அதிர்ச்சி தந்த 'அன்னபூரணி' - மீண்டும் சிக்கலில் நயன்தாரா!
திரையுலகில் அறிமுகமானதில் இருந்து தற்போது வரை பல சர்ச்சைகளில் சிக்கி பரபரப்பை ஏற்படுத்தியவர்.
நயன்தாரா என்றாலே பரபரப்புதான். திரையுலகில் அறிமுகமான காலம் முதலே காதல், கல்யாணம், கருத்தரிப்பு என ஒவ்வொரு விஷயத்திலும் பேசுபொருளாக இருந்து வரும் இவர், இன்று வரை எத்தகைய பெரிய ஹீரோக்களின் படங்களாக இருந்தாலும், எந்த ஒரு புரமோஷன், ஆடியோ லான்ச் நிகழ்ச்சிகளிலும் பங்கு பெறாமல் கெத்து காட்டி வரும் நடிகையாவார். அண்மையில் சேலத்தில் நடைபெற்ற இவரது 'ஃபெமி 9' நிறுவன நிகழ்ச்சியில் பங்கு பெற்று மேடையில் பேசி மக்களோடு செல்ஃபி எடுத்துக்கொண்ட நயன்தாரா, தற்போது வளர்ந்து வரும் தொழிலதிபராகவும் மாறியுள்ளார். இந்த சூழலில் கடந்த ஆண்டு இறுதியில் இவர் நடிப்பில் வெளிவந்த 'அன்னபூரணி' திரைப்படம் தற்போது சர்ச்சையில் சிக்கி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இது குறித்த முழு விவரத்தை இந்த தொகுப்பில் காண்போம்.
அடுத்தடுத்த சர்ச்சை
'ஐயா' படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்குள் நுழைந்து புகழ் பெற்ற நயன்தாரா, திரையுலகில் அறிமுகமானதில் இருந்து தற்போது வரை பல சர்ச்சைகளில் சிக்கி பரபரப்பை ஏற்படுத்தியவர் ஆவார்.இன்று லேடி சூப்பர்ஸ்டார் என்ற அந்தஸ்திற்கு நயன்தாரா உயர்ந்திருந்தாலும் அவர் கண்டுள்ள ஒவ்வொரு வெற்றிக்கு பின்னாலும் பல வலிகளும், கண்ணீரும், சவால்களும் உள்ளன. அது போலவே அதற்கு இணையாக சினிமா வாழ்க்கையில் அவர் எதிர்கொண்ட சர்ச்சைககளும் ஏராளம். துவக்கத்தில் சிம்பு, பிறகு பிரபுதேவாவுடன் கிசுகிசுக்கப்பட்டவர் பின்னர் விக்னேஷ் சிவனை காதலிப்பதாக வெளியான செய்தியின் மூலம் பரபரப்பாக பேசப்பட்டார். 7 ஆண்டுகள் காதல் வாழ்க்கைக்கு பின் நடந்த நயன்தாராவின் திருமணம் சர்ச்சையை ஏற்படுத்தாமல் இருந்தாலும் நயன்தாராவை சுற்றியே இருக்கும் பரபரப்புக்கு மட்டும் பஞ்சமே இல்லாமல் இருந்தது. திருமண நிகழ்வை ஷூட் செய்ய மீடியாக்களுக்கு அனுமதியில்லை, தனது திருமண வீடியோவை நெட்ஃபிளிக்ஸ் நிறுவனத்திடம் விற்றதில் சிக்கல், திருமணம் முடிந்த கையோடு நயன்தாரா - விக்னேஷ் சிவன் ஜோடி திருப்பதி கோவிலுக்கு சென்றபோது கோவில் வளாகத்தில் நயன்தாரா காலணி அணிந்து வலம் வந்ததால் ஏற்பட்ட பரபரப்பு, திருமணமான நான்கே மாதத்தில் தங்களுக்கு குழந்தை பிறந்துவிட்டதாக அறிவித்து அதிர்ச்சி கொடுத்த சம்பவம், வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றதில் ஏற்பட்ட சட்ட சிக்கல் என காதல் முதல் குழந்தைப்பேறு வரை வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் நயன்தாரா பல சிக்கல்களை சந்தித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். ஏன் கடந்த ஆண்டு இறுதியில் மிக்ஜாம் புயல் காரணமாக பெய்த அதீத