரமாக நின்று கராத்தே தொடர்பாக சிலவற்றை செய்து பார்த்துக் கொண்டிருந்தேன். அதனை பார்த்துவிட்டு அந்த யூனிட்டில் இருந்தவர்கள் என்னை பாராட்டினார்கள். அதுமட்டுமின்றி என்னுடைய அப்பாவின் நண்பரான தயாளன் என்பவரும் அதனை பார்க்க நேர்ந்துள்ளது. அவர் உடனே என்னை ‘மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன்’, ‘பொல்லாதவன்’, ‘சிம்லா ஸ்பெஷல்’ போன்ற பெரிய ஹீரோக்களின் படங்களின் ஒளிப்பதிவாளரான கர்ணன் என்பவரிடம் பணியாற்றி வந்த மாதவன் என்பவரிடம் அறிமுகம் செய்துவைத்தார். அப்போது அவர் கர்ணன் சாரிடம் தெலுங்கு படம் ஒன்றில் பணியாற்றி வந்தார். அந்த சமயம் எனக்கு தெலுங்கு தெரியாததால் அந்த படம், ஹீரோ குறித்தெல்லாம் தெரியவில்லை. நான் செய்துகாட்டிய தற்காப்பு கலைகள் இயக்குநருக்கு பிடித்திருந்ததால் அப்படத்தில் ஹீரோவுக்கு டூப்பாக என்னை நடிக்க வைத்தனர். இப்படித்தான் எனது சினிமா வாழ்க்கை துவங்கியது.
குழந்தையை தூக்கி போடப்போவதாக மிரட்டும் சண்டை காட்சியில் குன்றத்தூர் பாபு
முதல் படத்தில் ஹீரோவுக்கு டூப் போட்டிருந்தாலும் அடிக்காமல், அடிபடாமல் எப்படி ஸ்டண்ட் செய்வது என்பதை நன்கு தெரிந்துகொண்டால் இன்னும் உனக்கு சுலபமாக இருக்கும் என்று அந்த படப்பிடிப்பு தளத்தில் இருந்த ஒருவர் கூற அவர்களின் உதவியுடன் ஒரே வாரத்தில் பயிற்சி பெற்று சிறந்த முறையில் ஸ்டண்ட் செய்கிறாய் என்று எல்லோரும் பாராட்டும் அளவுக்கு என்னை வளர்த்துக்கொண்டேன். அதன் பிறகு கன்னடம், மலையாளம், இந்தி என ஸ்டண்ட் பயணம் நீண்டது. மெழுகுவர்த்தி போன்றதுதான் ஸ்டண்ட் கலைஞர்களின் பயணம். மெழுகுவர்த்தி எப்படி தன்னை தானே உருக்கிக்கொண்டு ஒளியை தருகிறதோ அதேபோன்றுதான் ஒரு ஹீரோவின் மாஸ் வெளிச்சத்திற்கு பின்னால் மறைந்து எங்களை நாங்களே பணயம் வைத்துக்கொண்டு பணியாற்றுகிறோம். அதற்கு உதாரணம் 15 அடி உயரத்தில் இருந்து ஹீரோ குதிப்பது போன்ற ஒரு காட்சி இருக்கிறது என்றால் அதில் அவ்வளவு உயரத்தில் இருந்து உயிரை பணயம் வைத்து குதிப்பது ஸ்டண்ட் கலைஞரான நாங்களாகத்தான் இருக்கும். ஆனால், குதித்த பிறகு அந்த இடத்தில் இருந்து எழுவது ஹீரோவாக இருக்கும். அந்த காட்சியை பார்க்கும் உங்களுக்கு ஹீரோவே அவ்வளவு உயரத்தில் இருந்து குதித்தது போல தோன்றும்.
