ரூட்டை மாற்றி வெற்றிக்கனி பறித்த பவன் கல்யாண் - சினிமா டு அரசியல் ஒரு பயணம்

தெலுங்கு திரையுலகில் குறைந்த அளவிலான படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும், தன் படங்களில் ஆக்சன் காட்சிகளாலும், அனல் பறக்கும் அதிரடியான வசனங்களாலும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து அதற்காகவே பவர் ஸ்டார் என்ற பட்டத்தை வென்றவர்தான் பவன் கல்யாண்.

Update:2024-06-11 00:00 IST
Click the Play button to listen to article

ஒரு நடிகர் ஒன்றிரண்டு படங்களில் நடித்து மாஸ் ஹிட் வெற்றியை கொடுத்துவிட்டாலே ரசிகர்கள் அவரின் பெயருக்கு பின்னால் ஒரு பட்டத்தினை வழங்கி அதையே அவரின் அடையாளமாக மாற்றிவிடுவார்கள். இந்த மாதிரியான நிகழ்வு தமிழ் சினிமாவை விட, தெலுங்கு திரையுலகில் அதிகம். அந்த வகையில், தெலுங்கு திரையுலகில் குறைந்த அளவிலான படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும், தன் படங்களில் ஆக்சன் காட்சிகளாலும், அனல் பறக்கும் அதிரடியான வசனங்களாலும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து அதற்காகவே பவர் ஸ்டார் என்ற பட்டத்தை வென்றவர்தான் பவன் கல்யாண். பவர் ஸ்டார் பவன் கல்யாண் என்ற இந்த வார்த்தைக்கு தெலுங்கு திரையுலக ரசிகர்கள் முன்னிலையில் அவ்வளவு வலிமை இருக்கிறது. இவருக்கு கிடைத்திருக்கும் ரசிகர்களை, வெறுமனே ரசிகர்கள் என்று சொல்வதை விட பக்தர்கள், வெறியர்கள் என்று சொன்னால்தான் சரியாக இருக்கும். அந்த அளவுக்கு தெலுங்கு ரசிகர்களால் கொண்டாடி தீர்க்கப்படும் பவன் கல்யாண், தெலுங்கு திரையுலகில் தன் பவரை காட்டி சாதித்தது போலவே, தற்போது அரசியலிலும் சாதித்து காட்டியுள்ளார். தமிழ் சினிமாவில் என்றுமே மறக்க முடியாத நாயகனாக, அரசியலில் எதிர்க்கட்சி தலைவராக இருந்து விட்டுசென்ற மறைந்த நடிகர் விஜயகாந்தை போன்றே, தெலுங்கு திரையுலகில் சாதாரணமாக ஒரு நடிகராக நுழைந்த பவன் கல்யாண், இன்று ஆந்திர அரசியலில் ஒரு எதிர்க்கட்சி தலைவராக முதல் முறையாக சட்ட பேரவைக்குள் என்ட்ரி கொடுக்கவுள்ளார். எப்படியான போராட்டங்களை கடந்து இந்த இடத்தை பவர் ஸ்டார் பவன் கல்யாண் அடைந்துள்ளார்? அவரின் பின்னணி என்ன? போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களை இந்த கட்டுரையில் காணலாம்.

பவன் கல்யாணின் துவக்க காலமும்.. சினிமா பிரவேசமும்..