கனமழையால் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் மழைநீர் புகுந்து வெள்ளப்பாதிப்பு ஏற்பட்டபோது, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வேளச்சேரி பகுதி மக்களுக்காக நடிகை நயன்தாரா தரப்பில் 'ஃபெமி 9' என்ற அவரது நிறுவன பிராண்ட் மூலம் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்ட சமயத்தில் கூட மோசமான சூழ்நிலையை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டு சொந்த நிறுவனத்திற்கு விளம்பரம் செய்வதாக அவர் மேல் குற்றம் சுமத்தப்பட்டது. இந்த வரிசையில் தற்போது நயன்தாராவின் 'அன்னபூரணி' திரைப்படமும் கடும் விமர்சனத்துக்கு உள்ளாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
நடிகை நயன்தாரா-கணவர் விக்னேஷ் சிவன், தனது இரட்டை குழந்தைகள் மற்றும் விளம்பர போஸ்களில் நயன்தாரா
'அன்னபூரணி' விவகாரம்
நயன்தாராவின் 75வது படமாக கடந்த ஆண்டு டிசம்பர் 1 அன்று வெளியானது 'அன்னபூரணி'. புதுமுக இயக்குநர் நிலேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் நடிகர் ஜெய், சத்யராஜ், கே.எஸ்.ரவிக்குமார், கார்த்திக் குமார், ரெடின் கிங்ஸ்லி, ரேணுகா, பூர்ணிமா ரவி உள்ளிட்ட பலர் நடித்திருந்த இப்படத்தை ஜீ ஸ்டுடியோஸ், நாட் ஸ்டுடியோஸ் மற்றும் டிரைடன்ட் ஆர்ட்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருந்தன. ஸ்ரீரங்கம் கோயிலுக்கு சமையல் சேவை புரியும் ஆச்சாரமான பிராமண குடும்பத்தில் பிறந்தவரான நயன்தாரா, மிகப்பெரிய சமையல் கலைஞராக வேண்டும் என ஆசைப்படுகிறார். அவரின் கனவு நிறைவேறியதா என்பதுதான் படத்தின் கதை. இப்படத்தில் லட்சியத்தை ஜெயித்துக்காட்ட கரண்டி பிடிப்பது, குடும்ப பின்னணியை தாண்டி அசைவ உணவு சமைப்பது, அப்பாவின் அங்கீகாரத்திற்காக ஏங்குவது என பல விதமான உணர்வுகளை மிக சிறப்பாக வெளிப்படுத்தி அன்னபூரணியாகவே தோன்றிய நயன்தாரா, புடிச்சத பண்ணா லட்சத்தில் ஒருத்தர் இல்ல லட்சம் பேர் சூப்பர் ஸ்டார் ஆகலாம் போன்ற வசனங்களின் மூலம் ஒவ்வொருவரையும் ஊக்கப்படுத்தி கவனம் பெற்றிருந்தார். இருந்தும் இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றதோடு, எதிர்பார்த்த வெற்றியையும் பெறவில்லை. அதிலும் கடந்த சில வருடங்களாக நயன்தாரா சோலோ ஹீரோயினாக நடித்து வரும் பெரும்பாலான படங்கள் தொடர் தோல்வி அடைந்து வருவதாக சமூக வலைதளங்களில் பேசப்பட்டதோடு, 'அன்னபூரணி' படம் குறித்தும் பெரியளவில் விமர்சிக்கப்பட்டது. குறிப்பாக படத்தில் வரும் இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த ஃபர்ஜான் என்கிற கதாபாத்திரம், கதாநாயகியை மாமிசம் உண்ண செய்வதற்காக ராமர் இறைச்சி சாப்பிடுவார் என்று சொல்வது போலவும், அர்ச்சகரின் மகளான நயன்தாரா நமாஸ் செய்வது போலவும் காட்சிகள் இடம் பெற்றிருந்தது கடும் பேசு பொருளாக மாறி சமூக வலைத்தளங்களில் விமர்சனத்துக்கு உள்ளானது.
