என் "விடாமுயற்சி" இது! - தடைகளை கடந்து தடம் பதிக்க வரும் மகிழ்திருமேனி!

குறைந்த எண்ணிக்கையிலான படங்களை மட்டுமே இயக்கியிருந்தாலும், தனது படைப்புகளால் திரையுலகிலும் சினிமா ரசிகர்கள் மத்திலும் தனக்கென்று ஒரு தனிச்சிறப்பான அடையாளத்தை உருவாக்கியவர் தான் இயக்குநர் மகிழ் திருமேனி

Update: 2024-12-30 18:30 GMT
Click the Play button to listen to article

தமிழ் சினிமாவில் இளம் இயக்குநர்களின் வருகை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. ஆனால் அவர்கள் அனைவரும் தங்கள் படைப்புகளால் நிலைத்து நின்றுவிடுகிறார்களா என்று பார்த்தால், அது நிச்சயம் கேள்விக்குறியாகவே இருக்கும். இதனால் மனவலிமையும், விடாமுயற்சியையும் தழுவி செயல்படும் இயக்குநர்களே தங்கள் இலக்கை அடைந்து, படைப்புகளில் உள்ள வித்தியாசம் மூலம் பெரிய ஹீரோக்களின் கவனத்தை ஈர்த்திருக்கின்றனர். அதிலும், இலக்கியங்களின் மீது ஆர்வமுள்ள படைப்பாளிகள் தங்கள் படைப்புகளால் எப்போதும் தனித்துவத்தைக் கொண்டிருப்பார்கள். அப்படி இலக்கியங்களில் ஆர்வமுள்ள ஒருவர் பல ஆண்டுகளாக திரைத்துறையில் சிறந்த இயக்குநராக தன்னை நிலைநாட்டி வருவது சாதாரணமான விஷயம் அல்ல. அந்த வகையில், குறைந்த எண்ணிக்கையிலான படங்களை மட்டுமே இயக்கியிருந்தாலும், தனது படைப்புகளால் திரையுலகிலும் சினிமா ரசிகர்கள் மத்தியிலும் தனக்கென்று ஒரு தனிச்சிறப்பான அடையாளத்தை உருவாக்கியவர்தான் இயக்குநர் மகிழ் திருமேனி. இவர், தற்போது, தல அஜித் நடித்துள்ள ‘விடாமுயற்சி’ எனும் புதிய திரைப்படத்தை இயக்கி முடித்துள்ளார். பல தடைகள் மற்றும் விமர்சனங்களை தாண்டி இப்படத்தை வெற்றிகரமாக முடித்துள்ள மகிழ் திருமேனியின் திரைப்பயணத்தையும், அவரது விடாமுயற்சியையும் இந்த கட்டுரையில் விரிவாக காணலாம்.

இலக்கியம் டு இயக்குநர்

பார்ப்பதற்கு மிகவும் ஸ்டைலிஷாக தோன்றினாலும், பழகுவதற்கு நம் பக்கத்து வீட்டு பையன் போன்ற எளிமையான குணம் கொண்டவர்தான் இயக்குநர் மகிழ் திருமேனி. சென்னையில் பிறந்து வளர்ந்த இவர், சிறுவயதில் படிப்பில் ஆர்வமிக்க மாணவராகவும், புத்தகங்கள் வாசிப்பதில் அதிக ஈடுபாட்டுடன் இருந்தவராகவும் திகழ்ந்தார். இந்த ஆர்வம் காரணமாக அவர் தமிழின் செவ்விலக்கியங்களை மட்டுமின்றி, ரஷ்யா போன்ற உலகின் முக்கிய நாடுகளின் இலக்கியங்களையும் தேடி வாசித்தார். இந்த வாசிப்பு ஆர்வமே அவரை கல்லூரி காலத்தில் சிறுகதைகள், கவிதைகள் எழுதும் எழுத்தாளராக மாற்றியது. பின் தமிழ் மீது கொண்ட பற்றினால் தன் நிஜப்பெயரை அழகிய தமிழ்பெயராக ‘மகிழ் திருமேனி’ என மாற்றியவர் தொடர்ந்து இலக்கியம் சார்ந்த விஷயங்களில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். எழுத்தின் மீது கொண்ட இந்த ஆர்வமே நாளடைவில் சினிமா துறையிலும் அவருக்கு ஈர்ப்பை ஏற்படுத்தியது. ஆரம்பத்தில் சினிமா பற்றிய தெளிவும், அறிவும் அவருக்கு இல்லை. அம்பேத்கர், காந்தி போன்ற சமூக சிந்தனையாளர்களின் எழுச்சியான கருத்துகளால் ஈர்க்கப்பட்டிருந்ததால், ஒரு நேர்மையான வழக்கறிஞராகவே உருவாக வேண்டும் என்ற நினைப்பில் இருந்தார்.


