"ஜெயம் ரவி - ஆர்த்தி" பிரிவின் உண்மை பின்னணி! - இருவரும் என்ன சொல்கிறார்கள்?

தமிழ் சினிமா ரசிகைகளின் கனவு கண்ணனாக இன்றும் முன்னணியில் வலம் வருபவர்தான் நடிகர் ஜெயம் ரவி.

Update:2024-09-17 00:00 IST
Click the Play button to listen to article

தமிழ் சினிமா ரசிகைகளின் கனவு கண்ணனாக இன்றும் முன்னணியில் வலம் வருபவர்தான் நடிகர் ஜெயம் ரவி. இவர், தந்தைக்கு நல்ல மகனாக, உடன் பிறந்தவர்களுக்கு நல்ல தம்பியாக, மனைவி மற்றும் குழந்தைகளுக்கு பாசமான கணவன் மற்றும் அப்பாவாக, திரையில் மிகச்சிறந்த நடிகராக என அனைத்துக்கும் உதாரணமாக சொல்லப்பட்டார்; பார்க்கப்பட்டார். ஆனால், இன்று அதில் ஒரு சில விஷயங்கள் தலைகீழாக மாறி அவரது வாழ்க்கையையே புரட்டி போட்டுள்ளன. அதுதான் மனைவி ஆர்த்தியுடனான விவாகரத்து முடிவு. நடிகர் ஜெயம் ரவியின் இந்த விவாகரத்து சர்ச்சை கடந்த சில நாட்களாக விவாத பொருளாக மாறியுள்ளது. ஆர்த்தியை பிரியப் போகிறேன் என்ற ஜெயம் ரவியின் பதிவும், இது என்னுடைய சம்மதம் இல்லாமல் வெளியிடப்பட்ட அறிக்கை என்ற ஆர்த்தியின் பதிவும் அடுத்தடுத்து வெளியாகி, இவர்களுடைய பிரச்சினையை வெட்ட வெளிச்சம் போட்டு காட்டிக் கொண்டிருக்கின்றன. 18 ஆண்டுகளாக தொடர்ந்த இந்த காதல் தம்பதிகளின் சந்தோஷமான வாழ்க்கை முடிவுக்கு வர காரணம் என்ன? இவர்களின் காதல் எப்போது? எப்படி தொடங்கியது? பிரிவு அறிவிப்புக்கு முன்னர் நிகழ்ந்தது என்ன? போன்ற முழு விவரங்களை இங்கு பார்ப்போம்.

பிரிவின் வலி

சினிமா பின்புலம் உள்ள ஒரு பெரிய குடும்பத்தில், எடிட்டர் மோகனின் இளைய மகன், இயக்குநர் மோகன் ராஜாவின் தம்பி என்ற அறிமுகத்தோடு நமக்கெல்லாம் பரிச்சயம் ஆனவர்தான் நடிகர் ஜெயம் ரவி. நல்ல வசதி வாய்ப்புகள் உள்ள குடும்பத்தில் பிறந்திருந்தாலும், நம்மை போன்று ஒரு சாமானியனாகதான் வளர்ந்துள்ளார். எந்தவொரு இடத்திலும் தான் ஒரு பெரிய படத்தொகுப்பாளரின் மகன் என்பதை வெளிக்காட்டிக்கொள்ளாமல் உதவி இயக்குநராக தன் பயணத்தை தொடங்கி, இயக்குநராக முட்டி மோதிக்கொண்டிருந்த சமயத்தில்தான் அப்பா மற்றும் அண்ணனின் உதவியுடன் ‘ஜெயம்’ திரைப்படத்தின் மூலம் நடிகராக காலடி எடுத்து வைத்தார் ரவி. முதல் படம் தந்த வெற்றியால் அவரின் ரவி என்ற பெயருடன் ஜெயமும் ஒட்டிக்கொள்ள இனி எல்லாம் ஜெயம் என்று தன் இயக்குநர் கனவை ஒத்திவைத்துவிட்டு முழுநேர நடிகராக களமிறங்கினார். அப்படி ஒரு நடிகராக தமிழ் திரையுலகிற்குள் நுழைந்து பல வெற்றி திரைப்படங்களை இன்றும் கொடுத்துவரும் ஜெயம் ரவி, காதல், ஆக்சன், குடும்ப சென்டிமென்ட், கமர்ஷியல் என எல்லாவிதமான கதை தேர்வுகளிலும் நடித்து வெற்றி வாகை சூடி வருகிறார். இவர் படங்களில் மட்டும் ஹீரோ அல்ல, நிஜ வாழ்விலும் உண்மையாகவே பார்ப்பதற்கும், பழகுவதற்கும் இனிமையான மனிதர்.


