வாய்ப்புக்காக அட்ஜெஸ்ட் செய்வது தவறு - மாடல் ஐஸ்வர்யா வடிவு

தனது துணிச்சலான போட்டோஷூட் மூலமாக இணையத்தில் பிரபலமாகி வரும் ஐஸ்வர்யா வடிவு தனது மாடலிங் பயணம் குறித்தும், தான் சந்தித்த மோசமான நிகழ்வுகள் குறித்தும் நம்முடன் பகிர்ந்துக் கொண்டார்.

Update:2024-10-01 00:00 IST
Click the Play button to listen to article

இன்று வயது வித்தியாசம் இன்றி பல பெண்கள் பயணிக்கும் ஒரு துறைதான் மாடலிங். மாடலிங் செய்தால் நல்ல வருமானம் கிடைக்கும், நாம் அன்றாடம் பார்த்து ரசித்து வரும் சினிமா மற்றும் சின்னத்திரையில் நடிக்க வாய்ப்பு கிடைக்கும் என எண்ணி பல பெண்கள் இங்கு வந்தாலும், நிராகரிப்பையும் அவமானங்களையும் சகித்து பழகினால்தான் நாம் இங்கு சாதிக்க முடியும் என்கிற நிலைதான் இருக்கிறது. அந்த வகையில் தனது போல்ட் அதாவது துணிச்சலான போட்டோஷூட் மூலமாக இணையத்தில் பிரபலமாகி வரும் ஐஸ்வர்யா வடிவு தனது மாடலிங் பயணம் குறித்தும், தான் சந்தித்த மோசமான நிகழ்வுகள் குறித்தும் நம்முடன் பகிர்ந்துகொண்டார். ஏற்கனவே பகிரப்பட்ட பதிவில் தனது தனிப்பட்ட வாழ்க்கை, அட்ஜெஸ்ட்மெண்ட் பிரச்சினை போன்றவற்றை பேசியிருந்த ஐஸ்வர்யா, இந்த பதிவில் பெண்கள் எந்த ஒரு பின்புலமும் இல்லாமல் சினிமா அல்லது மாடலிங்கில் நுழைய முடிவு செய்தால் என்ன மாதிரியான மனநிலையில் இருக்க வேண்டும் என்பதை வெளிப்படையாக பேசியுள்ளார். அந்த பேட்டியின் தொகுப்பை இங்கே காணலாம்.

சமீபத்தில் நடிகை ஷகிலா உங்களுடன் நடத்திய நேர்காணல் ஒன்றில் பல கேள்விகள் கேட்டிருந்தார். அப்போது நீங்கள் அவரை ரோல் மாடலாக நினைப்பதாகவும் கூறியிருந்தீர்கள். அந்த நிகழ்வு குறித்து சொல்லுங்கள்?

நான் ஒரு கவர்ச்சி மங்கையாக வலம் வருகிறேன் என்பதால் ஷகிலா அவர்களை ரோல் மாடலாக எடுத்துக் கொள்ளவில்லை. அவரது தனிப்பட்ட வாழ்க்கையும் எனக்குள் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. குறிப்பாக அவரை சந்திப்பதற்கு முன்பாக அவர் மீது எனக்கு மிகப்பெரிய பயமே இருந்தது. காரணம் அவரது முந்தைய பேட்டிகளில் அவர் முன்வைத்த தைரியமான பல கேள்விகள் எனக்குள் அச்சத்தை ஏற்படுத்தி இருந்தது. ஆனால் அவ்வாறு நடக்கவில்லை. அவர் என்னிடம் ஒரு தோழியை போல் நடந்து கொண்டார். அதேபோல் அறிவுரை எதுவுமே கூறாமல் உனக்கு விருப்பப்பட்டதை தொடர்ந்து செய், சரியாக செய் ‘நீ நல்லா வருவ’ என அன்போடு அரவணைத்து பேசினார். அந்த தருணத்தில் என் அம்மா என்னுடன் இருந்தது ஒரு மகிழ்ச்சி என்றால், ஷகிலா அவர்கள் என் அம்மாவிடம் ‘ஒரு சிங்கத்த பெத்து வச்சுருக்கீங்க’ எனக் கூறி என்னை பாராட்டியது இரட்டிப்பு மகிழ்ச்சியை தந்தது. அந்த நிகழ்வை என்றுமே என்னால் மறக்கவே முடியாது.


