திறமை இருந்தால் யார் வேண்டுமானாலும் சாதிக்கலாம் - நடிகர், ஒளிப்பதிவாளர் நட்ராஜ்

சிறந்த நடிகராக மட்டும் இல்லாமல், இந்தியாவின் மிக முக்கியமான ஒளிப்பதிவாளர்களில் ஒருவராகவும் விளங்கக்கூடியவர்தான் நட்டி என்கிற நட்ராஜ் சுப்பிரமணியன்.

Update: 2024-10-21 18:30 GMT
Click the Play button to listen to article

தமிழ் சினிமாவில் வெகு சில நடிகர்கள்தான் ஹீரோவாகவும், வில்லனாகவும், குணச்சித்திர நடிகராகவும் என எல்லா விதமான கதாபாத்திரங்களுக்கும் கன கச்சிதமாக பொருந்தி மக்களுக்கு பிடித்த நடிகர்களாக வலம் வருகிறார்கள். இதில் குறிப்பிட்ட சிலர் மட்டும்தான் நடிப்பு என்பதை தாண்டி சினிமாவிலேயே வேறு சில துறையிலும் சாதித்தவர்களாக இருக்கிறார்கள். அந்த வகையில் சிறந்த நடிகராக மட்டும் இல்லாமல், இந்தியாவின் மிக முக்கியமான ஒளிப்பதிவாளர்களில் ஒருவராகவும் விளங்கக்கூடிய நட்டி என்கிற நட்ராஜ் நம் ராணி நேயர்களுக்காக சிறப்பு நேர்காணல் ஒன்றை வழங்கியுள்ளார். அதன் முதல் பாக தொகுப்பை இங்கே காணலாம்.

ஒரு ஹீரோவாக மட்டும் அல்லாமல் வில்லனாக, காமெடியனாக, குணச்சித்திர நடிகராக என எல்லாவிதமான கதாபாத்திரங்களுக்குமே கன கச்சிதமாக பொருந்தி விடுகிறீர்களே! அது எப்படி உங்களுக்கு சாத்தியமாகிறது?

இதில் என்னுடைய பங்கு என்பது பெரிதாக ஒன்றும் கிடையாது. இது முழுக்க முழுக்க என்னை நம்பி வாய்ப்பு வழங்கிய தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குநர்களால்தான் சாத்தியமானது. அவர்கள்தான் இந்த கதாபாத்திரம் எனக்கு சரியாக பொருந்தும், நான் சரியாக செய்வேன் என முதலில் நம்பியவர்கள். அதே சமயம் கதை கேட்கும்போதே இந்த கதாபாத்திரம் எனக்கு சரியாக பொருந்துமா எனவும் யோசிப்பேன். அது முதன்மை கதாபாத்திரங்களாக இருந்தாலும் சரி, துணை கதாபாத்திரங்களாக இருந்தாலும் சரி. அதில் ஒரு ஈர்ப்பு இருந்தால்தான் நான் நடிக்கவே ஒப்புக்கொள்வேன்.


இந்திய அளவில் புகழ்பெற்ற கேமராமேனாக அனைவராலும் அறியப்படும் நட்டி

ஒளிப்பதிவாளராக பயணத்தை துவங்கி இன்று ஒரு நடிகராக மாறி இருக்கிறீர்கள். சிறு வயதிலிருந்தே நடிப்பின் மீது உங்களுக்கு ஆர்வம் இருந்ததா? உங்களுடைய பால்ய நினைவுகள் மற்றும் குடும்பம் குறித்து சொல்லுங்கள்?

அப்படி எல்லாம் எந்த ஆர்வமும் எனக்கு இருந்தது கிடையாது. சிறு வயதில் கிரிக்கெட் நன்கு விளையாடுவேன். அதனால் ஒரு நல்ல கிரிக்கெட் வீரராக வேண்டும் என ஆசைப்பட்டேன். ஆனால் அது நடக்கவில்லை. பின் பல படங்களை பார்த்து ஒளிப்பதிவின் மீது ஈர்ப்பு ஏற்பட்டது. அதன் தொடர்ச்சியாகதான் நான் ஒளிப்பதிவாளர் ஆனேன். பிறகு ஒரு கட்டத்தில் ஒரு நண்பருக்கு சென்னை தமிழ் சொல்லிக்கொடுக்க சென்று, அங்கு ஒரு இயக்குநரால் ஈர்க்கப்பட்டு அதன் மூலம் கிடைத்த வாய்ப்புதான் ‘நாளை’ திரைப்படம். அதில்தான் ஒரு நடிகராக நான் அறிமுகமானேன்.

