தலைமுறைகளை தாண்டி பிரகாசிக்கும் நடிகை லட்சுமி! பிறந்தநாள் தொகுப்பு
1970 மற்றும் 80-களில் நான்கு தென்னிந்திய மொழிப்படங்களிலும் வெற்றிக்கொடி நாட்டி மிகச்சிறந்த நடிகையாக வலம் வந்தவர்தான் நடிகை லட்சுமி.
1970 மற்றும் 80-களில் நான்கு தென்னிந்திய மொழிப்படங்களிலும் வெற்றிக்கொடி நாட்டி மிகச்சிறந்த நடிகையாக வலம் வந்தவர்தான் நடிகை லட்சுமி. தலைமுறைகளை தாண்டியும் திரையுலகில் நிலைத்திருக்கும் இவர் எப்போதும் அழகாகவும், ஆரோக்கியமாகவும் இருந்தால்தான் நம்மையே நமக்கு பிடிக்கும். அதுவே நமக்கு மிகப்பெரிய பலமாகவும் இருக்கும் என்ற நம்பிக்கையோடு தன்னையும், தன் வாழ்க்கையையும் பார்த்து, ரசித்து வாழ்ந்து வரும் அழகு குயில். “சில நேரங்களில் சில மனிதர்கள்” திரைப்படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதை வென்ற முதல் தமிழ் நடிகையான லட்சுமி, விறுவிறு பேச்சு, கலகல சிரிப்புக்கு சொந்தகாரர். அதுமட்டுமின்றி பெரியவர், சிறியவர் என்ற ஒருதுளி ஈகோ கூட இல்லாமல் எல்லா கலைஞர்களிடமும் தொழிலை கற்றுகொள்ள ஆர்வம் காட்டும் லட்சுமி இன்றும் விடாமல் தன் திரைப்பயணத்தை அடுத்த தலைமுறை நடிகருடனும் தொடர்ந்து வருகிறார். இப்படி பல சிறப்புகளுடன் தென்னிந்திய சினிமாவின் மூத்த நடிகையாக இருந்துவரும் லட்சுமி (13.12.24) தனது 72-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இந்த நிலையில், அவரின் தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் சினிமா பயணம் குறித்த பல சுவாரஸ்யமான தகவல்களின் தொகுப்பை இங்கே காணலாம்.
சினிமாவில் அறிமுகம்
'ஜீவனாம்சம்' படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமான லட்சுமி
தமிழ் சினிமாவின் பொற்காலத்தில் தன் அழகு மற்றும் நடிப்பு திறமையால் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த நடிகை லட்சுமி 1952-ஆம் ஆண்டு டிசம்பர் 13-ஆம் தேதி யரகுடிபாடி வரத ராவ் , குமாரி ருக்மணி தம்பதியருக்கு மகளாக சென்னையில் பிறந்தார். தந்தை யரகுடிபாடி ஆந்திர மாநிலம் நெல்லூரைச் சேர்ந்தவர். அவர் நடிப்பதோடு மட்டுமல்லாமல், சமூகப் பிரச்சினைகளை முன்வைக்கும் திரைப்படங்களை தயாரிப்பதிலும் ஆர்வம் கொண்டவர். தாய் ருக்மணி சிறந்த தமிழ் நடிகையாக விளங்கினார். இத்தகைய கலை குடும்பத்தில் பிறந்த லட்சுமிக்கு சினிமா மீதான ஈர்ப்பு இயல்பாகவே வந்தது. இதனால் 1961-ஆம் ஆண்டு தன் 9-வது வயதில் 'ஸ்ரீ வள்ளி' என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான லட்சுமி, தன் 16-வது வயதில் இயக்குநர் மல்லியம் ராஜகோபால் இயக்கிய 'ஜீவனாம்சம்' என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். அந்தப் படத்தில் அவர் வெளிப்படுத்திய நடிப்புத் திறமை, அவருக்குத் தொடர்ந்து பட வாய்ப்புகளைத் தேடிக்கொடுத்தது.
