தனுஷ் படத்தில் ஒரு பாடலுக்கு ஆட்டம் போட்ட பிரியங்கா மோகன்! - வரிசைகட்டும் வாய்ப்புகள்!

‘கேப்டன் மில்லர்’ படத்தில் பிரியங்காவுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தநிலையில், தனுஷ் தன்னுடைய படத்தில் ஒரு பாடலுக்கு ஆடச்சொல்லி கேட்டதாவும், தனுஷே கேட்கும்போது நோ சொல்ல முடியவில்லை என்றும் கூறியிருக்கிறார் பிரியங்கா.

Update:2024-09-03 00:00 IST
Click the Play button to listen to article

தமிழ் சினிமாவில் புதுமுகங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துவருகிறது. பெரிய பெரிய ஸ்டார்களுக்கு ஏற்ப மாஸான கதைகள் ஒருபுறம் எடுக்கப்பட்டாலும் எளிய பட்ஜெட்டில் வித்தியாசமான கதைகளை படங்களாக்கும் புதுமுக இயக்குநர்களுக்கும், நடிகர்களுக்கும் இப்போது நிறைய வாய்ப்புகள் கிடைக்கின்றன. அந்த வரிசையில் ஹீரோயினாக அறிமுகமாகி ஒருசில படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் ‘மெழுகு டால்’ என கொண்டாடும் அளவிற்கு ரசிகர்களை பெற்றிருக்கிறார் பிரியங்கா மோகன். தமிழ் மற்றும் தெலுங்கில் இப்போது அடுத்தடுத்த படங்களில் நடித்துவரும் இவர்மீது, இன்றைய இளைஞர்கள் நிறையப்பேருக்கு க்ரஷ் இருப்பதை சமூக ஊடகங்கள் வாயிலாக பார்க்கமுடிகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு நானியுடன் இவர் ஜோடி சேர்ந்திருக்கும் ‘சூர்யா’ஸ் சாட்டர்டே’ திரைப்படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் எஸ்.ஜே. சூர்யாவுடன் சேர்ந்து பிரியங்கா மோகன் கொடுத்துவரும் பேட்டிகள்தான் இப்போது எல்லா ஊடகங்களிலும் ட்ரெண்டாகி வருகின்றன. பிரியங்கா மோகனுக்கு ரசிகர்கள் கொடுக்கும் வரவேற்பு எப்படியிருக்கிறது என்று பார்க்கலாம்.

டாப் ஹீரோக்களுக்கு ஜோடி!

பெங்களூருவில் பிறந்து வளர்ந்த பிரியங்கா அருள் மோகன், கல்லூரிவரை அங்குதான் பயின்றார். அப்பா தமிழ், அம்மா கன்னட மொழி பேசக்கூடியவர் என்பதாலேயே பல மொழிகளை சிறுவயதிலிருந்தே சரளமாக பேசக்கூடியவர். கல்லூரி படிப்பை முடித்துவிட்டு வேலையில் சேர்ந்த சில நாட்களிலேயே சினிமா வாய்ப்பு கிடைத்ததால் திரைத்துறைக்குள் நுழைந்துவிட்டார். முதலில் கன்னட படத்தில் கதாநாயகியாக அறிமுகமான இவருக்கு அடுத்த வாய்ப்பே தெலுங்கில் கிடைத்தது. 2019ஆம் ஆண்டு நானிக்கு ஜோடியாக ‘நானி’ஸ் கேங் லீடர்’ என்ற திரைப்படத்தில் நடித்தார். அந்த படம் கலவையான விமர்சனங்களையே பெற்றிருந்தாலும் ஓரிரு தெலுங்கு படங்களுக்குப் பிறகு அடுத்து தமிழ் பட வாய்ப்பு கிடைத்தது. சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடித்த ‘டாக்டர்’ படத்தின்மூலம் தமிழ்த்திரையில் அறிமுகமானார். முதல் படமே ப்ளாக்பஸ்டர் படமாக அமைந்ததால் தமிழ், தெலுங்கு என மாறி மாறி வாய்ப்புகள் இவரை தேடிவந்தன. பிரியங்காவை இந்த படத்திற்கு தேர்ந்தெடுத்தது குறித்து சிவகார்த்திகேயன் ஒரு நேர்காணலில் பகிர்ந்திருந்தார்.


தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம்வரும் பிரியங்கா மோகன்

அதில், “டாக்டர் படத்திற்கான அனைத்து கதாபாத்திரங்களையும் தேர்வு செய்தபிறகும், கதாநாயகி மட்டும் கிடைக்கவில்லை. நான் நிறைய நேரத்தை எக்ஸ் தளத்தில்தான் செலவிடுவேன். அப்படி ஒருநாள் பார்த்துக்கொண்டிருக்கையில் பிரியங்கா மோகனின் புகைப்படத்தை பார்த்து அவரை விசாரிக்கும்படி இயக்குநர் நெல்சனிடம் கூறினேன். அவரும் பிரியங்காவை நேரில் அழைத்து டெஸ்ட் வைத்துதான் செலக்ட் செய்தார்” என்று கூறியிருந்தார். கோலிவுட்டை பொருத்தவரை தமிழ் சரளமாக பேசும் நடிகைகள் மிகவும் குறைவு. ஆனால் முழுநீள காமெடிப் படமான டாக்டரில் நிறைய காமெடி வசனங்களை தனது சொந்த குரலிலேயே டப் செய்து அசத்தியிருக்கிறார் பிரியங்கா. அதனாலேயே அடுத்து சூர்யாவுக்கு ஜோடியாக ‘எதற்கும் துணிந்தவன்’ மற்றும் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ‘டான்’ ஆகிய படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. எந்தவிதமான கதாபாத்திரமாக இருந்தாலும் அசால்ட்டாக நடிக்கும் இவரை பத்திரிகைகளும் ஊடகங்களும் புகழந்ததுடன், ஏகப்பட்ட ரசிகர்களையும் ஓரிரு படங்களிலேயே சம்பாதித்தார். குறிப்பாக, சிவகார்த்திகேயனுடன் இவர் ஆடிய ‘மெழுகு டால்’ பாடலை பார்த்த பலரும் உண்மையிலேயே இவர் பொம்மைபோன்றுதான் இருக்கிறார் என்று வெகுவாக புகழ்ந்தனர். அதனையடுத்து தனுஷுடன் ‘கேப்டன் மில்லர்’ படத்தில் ஒரு சீரியஸான கதாபாத்திரத்தில் நடித்தார். பீரியட் ஃபில்மில் நடிக்கவேண்டுமென்ற தனது நீண்டநாள் கனவு நிறைவேறியதாக பிரியங்கா அப்படம் குறித்து நிறையப் பேட்டிகளில் கூறியிருக்கிறார். தொடர்ந்து தமிழிலேயே தலைகாட்டிவந்த பிரியங்கா, கிட்டத்தட்ட 2 வருடங்களுக்கு பிறகு மீண்டும் தெலுங்கில் ‘சரிபோதா சனிவாரம்’ என்ற படத்தில் நானியுடன் ஜோடி சேர்ந்திருக்கிறார். இப்படம் தமிழிலும் ‘சூர்யா’ஸ் சாட்டர்டே’ என்ற பெயரில் ரிலீஸாகி இருக்கிறது.


எஸ்.ஜே. சூர்யாவிடம் ‘குஷி’ படத்தின் அடுத்த பாகம் குறித்து அப்டேட் கேட்ட பிரியங்கா

தமிழ் ரசிகர்களின் கோபத்திற்கு ஆளாகிய பிரியங்கா

தெலுங்கு, தமிழ், இந்தி, கன்னடம் மற்றும் மலையாளம் என பான் இந்தியா திரைப்படமாக வெளியாகி இருக்கும் ‘சூர்யா’ஸ் சாட்டர்டே’ திரைப்படத்தில் எஸ்.ஜே. சூர்யாவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பதால் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகள் தெலுங்குக்கு இணையாக தமிழிலும் நடத்தப்பட்டன. அப்போது படம் குறித்தும், ஒவ்வொருவரின் கதாபாத்திரம் குறித்தும் அனைவரும் மாறி மாறி பேசியவைதான் தற்போது சமூக ஊடகங்களில் சுழன்று கொண்டிருக்கின்றன. அப்படி ஒரு புரமோஷன் நிகழ்ச்சியில் பேசிய பிரியங்கா, தான் ‘குஷி’ படத்தின் பெரிய ரசிகை என்று கூறினார். மேலும் இப்படத்தின் இரண்டாம் பாகத்தை எப்போது இயக்கப்போகிறீர்கள்? என எஸ்.ஜே. சூர்யாவிடம் கேள்வி எழுப்பியதுடன், படத்தில் ஹீரோவாக தெலுங்கு ஸ்டார் பவன் கல்யாணை வைத்து இயக்குமாறு கேட்டுக்கொண்டார். தமிழில் நிறைய ஹீரோக்கள் இருக்கும்போது ஏன் பிரியங்கா, பவன் கல்யாணை பரிந்துரைக்க வேண்டும்? என்பதுதான் இப்போது ரசிகர்களின் கேள்வி. ஏனென்றால் இப்படம் முதலில் விஜய் - ஜோதிகா நடிப்பில் தமிழில்தான் உருவானது. அப்படத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றி மற்றும் வரவேற்பால்தான் தெலுங்கு மற்றும் இந்தியில் இயக்கப்பட்டது. தெலுங்கில் பவன் கல்யாண் மற்றும் பூமிகா நடித்திருப்பார்கள். பிரியங்காவுக்கு தெலுங்கைவிட தமிழில்தான் ரசிகர்கள் அதிகம் இருக்கின்றனர். இந்நிலையில் அவர் இப்படி கூறியது சரியா? என கேட்பதுடன், தமிழ் ரசிகர்களின் ஆதரவை பிரியங்கா இழக்கப்போகிறார் எனவும் பேசிவருகின்றனர். எப்படியாயினும் ஆகஸ்ட் 29ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகியிருக்கு இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது.