என் குடும்பத்தை பொறுத்தவரை நான் பிறந்தது வளர்ந்தது எல்லாமே பரமகுடியில்தான். எங்கள் வீடு ஒரு கூட்டு குடும்பம். என் அப்பா அலுமினிய கம்பெனி வைத்திருந்தார். அவருக்கு சினிமா பற்றி எல்லாம் பெரிதாக ஒன்றும் தெரியாது. நான் சினிமாவுக்கு செல்கிறேன் என்றதும் வீட்டில் எல்லோருக்கும் அதிர்ச்சி. ஆனால் அப்பா மட்டும் உனக்கு ஒரு வருடம் டைம் தருகிறேன். அதற்குள் உன்னை நிரூபித்து காட்டு. ஒருவேளை உன்னால் சாதிக்க முடியவில்லை என்றால், மீண்டும் இங்கு வந்து உன் படிப்பை தொடர வேண்டும். உனக்கு வேறு வேலை வாங்கி தருகிறேன் என்றார். ஆனால் அப்படி எதுவும் நிகழாமல் ஒரு வருடத்திற்கு உள்ளாகவே நான் சினிமாவில் ஓரளவு வளர்ந்து விட்டேன். ஒரு நாள் என்னை அழைத்து செல்ல தயாரிப்பு நிறுவனம் ஒன்று வீட்டுக்கு கார் அனுப்பியபோது தான், என் அப்பாவிற்கு என் மீது முழு நம்பிக்கை வந்தது.

ஒரு சாதாரண இளைஞராக சினிமாவுக்குள் நுழைந்த நீங்கள் பாலிவுட்வரை சென்று சாதித்துள்ளீர்கள். உங்களுடைய ஒளிப்பதிவு அனுபவம் பற்றி சொல்லுங்கள்.. பாலிவுட் வாய்ப்பு எப்படி உங்களுக்கு கிடைத்தது?


'மகாராஜா' திரைப்படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிகர் நட்டி

நான் திரைப்பட கல்லூரிக்கு எல்லாம் சென்று ஒளிப்பதிவு கற்றுக்கொள்ளவில்லை. அது குறித்த தெளிவும் என்னிடம் அப்போது இல்லை . பல இடங்களுக்கு சென்று என்னுடைய புகைப்பட திறமையை வெளிப்படுத்தும் விதமான ஆல்பங்களையெல்லாம் காட்டிதான் உதவியாளராக சேர்ந்தேன். பின் படிப்படியாக என் திறமையை வளர்த்துக்கொண்டு, தமிழில் சில படங்களில் பணியாற்றிய பிறகு பாலிவுட்டிற்கு சென்றேன். அந்த வாய்ப்பை ஏற்படுத்தி தந்தவர் இயக்குநர் ராம்கோபால் வர்மாதான். அவர் அந்த சமயம் பாலிவுட்டில் ‘ஜங்கள்’ என்கிற படத்தை இயக்கினார். அதில் பணியாற்றுவதற்காகதான் நான் அங்கு சென்றேன். அப்போதுதான் அனுராக் காஷ்யப்பை சந்திக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அவருக்கும் எனக்குமான சிந்தனையும், செயலும் ஒரே எண்ணவோட்டத்தில் இருந்ததால் இருவரும் இணைந்து பயணிக்க ஆரம்பித்தோம். அதில் முதலாவதாக ‘லாஸ்ட் ட்ரெயின் டு மஹாகாளி’ என்கிற படத்தை ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு தயாரித்து தந்தோம். அதற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து ‘பான்ச் ’ என்கிற படத்தை அனுராக் காஷ்யப் இயக்க அதிலும் ஒளிப்பதிவாளராக நான் பணியாற்றினேன். அந்த படம் ரிலீஸ் ஆகவில்லை என்றாலும், பாலிவுட்டில் பெரும்பாலானோர் அப்படத்தை பார்த்துவிட்டு வெகுவாக பாராட்டினார்கள். அதற்கு பிறகே எனக்கு தொடர்ந்து பாலிவுட் வாய்ப்புகள் வந்தன.

