ரசிகர்களுக்கு சிம்பு கொடுத்த பரிசு! - பிறந்தநாள் சிறப்பு தொகுப்பு

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் மிகவும் பரபரப்பான, சென்சேஷனல் ஹீரோவாக வலம் வந்தவர்தான் நடிகர் சிம்பு. இவர் தன்னுடைய வெளிப்படையான பேச்சுக்காகவே நிறைய விமர்சனங்களை சந்தித்தவர்.

Update:2025-02-04 00:00 IST
Click the Play button to listen to article

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் மிகவும் பரபரப்பான, சென்சேஷனல் ஹீரோவாக வலம் வந்தவர்தான் நடிகர் சிம்பு. இவர் தன்னுடைய வெளிப்படையான பேச்சுக்காகவே நிறைய விமர்சனங்களை சந்தித்தவர். அதே விமர்சனத்திற்காக ஏராளமான ரசிகர்களையும் தன் வசப்படுத்தியவர். படமே நடிக்கவிட்டாலும் அவரை எப்போதும் கொண்டாடி தீர்ப்பதற்கு என்றே ஒரு கூட்டம் இங்கு உண்டு. அந்த அளவுக்கு வெறித்தனமான ரசிகர்களை கொண்டுள்ள சிம்பு, 2011-ஆம் ஆண்டு ‘ஒஸ்தி’ திரைப்படத்திற்கு பிறகு பெரிதாக திரைப்படங்களில் நடிக்காமல் அவ்வப்போது சிறப்பு தோற்றங்களில் மட்டும் வந்து நடித்துக் கொண்டிருந்தார். இந்த சமயம், சிம்பு இனி சோலோ ஹீரோவாக படமே நடிக்கமாட்டோரோ? என்று ரசிகர்கள் ஒருபுறம் ஏங்க, திடீரென ரசிகர்களை குஷிப்படுத்தும் விதமாக ‘மாநாடு’ திரைப்படத்தின் மூலம் கம்பேக் கொடுத்தார். மாநாடு கொடுத்த திருப்பத்தால் அடுத்தடுத்து பல படங்களில் நடித்து இன்று தன்னை நோக்கி வந்த விமர்சனங்களை எல்லாம் பாசிட்டிவாக மாற்றி மீண்டும் பிஸியான நடிகராக வலம் வர தொடங்கியிருக்கிறார். அந்த வகையில் உலக நாயகன் கமல்ஹாசனின் ‘தக் லைஃப்’ திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து முடித்திருக்கும் சிம்பு, தனது பிறந்த நாளையும் சிறப்பாக கொண்டாடி முடித்திருக்கிறார். அவரது பிறந்தநாளை முன்னிட்டு, சிம்புவின் அடுத்த திரைப்படத்தின் டைட்டில் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படம் அவரது திரை வாழ்க்கையில் ஒரு முக்கியமான மைல்கல்லாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், இந்த கட்டுரையில் நடிகர் சிம்புவின் திரைப்பயணம் மற்றும் அவரது பிறந்தநாளை முன்னிட்டு வெளியான திரைப்பட அறிவிப்பு, அவர் தற்போது நடித்துக் கொண்டிருக்கும் திரைப்படங்கள் போன்ற பல தகவல்களின் தொகுப்பை இங்கே காணலாம்.