'திக்கற்ற பார்வதி' திரைப்படத்தில் நடிகர் ஸ்ரீகாந்துடன் லட்சுமி
அப்படி 1969-ஆம் ஆண்டு 'காவல் தெய்வம்', 'அன்னையும் பிதாவும்', 'மன்னிப்பு' போன்ற படங்களில் நடித்த லட்சுமி, 70-களில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், ஜெய் சங்கர், முத்துராமன், ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலருடன் இணைந்து நடித்தார். எம்.ஜி.ஆருடன் 'மாட்டுக்கார வேலன்', 'குமரிக்கோட்டம்', 'இதய வீணை', 'சங்கே முழங்கு' போன்ற படங்களில் நடித்த லட்சுமி, சிவாஜி கணேசனுடன் 'எதிரொலி', 'ராஜராஜசோழன்', 'தியாகம்' போன்ற படங்களில் ஜோடி சேர்ந்து ரசிகர்களை மகிழ்வித்தார். இவரது நடிப்புத் திறமைக்கு சான்றாக, 'ஜீவநாடி', 'நவகிரகம்', 'ஏன்', 'நூற்றுக்கு நூறு', 'காசேதான் கடவுளடா', 'கனிமுத்துப் பாப்பா', 'நவாப் நாற்காலி', 'தேடி வந்த லட்சுமி', 'வாழ்வு என் பக்கம்' என பல வெற்றிப் படங்களில் நடித்து தன்னை ஒரு முன்னணி நடிகையாக நிலை நிறுத்திக்கொண்டார்.
தமிழுக்கு பெருமை
'சில நேரங்களில் சில மனிதர்கள்' திரைப்படத்தில்...
1974-ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளிவந்த 'சட்டக்காரி' படம் லட்சுமிக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. இந்த படம் 1975-ஆம் ஆண்டு இந்தியில் 'ஜூலி' என்ற பெயரிலும், தெலுங்கில் 'மிஸ் ஜூலி பிரேம கதா' என்ற பெயரிலும் வெளிவந்து மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இந்தி படத்தில் நடித்ததற்காக பிலிம்ஃபேர் விருது மற்றும் வங்காள திரையிதழாளர்கள் விருது என இரண்டு விருதுகளை வென்று சாதனை படைத்தார் லட்சுமி. அதே ஆண்டில் வெளிவந்த 'திக்கற்ற பார்வதி' படம் லட்சமிக்கு மேலும் புகழை தேடித் தந்தது. மதுவிலக்கை மையமாகக் கொண்டு உருவான இந்த படத்திற்காகவும் லட்சமிக்கு பிலிம்ஃபேர் விருது கிடைத்தது. பின்னர் 1976-ம் ஆண்டு வெளிவந்த 'சில நேரங்களில் சில மனிதர்கள்' திரைப்படம், லட்சுமியின் திரை வாழ்க்கையில் ஒரு முக்கிய திருப்புமுனையை ஏற்படுத்தியது. ஜெயகாந்தனின் நாவலை அடிப்படையாகக் கொண்டு பீம்சிங் இயக்கிய இந்தப் படம், ஒரு தாய்-மகள் உறவின் சிக்கலான பரிமாணங்களை ஆழமாக ஆராய்ந்தது. இதில் லட்சுமி, கங்கா என்ற கதாபாத்திரத்தில் மிகவும் இயல்பாக நடித்து, அந்த கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்தார். தாய்-மகள் உறவில் ஏற்படும் மன உளைச்சலை, குழப்பத்தை, மற்றும் பரிதாபத்தை அவர் அற்புதமாக வெளிப்படுத்தினார். இதனாலேயே இந்த படத்திற்காக லட்சுமிக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது கிடைத்தது. இது மட்டுமல்லாமல், தமிழ் படத்திற்காக முதன்முதலில் தேசிய விருது வாங்கிய நடிகை என்ற பெருமையும் இவருக்கு கிடைத்தது.