'ஜெயம்' திரைப்படத்தில் ரவியை அறிமுகம் செய்துவைத்த அண்ணன் மோகன் ராஜா  

இவரைப் போன்றுதான் ஜெயம் ரவியின் மனைவி ஆர்த்தியும். இவரும் சாதாரண குடும்பத்தில் பிறந்தவர் கிடையாது. நல்ல சினிமா பின்புலம் உள்ள குடும்பத்தில், அதுவும் சவால்களும், போட்டிகளும் நிறைந்த தொலைக்காட்சி தொடர்கள் தயாரிக்கும் துறையில் தனியொரு பெண்ணாக காலூன்றி இன்று திரைப்படங்களும் தயாரித்து, வெற்றி பெண்மணியாக வலம்வரும் சுஜாதா விஜயகுமாரின் மூத்த மகள் ஆவார். சென்னை சாந்தோம் சாலையில் கல்பனா ஹவுஸ் என்றால் தமிழ் திரையுலகில் தெரியாதவர்களே யாரும் இருக்க முடியாது. மைசூர் மகாராஜா, ஆர்த்தியின் பாட்டி கல்பனாவுக்கு வழங்கிய அந்த இடத்தில்தான் 1980 மற்றும் 90-கால கட்டங்களில் பெரும்பாலான திரைப்படங்களின் காட்சிகள் படமாக்கப்பட்டு வந்தன. சிவாஜி கணேசன் தொடங்கி ரஜினி, கமல் என அவர்கள் வீட்டிற்கு வந்து நட்பு பாராட்டி செல்லாத பிரபலங்களே இல்லை எனலாம். அப்படிப்பட்ட ஆர்த்தியின் குடும்பத்தில் சினிமா வாடை இருந்தாலும், அவருக்கு என்னவோ அதன்மீது பெரிதாக ஆர்வம் இருந்தது இல்லை. அதனால்தான், தன் தந்தை விஜயகுமாரின் வழியை பின்பற்றி பிசினஸ் தொடர்பாக ஸ்காட்லான்ட்வரை சென்று படித்து முடித்துள்ளார்.


சீரியல் மற்றும் திரைப்படங்களை தயாரித்துவரும் ஆர்த்தியின் அம்மா சுஜாதா விஜயகுமார் 

இப்படியான குடும்ப பின்புலம் கொண்ட ஜெயம் ரவி-ஆர்த்தி ஜோடி காதல் திருமணம் செய்துகொண்டு இரண்டு மகன்கள் என்றான பிறகு இப்போது விவாகரத்து என்னும் முடிவுக்கு வந்துள்ளனர். இவர்கள் இருவரும் விவாகரத்து செய்யப் போகிறார்கள் என்ற தகவல், கடந்த சில மாதங்களாகவே சமூக வலைதளங்களில் தீயாய் பரவி சலசலப்பை ஏற்படுத்தி அவர்களின் ரசிகர்கள் மத்தியில் ஒருவித கலக்கத்தை உண்டாக்கியது. காரணம் ஜெயம் ரவி நல்ல மனிதர். அவரின் வாழ்க்கை இப்படி ஆக வேண்டாமே. அழகான இந்த ஜோடி தங்கள் வருத்தங்களை பேசி தீர்த்துக் கொண்டு குழந்தைகளுக்காக சுமூகமாக வாழ்ந்தால் நன்றாக இருக்கும் என்று அவரவர் விருப்பத்தை கூறி வந்தனர். திருமண வாழ்வின் துயரமான தருணம் என்பது, வெற்றிகரமாக, பலரும் பார்த்து பொறாமைப்படும் படியான தம்பதியாராக வாழ்ந்து, விவகாரத்து என்னும் கடினமான நிமிடங்களை நோக்கி நகருவதுதான். அப்படியான ஒரு நிகழ்வு தற்போது இவர்களின் வாழ்விலும் ஏற்பட்டுள்ளது. வாழ்வில் நாம் நேசித்தவர்கள், நேசிப்பவர்கள் அனைவரும் இறுதிவரை நம்மோடு இருந்துவிட்டால் , பிரிவின் வலி என்னவென்று தெரியாமல் போய்விடும் என்று பலரும் சொல்ல கேட்டிருப்போம். அப்படியான ஒரு பிரிவின் வலியைத்தான் இருவரும் இப்போது அனுபவிக்க தொடங்கியுள்ளனர்.