இயக்குநர் மகிழ் திருமேனி 

ஆனால், நாம் ஒன்று நினைக்க தெய்வம் வேறொன்றை முடிவு செய்யும் என்பதற்கேற்ப, சினிமா துறையில் தனது பயணத்தை திடீரென தொடங்கினார். பல போராட்டங்களுக்குப் பிறகு, இயக்குநர் கஸ்தூரி ராஜா மற்றும் செல்வராகவன் ஆகியோரிடம் உதவி இயக்குநராகப் சேர்ந்தார். கஸ்தூரி ராஜா இயக்கிய 'காதல் சாதி' படத்தில் முதன்முதலில் பணியாற்றிய போது சினிமா துறையின் சிக்கல்கள், அனுபவ பாடங்கள் ஆகியவை அவருக்கு மிக்க பயனாக அமைந்தன. அந்த நேரத்தில் நடிகரும் பேராசிரியருமான பெரியார்தாசன் கூறிய ஒரு ஆலோசனை மகிழ் திருமேனியின் வாழ்வில் பெரும் மாறுதலாக அமைந்தது. "சினிமா என்னும் சதுரங்க வேட்டையில் சில காய்கள் வெட்டப்படும்; சில காய்கள் வெட்டப்படாமல் தானாகவே வீழ்ந்து விடும். ஆனால், நீயோ வெட்டும் படாமல், வீழ்ந்தும் விடாமல் உன் இலக்கை அடைய முயற்சி செய்" என்று அவர் கூறினாராம். இந்த வார்த்தைகள் மகிழ் திருமேனிக்கு மிகவும் ஊக்கமாக அமைய, எந்த நிலையிலும் சோர்ந்து போகாமல், அடங்கி கிடக்காமல், தன் இலக்கை நோக்கி தொடர்ந்து உழைத்து, தன்னைத்தானே நிரூபிக்க துவங்கினார்.

முதல் பட வாய்ப்பு

கஸ்தூரி ராஜா மற்றும் செல்வராகவன் ஆகியோருக்கு நெருக்கமான உதவி இயக்குநராக பணியாற்றிய மகிழ்திருமேனி, ஒரு கட்டத்தில் கௌதம் வாசுதேவ் மேனனின் படங்களால் ஈர்க்கப்பட்டார். குறிப்பாக, அவரின் கதை சொல்லும் முறை அவருக்கு மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியது. இதனால், அவர் கௌதமிடம் உதவி இயக்குநராக சேர வேண்டும் என்ற எண்ணத்தை கொண்டார். அவர் விரும்பியதை போலவே எதிர்பாராத நேரத்தில் ஒருநாள் பொதுவெளியில் கௌதம் வாசுதேவ் மேனனை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்த சந்திப்பில் மகிழ், கௌதமிடம் "உங்களிடம் உதவி இயக்குநராக சேர விரும்புகிறேன்" என நேரடியாக கேட்டார். அதற்கு கௌதம் எந்தவித தயக்கமின்றி, "நான் அடுத்ததாக 'காக்க காக்க' என்றொரு படத்தை எடுக்கப் போகிறேன். நாளையே வந்து சேர்ந்து கொள்ளுங்கள்" என்று கூறினாராம். இந்த பதிலால் மகிழ்திருமேனிக்கு மிகுந்த மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது.


