ஆளும் புதுசு! ஆட்டமும் புதுசு! பிக்பாஸில் சாதிப்பாரா விஜய் சேதுபதி?

பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பம் ஆகிவிட்டது. இனி நம் வீட்டு இல்லத்தரசிகள் துவங்கி இளசுகள் வரை, பல் போன பாட்டியிலிருந்து படித்த பட்டதாரிகள் வரை இது குறித்து தான் பேசப்போகிறார்கள்.

Update:2024-10-08 00:00 IST
Click the Play button to listen to article

பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பம் ஆகிவிட்டது. இனி நம் வீட்டு இல்லத்தரசிகள் துவங்கி இளசுகள் வரை, பல் போன பாட்டியிலிருந்து படித்த பட்டதாரிகள் வரை இது குறித்து தான் பேசப்போகிறார்கள். அடுத்த மூன்று மாதங்களுக்கு சமூக வலைதளங்களை தன் வசப்படுத்த உள்ள பிக்பாஸ் நிகழ்ச்சி பார்ப்பவர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்தாலும், போட்டியாளர்கள் சிலருக்கு நிச்சயம் அவஸ்த்தையை தான் கொடுக்க உள்ளது. இங்கு அறியப்படாதவர்கள் அரியணை ஏறுவதும், மிகவும் விரும்பப்பட்டவர்கள் வெறுத்து ஒதுக்கப்படுவதும் சர்வ சாதாரணமாக நடக்கும் நிகழ்வுகள்தான். அதிலும் இந்த முறை புதிய தொகுப்பாளராக நடிகர் விஜய் சேதுபதி களமிறங்கியிருப்பது கூடுதல் கவனத்தை இந்நிகழ்ச்சிக்கு பெற்றுத்தந்துள்ளது. ஏற்கனவே ஏழு சீசனாக கலக்கி வந்த கமல்ஹாசனையே கடந்த முறை கடுமையாக விமர்சித்து கலங்கடித்திருந்த ரசிகர்கள் இந்த முறை விஜய்சேதுபதிக்கு நல்ல வரவேற்பை கொடுப்பார்களா? விஜய் சேதுபதியின் முன் அனுபவம் பிக்பாஸ் நிகழ்ச்சியை வெற்றிகரமாக கொண்டு செல்ல கைகொடுக்குமா என்பது குறித்து இந்த தொகுப்பில் காணலாம்.

ஏன் இந்த மாற்றம்…?


பிக்பாஸ் நிகழ்ச்சி தொகுப்பாளராக விஜய் சேதுபதி 

‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியை எதிர்பார்த்து பார்க்க காத்திருப்பவர்கள் எந்த அளவுக்கு இருக்கிறார்களோ, அதே அளவுக்கு அந்த நிகழ்ச்சியை விமர்சனம் செய்யவும் இங்கு பல நபர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். இந்த நிகழ்ச்சி ஒரு சமூக சீர்கேடு என்று என்னதான் எல்லோரும் வசைபாடினாலும் நாளுக்குநாள் இதன் மீதான மோகம் அதிகரித்து அதை பார்க்காதவர்களும் ரசிகராக மாறிவிடும் நிகழ்வுகளும் அரங்கேறதான் செய்கிறது. அதற்கு மிக முக்கிய காரணம் போட்டியாளர்கள் கொடுக்கும் கண்டன்ட் ஒருபுறம் இருந்தாலும், இவை எல்லாவற்றையும் தாண்டி தொகுப்பாளரும் தவிர்க்க முடியாத ஒரு நபராக இருப்பதால்தான். தமிழ்நாட்டில் விஜய் தொலைக்காட்சியில் 2016-ஆம் ஆண்டில் இருந்து ஒளிபரப்பாகி வரும் ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியை ஏழு சீசன்களாக தொகுத்து வழங்கியது உலக நாயகன் கமல்ஹாசன்தான். அவருக்காகவே இந்த நிகழ்ச்சியை பார்க்க தொடங்கியவர்கள் இங்கு ஏராளம். அதிலும் அவர் தொகுத்து வழங்கும் விதம், அவர் கொடுக்கும் புத்தக அறிமுகம், புதிய ஆடைகள் அறிமுகம், இருதரப்பு நியாயங்களையும் கேட்டு அவர் கொடுக்கும் பதில்கள் ஆகியவை மிக நேர்த்தியாக இருப்பதோடு, போட்டியாளர்களையும் மிகச் சரியாக கணித்து தப்பு என்றால் கண்டிக்கவும் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக நிற்கவும் தவறாத குணம் இந்த நிகழ்ச்சிக்கு ஒரு மிகப்பெரிய பலமாக இருந்தது. இது தவிர ஒவ்வொரு முறையும் ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சி குறித்த அறிவிப்பு வரும்போதும் கமல் என்ன மாதிரியான கெட்டப்பில் தோன்றுவார்; என்ன பேச போகிறார் என்ற எதிர்பார்ப்பு அந்நிகழ்ச்சியை பார்க்கும் ஒவ்வொரு ரசிகர்கள் இடத்திலும் வரும்.