படப்பிடிப்பு தளம் ஒன்றில் அண்ணன் சிரஞ்சீவியுடன் நடிகர் பவன் கல்யாண் 

தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியின் தம்பி என்ற அடையாளத்துடன் திரையுலகில் காலடி எடுத்துவைத்த பவன் கல்யாண், கொனிடெலா வெங்கடராவ் - அஞ்சனா தேவி தம்பதியருக்கு இளைய மகனாக, ஆந்திர மாநிலம் பாபட்லாவில் 1971 ஆம் ஆண்டு செப்டம்பர் 2 ஆம் தேதி பிறந்தார். இவருடன் பிறந்தது சிரஞ்சீவி, நாகேந்திர பாபு என்ற மூத்த அண்ணன்களும், விஜய துர்கா மற்றும் மாதவி என்ற சகோதரிகளும் ஆவர். கல்யாண் பாபு என்ற இயற்பெயர் கொண்ட இவர், இன்டர்மீடியட்டுடன் தனது படிப்பை முடித்துக்கொண்டு, பின்னர் தற்காப்புக் கலையில் ஆர்வம் கொண்டு அதில் பயிற்சி மேற்கொண்டார். இதற்கிடையில், பள்ளியில் படிக்கும்போதே கராத்தே போட்டியிலும் கலந்துகொண்டு பிளாக் பெல்டும் வாங்கியுள்ளார். இவரின் அண்ணன்களான சிரஞ்சீவி மற்றும் நாகேந்திர பாபு இருவரும் சினிமாவில் மிகப்பெரிய ஹீரோக்களாக வலம் வந்ததால், தானும் அவர்களைப்போன்று பெரிய ஹீரோவாக வர வேண்டும், திரைத்துறையில் பயணிக்க வேண்டும் என்று முடிவு செய்து அதற்கு தேவையான விஷயங்களில் கவனம் செலுத்த ஆரம்பித்தார். அப்படி சினிமாவில் ஹீரோவாக களம் இறங்குவதற்கு முன்பாகவே, அதற்கு தேவையான நடிப்பு, நடனம், சண்டை பயிற்சி, மார்ஷியல் ஆர்ட்ஸ் உள்ளிட்ட அனைத்து விஷயங்களையும் கற்றுக் கொண்டாராம். இப்படி எல்லா கலைகளையும் முழுமையாக கற்றுக்கொண்ட பிறகுதான் தெலுங்கு திரையுலகில் 1996-ஆம் ஆண்டு ‘அக்கட அம்மாயி இக்கட அப்பாயி’ என்ற படத்தின் மூலமாக ஹீரோவாக அறிமுகம் ஆனார். கல்யாண் பாபு என்ற தன் இயற்பெயரிலேயே அறிமுகமானவருக்கு இப்படம் ஓரளவு கைகொடுக்க, அடுத்த ஆண்டே முத்தியாலா சுப்பையா என்பவரது இயக்கத்தில் ‘கோகுலம்லோ சீதா’ என்ற படத்தில் நடித்தார். தமிழில் நவரச நாயகன் கார்த்திக் நடித்து 1995-ஆம் ஆண்டு வெளிவந்த ‘கோகுலத்தில் சீதை’ படத்தின் ரீமேக்காக வெளிவந்த இப்படமும் பவன் கல்யாணுக்கு கைகொடுத்தது. இந்த படத்தில் இருந்துதான் கல்யாண் பாபு என்றிருந்த தனது பெயரை பவன் கல்யாண் என மாற்றினார்.


தெலுங்கு 'குஷி' திரைப்பட காட்சி ஒன்றில் பூமிகாவுடன் நடிகர் பவன் கல்யாண் 

இதனை தொடர்ந்து, ‘சுஸ்வாகதம்’, ‘தோழி பிரேமா’, ‘தம்முடு’, ‘பத்ரி’, ‘குஷி’, ‘ஜானி’, ‘குடும்ப சங்கர்’ என வரிசையாக வருடத்திற்கு ஒரு படம் வீதம் நடித்தாலும், பவன் கல்யாண் நடித்த அத்தனை படங்களுமே சூப்பர் ஹிட் படங்களாக மட்டுமின்றி வசூல் ரீதியாகவும் அப்போதே பாக்ஸ் ஆபிஸில் பட்டையை கிளப்பிய படங்களாகவும் அமைந்தன. இதில் 1998-ஆம் ஆண்டு வெளிவந்த ‘தோழி பிரேமா’ திரைப்படம் தேசிய விருது, நந்தி விருது என பல விருதுகளை அள்ளிக்குவித்த படமாக பவன் கல்யாணுக்கு அமைந்தது. இதுதவிர, 1999-ஆம் ஆண்டு வெளிவந்த ‘தம்முடு’ திரைப்படம் பிளாக் பஸ்டர் வெற்றிப்படமாக அமைந்து பவன் கல்யாண் என்ற நடிகரை புகழின் உச்சத்திற்கு கொண்டு சென்றது. பவன் கல்யாண் நடித்து வெற்றிப்பெற்ற இந்த படத்தினைத்தான் தமிழில் நடிகர் விஜய் ‘பத்ரி’ என்ற பெயரில் ரீமேக் செய்து நடித்திருந்தார். அதேபோன்று விஜய் நடித்திருந்த ‘குஷி’ படத்தை எஸ்.ஜே.சூர்யா தெலுங்கில் எடுத்தபோது அப்படத்தில் பவன் கல்யாண்தான் ஹீரோ. தமிழில் வெற்றி பெற்றது போலவே, தெலுங்கிலும் இப்படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடிக்க, பவன் கல்யாணை தெலுங்கு திரையுலக ரசிகர்கள் உச்சத்தில் வைத்து கொண்டாட ஆரம்பித்தனர். அதிலும் அதுவரை சிரஞ்சீவியின் தம்பி என்று பவனை அழைத்துவந்த அனைவரும் பவனின் அண்ணன் சிரஞ்சீவி என்று சொல்லும் அளவுக்கு தன் நிலையை மாற்றினார். மேலும் இப்படத்திற்கு கிடைத்த வெற்றியால் விருதுகள் மட்டுமின்றி இவருக்கென்று வெறித்தனமான ரசிகர்களும், ரசிகர் மன்றங்களும் உருவாகி பவர் ஸ்டராக வலம் வர ஆரம்பித்தார். இந்த நேரம் பல தொலைக்காட்சி விளம்பர நிறுவனங்கள் தங்களுடைய பிராண்டுகளின் ஒப்புதலுக்காக அவரைத் தொடர்பு கொள்ளத் தொடங்க அதன்படி 2001 ஆம் ஆண்டில் அவர் "பெப்சி" பிராண்ட் தூதராகவும் இருந்தார். இதனை தொடர்ந்து நடிகராக மட்டுமே அதுவரை பார்க்கப்பட்ட பவன் 2003-ஆம் ஆண்டு ‘ஜானி’ என்ற படத்தை இயக்கி இயக்குநராகவும் களம் கண்டார்.