தனுஷ் படத்தில் ஒரு பாடலுக்கு ஆட்டம்!

இந்நிலையில் சமந்தா, தமன்னா போன்ற பல முன்னணி நடிகைகளைத் தொடர்ந்து தனுஷின் ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ திரைப்படத்தில் இடம்பெறும் ‘கோல்டன் ஸ்பேரோ’ என்ற பாடலுக்கு கேமியோ நடனம் ஆடியிருக்கிறார் பிரியங்கா மோகன். இப்பாடலில் இளம் மாமியாக கூலிங் க்ளாஸ் அணிந்துகொண்டு ஸ்டைலாக ஆடியிருக்கும் பிரியங்கா, அனைவரின் கவனத்தையும் தன்பக்கம் திருப்பியிருக்கிறார். படத்தின் முதல் சிங்கிளாக ஆகஸ்ட் 30ஆம் தேதி வெளியான இப்பாடலில் பிரியங்காவின் நடனம் அனைவரையும் கவர்ந்துவருகிறது. ‘கேப்டன் மில்லர்’ படத்தில் பிரியங்காவுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தநிலையில், தனுஷ் தன்னுடைய படத்தில் ஒரு பாடலுக்கு ஆடச்சொல்லி கேட்டதாவும், தனுஷே கேட்கும்போது நோ சொல்ல முடியவில்லை என்றும் கூறியிருக்கிறார் பிரியங்கா. பாடல் வெளியாவதற்கு முன்பே தனுஷ் தனக்கு இப்பாடலின் வீடியோவை காட்டியதாக நடிகர் எஸ்.ஜே. சூர்யா தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். அந்த பதிவில், “தனுஷ் இயக்கத்தில் பிரியங்கா மோகன் ஆடியிருக்கும் பாடலை பார்க்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. இயக்குநர் தனுஷ், பிரியங்கா மோகனை சிறப்பாக நடனமாட வைத்திருக்கிறார். கியூட்டான, அழகான இளம் மாமியாக, மிக எளிமையான ஸ்டைலான நடனத்தை பிரியங்காவும் சூப்பராக ஆடியிருக்கிறார். இந்த பாடலை தனுஷின் மகன் யாத்ரா எழுதியிருக்கிறார்” என்று குறிப்பிட்டிருந்தார். அதனாலேயே பாடலின்மீதான எதிர்பார்ப்பு மிகவும் அதிகமாகவே இருந்தது.


தனுஷ் இயக்கும் படத்தில் ஒரு பாடலுக்கு பிரியங்காவின் கேமியோ நடனம்

குறிப்பாக, ‘என்னாத்த சொல்வேணுங்கோ’ பாடலில் இருந்த அசினைப் போன்றே பிரியங்காவும் இருப்பதாக கூறிவருகின்றனர். பாடலும் ரசிகர்களை மிகவும் கவர்ந்துவருகிறது. இப்பாடலால் அப்பாவைப் போன்றே மகனும் சினிமாத்துறைக்குள் நுழைகிறார் என யாத்ரா குறித்து பேசிவருவதுடன், சீக்கிரத்தில் அவரை ஹீரோவாகவும் பார்க்கலாம் என்றும் கூறிவருகின்றனர். தனுஷ் தனது அக்காவின் மகன் பவிஷை ஹீரோவாக வைத்து இயக்கியிருக்கும் இப்படத்தில் மேத்யூ தாமஸ், அனிகா சுரேந்திரன் உள்ளிட்ட மிக இளம் நடிகர்கள் நடித்திருக்கின்றனர். வொண்டர்பார் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ்குமார் இசையமைத்திருக்கிறார்.

நகைச்சுவை காதல் படமான இப்படம் இன்றைய தலைமுறையினரை பெரிதும் ஈர்க்கும் என்று சொல்லப்படுகிறது. இப்படித்தான் நயன்தாராவும் திரைத்துறையில் அறிமுகமான ஓரிரு ஆண்டுகளிலேயே பெரிய ஸ்டார்களின் படங்களில் ‘கோடம்பாக்கம் ஏரியா’ மற்றும் ‘பல்லேலக்கா’ போன்று ஒரு பாடலுக்கு ஆடி அசத்தினார். அதன்பிறகு அவருக்கு தொடர்ந்து ஏறுமுகம்தான். அதுபோலவே பிரியங்காவின் இந்த பாடலும், படவாய்ப்புகளுக்கு தொடக்கப்புள்ளியாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்தடுத்து ‘டே கால் ஹிம் ஓ.ஜி’, ‘பிரதர்’ என தெலுங்கு மற்றும் தமிழ் படங்களில் நடித்துவரும் பிரியங்கா விரைவில் பாலிவுட்டில் இறங்கவுள்ளதாக பேச்சுகள் அடிபட்டு வருகின்றன. 

Tags:    

மேலும் செய்திகள்