பிக்பாஸ் வீட்டிற்குள் விஜய் சேதுபதி என்ட்ரி ஆன தருணம் 

அதேபோல் இதுவரை ஏழு சீசன்களாக அவர் பேசிய “ஓடவும் முடியாது; ஒளியவும் முடியாது”, “நல்லவர் யார்; கெட்டவர் யார்”, “இது வெறும் ஷோ அல்ல; நம்ம லைஃப்”, “தப்புன்னா தட்டி கேட்பேன்; நல்லதுன்னா தட்டி கொடுப்பேன்”, “எதிர்பாராததை எதிர்பாருங்கள்”, இப்படியான வார்த்தைகளை உலகநாயகன் குரல்களில் கேட்கும் போது நமக்குள்ளே ஒரு சிலிர்ப்பு ஏற்பட்டிருக்கும். அந்த அளவுக்கு நம் வீடுகளிலும், சின்னத்திரையிலும் தாக்கத்தை ஏற்படுத்தி உலக நாயகன் கமலின் குரலாக ஒலித்து வந்த ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சி, தற்போது தொடங்கியுள்ள 8-வது சீசனில் இருந்து புது பரிமாணம் பெற்று விஜய் சேதுபதியின் குரலாக ஒலிக்க தொடங்கியுள்ளது. ஏற்கனவே சில சீசன்களில் கமலின் உடல்நிலை, தான் கமிட் ஆகி இருந்த படம் ஆகியவற்றின் காரணமாக நிகழ்ச்சியில் கலந்துகொள்ள முடியாத சூழல் ஏற்பட்ட போது அவரின் தோழியான நடிகை ரம்யா கிருஷ்ணன் வந்து தொகுத்து வழங்கி வரவேற்பை பெற்றார். அதேபோன்று டிஸ்னி ஹாட்ஸ்டாரில் 24 மணிநேரமும் ‘பிக்பாஸ் அல்டிமேட்’ என்ற ஷோ ஆரம்பித்தபோது அதனை உலக நாயகன் தொகுத்து வழங்க முடியாத சூழல் ஏற்பட, நடிகர் சிம்பு அதனை சிறப்பாக தொகுத்து வழங்கி எல்லோருடைய அன்பையும், பேராதரவையும் பெற்றார். இப்படியான நிலையில் மீண்டும் பிக்பாஸ் நிகழ்ச்சியை கமல்ஹாசனால் தொகுத்து வழங்க முடியாத சூழல் சில படங்களில் கமிட் ஆனதன் காரணமாக ஏற்பட்டது. இதனால் ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியில் தன்னால் பங்கேற்க முடியாது என ஏற்கனவே உலகநாயகன் அறிவித்திருந்த நிலையில், எதிர்பாராததை எதிர்பாருங்கள் என்ற தாரக மந்திரத்திற்கு ஏற்ப யாருமே எதிர்பார்க்காத சூழலில் இந்த முறை விஜய் சேதுபதி தொகுப்பாளராக களமிறங்கி கலக்க தொடங்கியுள்ளார்.