'அன்னபூரணி' படத்தின் காட்சிகள்
நெட்ஃபிளிக்ஸ் அதிரடி
திரைக்கு வந்து சில நாட்களிலேயே பரபரப்பை ஏற்படுத்திய 'அன்னபூரணி' திரைப்படம், கடந்த டிசம்பர் 29 அன்று நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் வெளியானது. ஏற்கனவே மத உணர்வுகளை புண்படுத்தும் வசனங்கள் படத்தில் இடம் பெற்றிருப்பதாக விமர்சனத்துக்கு உள்ளாகி இருந்த நேரத்தில் நெட்ஃபிளிக்ஸ் தளத்தின் வாயிலாக இந்திய அளவில் படத்திற்கு கவனம் கிடைத்ததால் பெரும் புயலை கிளப்பியது. அதில் உச்சபட்சமாக மும்பையை சேர்ந்த சிவசேனா முன்னாள் தலைவர் ரமேஷ்சோலங்கி என்பவர் ஓடிடி தளத்தில் வெளிவந்துள்ள 'அன்னபூரணி' திரைப்படம் மத உணர்வைப் புண்படுத்துவதாகவும், லவ்ஜிகாத்தை ஆதரிக்கும் விதமாக காட்சிகள் இடம் பெற்றிருப்பதாகவும் கூறி மும்பை எல்டி மார்க் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரில் படத்தில் இடம்பெற்றுள்ள சில காட்சிகள் இந்துக்களின் மத உணர்வுகளை புண்படுத்துவதாக அமைந்துள்ளது. குறிப்பாக, கடவுள் ராமரை அவமதிக்கும் வகையில் சில வசனங்கள் இடம் பெற்றிருப்பது கண்டனத்திற்கு உரியது. மேலும் இந்துமதத்தை சேர்ந்த பெண் நமாஸ் செய்வது போல காட்சிகள் வைத்திருப்பது மத மாற்றத்தை தூண்டுவது போல் உள்ளது.
நெட்ஃபிளிக்ஸில் வெளியிடப்பட்ட 'அன்னபூரணி' படத்தின் போஸ்டர்
இதனால் சர்ச்சைக்குரிய அந்த காட்சிகள் மற்றும் வசனங்கள் ‘அன்னபூரணி’ திரைப்படத்திலிருந்து நீக்கப்பட வேண்டும் என கூறப்பட்டிருந்தது. இதையடுத்து மத்தியப் பிரதேச மாநிலத்திலும் ஹிந்து சேவா பரிஷத் முன்னணி அமைப்பும் ஜபல்பூர் மாவட்ட காவல் நிலையத்தில் புகார் அளித்ததை தொடர்ந்து நடிகை நயன்தாரா, படத்தின் தயாரிப்பாளர்கள் ஜதின் சேத்தி மற்றும் ஆர். ரவீந்திரன், இயக்குநர் நிலேஷ் கிருஷ்ணா, நெட்ஃபிளிக்ஸ் இந்தியாவின் கன்டன்ட் ஹெட் மோனிகா ஷெர்கில் உள்ளிட்ட 7 பேருக்கு எதிராகவும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதன் தொடர்ச்சியாக நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் இருந்து 'அன்னபூரணி' திரைப்படம் அதிரடியாக நீக்கப்பட்டது. இது தொடர்பாக படத்தின் இணை தயாரிப்பு நிறுவனமான ஜீ ஸ்டுடியோஸ் வெளியிட்ட அறிக்கையில், இந்துக்கள் மற்றும் பிராமண சமூகத்தின் மத உணர்வுகளை புண்படுத்தும் எண்ணம் தயாரிப்பாளர்களான தங்களுக்கு இல்லை எனவும், விஸ்வ ஹிந்து பரிஷத் அனுப்பிய கடிதத்திற்கு தாங்கள் மன்னிப்பு கேட்டுக் கொள்வதாகவும் கூறியிருந்தது. மேலும் தற்போது 'அன்னபூரணி' திரைப்படம் நெட்ஃபிளிக்ஸ் தளத்திலிருந்து நீக்கப்பட்டதாகவும், பிறகு எடிட் செய்யப்பட்டு மீண்டும் ரிலீஸ் செய்யப்படும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆதரவும் மன்னிப்பும்!