குழந்தையிலேயே சூப்பர்ஸ்டார்


குழந்தை நட்சத்திரமாக நடிகர் சிம்பு 

என்னை நோக்கி எவ்வளவு விமர்சனங்கள் வந்தாலும் நான் எப்போதும் இப்படித்தான் என்று தனக்கென ஒரு ஸ்டைலை உருவாக்கி வைத்திருக்கும் நடிகர் சிம்பு, விஜய டி.ராஜேந்தர் - உஷா தம்பதியருக்கு மூத்த மகனாக சென்னையில் பிறந்தார். இவருடன் பிறந்தது குறளரசன் என்ற தம்பியும், இலக்கியா என்ற தங்கையும் ஆவர். தந்தை விஜய டி.ராஜேந்தர் சினிமாவில் மிகப்பெரிய இயக்குநரகாவும், நடிகராகவும், இசையமைப்பாளராகவும் என அனைத்து தளங்களிலும் செயல்பட்டதால் மகன் சிலம்பரசனையும் ஒரு வயதிலேயே சினிமாவுக்குள் குழந்தை நட்சத்திரமாக கொண்டு வந்துவிட்டார். அதனால் சிலம்பரசனான சிம்பு இன்று இவ்வளவு பெரிய நடிகராக இருப்பதில் நமக்கு ஆச்சரியம் இல்லைதான் என்றாலும் சினிமாவில் நடிகராக தனக்கான இடத்தை ஒருவர் தக்க வைத்துக் கொள்வது என்பது அவ்வளவு எளிதான காரியம் இல்லை. அந்த வகையில், 1984-ஆம் ஆண்டு தனது தந்தையின் படமான ‘உறவை காத்த கிளி’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக தனது சினிமா பயணத்தை தொடங்கிய சிம்பு, தொடர்ந்து ‘மைதிலி என்னை காதலி’, ‘ஒரு தாயின் சபதம்’, ‘என் தங்கை கல்யாணி’, ‘சம்சார சங்கீதம்’, ‘சாந்தி எனது சாந்தி’, ‘எங்க வீட்டு வேலன்’ என வரிசையாக ஏராளமான படங்களில் நடித்தார். இப்படங்கள் அனைத்திலுமே சிம்புவின் சுட்டி தனமான நடிப்பை கண்டு வியக்காதவர்கள் இல்லை. அந்த அளவுக்கு அழகிலும், நடிப்பிலும் அப்போதே பட்டையை கிளப்பி ரசிக்க வைத்திருந்தார். இதில் குறிப்பாக, ‘என் தங்கை கல்யாணி’ படத்தில் அவரது அபாரமான நடிப்புக்காக 'லிட்டில் சூப்பர் ஸ்டார்' என்ற பட்டம் வழங்கப்பட்டது.

ஹீரோவாக தடுமாற்றம்


‘காதல் அழிவதில்லை’ திரைப்படத்தில் சிம்பு மற்றும் சார்மி கவுர்

குழந்தை நட்சத்திரமாக தன் பயணத்தை தொடர்ந்து கொண்டிருந்தவர், திடீரென அப்பா ராஜேந்தரின் படமான ‘சொன்னால்தான் காதலா’ திரைப்படத்தில் இரண்டு பாடலுக்கு வந்து நடனம் ஆடி தன் ஹீரோவுக்கான முதல் அறிமுக ஒத்திகையை அந்த படத்தில் துவங்கினார். அதன் பிறகு, இயக்குநர் கதிரின் ‘காதல் வைரஸ்’ திரைப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் வந்தவர், தந்தையின் இயக்கத்திலேயே ‘காதல் அழிவதில்லை’ படத்தின் மூலம் ஹீரோவாக தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்தார். கல்லூரி மாணவராக தன் வயதுக்குரிய கதாபாத்திரத்தில் மிக அழகாக நடித்திருந்தாலும் படம் சுமாரான வெற்றியையே பெற்றது. இதன்பிறகு தொடர்ந்து ‘தம்’, ‘அலை’, ‘கோவில்’, ‘குத்து’ என்று வரிசையாக நடித்த சிம்புவுக்கு இப்படங்கள் அனைத்தும் ஒரே மாதிரியான நடிப்பு பிம்பத்தை உருவாக்கி கொடுத்தது. அதனால் சிம்புவின் பட தேர்வில் சில தடுமாற்றங்களும், ஒரே மாதிரியான நடிப்பு பாணியை கையாள்கிறாரோ என்ற எண்ணமும் ரசிகர்களிடம் ஏற்பட்டது. ரசிகர்களின் இந்த மனநிலையை மாற்றி தனக்கான இடத்தை சரியாக கண்டுபிடித்து தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என்று முடிவு செய்த சிம்பு, அப்பாவின் பாணியை பின்பற்றி அதன்படி களமிறங்கி வேறொரு நடிப்பு பரிமாணத்தை காட்டிய படம்தான் ‘மன்மதன்’.

அப்பாவை மிஞ்சிய மகன்


'வல்லவன்' திரைப்படத்தில் பள்ளி மாணவராக ரீமா சென்னுடன்...  