விமர்சனமும், சறுக்கலும்


கமலுக்கு பதிலாக பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய ரம்யா கிருஷ்ணன் & நடிகர் சிம்பு 

உலக நாயகன் கமல்ஹாசன் பங்கேற்கும் எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் அவரின் எதார்த்தமான பேச்சுகளும், சமூக சிந்தனையை தூண்டும் விதமாக அவர் சொல்லும் கருத்துகளும் மக்களின் கவனத்தை எப்போதுமே ஈர்க்கும் விதமாக இருக்கும். இதனாலேயே கமலின் நிகழ்ச்சிகளை பார்க்கும் பார்வையாளர்களின் எண்ணிக்கையும் அதிகம். இதனால்தான் கடந்த 7 சீசன்களாக கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சி தமிழ் மக்களை எளிதாக சென்றடைந்து ஏகோபித்த வரவேற்பை பெற்றிருந்தது. இருந்தும் முதல் 5 சீசன்கள் எந்த அளவுக்கு கமலுக்கு மக்களிடம் வரவேற்பையும், பாராட்டுகளையும் பெற்றுக்கொடுத்ததோ, அதே அளவுக்கான நெகட்டிவான விமர்சனங்கள் கமலுக்கு எதிராக ஆறு மற்றும் ஏழாவது சீசன்களில் கிடைத்தது. இதில் குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் கடந்த 7-வது சீசனில் பிரதீப் விஷயத்தில் கமல் எடுத்த முடிவுகள், அவரின் நடவடிக்கைகள் அவருக்கு மோசமான அனுபவங்களையும் , விமர்சனங்களையும் பெற்று கொடுத்தன. எதையும் ஆராய்ந்து, தீர விசாரித்து யோசித்து முடிவு எடுக்கும் கமல், பிரதீப் விஷயத்தில் தடாலடியாக பிக்பாஸ் வீட்டில் உள்ளவர்கள் போட்ட ஓட்டின் அடிப்படையில் அவரால் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று கூறி ரெட் கார்டு கொடுத்து அனுப்பிய நிகழ்வு மக்கள் மத்தியில் மிகவும் பேசுபொருளாக மாறி மிகப்பெரிய சறுக்கலை அவருக்கு ஏற்படுத்தியது. ஓரு கட்டத்தில் இனி கமல் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க வேண்டாம், அவரின் முடிவுகள் சரியாக இல்லை. அவர் அரசியல் பேச மட்டும்தான் இந்த மேடையை நன்கு பயன்படுத்தினார். அதனால் இனி அடுத்தடுத்த சீசன்களில் அவருக்கு பதிலாக புதிய ஆளை தொகுப்பாளராக போடுங்கள். முடிந்தால் சிம்புவையே போடுங்கள் என்றெல்லாம் கருத்துகள் எழுந்தன.