ரசிகர்கள் கொண்டாடிய பவர் ஸ்டார்


ஸ்டைலான போஸில் நடிகர் பவன் கல்யாண் 

நட்சத்திர நடிகர்கள் எப்போதும் வெற்றி படங்களை மட்டுமே கொடுக்க மாட்டார்கள். சில நேரங்களில் தோல்வி படங்களையும் கொடுப்பார்கள். அப்படி தோல்வி படங்களாகவே இருந்தாலும் அவர்களின் ரசிகர்கள் அதை தோல்விப் படம் என ஒத்துக்கொள்ள மாட்டார்கள். அப்படி பவன் ‘குஷி’ படத்தின் வெற்றிக்குப் பிறகு தொடர்ந்து ‘சங்கர் தாதா எம்.பி.பி.எஸ்’, ‘பாலு’, ‘பங்காரம்’, ‘அன்னவரம்’, ‘ஜல்சா’, ‘புலி’ என வரிசையாக நடித்துவந்த நேரத்தில் ‘ஜல்சா’ படத்தை தவிர மற்ற படங்கள் அனைத்துமே சுமாரான படங்கள் என்ற அளவிலேயே இருந்தன. அப்படியான நேரங்களில், பவன் கல்யாணே இந்த படம் எதிர்பார்த்த வெற்றி பெறவில்லை. தோல்வியை சந்தித்து விட்டது என்று கூறினாலும், அவரின் ரசிகர்கள் ஐய்யோ வாயில போட்டுக்கோங்க.. அப்படியெல்லாம் சொல்லாதீங்க.. படம் பிளாக் பஸ்டர் வெற்றி என்று சொல்லுங்கள் எனக் கூறி அவரை பாசிட்டிவ் மனநிலையில் வைத்துக்கொள்வதோடு, அவர் மகிழ்ச்சியடையும் வகையில் படத்தை ஓட வைத்து வெற்றி பெறவும் வைத்துவிடுவார்களாம். அந்த அளவுக்கு வெறித்தனமான ரசிகர்கர்களை அவர் கொண்டிருந்ததால், இயக்குநர்களும், தயாரிப்பாளர்களும் அவரை வைத்து, விடாமல் படங்களை தொடர்ந்து கொடுக்க ஆரம்பித்தனர். அப்படி ஹிந்தியில் சல்மான்கான் நடித்து வெற்றிபெற்ற படமான ‘தபாங்’ படத்தை தெலுங்கில் ‘கப்பர் சிங்’ என்ற பெயரில் ரீமேக் செய்து எடுத்த போது அதில் பவன் கல்யாண் நடித்தார். இப்படம் சூப்பர் டூப்பர் ஹிட் படமாக அமைந்தது. பிறகு ‘அட்டாரிண்டிகி தாரேதி’, ‘கோபாலா கோபாலா’,‘சர்தார் கப்பர் சிங்’, ‘வக்கீல் சாப்’ போன்ற படங்களில் தொடர்ந்து நடித்தவர் தன் ரசிகர்களுக்காக இன்றும் நடித்துக்கொண்டு இருக்கிறார்.