பொதுவாக தென்னிந்தியாவிலிருந்து பாலிவுட் சென்று பணியாற்றினாலே… அங்கு சில எதிர்ப்புகளும்… டாமினேஷனும் அதிகமாக இருக்கும் என்று சொல்லுவார்கள்.. அப்படியான அனுபவம் உங்களுக்கு ஏதேனும் உள்ளதா?

அப்படி எதுவும் எனக்கு நடந்தது இல்லை. யாரும் என்னை டாமினேட் செய்தது இல்லை. பாலிவுட்டை பொறுத்தவரை திறமை உள்ளவர்களை மதிப்பார்கள். அதிலும் சொன்ன நேரத்திற்குள் முடித்துதந்தால் மிகவும் மகிழ்ச்சியடைவார்கள். அங்கு நான் அமிதாப் பச்சன் துவங்கி ஷாருக்கான், சஞ்சய் தத், அஜய் தேவ்கன் என எத்தனையோ முன்னணி ஹீரோக்களின் படங்களில் பணியாற்றி இருக்கிறேன். எல்லோருமே என்னிடம் அன்பாகதான் நடந்து இருக்கிறார்கள். அவர்களின் திறமைகளை பார்க்கும் போது இன்றும் எனக்கு ஆச்சரியமாக இருக்கும்.

தமிழில் உங்களுக்கு முதல் அடையாளம் கிடைத்த திரைப்படம் ‘யூத்’. அப்போது தளபதி விஜய்யுடன் இணைந்து பணியாற்றிய நீங்கள் பிறகு ‘துப்பாக்கி’, ‘புலி’ போன்ற படங்களிலும் பணியாற்றியுள்ளீர்கள். அவருக்கும் உங்களுக்கும் இருந்த நட்பு பற்றி சொல்லுங்கள்?


நடிகர் விஜய்யுடன் நட்ராஜ் 

‘யூத்’.திரைப்படத்தை இயக்கிய வின்சென்ட் செல்வா மூலமாகதான் ஒளிப்பதிவாளராக அப்படத்தில் நான் இணைந்தேன். ‘துப்பாக்கி’ படத்தில் ஒரு பாடலுக்குதான் ஒளிப்பதிவு செய்தேன். விஜய் சாரை பொறுத்தவரை துவக்கத்தில் இருந்தே என்னிடம் நல்ல நட்பு பாராட்டி வந்தார். இப்போது பார்க்கும்போது கூட ‘நண்பா’ என அன்போடு அழைத்து உற்சாகமாக பேசுவார். பார்க்க அமைதியாக தெரிந்தாலும், மிகவும் ஜாலியான மனிதர். ஷூட்டிங் ஸ்பாட்டில் யாருக்காவது பிரச்சினை என்றால் முதல் ஆளாக வந்து நிற்பார். எப்போதுமே பார்க்க சாதாரணமாக தெரிபவர் ரோல் கேமரா ஆக்சன் என்று சொன்ன உடனேயே புயலாக மாறிவிடுவார். இப்படிப்பட்டவர் தற்போது அரசியலிலும் கால் பதிப்பது மகிழ்ச்சியை தந்தாலும், தொடர்ந்து அவர் படங்களில் நடிக்க வேண்டும் என்பதே என்னுடைய ஆசை. நிச்சயமாக நேரில் பார்க்கும்போது இதை பற்றி பேசுவேன்.

ஒரு ஒளிப்பதிவாளராக, நடிகராக என உங்களுக்கு கிடைத்த மிகப்பெரிய பாராட்டாக எதை நினைக்கிறீர்கள்?

நான் ஒளிப்பதிவு செய்த எல்லா படங்களிலும் எனக்கு பாராட்டு கிடைத்துள்ளது. ஆனால் ஒரு நடிகராக எனக்கு கிடைத்த மிகப்பெரிய பாராட்டு ‘வெனஸ்டே’ பட இயக்குநர் நீரஜ் பாண்டே ஒருமுறை என் நடிப்பை பார்த்து, இத்தனை நாட்களாக கேமராமேனாக நீ ஏமாற்றி இருக்கிறாய் என சொல்லி பாராட்டினார். அதை என்னால் மறக்க முடியாது.