‘காதல் அழிவதில்லை’ படத்தில் அறிமுகமாகி, அடுத்தடுத்து சில படங்களில் நடித்தும் கிடைக்காத வரவேற்பு, ‘மன்மதன்’ திரைப்படத்தில் சிம்புவுக்கு கிடைத்தது. அதுவரை சிம்பு நடித்த படங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்ட கதைக்களம், திரைக்கதை என புதுவிதமாக இருந்தது ‘மன்மதன்’ திரைப்படம். குறிப்பாக, சிம்புவுக்கு மிகவும் பிடித்த நடிகையான ஜோதிகாவோடு நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இரட்டை வேடம், அதுவும் காதலித்து ஏமாற்றும் பெண்களை கொலை செய்யும் கொடூரமான கதாபாத்திரம் மற்றும் அதை வேண்டாம் என்று அறிவுரை கூறும் நல்ல கதாபாத்திரம் என இரண்டு மாறுபட்ட வேடங்களில் சிம்பு நடித்தார். ‘மன்மதன்’ திரைப்படம் சிம்புவின் சினிமா வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. இளைஞர்கள் மத்தியில் ‘மன்மதன்’ சிம்புவாகவே அவர் பார்க்கப்பட்டார். அடுத்ததாக, ‘வல்லவன்’ படத்தின் மூலம் சிம்பு இயக்குநராகவும் அறிமுகமானார். கதை, திரைக்கதை, வசனம், இயக்கம், நடிப்பு, பாடல் எழுதுதல், பாடுதல் மற்றும் இசையமைத்தல் என பன்முகத் திறமை கொண்ட டி.ராஜேந்தரின் மகன் என்பதை நிரூபிக்கும் வகையில், தனது தந்தை போலவே சிறுவயதிலேயே நடிப்பாசைக் கொண்ட சிம்பு, இயக்கத்திலும் ஒரு பெரிய வெற்றியைப் பெற்றார். இருந்தாலும் ‘வல்லவன்’ படத்தில் நயன்தாராவுடன் சிம்பு நடித்த நெருக்கமான காட்சிகள் பரபரப்பாக பேசப்பட்டன. மேலும், சிம்புவும் நயன்தாராவும் காதலிப்பதாக கிசுகிசுக்கப்பட்ட அந்த சமயத்தில், நயன்தாரா பல சர்ச்சைகளில் சிக்கினார்.

சர்ச்சையில் சிக்கிய சிம்பு


நடிகை ஹன்சிகா மோத்வானியுடன் கிசுகிசுக்கப்பட்ட சிம்பு 

திரைப்படங்களில் காதலுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கும் கிம்பு, ‘வல்லவன்’ படத்தில் நடிகை நயன்தாராவுடன் திரையில் காட்டிய நடிப்பும், படத்துக்கு அப்பாலும் அவர்கள் பகிர்ந்த உறவும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த நேரத்தில் இணையத்தில் கசிந்த புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தின. இந்த சம்பவங்களின் விளைவாக இருவருக்கும் இடையில் கருத்து வேறுபாடுகள் உருவாக, அவர்கள் பிரிந்து சென்றனர். நயன்தாராவிற்குப் பிறகு, நடிகைகள் வரலட்சுமி, ஹன்சிகா மோத்வானி, நிதி அகர்வால் உள்ளிட்ட பலருடன் சிம்பு காதல் தொடர்பில் இருப்பதாக செய்திகள் பரவின. இதனால், ‘நிஜ மன்மதன்’ என்ற பட்டமும் அவருக்கு கிடைத்தது. மேலும், அவர் அவ்வப்போது சர்ச்சைகளில் சிக்கிக் கொள்வது அந்த சமயம் வழக்கமான ஒன்றாக இருந்தது. குறிப்பாக லிங்குசாமி, கௌதம் வாசுதேவ் மேனன், பாண்டிராஜ் போன்ற பல இயக்குநர்கள், சிம்பு தங்கள் படங்களில் அளவுக்கு மீறி தலையிடுவதாக அப்போது குற்றம் சாட்டினர். அதேபோல் அவர் நடிப்பில் வெளியான ‘அன்பானவன், அடங்காதவன், அசராதவன்’ படத்தின் படப்பிடிப்பு தாமதமடைந்து, படமும் பெரும் தோல்வியை சந்தித்தற்கு சிம்புதான் காரணம் என்ற குற்றச்சாட்டும் அவர் மீது வைக்கப்பட்டது. இதனால் அப்போது தயாரிப்பாளர் சங்கம் அவருக்கு ‘ரெட் கார்டு’ வழங்கும் நிலையும் ஏற்பட்டது. இதே வேளையில், சிம்பு எழுதிய ‘லூசுப் பெண்ணே’, ‘எவண்டி உன்னைப் பெத்தான்’ போன்ற பாடல் வரிகள் சர்ச்சையை ஏற்படுத்தின. குறிப்பாக, ‘பீப் பாடல்’ பல்வேறு எதிர்ப்புகளை சந்தித்தது. இதனால் அவரது படங்கள் வெளியாவதில் பல சிக்கல் ஏற்பட்டது. பல தயாரிப்பாளர்கள் அவரை தங்கள் படங்களில் நடிக்க வைக்க தயங்கினர். ஒரு கட்டத்தில், சிம்புவின் திரை வாழ்க்கை கேள்விக்குறியானது. இந்த சூழ்நிலையில், சிம்பு தனது தவறுகளை உணர்ந்து, தன்னை மாற்றிக் கொள்ள முடிவு செய்தார். உடல் மற்றும் மனநிலையில் கவனம் செலுத்தி, புதிய இயக்குநர்களுடன் இணைந்து பணியாற்றத் தொடங்கினார். சர்ச்சைகளில் இருந்து விலகி, தனது திரைப்பயணத்தை மறுபடியும் உறுதியாக உருவாக்க முனைந்தார்.