மகிழ் திருமேனியின் முதல் படமான 'முன்தினம் பார்த்தேனே' திரைப்படக் காட்சி 

அதன்பிறகு, கௌதமுடன் இணைந்து 'காக்க காக்க' தொடங்கி 'வேட்டையாடு விளையாடு' வரை பயணம் செய்த மகிழ், சினிமாவிற்கு வந்து ஒன்பது ஆண்டுகள் கழித்து இயக்குநராக உருவெடுத்தார். அவருடைய இயக்குநருக்கான முதல் படமாக 2010ஆம் ஆண்டு வெளியான 'முன்தினம் பார்த்தேனே' உருவானது. இந்த படத்தின் தலைப்பு கூட கௌதமின் மீது கொண்ட பற்றினால் 'வாரணம் ஆயிரம்' படத்தில் வரும் "முன்தினம் பார்த்தேனே" பாடலில் இருந்து எடுத்ததாக கூறப்படுகிறது. இளமைக்கால காதல் மற்றும் ஒரு உறவின் சிக்கல்களை அடிப்படையாகக் கொண்ட இப்படம், அந்த உறவு ஒருவரின் வாழ்க்கையில் எவ்வாறு மாற்றங்களை ஏற்படுத்துகிறது என்பதை அழகாக வெளிப்படுத்தியது. இந்த படம் அந்த காலகட்டத்தில் இளைஞர்களிடத்தில் நல்ல வரவேற்பையும், விமர்சன ரீதியாக பாராட்டுகளையும் பெற்றபோதும், வணிக ரீதியாக பெரியளவில் கைகொடுக்கவில்லை.

ஆக்ஷனில் அடுத்தக் கட்டம்

'முன்தினம் பார்த்தேனே' திரைப்படத்துக்குப் பிறகு, இரண்டு ஆண்டுகள் இடைவெளி எடுத்து, தனது முதல் படத்திலிருந்து முற்றிலும் மாறுபட்ட பாணியில் நடிகர் அருண் விஜய்யை நாயகனாகக் கொண்டு இயக்கிய படம்தான் 'தடையறத் தாக்க'. முழுக்க முழுக்க ஆக்ஷன் த்ரில்லராக உருவாக்கப்பட்ட இப்படத்தில் அழகான காதல் களமும் இணைந்திருந்ததுடன், பல சுவாரஸ்யங்களை கொண்டிருந்தது. இதனால், இது அனைத்து தரப்பு ரசிகர்களையும் மிகுந்த அளவில் ஈர்த்தது. 2012ஆம் ஆண்டில் வெளிவந்த இப்படம், நடிகர் அருண் விஜய்யின் திரைப்பயணத்தில் மிக முக்கியமான படமாகவும், அவருக்கு பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திய படமாகவும் அமைந்தது. இப்படி மகிழ் திருமேனியின் முதல் இரண்டு படங்களும் அவருக்கு சிறந்த இயக்குநருக்கான அங்கீகாரத்தை பெற்று கொடுத்ததை தொடர்ந்து மூன்றாவதாக நடிகர் ஆர்யாவை மையமாகக் கொண்டு 'மீகாமன்' என்ற படத்தை இயக்கினார். சற்று வித்தியாசமான பாணியில் நிழல் உலகத்தை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட ஆக்‌ஷன் த்ரில்லராக உருவான இப்படம் தோல்வியையே சந்தித்தது.