நிஜத்தில் கமல்ஹாசன் கடவுள்தான்
நடிகர் கமல்ஹாசனுடன் சண்டை காட்சி ஒன்றில் ஸ்டண்ட் மாஸ்டர் குன்றத்தூர் பாபு
இதில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் போன்ற ஒரு சில ஹீரோக்கள் மட்டும் விதிவிலக்கு. ரஜினிகாந்திற்காக ஸ்டண்ட் இயக்குநர் ஒரு சண்டை காட்சியை படமாக்க மிகவும் யோசித்து வைத்திருக்கும் வேளையில், அவரோ டூப்பை எதிர்பார்க்காமல் மிக சாதாரணமாக வந்து அவரது ஸ்டைலில் நடித்துவிட்டு போய்விடுவார். இவர் இப்படி என்றால், உலக நாயகன் கமல்ஹாசனோ தொலைநோக்கு பார்வை உடையவர். சண்டை காட்சி என்றில்லாமல் எப்படிப்பட்ட காட்சி எடுக்கப்பட்டாலும் கேமரா எங்கே இருக்கிறது? லைட் செட்டப் எப்படி போடப்பட்டிருக்கிறது? என்று யூனிட்டில் ஒட்டுமொத்த டெக்னிக்கல் விஷயங்களையும் தெரிந்துகொண்ட பிறகுதான் நடிக்கத் தொடங்குவார். அவரை ஆழ்வார்பேட்டை ஆண்டவா என்றுதான் சொல்லுகிறார்கள். ஆனால், உண்மையிலேயே அவர் எங்களைப்போன்ற ஸ்டண்ட் கலைஞர்களுக்கு கடவுள்தான். 1984 ஆம் ஆண்டு எஸ். பி. முத்துராமன் இயக்கத்தில் வெளிவந்த ‘எனக்குள் ஒருவன்’ திரைப்படத்தில் பணியாற்றியபோது படத்தின் இறுதியில் வரும் சண்டை காட்சியை படமாக்குவதற்காக டார்ஜிலிங் சென்றிருந்தபோது அங்கு கமல் சார் போக்குவரத்து நெரிசலில் சிக்கிக்கொண்டு ஷூட்டிங் வர தாமதமாகிவிட்டது. அப்போது ஒரு சண்டை காட்சி படமாக்கப்பட வேண்டும். ஆனால், கமல் சாருக்கு அவர் அருகில் இல்லாமல், எப்படியான சண்டை காட்சி என்பது தெரியாமல் டூப்பை வைத்து எடுக்க ஒத்துக்கொள்ளமாட்டார். காரணம் ரிஸ்க்கான காட்சியாக இருந்தால் நாமே இறங்கி செய்துவிடலாம் என்பது அவரது எண்ணம். அதனால்தான் அவர் எங்களை போன்று அங்கங்கு அடிபட்டு காயத்தழும்புகளுடன் சுற்றிக்கொண்டு இருக்கிறார். ஒருவழியாக படப்பிடிப்பு தளத்திற்கு வந்து சேர்ந்தவர் எடுக்க இருந்த சண்டை காட்சி மிகவும் கடினமானது என்பது தெரிந்தவுடன் டூப்பாக இறங்கியவரை காப்பாற்றியது மட்டுமின்றி அவரே களத்தில் இறங்கி அந்த தேயிலைத்தோட்டத்தில் சத்யராஜ் ரோப் கார் போன்றதில் தப்பித்துச் செல்லும்பொழுது கமல் ஓடிச்சென்று வேகமாக ஒரு கயிறு போன்ற துணியை எடுத்து தொங்கவிட்டு 15 கிலோமீட்டர் தூரத்திற்கு சென்று அந்த ரிஸ்க்கான காட்சியில் நடித்து முடித்தார். கிட்டத்தட்ட அந்த காட்சியில் 7 மணிநேரம் தொங்கியபடியே நடித்தார்.
திரைப்படம் ஒன்றில் கையில் குழந்தையுடன் கோபமாக காட்சியளிக்கும் குன்றத்தூர் பாபு
இவர்களை போன்றுதான் நடிகர் விஜயகாந்த் சாரும். மிகவும் நல்ல மனிதர். அவரிடம் நிறைய நல்ல குணங்கள் இருக்கிறது. குறிப்பாக எங்களைப்போன்ற ஸ்டண்ட் கலைஞர்களை மிகவும் நேசிப்பார். அவர் வீட்டிற்கு கார் வைத்து எங்களை எல்லாம் அழைத்துச்சென்று சாப்பாடு பரிமாறுவார். 1984-ஆம் ஆண்டு ராமநாராயணன் இயக்கத்தில் விஜயகாந்த் நடிப்பில் வெளிவந்த ‘மாமன் மச்சான்’ படத்தில்தான் நான் முதல் முதலில் அவருடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பை பெற்றேன். அப்படத்தில்தான் சூப்பர் சுப்புராயன் மாஸ்டரிடமும் நான் உதவியாளராக சேர்ந்தேன். அன்றில் இருந்து தொடர்ந்து விஜயகாந்த் சாருடன் நிறைய படங்களில் தொடர்ந்து பயணித்தேன். அவர் சுவர் மீது ஏறி சுழற்றி சுழற்றி அடிக்கும் காட்சிகளில் நடிக்கும் போதெல்லாம் அவருக்கு பக்கபலமாக நான்தான் இருப்பேன். என்னை பிடித்து ஏறித்தான் அந்த காட்சிகளில் எல்லாம் நடிப்பார். அப்படிப்பட்டவர்தான் ஏதாவது பிரச்சினையில் படப்பிடிப்பு நடக்காமல் ஒன்றிரண்டு மாதங்கள் வேலையில்லாமல் நாங்கள் இருந்தால்கூட எங்களுக்கு நேரத்திற்கு சாப்பாடு கிடைக்க வழி செய்துவிடுவார். அவரை போன்று இனி யாரும் கிடைக்க மாட்டார்கள். இப்படியான மனிதர்களுடன் நான் பணியாற்றியது கடவுள் எனக்கு கொடுத்த வரமாக பார்க்கிறேன்.