மனைவி ஆர்த்தி மற்றும் மகன்களுடன் நடிகர் ஜெயம் ரவியின் அழகிய புகைப்படம்

உருகி உருகி காதல்

திரையுலக ஜோடிகள் இணையும்போது எப்படி கொண்டாட்டமும், கோலாகலமும் இருக்குமோ, அது அவர்களின் வாழ்க்கை முழுக்க தொடர வேண்டும், நீடித்து நிலைத்து இருக்க வேண்டும் என்றுதான் எல்லோருமே எண்ணுவார்கள். அப்படி திரையுலகில் அஜித் - ஷாலினி தொடங்கி சூர்யா - ஜோதிகா, தனுஷ் - ஐஸ்வர்யா, பிரசன்னா - சினேகா என பலரின் வரிசையில் முக்கியமாக பார்க்கப்பட்டது ஜெயம் ரவி - ஆர்த்தி ஜோடிதான். மிக அழகான அதேநேரம் பலரும் பார்த்து பொறாமைப்படும்படியான தம்பதியராக மகிழ்ச்சியாக நடைபோட்டுவந்த இவர்களின் காதல் கதை என்பது பல சுவாரஸ்யமான நிகழ்வுகளை கொண்டது. ஜெயம் ரவி, ஆர்த்தி இருவரும் சினிமா பின்புலம் உள்ள குடும்பத்தில் உள்ளவர்கள்தான் என்றாலும் அவர்களின் பாதை என்பது வேறு வேறு. அதனால்தான் இருவருக்குமான அறிமுகம் என்பது எதிர்பாராதவிதமாக ஒரு பொது நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போது ஏற்பட்டுள்ளது. முதலில் நட்பாக ஆரம்பித்த அந்த அறிமுகம் நாளாக நாளாக ஒருவருக்கொருவரின் நடவடிக்கைகள் பிடித்துப்போய் ஒரு கட்டத்தில் அது காதலாக மாறியுள்ளது. பிறகு சிறிது காலம் அந்த காதலை வீட்டிற்கு தெரியாமல் மறைத்து வந்த ஜெயம்ரவி - ஆர்த்தி ஜோடி, ஒரு கட்டத்தில் தங்களது காதலை பெரியவர்களிடம் சொல்லி, இருவீட்டாரின் சம்மதத்துடன் 2009-ஆம் ஆண்டு ஜூன் 4-ஆம் தேதி அன்று திருமணம் செய்துகொண்டனர். இருவரது சந்திப்பில் தொடங்கி தம்பதியர்வரை கிட்டத்தட்ட 18 ஆண்டுகள் மிகவும் சந்தோஷமாக சென்று கொண்டிருந்த இவர்களின் வாழ்க்கையில் யார் கண்பட்டதோ இன்று மணமுறிவு என்ற இடத்தில் வந்து நிற்கின்றனர்.


ஜெயம் ரவி - ஆர்த்தி விவாகரத்துக்கு பின்னால் நடிகர் தனுஷ் இருப்பதாக பரவும் வதந்தி

ஜெயம் ரவி ஓரளவுக்கு நட்சத்திர ஹீரோவாக வலம்வர ஆரம்பித்த நேரத்தில் ஆர்த்தியை காதலித்ததால், தன்னுடைய காதல் யாருக்கும் தெரிந்துவிட கூடாது என்று ஹோட்டல், பார்க் போன்ற பொது இடங்களில் இருவரும் சந்தித்து பேசாமல், தனது காரில் குறுகிய தொலைவிலேயே டிராவல் செய்து யூட்டர்ன் போட்டு, யூட்டர்ன் போட்டு தங்களின் அன்பை பரிமாறிக் கொண்டிருக்கிறார்கள். அதுமட்டுமின்றி ஜெயம் ரவி, ஆர்த்தியை பார்ப்பதற்காக தன் வீட்டில் உள்ளவர்களுக்கே தெரியாமல் வீட்டு சுவரை ஏறி குதித்து சென்று இரவில் பார்த்து வருவாராம். இந்த நினைவுகளை எல்லாம் என்னால் மறக்கவே முடியாது என்று தனது பேட்டி ஒன்றில் ஜெயம் ரவி தெரிவித்திருந்த நிகழ்வு, இப்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. அதேபோன்றுதான் ஆர்த்தியும், எனக்கு கிடைத்த கணவர் மாதிரி எல்லோருக்கும் கிடைக்க வேண்டும் என்று நினைப்பேன். அவருக்கு சிறந்த கணவர் என்ற அடிப்படையில் 100 மதிப்பெண்கள் கூட கொடுப்பேன். ஏனென்றால், ரவி வேலை நிமித்தமாக பல முக்கியமான தருணங்களில் என்னுடன் இல்லாமல் போயிருந்தாலும், அவர் என்னுடன் இருக்கும்போது ஒரு குழந்தையை போல்தான் என்னை பார்த்துக்கொள்வார். என் முதல் மகன் ஆரவ் வயிற்றில் இருந்தபோதுகூட நான் எடுக்கும் வாந்திகளை கையில் ஏந்தி துடைப்பார். ஏதாவது சாப்பிட ஆசைப்பட்டால் உடனே சமைத்து கொடுப்பார். அந்த அளவுக்கு என்னை காதலித்தார் என்று தன் பங்கிற்கு பேசிய நிகழ்வுகளும் வைரலாக்கப்பட்டு வருகிறது. இப்படி நல்ல புரிதலோடு, ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுக்காமல் உருகி உருகி காதலித்து வாழ்ந்துவந்த இந்த கியூட்டான ஜோடி இன்று பிரிவதாக அறிவித்திருப்பது ஒட்டுமொத்த திரையுலகை மட்டுமின்றி, அவர்களின் ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.