'சிறை' படத்தில் பாகீரதியாக லட்சுமி
பிறகு 1978-ஆம் ஆண்டு, மீண்டும் ஜெயகாந்தனின் பிரபலமான நாவலை அடிப்படையாகக் கொண்டு உருவான ‘ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்’ என்ற திரைப்படம் லட்சுமிக்கு மேலும் புகழை சேர்த்தது. இந்தப் படத்தில் கல்யாணி என்ற நாடக நடிகையின் கதாபாத்திரத்தில் அவர் நடித்த விதம் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. தன் வாழ்க்கையையே நாடகமாகவே பார்க்கும் ஒரு பெண்ணின் உணர்வுகளை அவர் மிகவும் நுட்பமாக வெளிப்படுத்தியிருந்தார். இந்த அற்புதமான நடிப்பிற்காக, தமிழ்நாடு மாநில சிறந்த நடிகைக்கான விருதும் அவருக்கு கிடைத்தது. இப்படி தொடர்ந்து பல வெற்றிகள், விருதுகள் என பயணித்து வந்த லட்சுமிக்கு 1980-களுக்குப் பிறகு, முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கும் வாய்ப்புகள் குறைந்து வந்தன. இருப்பினும், தனது அனுபவத்தை பயன்படுத்தி துணை நடிகையாக பல படங்களில் நடிக்கத் தொடங்கிய அவர், அதிலும் ஒரு சிறந்த நடிகையாக தனது பயணத்தை தொடர்ந்தார்.
மறக்க முடியுமா?
80களில் 'பொல்லாதவன்', 'நெற்றிக்கண்', 'சவால்', போன்ற படங்களில் நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்த நடிகை லட்சுமி, பின்னர் 'இன்று நீ நாளை நான்', 'சம்சாரம் அது மின்சாரம்', 'சிறை' போன்ற படங்களின் மூலம் தனது நடிப்புத் திறமையை மேலும் வெளிப்படுத்தி, தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு முத்திரையை பதித்தார். இதில் ‘இன்று நீ நாளை நான்' படத்தில் பாப்பாத்தி என்ற கதாபாத்திரத்தில் நடித்த லட்சுமி, கைம்பெண்ணின் மன உணர்வுகளை மிக நுணுக்கமாக வெளிப்படுத்தி அனைவரையும் கண்கலங்க வைத்தார். அதேபோல் ‘சிறை' படத்தில் பாகீரதி என்ற கதாபாத்திரத்தில் வரும் லட்சுமி, தன்னை விட்டுச் சென்ற கணவனை விட, தன்னை கெடுத்து விட்டு, குற்ற உணர்ச்சியில் கவனித்து வந்த அந்தோணிசாமியே மேல் என்று முடிவு செய்யும் காட்சி, அவரது நடிப்பு திறமையின் உச்சமாக பார்க்கப்பட்டது. இதுதவிர 'சம்சாரம் அது மின்சாரம்' படத்தில் அடக்கமான மருமகளாக நடித்த லட்சுமி, அந்த கதாபாத்திரத்தை மிகவும் யதார்த்தமாக சித்தரித்து, பல குடும்பங்கள் விரும்பும் நாயகியாக மாறினார். பின்னர் நீண்ட இடைவேளைக்கு பிறகு "ஜீன்ஸ்" படத்தில் ஐஸ்வர்யா ராய்க்கு பாட்டியாக நடித்து அனைவரையும் மகிழ்வித்த லட்சுமி, 'படையப்பா', 'காக்கை சிறகினிலே', 'ரிதம்', 'ஐயா', 'நான் அவன் இல்லை' போன்ற பல படங்களில் நடித்து தனது நீண்ட கால சினிமா பயணத்தில் பல வெற்றிகளைப் பெற்றார்.