நடிகை ஷகிலா குறித்து மனம் திறந்து பேசிய மாடல் ஐஸ்வர்யா வடிவு

இன்று பல பெண்கள் எந்த ஒரு புரிதலும் இல்லாமல் மாடலிங், சினிமா போன்ற துறைகளில் நுழைந்து சாதிக்க முயல்கிறார்கள். அவர்களுக்கு நீங்கள் சொல்ல விரும்புவது என்ன?

யோசிக்காமல் எந்த துறையிலும் காலடி எடுத்து வைக்காதீர்கள். பிறகு ஒரு முடிவு எடுத்துவிட்டால் ஒருபோதும் பின்வாங்காதீர்கள். நாம் எடுக்கின்ற முடிவினால் எப்படிப்பட்ட பின்விளைவுகள் வந்தாலும் என்னால் எல்லாவற்றையும் சமாளித்து சாதிக்க முடியும் என்கிற எண்ணம் கொண்டவர்கள்தான் இந்த துறைக்குள் வர மிக தகுதியானவர்கள் என நான் சொல்லுவேன். பணம், புகழ் போன்றவற்றை கடந்து ஒரு முடிவோடு இங்கு பயணித்தால்தான் நம்மால் இங்கு சாதிக்க முடியும். அதேவேளையில் நமக்கு வருகின்ற ஒவ்வொரு வாய்ப்பையும் பயன்படுத்துவதற்கு முன்பாக ஒரு தடவைக்கு நூறு தடவை அலசி ஆராய்ந்து முடிவு செய்யுங்கள். ஏனெனில், இங்கு நாம் சந்திக்கும் பெரும்பாலான நபர்கள் நம்மை பயன்படுத்திக் கொள்ளதான் பார்ப்பார்கள். அது பணமாகவும் இருக்கலாம், உறவாகவும் இருக்கலாம், இல்லை மனதளவில் நம்மை அவர்கள் வசப்படுத்தி வேறுவிதமான விஷயங்களுக்கும் பயன்படுத்த முயலலாம். இவற்றை எல்லாம் நம்மால் சமாளித்துவிட முடியும். நல்லது, கெட்டது எதுவானாலும் அவற்றை எல்லாம் கடந்து பயணிக்க முடியும் என்கிற சிந்தனை உடையவர்கள்தான் இங்கு சாதிக்க முடியும். இங்கு சம்பாதிக்க வேண்டும் என்கிற எண்ணத்தை தாண்டி நம்மை சாகடிக்கத்தான் பல நபர்கள் முயல்வார்கள். அவற்றை மீறி நம்மால் பயணிக்க முடியும் என்கிற எண்ணம் கொண்டவர்கள் நிச்சயம் வரலாம்.


தனது துணிச்சலான போட்டோஷூட்களால் ரசிகர்களை கவர்ந்த மாடல் ஐஸ்வர்யா

சினிமா, மாடலிங் இரண்டிற்குமான வித்தியாசத்தை எப்படி பார்க்கிறீர்கள்?

மாடலிங்கை பொறுத்தவரை நம் திறமையை வெளிப்படுத்த ஒரு கேமிரா இருந்தால் போதும், சில நபர்களே நம்மை சுற்றி இருப்பார்கள். ஆனால் சினிமா அப்படியல்ல பல கேமராக்கள் நம்மை சுற்றி இருக்கும், ஒரு யூனிட்டே நம்மை சுற்றிதான் இருப்பார்கள். அதனால் மாடலிங்கோடு சினிமாவை ஒப்பிடும்போது அதிக உழைப்பு தேவைப்படுகிறது. இங்கு படத்தொகுப்பு துவங்கி ஒளிப்பதிவு, இடத்தேர்வு என அனைத்துக்குமே கடினமான உழைப்பு தேவைப்படுகிறது. இந்த வித்யாசத்தைதான் இவ்விரண்டிற்கும் இடையே நான் பார்க்கிறேன்.