ஜெயம் ரவி - ஆர்த்தி ஜோடியின் கியூட்டான புகைப்படங்கள்

எது உண்மை ?

கடந்த செப்டம்பர் 09-ஆம் தேதி அன்று நடிகர் ஜெயம் ரவி, தனது பிறந்தநாளுக்கு ஒருநாள் முன்பாக மனைவி ஆர்த்தியை பிரிவதாக கூறி அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அவரின் அந்த அறிக்கையில் "நீண்ட யோசனைக்கு பிறகுதான் மனைவி ஆர்த்தியுடனான திருமண பந்தத்தில் இருந்து விலகுவது என்ற ஒரு கடினமான முடிவை எடுத்துள்ளேன். இந்த முடிவு எளிதாக எடுக்கப்பட்டதல்ல. என்னை சார்ந்தவர்களின் நலனை கருத்தில் கொண்டும், அவர்களின் நல்வாழ்விற்காகவும் எடுக்கப்பட்டது. எனது இந்த முடிவு முழுக்க முழுக்க நானே எடுத்த சொந்த முடிவாகும். இது என் தனிப்பட்ட விஷயமாகவே இருக்க வேண்டும் என நினைக்கிறேன். இந்த நேரத்தில் எனது இந்த தனியுரிமைக்கும், எனக்கு நெருக்கமானவர்களின் தனியுரிமைக்கும் மதிப்பளிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். நான் என்றும் உங்கள் ஜெயம் ரவியாகவே இருக்க விரும்புகிறேன். நீங்கள் எனக்கு அளிக்கும் ஆதரவை நன்றியுடன் உணர்கிறேன். தொடர்ந்து ஆதரவு தந்தமைக்கு நன்றி" என்று குறிப்பிட்டிருந்தார். இந்த அறிக்கையை தொடர்ந்து, நடிகர் ஜெயம் ரவி, மனைவி ஆர்த்தியிடம் இருந்து விவாகரத்து கேட்டு, சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருப்பதாகவும் கூறப்பட்டது. மிகவும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து எதுவும் பேசாமல் மௌனம் சாதித்துவந்த ஜெயம் ரவியின் மனைவி ஆர்த்தி... தன்னுடைய தரப்பு விளக்கத்தை கூறும் வகையில் கடந்த 11-ஆம் தேதி, தன் பங்கிற்கு அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.