7-சீசன்களாக கமல்ஹாசனின் குரலாக ஒலித்த பிக்பாஸ் 

அதன் எதிரொலியா? இல்லை உண்மையாகவே கமல் இப்போது படங்களில் கமிட் ஆகி மிகவும் பிசியாக நடித்து வருவதாலா? என்று தெரியவில்லை. கமலுக்கு பதிலாக இந்தமுறை விஜய் சேதுபதியை களத்தில் இறக்கியுள்ளது விஜய் டிவி. விஜய் சேதுபதி நடிகராக பல தடைகளை தாண்டி ஜெயித்து உச்ச நட்சத்திரமாக சிம்மாசனமிட்டு அமர்ந்திருந்தாலும் தொகுப்பாளராக எந்த அளவுக்கு வெற்றி பெறுவார் என்று தெரியவில்லை. ஏற்கனவே சன் டிவியில் 2021 ஆம் ஆண்டு பிரம்மாண்டமாக நடத்தப்பட்ட மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியை சற்று வித்தியாசமான முறையில் தொகுத்து வழங்கி தொகுப்பாளராக களமிறங்கிய விஜய் சேதுபதிக்கு, ஏனோ தெரியவில்லை அந்த நிகழ்ச்சி மக்களிடையே பெரியளவில் வரவேற்பை பெற்று கொடுக்கவில்லை. இருந்தும் செய்யும் வேலையை மிகவும் நேசித்து கடமை தவறாமல் செய்து முடிக்கும் விஜய் சேதுபதி அந்த நிகழ்ச்சியை தனக்கே உரிய ஸ்டைலில் தொகுத்து வழங்கி முடித்துவிட்டு படங்களில் கவனம் செலுத்த ஆரம்பித்தார். அப்படி அவரது நடிப்பில் அண்மையில் வெளிவந்த ‘மகாராஜா’ திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனதை தொடர்ந்து, தற்போது அடுத்தடுத்த படங்களில் கமிட் ஆகி மிகவும் பிஸியாக நடித்து வருகிறார். அதேவேளையில் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க விஜய் சேதுபதி வந்திருப்பது மிகப்பெரிய எதிர்பார்ப்பை மக்களிடையே ஏற்படுத்தியுள்ளது.

சாதிப்பாரா விஜய் சேதுபதி


பிக்பாஸ் சீசன் 8-ல் கமலுக்கு பதிலாக தொகுப்பாளராக களமிறங்கிய விஜய் சேதுபதி 

மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு நடுவே அக்டோபர் 6ஆம் தேதி பிக்பாஸ் நிகழ்ச்சியின் 8வது சீசன் கோலாகலமாக ஆரம்பமானது. கமலுக்கு பதிலாக இந்த சீசனை விஜய் சேதுபதி தொகுத்து வழங்க போகிறார் என்றதுமே, அவர் எப்படி தொகுத்து வழங்க இருக்கிறார் என்பதை பார்ப்பதற்காகவே பிக்பாஸ் ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருந்தனர். இந்த முறை ஆரம்பமே அமர்க்களமாக தாடியும், மீசையும் இல்லாமல் வித்தியாசமான தோற்றத்தில் வந்த விஜய் சேதுபதி பிக்பாஸ் வீட்டை சுற்றிக்காட்டி விட்டு, தனக்கே உரிய பாணியில் கள நிலவரத்தையும், வீட்டின் அமைப்பையும் விவரித்தார். குறிப்பாக ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையே நடக்கும் போட்டியே பிரதானமாக இருக்கப் போகிறது என்பதை வீட்டின் அமைப்பே உணர்த்தி இருந்தது. பிறகு போட்டியாளர்களை ஒவ்வொருவராக விஜய் சேதுபதி அறிமுகப்படுத்த ‘சூப்பர் செம போ’ என நம்மையும் மீறி நம் உதடுகள் கூறும் வகையில் பிக்பாஸ் வீட்டிற்குள் செல்பவர்கள் இடம்பெற்றிருந்தனர். ஏனெனில் ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு என விஜய் சேதுபதி ப்ரமோவில் பேசிய வசனம் போலவே இந்த முறை பெரும்பாலான போட்டியாளர்கள் நாம் நன்கு அறிந்த பிரபலங்கள்தான். முதல் போட்டியாளராக பரபரப்புக்கு பஞ்சம் இல்லாத தயாரிப்பாளர் ரவீந்தரை அறிமுகம் செய்து வைத்த விஜய் சேதுபதி, தொடர்ந்து நடிகை தர்ஷா குப்தா, குக் வித் கோமாளியில் வரும் சுனிதா, விஜய் சேதுபதியின் 'மகாராஜா' படத்தில் நடித்திருந்த சச்சனா நமிதாஸ், சின்னத்திரை பிரபலங்கள் ஆன அருண் பிரசாந்த், பவித்ரா ஜனனி, சத்யா, தர்ஷிகா, அர்னவ், அன்ஷிதா நடிகர் ரஞ்சித், விஜே களான தீபக், விஷால், ஜாக்குலின் உட்பட 18 போட்டியாளர்களை மேடையேற்றி பிக்பாஸ் வீட்டிற்குள் அனுப்பி வைத்தார் விஜய் சேதுபதி.