வசூல் சக்கரவர்த்தி கட்சி தொடங்கியது ஏன்?


அரசியல்வாதியாக பவன் கல்யாண் மாறிய தருணம் 

நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர், திரைக்கதை எழுத்தாளர், ஸ்டண்ட் கலைஞர், நடன இயக்குநர் என பன்முகத் திறமையாளராக மட்டுமின்றி வசூல் சக்ரவர்த்தியாகவும் எப்போதும் தெலுங்கு சினிமாவில் உச்சத்தில் இருக்கும் பவன் கல்யாண், திரைப்படங்களில் தன்னை கொண்டாடிய ரசிகர்கள், தன்னுடைய அரசியல் பயணத்திலும் கூடவே இருப்பார்கள் என்ற நம்பிக்கையில் தன் அண்ணனான சிரஞ்சீவியை பின்பற்றி அரசியல் களத்திலும் குதித்தார். அண்ணன் சிரஞ்சீவி பிரஜா ராஜ்ஜியம் என்ற கட்சியை தொடங்கிய போது, அக்கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டு இளைஞரணித் தலைவராக பதவி வகித்தார் பவன் கல்யாண். ஆனால் அவரது அண்ணன் சிரஞ்சீவி, ஆந்திர அரசியல் களத்தில் ஈடுகொடுக்க முடியாமல் கட்சியை பாதியிலேயே கலைத்துவிட்டு காங்கிரசுடன் இணைத்துவிட, பவன், அண்ணனின் இந்த முடிவுக்கு அமைதியாக அதிருப்தி தெரிவித்துவிட்டு அரசியல் களத்தில் இருந்து ஒதுங்கினார். பின்னர் 2014-ஆம் ஆண்டு ஜன சேனா என்ற கட்சியை தொடங்கி தேர்தல் களத்தை சந்திக்க தயாரானார். அப்போது பலரும் அண்ணனை போன்று தோற்று அவரே ஓடிப்போய்விடுவார் என்று விமர்சனங்களை முன்வைத்தனர். இருந்தும் ஒரு கை பார்த்துவிடுவோம் என்று 2019-ம் ஆண்டு ஆந்திர மக்களவை தேர்தலில் போட்டியிட்ட பவன் கல்யாண் விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள், பெண்கள், இளைஞர்கள் மற்றும் மாணவர்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கான பல திட்டங்களை அறிவித்து தேர்தலை சந்தித்தார். 140 தொகுதிகளில் தனித்து போட்டியிட்ட பவன் கல்யாணின் ஜன சேனா கட்சி, ரசோல் என்ற ஒரு இடத்தில் மட்டும் வெற்றி பெற்றது. இதனால் ஒட்டுமொத்த ஆந்திர அரசியல் வட்டாரமும் பவன் கல்யாணை பார்த்து அண்ணனை போன்று அரசியலுக்கு டாட்டா காண்பித்துவிட்டு போக வேண்டியதுதான் என்று கேலி செய்தது. இருந்தும் விமர்சனங்களை பொருட்படுத்தாது முன்பைவிட விவேகமாக செயல்பட்டு முழு மூச்சுடன் கட்சியை வளர்ப்பதில் தீவிரம் காட்ட ஆரம்பித்தார் பவன். இதற்கிடையில் படங்களில் நடிப்பதையும் விட்டுவிடாது ரசிகர்களுக்காக மாஸ் ஹிட் படங்களில் நடித்து அதிலும் வெற்றி கண்டு வந்தார்.

தொடர் தோல்வி… இருந்தும் அரசியலில் ராஜாவானது எப்படி?