பிரிவு குறித்து செப்டம்பர் 9-ஆம் தேதி அறிவிப்பு வெளியிட்ட நடிகர் ஜெயம் ரவி 

அதில், சமீபத்தில் ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும் எங்கள் திருமண வாழ்க்கை குறித்து வெளியான அறிக்கையை பார்த்து நான் கவலையும் மன வேதனையும் அடைந்தேன். இது முழுக்க முழுக்க என் கவனத்திற்கு வராமலும், என் ஒப்புதல் இல்லாமலும் வெளியான ஒன்று என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன். பரஸ்பர நம்பிக்கை மற்றும் மரியாதையுடன் கடந்த 18 வருடங்களாக நான் வாழ்ந்த வாழ்க்கை இந்த அறிக்கையின் மூலம் அதற்குரிய கௌரவம், கண்ணியம் மற்றும் தனித்தன்மையை இழந்துவிட்டதாக நான் உணர்கிறேன். என் கணவரிடம் மனம் விட்டு பேச, என் கணவரை சந்திக்க வேண்டும் என நான் சமீபகாலமாக பலவித முயற்சிகள் செய்தேன். ஆனால் அதற்கான வாய்ப்பு எனக்கு மறுக்கப்பட்டது. நானும் என் இரண்டு குழந்தைகளும் எதுவும் புரியாமல் தவித்து கொண்டிருக்கிறோம். திருமண பந்தத்தில் இருந்து விலக வேண்டும் என்ற இந்த முடிவு முழுக்க முழுக்க சொந்த விருப்பத்தைச் சார்ந்து அவராகவே எடுத்த முடிவே தவிர. குடும்ப நலன் கருதி எடுக்கப்பட்ட முடிவு அல்ல. என் மீது குற்றம்சாட்டியும் என் நடத்தையின் மீது களங்கம் கற்பிக்கும் வகையிலும் பொதுவெளியில் மறைமுகமாக நடத்தப்படும் தாக்குதல்களை மிகுந்த சிரமத்துடன் எதிர்கொள்ள வேண்டியுள்ளது. ஒரு தாயாக எனக்கு எப்பொழுதும் என் குழந்தைகளின் நலனும், எதிர்காலமுமே முக்கியம் என்று கூறியிருந்தார்.


ஜெயம் ரவியின் அறிக்கைக்கு பதில் அறிக்கை வெளியிட்ட ஆர்த்தி

ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுக்காமல் மிகவும் பரஸ்பரமாக வாழ்ந்த இந்த தம்பதி இன்று விரிசலுடன் நிற்கும் இந்த நேரத்தில் பத்திரிகையாளர்கள் தொடங்கி சமூக ஊடகங்களில் அமர்ந்து பேசுபவர்கள்வரை ஒவ்வொருவரும் ஒவ்வொரு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அதில் ஒருபக்கம் ஆர்த்தியின் குடும்பம், ஜெயம் ரவியைவிட மிகவும் வசதியான குடும்பம் என்பதால் ஜெயம் ரவி வாழ்க்கையில் மாமியார் சுஜாதாவின் தலையீடு அதிகமாக இருந்ததாக சொல்லப்படுகிறது. மேலும், அவரின் தலையீட்டால்தான், ஜெயம் ரவி சமீபத்தில் நடித்த எந்த படங்களும் சரியாக போகவில்லை என்ற வருத்தம் ஒருபுறமும், தன்னை வளர்த்துவிட்ட அண்ணனுக்கே கால்ஷீட் கொடுக்க முடியாமல் போகும் அளவுக்கு இவர்கள் கொடுக்கும் டார்ச்சர் இன்னொருபுறமும் என மிகுந்த மன அழுத்தத்தில் ஜெயம் ரவி இருந்ததாக சிலர் கூறுகின்றனர். இன்னும் சிலர் ஆர்த்திக்கு பொசஸிவ்னஸ் அதிகம் இருந்ததால், படப்பிடிப்பு தளங்களில் ஜெயம் ரவிக்கு போன் செய்து தொந்தரவு செய்வதுடன், அவர் போன் எடுக்காவிட்டால் உடனே உதவி இயக்குநர், கேமராமேன் என ஒவ்வொருவருக்காக போன் செய்து வேவு பார்க்கத் தொடங்கியதாலேயே இருவருக்குள்ளும் சிறு சிறு மனக்கசப்புகள் ஏற்பட்டு இந்த சிக்கல் வந்ததாக சொல்லப்படுகிறது. இது தவிர சமீபகாலமாக எந்த ஒரு சினிமா பிரபலத்தின் விவாகரத்து நடந்தாலும் அதற்கு நடிகர் தனுஷ்தான் காரணம் என கூறுவது வழக்கமாகிவரும் நிலையில், தற்போது ஜெயம் ரவி - ஆர்த்தி பிரிவிற்கு அவரையே குற்றம் சொல்லி சிலர் சலசலப்பை ஏற்படுத்தி வருகின்றனர். யார் என்ன சொன்னாலும் இவர்கள் எந்த காரணத்திற்காக விவாகரத்து செய்கிறார்கள் என்பது அவர்களுக்கு மட்டுமே தெரிந்த உண்மை. நட்சத்திர ஜோடிகளாக இருப்பவர்கள் எப்போதும் பலருக்கு ரோல் மாடலாக தெரிய கூடியவர்கள் என்ற அடிப்படையிலும், குழந்தைகள் என்றான பிறகு அவர்களின் நலனுக்காகவும் இதுபோன்ற மனக்கசப்புகளை சரி செய்துகொண்டு வாழ கற்றுக்கொள்வதே ஒரு நல்ல தாம்பத்திய வாழ்வுக்கு அடையாளமாக இருக்கும் என்பதும் பலரின் வேண்டுகோளாக இருக்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்