தனது நீண்ட கால சினிமா பயணத்தில் பல வெற்றிகளைப் பதிவு செய்த லட்சுமி
இப்படி 400-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த இவர், தொலைக்காட்சித் துறையிலும் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தார். தமிழில் ‘அச்சமில்லை அச்சமில்லை’ என்ற நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கி, சமூகப் பிரச்சினைகள் மற்றும் தனிமனித அவலங்கள் குறித்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தியதோடு, கன்னடத்திலும் ‘எது கதே அல ஜீவனா’ என்ற நிகழ்ச்சியில் தனது திறமையை வெளிப்படுத்தினார். குடும்ப பிரச்சினைகளை மையமாகக் கொண்ட இந்த நிகழ்ச்சியில், துணிச்சலாகவும் தைரியமாகவும் பல பிரச்சினைகளுக்கு அவர் தீர்வு கண்ட விதம் அன்று பலரால் பாராட்டப்பட்டது. திரையில் மட்டும் அல்லாமல் நிஜ வாழ்க்கையிலும் துணிச்சல் மிக்க பெண்ணாக வலம் வந்த லட்சுமி, சில திடீர் முடிவுகளால் குடும்ப வாழ்க்கையில் பல ஏற்ற இறக்கங்களை சந்தித்துள்ளார். தற்போது, 70 வயதை கடந்திருந்தாலும் மனதளவில் தன்னை எப்போதும் 30 வயது பெண்ணாகவே நினைத்து சுறுசுறுப்புடனும், இளமை மாறா அழகுடனும் தன் கணவர் சிவச்சந்திரனுடன் மிகவும் சந்தோஷமான வாழ்க்கையை வாழ்ந்து வரும் லட்சுமி 2000-ஆம் ஆண்டுகளுக்கு பிறகு படங்களில் நடிப்பதை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்துக்கொண்டார். தனக்கு முக்கியத்துவம் உள்ள கனமான வேடங்களில் நடிக்க வாய்ப்பு கேட்டு வந்தால் மட்டும், வேண்டாம் என்று மறுக்காமல் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என நான்கு மொழிகளிலும் வருடத்திற்கு ஒன்று அல்லது இரண்டு படங்களில் நடிக்கிறார்.
‘ஓ! பேபி’ படத்தில் சமந்தாவுடன் நடிகை லட்சுமி
அப்படி 2019-ஆம் ஆண்டு சமந்தாவின் ‘ஓ! பேபி’ படத்தில் 70 வயது சாவித்ரியாக பேபி கதாபாத்திரத்தில் வாழ்ந்து காட்டியிருப்பார். இதற்கு பிறகு, தெலுங்கிலேயே ‘கேங் லீடர்’, ‘குஷி’ ஆகிய படங்களில் நடித்து வந்த போதுதான் முதல் முறையாக வெப் தொடரில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்த தொடர்தான் அமேசான் பிரைமில் கடந்த ஆண்டு வெளியான ‘ஸ்வீட் காரம் காபி’ தொடர். எட்டு எபிசோடுகளை கொண்ட இந்த தொடரில், நடிகை மதுபாலா லட்சுமிக்கு மருமகளாக நடித்திருந்தார். மூன்று தலைமுறை பெண்களின் கதையாக வெளிந்த இத்தொடரில் கணவரின் இறப்புக்கு பின்பு, தன் வாழ்க்கையில் முன்பு தொலைத்த ஒரு நபரை காண விரும்பும் மாமியார் சுந்தரியாக நடிப்பில் எப்போதும் போல் அசத்தியிருந்தார். இப்படி எப்போதும் தன் நடிப்பில் பல பரிமாணங்களை அனாசியமாக காட்டி ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களையும் கவர்ந்துவிடும் லட்சுமி இன்னும் சினிமாவில் பல சாதனைகளை நிகழ்த்த நாமும் அவரின் இந்த 72-வது பிறந்த நாளில் வாழ்த்துவோம்.