"நான் ஆணையிட்டால்" என சாட்டையை சுழற்றும் விஜய்! "ஜன நாயகன்" பட தலைப்பு சொல்ல வருவது என்ன?

தமிழக அரசியலில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தி வரும் நடிகர் விஜய், தனது அரசியல் பயணத்தை உறுதிப்படுத்தும் வகையில் மக்கள் போராட்டங்களில் நேரடியாக ஈடுபட ஆரம்பித்துள்ளார்.

Update:2025-02-04 00:00 IST
Click the Play button to listen to article

தமிழக அரசியலில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தி வரும் நடிகர் விஜய், தனது அரசியல் பயணத்தை உறுதிப்படுத்தும் வகையில் மக்கள் போராட்டங்களில் நேரடியாக ஈடுபட ஆரம்பித்துள்ளார். பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைப்பதை எதிர்த்து, அப்பகுதி மக்களின் உரிமைக்காக களமிறங்கிய அவர், தனது முதல் அரசியல் போராட்டத்திலேயே அரசின் கவனத்தை ஈர்த்தார். இதனைத் தொடர்ந்து, குடிநீர் பிரச்சினையில் பாதிக்கப்பட்ட வேங்கை வயல் மக்களை சந்திக்க விஜய் திட்டமிட்டிருந்த நிலையில், தமிழக அரசு மேற்கொண்ட அதிரடி நடவடிக்கை, அவர் மீது அரசியல் அழுத்தம் செலுத்தும் முயற்சியாகவே பார்க்கப்படுகிறது. அந்த வகையில், இந்த கட்டுரையில், விஜய்யின் அரசியல் நடவடிக்கைகள், பரந்தூர் விமான நிலைய விவகாரம், வேங்கை வயல் குடிநீர் பிரச்சினை, இதனால் அரசியலில் உருவான தாக்கங்கள் ஆகியவற்றை விரிவாக அலசுவோம். மேலும், அவர் நடிக்கும் ‘ஜன நாயகன்’ திரைப்படத்திற்கும் தற்போதைய அரசியல் சூழ்நிலைக்கும், எம்.ஜி.ஆருக்கும் உள்ள தொடர்பையும் நுணுக்கமாக ஆய்வு செய்வோம்!