 ‘சதுரங்க வேட்டை’ திரைப்படத்தில் காந்தி பாபு கதாபாத்திரத்தில் நட்ராஜ்

உங்களுடைய திரைப்பயணத்தில் ‘சதுரங்க வேட்டை’ மிக முக்கியமான திரைப்படம். அதில் நடிக்கும் வாய்ப்பு எப்படி கிடைத்தது? அப்படத்தை இயக்கிய எச்.வினோத் இன்று விஜய் 69 இயக்கும் அளவுக்கு உயர்ந்துள்ளார். அந்த அனுபவத்தை பற்றி சொல்லுங்கள்?

‘சதுரங்க வேட்டை’ படத்தில் எனக்கு குருவாக நடித்திருந்த தரணி சார் மூலமாகதான் எச். வினோத்தின் அறிமுகம் எனக்கு கிடைத்தது. அவர் என்னிடம் கதை சொல்லும்போதே எனக்கு படம் மிகவும் பிடித்துவிட்டது. பிறகு மனோபாலா சார்தான் அப்படத்தை தயாரிக்கிறார் என்றவுடனேயே கூடுதல் மகிழ்ச்சி எனக்கு ஏற்பட்டது. அந்த படம் ஜெயிக்கும் என தெரியும். ஆனால் இந்த அளவுக்கு பிரம்மாண்ட வெற்றி கிடைத்ததற்கு மிக முக்கிய காரணம் இயக்குநர் லிங்குசாமிதான். ஏனெனில், அவரின் திருப்பதி பிரதர்ஸ் பேனரில் படம் வெளிவந்ததால்தான் கூடுதல் கவனம் கிடைத்தது. இந்த வெற்றி மனோபாலா, எச். வினோத், லிங்குசாமி ஆகிய மூவரால்தான் சாத்தியமானது. அன்று என்னை இயக்கிய எச். வினோத், இன்று ‘விஜய் 69’ படத்தை இயக்கும் அளவிற்கு உயர்ந்திருக்கிறார் என்றால் அது அவரின் திறமைக்கு கிடைத்த வாய்ப்பாகவே நான் பார்க்கிறேன். சமீபத்தில்கூட அவரிடம் பேசி எனது வாழ்த்துகளை தெரிவித்தேன். கூடிய விரைவில் ஒரு பான் இந்தியா இயக்குநராக அவர் வளர்ச்சி அடைவார் என நான் நம்புகிறேன்.


'மகாராஜா' திரைப்படத்தில் விஜய் சேதுபதியுடன் 

இதுவரை நீங்கள் நடித்துள்ள படங்களில் உங்களுக்கு மிகவும் பிடித்த படம் எது? அடுத்தடுத்து என்னென்ன படங்கள் வெளிவர இருக்கின்றன?

நான் நடித்த படங்களிலேயே எனக்கு மிகவும் பிடித்த படமாக ஜெகன் ராஜசேகர் இயக்கிய ‘காட்ஃபாதர்’ திரைப்படத்தை சொல்லுவேன். அப்பா, மகன் பாசத்தை மையமாக கொண்டு வெளிவந்த இப்படம், கொரோனா நேரத்தில் ரிலீஸ் ஆனதால் சரியான வரவேற்பை பெறவில்லை. இதுபோக தற்போது ‘கங்குவா’ படத்தில் ஒரு நல்ல கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். வருகிற நவம்பர் மாதம் படம் ரிலீஸ் ஆக இருக்கிறது. தொடர்ந்து ‘சீசா’, ‘ரைட்’ ஆகிய படங்களில் போலீஸ் கதாபாத்திரத்திலும், அறிமுக இயக்குனர் பிரிட்டோ இயக்கிவரும் ‘நிறம் மாறும் உலகில்’ என்கிற வித்தியாசமான படத்தில் கதையின் நாயகனாகவும் நடித்து வருகிறேன். இது தவிர ஆர்.ஜே பாலாஜியுடன் இணைந்து ‘சொர்க்க வாசல்’ என்கிற படத்திலும் நடிக்கிறேன்.

Tags:    

மேலும் செய்திகள்