போட்டியாளர்கள் அறிமுக நிகழ்விலேயே மக்கள் மனதில் சிறந்த இடம்பிடித்த விஜய் சேதுபதி 

இந்த அறிமுக நிகழ்வின்போது தன் பாணியில் மிகவும் கனிவுடன் நடந்து கொண்ட விஜய் சேதுபதி, போட்டியாளர்கள் ஒவ்வொருவரிடமும் ஒரு நண்பனை போல மிக இயல்பாக பேசி அவர்களின் குடும்ப பின்னணி, அவர்கள் எதற்காக பிக்பாஸ் வந்தார்கள் என எல்லாவற்றையும் கேட்டறிந்து அவர்களை உற்சாகப்படுத்தி வீட்டிற்குள் அனுப்பினார். இருப்பினும் போட்டியாளர்கள் தவறு செய்தால் நான் தட்டிக் கேட்கவும் தயங்க மாட்டேன் என அவ்வப்போது தன் தோரணையிலேயே வெளிப்படுத்திய விஜய் சேதுபதி, சில தக்லைஃப் சம்பவங்களையும் செய்து கை தட்டல்களையும் அள்ளினார். இப்படி முதல் நாளே சிக்ஸர் அடித்துள்ள விஜய் சேதுபதி நிச்சயம் கமல் இல்லாத இடத்தை நிரப்பிவிடுவார் என்ற நம்பிக்கையை கொடுத்திருந்தாலும், போட்டியாளர்களின் குணமும் முன் அனுபவமும் அவர்களுடனான நெருக்கமும் விஜய் சேதுபதிக்கு சில அழுத்தத்தை கொடுக்கலாம். உதாரணமாக போட்டியாளர்களில் ஒருவரான தீபக் விஜய் சேதுபதியை விட சீனியர், அதேபோல் நடிகர் என்.எஸ். கிருஷ்ணன் குடும்பத்தை சேர்ந்த சத்யா, ‘மகாராஜா’ புகழ் சச்சனா நமிதாஸ் போன்றோர் விஜய் சேதுபதிக்கு மிகவும் நெருக்கமானவர்கள். இவர்கள் தவிர நடிகர் ரஞ்சித், சின்னத்திரை நடிகர் அர்னவ் போன்ற பலரின் சிந்தனைகள் விஜய் சேதுபதியின் சித்தாந்தத்திற்கு நேரெதிராக இருக்கவும் வாய்ப்புள்ளது. இவைகள் தீர்ப்பு வழங்கும்போது சில தடுமாற்றத்தை கொடுக்கலாம் எனவும் சொல்லப்படுகிறது. இத்தனை தடைகள் இருந்தாலும் சீரியலில் தன் பயணத்தை துவங்கி, சினிமாவில் ஒரு துணை நடிகராக களமிறங்கி இன்று சிறந்த தயாரிப்பாளராக, சிறந்த வில்லனாக, இந்திய அளவில் பிரபலமான சிறந்த நடிகராக அடையாளம் பெற்றுள்ள விஜய் சேதுபதி இவற்றை எல்லாம் அசால்டாக கையாண்டு விடுவார் என்பதே அவரது ரசிகர்களின் எதிர்பார்ப்பு. மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியில் விட்டதை நிச்சயம் பிக்பாஸில் விஜய் சேதுபதி பிடித்துவிடுவார் என்ற நம்பிக்கை ஒருபுறம் இருந்தாலும், பிற சேனல்களின் TRP-யை இறக்கி நம் BP-யை எகிற வைக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி… இந்த முறை யாருடைய ஃப்யூஸ் கேரியரை பிடிங்கி யார் வாழ்க்கையில் ஒளியேற்ற போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Tags:    

மேலும் செய்திகள்