கவனம் ஈர்த்த தவெக


பரந்தூரில் போராடி வரும் மக்களை சந்திக்க திறந்த வேனில் விஜய் சென்ற தருணம்

சென்னையின் இரண்டாவது விமான நிலையத்தை பரந்தூரில் அமைப்பதற்குத் தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக பரந்தூர் மற்றும் அதன் சுற்றியுள்ள 13 கிராமங்களில் இருந்து 5,100 ஏக்கர் விவசாய நிலம் கையகப்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. இதில், ஏகனாபுரம் உள்ளிட்ட கிராமங்கள் முற்றிலுமாக பாதிக்கப்படுவதால், அங்குள்ள மக்கள் கடந்த 915 நாட்களாக தொடர்ந்து போராடி வருகின்றனர். இந்த நிலையை கருத்தில் கொண்டு, விக்கிரவாண்டியில் நடைபெற்ற மாநாட்டில் விஜய், போராடும் மக்களுக்கு ஆதரவாக தீர்மானம் நிறைவேற்றி இருந்தார். ஆனால், அவர் கட்சி தொடங்கியதிலிருந்து, பனையூரில் உள்ள தனது அலுவலகத்திலேயே மக்களை சந்தித்து வந்ததாகவும், நேரில் களத்திற்கு வராமல் இருப்பதாகவும் சிலர் விமர்சித்தனர். இந்த நிலையில் தனது முதல் பயணமாக, கடந்த மாதம் ஜனவரி 20ம் தேதி, பொடவூரில் உள்ள தனியார் மண்டபத்தில், போராடும் 13 கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் விவசாயிகளை விஜய் நேரில் சந்தித்து பேசினார். அவரது பயணத்துக்கு போலீசாரிடம் அனுமதி பெற்றிருந்த போதிலும், பல்வேறு தடைகளை அவர் சந்தித்ததாக கூறப்படுகிறது. இருந்தாலும், அனைத்து எதிர்ப்புகளையும் மீறி, பிரசார வாகனத்தில் நின்றபடி மக்களிடம் விஜய் உரையாற்றினார். அப்போது அவர் "என்னுடைய பிரசாரத்தை இங்கிருந்துதான் துவங்குகிறேன். நான் வளர்ச்சிக்கு எதிரானவன் இல்லை. ஆனால், பரந்தூரில் விமான நிலையம் அமைக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறேன். எதிர்க்கட்சியாக இருந்தபோது, எட்டுவழிச்சாலையை நீங்கள் எதிர்த்தீர்கள், காட்டுப்பள்ளி துறைமுகத்தையும் எதிர்த்தீர்கள். ஆனால், ஆட்சி அமைந்த பிறகு விவசாயிகளின் நிலத்தை எடுத்துக்கொண்டு விமான நிலையம் அமைப்பதை ஏன் ஆதரிக்கிறீர்கள்? மதுரை அரிட்டாப்பட்டியில் டங்ஸ்டன் சுரங்கத்துக்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்ததை நான் வரவேற்கிறேன். அதேபோல, பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதையும் நீங்கள் எதிர்க்க வேண்டும். ஆனால், அதைப் புறக்கணிக்கிறீர்கள். இந்த திட்டத்திற்குப் பின்னால் ஏதோ லாப நோக்கம் இருக்கிறது என்பதை மக்கள் உணர்ந்துவிட்டார்கள்" என கருத்து தெரிவித்தார்.

விஜய்யின் அடுத்த அதிரடி


பரந்தூர் விவகாரத்தில் திமுகவின் நிலைப்பாடு குறித்து பேசி கவனத்தை ஈர்த்த விஜய் 

பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்கும் விவகாரத்தில், மக்களின் பாதிப்பு குறித்து விஜய் பேசிய பேச்சு பெரும் கவனத்தை ஈர்த்ததை தொடர்ந்து, தமிழக அரசு அடுத்த நாளே, "பரந்தூர் மக்களை பாதிக்காமல் புதிய விமான நிலையம் அமைப்பது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும்" என்று அறிவிப்பு வெளியிட்டது. இந்த பரபரப்பு அடங்குவதற்குள், புதுக்கோட்டை மாவட்டம் வேங்கை வயலில் குடிநீரில் மலம் கலந்த விவகாரம் தொடர்பாக, பாதிக்கப்பட்ட மக்களை விஜய் சந்திக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியானது. இந்த சம்பவம், 2022-ஆம் ஆண்டு நிகழ்ந்தாலும், தற்போது வரை சரியான நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில், விஜய்யின் இந்த முயற்சி, மீண்டும் அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியது. கடந்த 2022-ஆம் ஆண்டு, வேங்கை வயலில் பட்டியல் சமூக மக்கள் பயன்படுத்தும் குடிநீர் தொட்டியில் மனித கழிவு கலக்கப்பட்ட சம்பவம், தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பல்வேறு அரசியல் தலைவர்களும், சமூக செயற்பாட்டாளர்களும் இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். ஆனால், இந்த வழக்கு இரண்டு ஆண்டுகளாக நிலுவையில் இருந்தது. இதற்கிடையில், கடந்த ஜனவரி 25-ஆம் தேதி, இந்த விவகாரம் தொடர்பாக சிபிசிஐடி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளதாக தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்தது. அந்த குற்றப்பத்திரிக்கையில், பட்டியலினத்தை சேர்ந்த சில இளைஞர்களே குடிநீர் தொட்டியில் மனித கழிவுகளை கலந்ததாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனை உறுதி செய்யும் வகையில் சில ஆடியோ, வீடியோ ஆதாரங்களும் வெளிவந்ததாக கூறப்படுகிறது. இந்த குற்றப்பத்திரிக்கை, எதிர்ப்பையும் விவாதத்தையும் கிளப்பியிருந்தாலும், விஜய் வேங்கை வயலுக்கு நேரில் சென்று பார்வையிட இருப்பதாக தகவல் வெளியானதாலேயே, இது அரசுக்கு கூடுதல் தலைவலியை ஏற்படுத்தும் என்பதால், திமுக தலைமை உடனடியாக செயலில் இறங்கியதாக கூறப்படுகிறது. விஜய்யின் இந்த அதிரடி அரசியல் நகர்வுகள், திமுக அரசுக்கு அடுத்தடுத்த சவால்களை ஏற்படுத்தியுள்ள அதேவேளையில், நடிகர் விஜய் தொடர்ந்து இதுபோன்ற அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடலாம் என்றும், இது எதிர்காலத்தில் திமுக அரசுக்கு பெரும் பிரச்சினைகளை ஏற்படுத்தும் என்றும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