உங்கள் பார்வையில் காதலை எப்படி பார்க்கிறீர்கள்? உங்கள் அம்மா, அப்பாவை தவிர வேறு யார் மீது அதிக அன்பு காட்ட விரும்புவீர்கள்?

அன்பு, காதல் போன்ற விஷயங்கள் யார் மீது எப்போது வரும் என யாராலும் சொல்ல முடியாது. அது ஒரு சின்ன நாய் குட்டி துவங்கி மனிதர்கள் வரை யார் மீது வேண்டுமானாலும் வரலாம். ஆனால் நாம் செலுத்துகிற அன்பில் உண்மை இருக்க வேண்டும். பொய், பித்தலாட்டம் இருக்கக்கூடாது என எண்ணுபவர் நான்.


மயக்கும் பார்வையை வீசும் ஐஸ்வர்யா வடிவு

நீங்கள் மறுஜென்மம் எடுத்து பிறக்கக்கூடிய வாய்ப்பு கிடைத்தால், எந்த மாதிரியான வாழ்க்கையை எதிர்பார்க்கிறீர்கள்?

எனக்கு இந்த வாழ்க்கையே மிகவும் பிடித்து இருக்கிறது. குறிப்பாக இதே அம்மாவிற்கு மகளாக பிறந்தால் மிகுந்த மகிழ்ச்சியடைவேன். இருந்தும் நோய் இல்லாத வாழ்க்கையை தர சொல்லி கடவுளிடம் கோரிக்கை வைப்பேன். காரணம் வியாதி இல்லாத மனிதரும் இல்லை, என் வாழ்க்கையில் அதனால் ஏற்படாத மனஉளைச்சலும் இல்லை. எனவே பணம், பொருள் என எப்பேர்பட்ட கஷ்டத்தை கொடுத்தாலும் பரவாயில்லை, வியாதி இல்லாத வாழ்க்கையை தர சொல்லி கடவுளிடம் வேண்டுவேன்.


மாடலிங் துறையில் பிரகாசிக்க கடுமையாக போராட வேண்டியுள்ளது - ஐஸ்வர்யா வடிவு

சமீபகாலமாக ஊடக வெளிச்சம் தொடர்ந்து உங்கள் மீது விழுவதை பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

நிச்சயமாக மகிழ்ச்சியடைகிறேன். குறிப்பாக எங்களை போன்ற கவர்ச்சிகர மங்கைகள் என்று மட்டும் அல்லாமல், எல்லோருடைய வாழ்க்கையிலும் பல கஷ்ட நஷ்டங்கள் இருக்கிறது. இதில் என்னை போன்று பல பெண்கள் இந்த மாடலிங் துறையில் பிரகாசிக்க போராடி வரும் அதேவேளையில், அவர்களில் ஒருவராக, அவர்கள் சொல்ல விரும்பும் கருத்துக்களை வெளிப்படுத்தும் வாய்ப்பை பெற்றவளாக என்னை பார்க்கிறேன். அது துறை சார்ந்து என்று மட்டும் அல்லாமல் தனிப்பட்ட வாழ்க்கையிலும் நாங்கள் படும் சிரமங்களை வெளிப்படுத்த இந்த ஊடகங்கள் உதவி புரிகின்றது. அந்த வகையில் என்னுடைய கருத்துக்களை வெளிப்படுத்த வாய்ப்பு தந்த உங்களுக்கு நான் நன்றி கூற விரும்புகிறேன்.

Tags:    

மேலும் செய்திகள்