சிறப்பு காட்சிகளுக்கான அனுமதி பெற்று வெற்றிகரமாக ஓடும் தீபாவளி திரைப்படங்கள்...

தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 10ஆம் தேதி வெளியாகவிருக்கும் ‘ஜப்பான்’ மற்றும் ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ திரைப்படங்கள், திரையரங்குகளில் சிறப்பு காட்சிகளை வெளியிடுவதற்கான அனுமதியை பெற்றிருக்கிறது.

Update:2023-11-10 17:56 IST

தீபாவளியை முன்னிட்டு திரையரங்குகளில் இன்று வெளியாகியிருக்கும் ‘ஜப்பான்’ மற்றும் ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ ஆகிய திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 

ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஏதேனும் புதிய திரைப்படங்கள் வெளிவருவது வழக்கமான நிகழ்வுகள்தான். ஆனால், இந்த தீபாவளிக்கு ஒரே நாளில் 3 திரைப்படங்கள் ஒன்றுக்கொன்று மோதுகிறது. 2014 ஆம் ஆண்டு நடிகர் சித்தார்த், பாபி சிம்ஹா, லட்சுமி மேனன், கருணாகரன், நாசர், விஜய் சேதுபதி ஆகியோரின் மாறுபட்ட நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் எஸ்.கார்த்திகேயன் தயாரிப்பில் சந்தோஷ் நாராயணன் இசையில் வெளிவந்த ஜிகர்தண்டா திரைப்படத்தின் ஒன்றாம் பாகத்தை தொடர்ந்து, 9 வருடங்கள் கழித்து ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே சூர்யா, நிமிஷா சஜயன் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ஸ்டோன் பெஞ்ச் தயாரிப்பில் சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில் ஜிகர்தண்டா 2 ஆம் பாகம் (ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்) திரைப்படம் இன்று வெளியிடப்பட்டிருக்கிறது. அதேபோல் கார்த்திக், கே.எஸ்.ரவிக்குமார், ஜித்தன் ரமேஷ் ஆகியோரின் நடிப்பில் ராஜு முருகன் இயக்கத்தில் ட்ரீம் வாரியர் தயாரிப்பில் ஜி.வி.பிரகாஷ் இசையமைப்பில் ‘ஜப்பான்’ திரைப்படமும், விக்ரம் பிரபு, ஸ்ரீதிவ்யா, அனந்திகா, ரிஷி ரித்விக், டேனியல் ஆகியோரின் நடிப்பில் இயக்குனர் கார்த்தி இயக்கத்தில் எஸ்.கே.கனிஷ்க் மற்றும் ஜி.மணிகண்ணன் தயாரிப்பில் சாம் சி.எஸ் இசையில் ‘ரெய்டு’ திரைப்படமும் வெளியாகிவுள்ளது. 


இதில் இன்று வெளியாகியுள்ள ‘ஜப்பான்’ மற்றும் ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ ஆகிய திரைப்படங்களுக்கு மட்டும் தமிழக அரசு சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி அளித்துள்ளது. சமீபத்தில் கூட தளபதி விஜய் நடிப்பில் வெளியான ‘லியோ’ திரைப்படத்திற்கு சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி வழங்கியதை ஒட்டி ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஸ்டோன் பெஞ்ச் தரப்பில் இன்று  முதல் 20ஆம் தேதி வரை சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி வழங்க வேண்டும் என்று தமிழக அரசிடம் கோரிக்கை விடுத்திருந்தது. இந்த கோரிக்கையை ஏற்ற தமிழக அரசு இன்று முதல் 15 ஆம் தேதி வரை ஒரு நாளைக்கு 5 காட்சிகள் என 6 நாட்களுக்கு மட்டும் சிறப்பு காட்சிகள் திரையிட அனுமதி வழங்கியுள்ளது. மேலும் அந்த அறிவிப்பில் சிறப்பு காட்சியை நாள்தோறும் காலை 9.00 மணி முதல் 1.30 மணிக்குள் திரையிட வேண்டும் என்றும் கூறியிருக்கிறது.

இன்று வெளியான இந்த மூன்று திரைப்படமும் ரசிகர்களிடமிருந்து நல்ல கருத்துக்களை பெற்று வருகிறது. குறிப்பாக 'ஜிகர்தண்டா' இரண்டாம் பாகம் தான் அதிகப்படியான ரசிகர்களால் பார்க்கப்படும் படமாகவும், நல்ல விமர்சனத்தை பெற்ற படமாகவும் இருந்து வருகிறது. முதல் நாளில் இப்படி இருந்தாலும் வரப்போகும் நாட்களில் எந்த படம் நல்ல வரவேற்பை காண போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Tags:    

மேலும் செய்திகள்