"ஜன நாயகனாக விஜய்"


ரசிகர்களுடன் நடிகர் விஜய் எடுத்துக்கொண்ட செல்ஃபி

விஜய், அரசியல் கட்சி தொடங்கிய பிறகு, பெரிய அளவில் எந்த ஒரு அரசியல் நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று விமர்சனங்கள் எழுந்தன. இந்த நிலையில்தான், பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிராக மக்கள் கூடும் விதமாக அவர் நடத்திய போராட்டம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. இந்த போராட்டத்தின் வேகம் அடங்குவதற்குள், விஜய் வேங்கை வயலுக்கு செல்ல உள்ளதாக தகவல் வெளியானது. இதனால்தான், தமிழக அரசும் வேங்கை வயல் விவகாரத்தில் உடனடியாக சில நடவடிக்கைகளை எடுத்ததாக கூறப்படுகிறது. இப்படிப்பட்ட அரசியல் சூழலில்தான், விஜய் தனது 69-வது படத்திற்கு ‘ஜன நாயகன்’ என பெயரிட்டுள்ளார். இந்தப் படம், இயக்குநர் எச்.வினோத் இயக்கத்தில், கே.வி.என் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி வருகிறது. படப்பிடிப்பு மிக வேகமாக நடைபெற்று வரும் நிலையில், இதில் விஜய்யுடன் பாபி தியோல், பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, கௌதம் வாசுதேவ் மேனன், நரேன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். அனிருத் இசையமைக்கும் இந்தப் படம், ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. குடியரசு தினத்தன்று, இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது. 'லியோ' மற்றும் 'கோட்' படப்பிடிப்புகளுக்கு இடையே விஜய் ரசிகர்களுடன் எடுத்த செல்ஃபி புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவியதை அடிப்படையாகக் கொண்டு, அந்த போஸ்டர் வடிவமைக்கப்பட்டிருந்தது. மேலும், படக்குழு வெளியிட்ட இரண்டாவது போஸ்டரில், விஜய் கையில் சவுக்கை சுற்றும் விதமாக இருக்க, அதனுடன் "நான் ஆணையிட்டால்" என்ற வாசகமும் இடம்பெற்றுள்ளது. இது நடிகர் எம்ஜிஆர் நடித்த "எங்க வீட்டு பிள்ளை" திரைப்படத்தில் இடம்பெற்ற "நான் ஆணையிட்டால்" பாடலை நினைவுபடுத்தும் வகையில் அமைந்திருந்தது. இதன்மூலம், ‘ஜன நாயகன்’ ஒரு முழு அரசியல் பின்னணி கொண்ட திரைப்படம் என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், விஜய் முழுமையாக அரசியலில் இறங்குவதற்கு முன் அவர் நடிக்கும் கடைசி படமாக இது இருப்பதால், இப்படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

விஜய் எம்.ஜி.ஆர். ஆக முடியுமா?