ஆக்ஷன் ஹீரோவாக நடிகர் அருண் விஜய்க்கு அடையாளம் கொடுத்த மகிழின் 'தடையறத் தாக்க'  

இதனால், அடுத்ததாக ஒரு வெற்றியை கண்டிப்பாக வழங்க வேண்டும் என்ற அழுத்தத்துடன், மகிழ் திருமேனி மீண்டும் அருண் விஜய்யுடன் இணைந்து ‘தடம்’ என்ற திரைப்படத்தை இயக்கினார். ஒரு திரில்லர் படமாக, நல்ல திரைக்கதை, சிறப்பான நடிப்பு, மற்றும் பரபரப்பான திருப்பங்களுடன் வெளிவந்த இப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதோடு, திரில்லர் ரசிகர்களுக்கு ஒரு சிறந்த அனுபவமாகவும் அமைந்தது. சொல்லப்போனால் 'தடம்' உருவாகும் போது, அதில் நடிகரும், தற்போதைய தமிழ்நாடு துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலினை நடிக்க வைக்கதான் மகிழ் திருமேனி திட்டமிட்டிருந்தாராம். ஆனால், சில காரணங்களால் அதில் உதயநிதி நடிக்க முடியாமல் போக, அந்த கதையில் மீண்டும் அருண் விஜய்யை நடிக்க வைத்துள்ளார். இப்படமும் வெற்றி பெற்றதால், உதயநிதி, மகிழ் திருமேனியின் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆர்வத்தை வெளியிட்டார். இதன் விளைவாக, அவருக்காகவே உருவாக்கப்பட்ட ‘கலகத் தலைவன்’ திரைப்படத்தில் உதயநிதி நடித்தார். அந்த படம் ஓரளவு வெற்றியை பெற்றது.


‘கலகத் தலைவன்’ திரைப்படத்தில் உதயநிதி மற்றும் நிதி அகர்வால்

அஜித்துடன் கூட்டணி

கிட்டத்தட்ட 14 ஆண்டுகளுக்கும் மேலான மகிழ் திருமேனியின் திரைப்பயணத்தில், அவர் தற்போதுவரை வெறும் ஐந்து படங்களை மட்டுமே இயக்கியிருந்தாலும், ஒவ்வொரு படத்திலும் தனது தனித்துவமான முத்திரையை பதித்து, சினிமா ரசிகர்களின் நம்பிக்கையை பெற்றுள்ளார். அந்த விடாமுயற்சியின் பயனாக, அஜித் குமாருடன் சேர்ந்து 'விடாமுயற்சி' என்ற படத்தை இயக்குவதற்கான வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. அஜித் குமார் மற்றும் மகிழ் திருமேனி இணைந்து பணியாற்றுவதாக அறிவிக்கப்பட்டபோது, கோலிவுட்டில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான இந்த படத்தில், த்ரிஷா, அர்ஜுன், ரெஜினா கசாண்ட்ரா போன்ற முன்னணி நடிகர்கள் நடித்து படப்பிடிப்பும் விறுவிறுப்பாக நடைபெற்றது. இருப்பினும் படப்பிடிப்பு கடந்த ஆண்டு அக்டோபர் மாதமே தொடங்கியிருந்தாலும், பல்வேறு காரணங்களால் அது தொடர்ந்து தாமதமாக்கப்பட்டு வந்தது. படக்குழு சில போஸ்டர்களை வெளியிட்டாலும், ரசிகர்கள் புதிய அப்டேட்களுக்காக காத்திருந்தனர். இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், படப்பிடிப்பு தாமதம் காரணமாக ரிலீஸ் தேதி தொடர்ந்து தள்ளி போய் கொண்டே இருந்தது.