ஆத்மனின் அடுத்த பயணம்


எஸ்.டி.ஆர் 49 புதிய மற்றும் பழைய அறிவிப்பு போஸ்டர்கள் 

உடல் எடை அதிகரிப்பு, நடித்த படங்கள் எதுவும் வெற்றி பெறாமல் தொடர் தோல்வி என்று சென்று கொண்டிருந்த நேரத்தில் சிம்புவிற்கு திருப்புமுனையை ஏற்படுத்தக் கூடிய படமாக வந்து அமைந்ததுதான் வெங்கட் பிரபுவின் ‘மாநாடு’ திரைப்படம். அப்துல் ஹாலிக் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்த சிம்புவிற்கு இப்படம் மாபெரும் வெற்றிப்படமாக அமைந்தது. இதனால் சிம்புவின் ரசிகர்கள் சிங்கம் களத்துல எறங்கிடுச்சு என்பதுபோல் மிகுந்த உற்சாகமாகி அவரின் அடுத்தடுத்த படங்களுக்காக எதிர்பார்த்து காத்திருக்க ஆரம்பித்தனர். சிம்புவும் தன் ரசிகர்களை மகிழ்விக்கும் விதமாக தன்னிடம் இருந்த நெகட்டிவ் விஷயங்கள் அனைத்தையும் தவிர்த்து, ‘மாநாடு’ கொடுத்த கம்பேக்கால் தொடர்ந்து ‘வெந்து தணிந்தது காடு’, ‘பத்து தல’ ஆகிய படங்களில் நடிக்க அப்படங்களும் ஓரளவு வெற்றிப்படங்களாக அமைந்தன. இந்தநிலையில்தான் சிம்புவின் ரசிகர்களே எதிர்பார்க்காத வகையில் உலக நாயகன் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனங்களின் தயாரிப்பில், மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் ‘தக் லைஃப்’ படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து முடித்துள்ளார் சிம்பு. இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பே இன்னும் முழுமை பெறாத நிலையில், நடிகர் கமல்ஹாசன் தயாரிப்பில் 48வது படத்திலும் நடிக்க உள்ளார் சிம்பு. இந்தப் படத்தினை தேசிங்கு பெரியசாமி இயக்குவதாக அறிவிப்பு வெளியானது. அதேபோன்று 'ஓ மை கடவுளே', 'டிராகன்' ஆகிய படங்களை இயக்கிய அஷ்வத் மாரிமுத்து, சிம்புவின் 49வது படத்தை இயக்குவதாகவும், ஏஜிஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிப்பதாகவும் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அறிவிப்பு வெளியானது. இந்த அறிவிப்பு தொடர்பாக இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து வெளியிட்டிருந்த தனது எக்ஸ் தள பதிவில் 'கட்டம் கட்டி கலக்குறோம்' என்று நடிகர் சிம்பு கூறுவது போல் புகைப்படத்தை பதிவிட்டிருந்தார். இப்படி தொடர்ந்து படங்களில் மிகவும் பிசியாக நடித்து வரும் சிம்பு, தனது பிறந்தநாளை வெகு விமரிசையாக கொண்டாடி முடித்தது மட்டுமின்றி, தன் பிறந்தநாள் பரிசாக அவரின் ரசிகர்களுக்கு புதுப்பட அப்டேட் ஒன்றையும் கொடுத்து இருக்கிறார். அதுதான் ஹரிஷ் கல்யாணை வைத்து 'பார்க்கிங்' எனும் ஹிட் படத்தை வழங்கிய ராம்குமார் இயக்கத்தில் STR 49 உருவாக உள்ளது என்ற அறிவிப்பு.

ஆகாஷ் பாஸ்கரன் தயாரிக்கும் இப்படத்தில், கல்லூரி மாணவனாக சிம்பு நடிக்கிறார். அதனை உறுதிப்படுத்தும் விதமாக பிறந்தநாளையொட்டி வெளியான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில், புத்தகத்திற்குள் கத்தியுடன் சிம்பு அதிரடி தோற்றத்தில் இருக்கிறார். அதிலும் "மோஸ்ட் வாண்டட் ஸ்டூடண்ட்" என்ற வார்த்தை அதில் குறிப்பிடப்பட்டிருப்பதால், இது ஆக்ஷன் கலந்த கல்லூரி கதையாக உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அறிவிப்பு சிம்பு ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது என்றாலும், ஏற்கனவே கடந்த ஆண்டு அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் சிம்புவின் 49வது படம் உருவாக உள்ளதாக அறிவிக்கப்பட்ட படம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதா என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்