'ஜனநாயன்' பட போஸ்டர் - மக்கள் திலகத்தை போன்று சாட்டையை சுழற்ற தயாரான விஜய்  

‘ஜன நாயகன்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரிலேயே எம்.ஜி.ஆரின் அரசியல் அடையாளத்தை முன்வைத்து, விஜய் தனது அரசியல் சாட்டையை சுழற்றவிருக்கிறார் என்பதை தெளிவாக வெளிப்படுத்தியுள்ளார். ஆனால், விஜய் எம்.ஜி.ஆரோடு தன்னை இணைத்துப் பேச வைப்பது இது முதல் முறை அல்ல. அன்றைய ‘நாளைய தீர்ப்பு’ துவங்கி "பிகில்’' திரைப்படம் வரை பலமுறை பல படங்களில் பல காட்சிகள் இப்படி நடந்திருக்கிறது. ஆனால், இந்த முறை விஜய் எடுத்திருக்கும் "நான் ஆணையிட்டால்" என்ற எம்.ஜி.ஆர் பாணி வசனம், சாதாரணமாக கடந்து செல்ல முடியாதது. காரணம், தனது அரசியல் கட்சியை தொடங்கிய பிறகு, விஜய் எப்போதும் அதிமுக குறித்து நேரடியாக விமர்சனம் செய்யவில்லை. அதிமுக தரப்பிலும் விஜய்யைப் பற்றிய எந்த எதிர்ப்பும் வெளிப்படையாக எடுக்கப்படவில்லை. சில முன்னாள் அமைச்சர்கள் கூட விஜய்க்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளனர். இதனை எல்லாம் கூட்டி கழித்து பார்க்கும்போது சில பல விடைகளும் நமக்கு கிடைக்கின்றது. இருப்பினும் எம்ஜிஆர் - விஜய் ஒப்பீடு சரியானதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. காரணம், எம்ஜிஆர் தனியாக கட்சி தொடங்குவதற்கு முன்பே, திமுகவில் இருந்தபோது அரசியலில் தனது அனுபவத்தையும், ரசிகர் மன்றங்களை இயக்கிய விதத்தையும் ஒப்பிட்டு பார்க்கும்போது, விஜய்யின் அரசியல் அனுபவம் மிக குறைவானதாகவே இருக்கிறது. இருந்தும் எம்ஜிஆருக்கு மக்கள் மீது பெரும் அக்கறை இருந்தது, அது விஜய்க்கும் இருக்கிறது. ஆனால், எம்ஜிஆர் அரசியல் வேட்கையுடன் நடிக்கும்போதே இருந்தார், ஆனால் விஜய் நடிப்பில் மட்டுமே கவனம் செலுத்தியுள்ளார். இப்போதுதான் அவர் அரசியலுக்கு முழுமையாக வருகிறார். அதனால், மக்கள் அவரை எப்படி ஏற்கிறார்கள் என்பது மிக முக்கியமானது. அரசியல் நம்பகத்தன்மையை விஜய், மக்களிடம் உருவாக்க வேண்டும், அது ஓட்டுகளாக மாற்றப்பட வேண்டும். அடுத்த ஒரு வருடத்தில் விஜய் மற்றும் அவரது கட்சி மக்களை சந்தித்து, அவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முயற்சி செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். பரந்தூர் விமான நிலைய போராட்டம் போன்ற நிகழ்வுகளின் மூலம், மக்கள் குறித்த விஜய்யின் நெருக்கம் எப்படி வெளிப்படுகிறது என்பதை நாம் உற்று பார்க்க வேண்டும். இவ்வாறு, தற்போது அரசியலில் குதித்து, ஜனநாயகத்தைக் காக்க முனைவதாக காட்டப்படும் விஜய், 2026 தேர்தலின் முடிவில் உண்மையிலேயே மக்களால் ஏற்கப்படும் ஜனநாயகனாக மாறுவாரா? என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

Tags:    

மேலும் செய்திகள்