அஜித்துடன் இயக்குநர் மகிழ் திருமேனி 

படத்தின் தாமதத்திற்கு பல காரணங்கள் கூறப்பட்டன. படப்பிடிப்பு இடங்கள் மாற்றம், தொழில்நுட்பக் காரணங்கள், பட்ஜெட் பிரச்சினைகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்கள் சொல்லப்பட்டன. இந்த தாமதத்திற்கு இயக்குநர் மகிழ் திருமேனியை குற்றம்சாட்டும் வகையில் சமூக ஊடகங்களில் பல விமர்சனங்கள் எழுந்தன. ஆனால், இந்த காரணங்கள் எதுவாக இருந்தாலும், ரசிகர்கள் மிகவும் ஏமாற்றம் அடைந்தனர். படத்தின் தாமதம் குறித்து சமூக ஊடகங்களில் பல கேள்விகள் எழுந்தன. "படத்தின் அப்டேட் எப்போது?", "படம் எப்போது ரிலீஸ் ஆகும்?", "தாமதத்திற்கான உண்மையான காரணம் என்ன?" போன்ற கேள்விகளை ரசிகர்கள் தொடர்ந்து முன்வைத்தனர். இந்த நிலையில், அஜித் குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் 'குட் பேட் அக்லி' படத்திற்கான அறிவிப்பு வெளியானது. இந்த அறிவிப்பு சினிமா வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அஜித் குமார் ரசிகர்களும் இந்த அறிவிப்பை வரவேற்றனர். ஆனால், 'விடாமுயற்சி' படம் எப்போது வெளியாகும் என்ற சந்தேகம் அவர்களுக்கு எழுந்தது. 'குட் பேட் அக்லி' படத்தின் அறிவிப்பால், 'விடாமுயற்சி' படத்தின் வெளியீடு மேலும் தள்ளிப்போகும் என்ற அச்சத்தை ரசிகர்களிடம் ஏற்படுத்தியது.


அஜித்தின் 'விடாமுயற்சி' போஸ்டர்  

மகிழ்ச்சியில் ரசிகர்கள்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித் குமார் நடிப்பில் பல தடைகள் மற்றும் குழப்பங்களை கடந்தும் உருவாக்கப்பட்டு வந்த ‘விடாமுயற்சி’ படத்தை, தற்போது வெற்றிகரமாக இயக்கி முடித்துள்ளார் இயக்குநர் மகிழ் திருமேனி. ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படம், வருகிற ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் வெளிவரவுள்ள இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி, ரசிகர்களிடமிருந்து மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. அந்த டீசரில் “எல்லோரும் எல்லாமும் கைவிடும்போது, நீ உன்னை மட்டும் நம்பு” என்ற வசனம் மிகவும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த வசனம், அஜித்துக்கு மட்டுமன்றி, பல்வேறு விமர்சனங்களை கடந்து படத்தின் ரிலீசுக்கு தயாராகியுள்ள மகிழ் திருமேனிக்கும் பொருந்துவதாக பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், படத்தின் இயக்குநரான மகிழ் திருமேனி, படப்பிடிப்பின் இறுதி நாளான கடந்த டிசம்பர் 22-ஆம் தேதி தனது நன்றியை எல்லோருக்கும் தெரிவிக்கும் விதமாக ஒரு பதிவு வெளியிட்டார். அந்த பதிவை, தயாரிப்பு நிறுவனமான லைகா தனது எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்துள்ளது. மகிழ் திருமேனியின் அந்த பதிவில், “விடாமுயற்சியை சிறப்பாக முடித்து கொடுத்த அஜித் அவர்களின் அன்புக்கும், ஆதரவுக்கும், வழிகாட்டுதலுக்கும் எனது மனமார்ந்த நன்றி மற்றும் பாராட்டுகள்” என்று கூறியுள்ளார். எது எப்படி இருந்தாலும், மகிழ் திருமேனியின் படைப்புகள் தொடர்ந்து ரசிகர்களை மகிழ்வித்து வெற்றிகரமாக திகழ்ந்துள்ளதைப் போல, அஜித் உடனான இந்த விடாமுயற்சியும் பல தடைகளை கடந்து நிச்சயம் அவருக்கு வெற்றியை பெற்றுத் தரும் என்று நம்புவோம்.

Tags:    

மேலும் செய்திகள்