கட்சி மேடையில் பவன் கல்யாண் பேசியபோது

திரையில் எப்போதும் மாஸாக காணப்பட்ட பவன், அரசியல் களத்தில் குதித்த பிறகு தொடர் தோல்விகளை சந்தித்தது அவரது ரசிகர்களுக்கே கொஞ்சம் வருத்தமாகத்தான் இருந்தது. இதனால் இந்த முறையும் நாம் சறுக்கி விடக்கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருந்த பவன் கல்யாண் எப்போதும் திரையில் மட்டுமல்ல, அரசியலிலும் தன்னுடைய பவர் என்ன என்பதை காண்பித்தே ஆக வேண்டும் என்று முனைப்போடு செயல்பட தொடங்கினார். அதன்படி, அண்மையில் ஆந்திராவில் நாடாளுமன்ற தேர்தலுடன் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பாஜக மற்றும் தெலுங்கு தேசம் கட்சியுடன் கூட்டணி அமைத்த பவன் கல்யாண் 21 தொகுதிகளில் போட்டியிட்டார். தான் போட்டியிட்ட 21 தொகுதிகளிலுமே ஆட்சியில் இருந்த ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் ஜெகன் மோகன் ரெட்டியின் கட்சியினரை தோற்கடித்து வெற்றி பெற்றது மட்டுமில்லாமல், தற்போது ஆந்திராவில் ஜன சேனா கட்சியை இரண்டாவது பெரிய கட்சியாக உருவாக்கி எதிர்க்கட்சி தலைவர் என்ற அந்தஸ்தை எட்டி பிடித்துள்ளார் பவன் கல்யாண். மேலும் இந்த கூட்டணி அமைய மூலகாரணமாக இருந்ததே பவன் கல்யாண்தான் என கூறப்பட்டு வரும் நிலையில், அண்ணன் சிரஞ்சீவியால் சாதிக்க முடியாததை தம்பி சாதித்து காட்டிவிட்டதாக பலரும் பாராட்டி வருகின்றனர். பவன் கல்யாணின் இந்த வெற்றிக்கு அவரின் உறவினர்களும், தெலுங்கு திரைத்துறையில் முன்னணி நடிகர்களாக வலம் வருபவர்களுமான அல்லு அர்ஜுன், ராம் சரண் தொடங்கி தெலுங்கு சூப்பர் ஸ்டார்களான சிரஞ்சீவி, நாகர்ஜூனா, ஜூனியர் என்.டி.ஆர்., நானி, நடிகை காஜல் அகர்வால் உள்ளிட்ட பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

அண்ணன் சிரஞ்சீவியின் நெகிழ்ச்சி நிறைந்த வாழ்த்து


நடிகர் சிரஞ்சீவி, தன் தம்பி கல்யாணை கட்டி பிடித்து முத்தம் கொடுத்து வாழ்த்திய தருணம் 

பவன் கல்யாணின் அதிரடியான அரசியல் வெற்றிக்கு அண்ணன் சிரஞ்சீவி தனது எக்ஸ் தள பக்கத்தில் நெகிழ்ச்சியான பதிவு ஒன்றை வெளியிட்டு தனது பாராட்டுகளை தெரிவித்துள்ளார். அதில் “இந்த தேர்தலின் உண்மையான கேம்சேஞ்சர் நீங்கள்தான். ஆந்திர மக்கள் உங்களுக்கு அளித்திருக்கும் வரவேற்பை கண்டு மகிழ்ச்சி அடைகிறேன். ஆந்திர மக்கள் மீதான உங்களின் ஆழ்ந்த அக்கறை, தொலைநோக்கு பார்வை, மாநிலத்தின் வளர்ச்சி குறித்த உங்கள் இதயப்பூர்வமான விருப்பம், உங்கள் தியாகங்கள், உங்களின் அரசியல் உத்திகள் ஆகியவை இந்த அற்புதமான முடிவில் வெளிப்பட்டுள்ளன. நான் உங்களை கண்டு மிகவும் பெருமைப்படுகிறேன்! மனமார்ந்த வாழ்த்துகள்!!! உங்களின் நேர்மையான முயற்சிகள் மற்றும் திறமையான ஆதரவுடன், மாநிலத்தை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்லவும், மக்களுக்கு சிறப்பாக சேவை செய்யவும் உதவுவீர்கள் என்று நான் நம்புகிறேன். எனது மனமார்ந்த வாழ்த்துகள்” என்று சிரஞ்சீவி கூறியுள்ளார். தனிப்பட்ட வாழ்க்கையில் மட்டுமின்றி திரைப்படங்களிலும் ஒருசில ஹீரோக்களை போன்று எப்போதும் பல விமர்சனங்களை பெரும் பவன் கல்யாண்,  அரசியல் களத்திலும் பல கேலிகளையும், விமர்சனங்களையும் சந்தித்தவர். அந்த விமர்சனங்களே இப்போது அவரை ஆந்திர அரசியலில் எதிர்க்கட்சி தலைவர்வரை கொண்டு வந்திருக்கின்றன. பல போராட்டங்களுக்கு பிறகு முதல் முறையாக சட்டமன்ற உறுப்பினர் என்ற அந்தஸ்தோடு நுழைய இருக்கும் பவன் கல்யாண், அடுத்தடுத்த நிலைகளுக்கு உயர்ந்து செல்ல நாமும் வாழ்த்துவோம்.

Tags:    

மேலும் செய்திகள்