ஒரு புறம் 'அன்னபூரணி' திரைப்படத்திற்கு எதிராக தொடர்ந்து வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வரும் அதே வேளையில், மறுபுறம், ஏற்கனவே தணிக்கை செய்யப்பட்டு வெளியான திரைப்படத்திற்கு எப்படி தடை ஏற்படுத்த முடியும் என நயன்தாராவுக்கு ஆதரவாக ரசிகர்களும், திரைக்கலைஞர்களும் குரல் எழுப்பி வருகின்றனர். குறிப்பாக இயக்குநர் வெற்றிமாறன், நடிகர் சித்தார்த், நடிகை பார்வதி திருவோடு மற்றும் ஓனிர் போன்ற திரை பிரபலங்கள் படம் ஓடிடி தளத்தில் இருந்து நீக்கப்பட்டதில் தங்களது பெரும் அதிருப்தியை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். இது குறித்து வெற்றிமாறன் பேசுகையில், தணிக்கை குழு அனுமதி வழங்கிய ஒரு படத்தை புற அழுத்தங்கள் காரணமாக ஓடிடி தளத்தில் இருந்து நீக்குவது என்பது திரைத்துறைக்கே நல்லது கிடையாது என கூறியுள்ளார். மேலும் ஒரு படத்தை திரையிட அனுமதிப்பதற்கும் மறுப்பதற்கும் தணிக்கை குழுவுக்கு மட்டுமே அதிகாரம் இருக்கிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார். அதேபோல் நடிகை பார்வதி திருவோடு பகிர்ந்திருந்த பதிவில் ''இந்த நிகழ்வு ஒரு மோசமான முன்னுதாரணமாக மாறிவிடும், ஒவ்வொரு முறையும் இடது, வலது மற்றும் நடுவில் தணிக்கை செய்யப்படும் வரை நாங்கள் சுவாசிக்க கூட அனுமதிக்கப்பட மாட்டோமா?" என தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கேள்வி எழுப்பியுள்ளார். நெட்ஃபிளிக்ஸ் தளத்தை கடுமையாக விமர்சித்து தனது எக்ஸ் வலைதளத்தில் பதிவு வெளியிட்டுள்ள நடிகர் சித்தார்த், "கொள்கை வெறி வென்றது, படைப்பாற்றல் இழந்தது'' என தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருந்தார்.
நடிகை பார்வதி திருவோடு, நடிகர் சித்தார்த், இயக்குநர் வெற்றிமாறன்
இந்நிலையில், கடந்த ஜனவரி 19 அன்று இது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்த நயன்தாரா, அதில் தனது ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்திருந்தார். அந்த அறிக்கையில் 'ஜெய் ஸ்ரீராம்' என தொடங்கி தனது எக்ஸ் வலைதளத்தில் பகிர்ந்திருந்த நயன்தாரா, எனது நடிப்பில் வெளியான 'அன்னபூரணி' திரைப்படம் கடந்த சில நாட்களாக பேசு பொருளாகியிருப்பது வருத்தமளிக்கிறது. இந்தக் குறிப்பை கனத்த இதயத்துடனும், 'அன்னபூர்ணி' திரைப்படம் தொடர்பான சமீபத்திய சிக்கலை நிவர்த்தி செய்யவேண்டும் என்ற உண்மையான விருப்பத்துடனும் எழுதுகிறேன். 'அன்னபூரணி' திரைப்படத்தை வெறும் வணிக நோக்கத்துக்காக மட்டும் எடுக்கவில்லை, ஒரு நல்ல விஷயத்தை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற முயற்சியாகவே செய்திருந்தோம். ஒருபோதும் கைவிடாத உணர்வைத் தூண்டுவதற்கான இதயப்பூர்வமான முயற்சி அது. குறிப்பாக அன்னபூரணி வாயிலாக ஒரு நேர்மறையான கருத்தை விதைக்க விரும்பிய நாங்கள், ஏதோ ஒரு வகையில் எங்களை அறியாமலேயே சிலரது மனங்களை கவனக்குறைவாக காயப்படுத்திவிட்டோம்.
நடிகை நயன்தாராவும், அவர் வருத்தம் தெரிவித்து வெளியிட்ட அறிக்கையின் நகலும்
தணிக்கை குழுவால் சான்றளிக்கப்பட்டு திரையரங்கில் வெளியான ஒரு படம் ஓடிடியில் இருந்து நீக்கப்பட்டது நாங்கள் சற்றும் எதிர்பாராத நிகழ்வு. நானும் எனது குழுவும் யாருடைய உணர்வுகளையும் புண்படுத்தும் நோக்கம் கொண்டவர்கள் அல்ல. இந்தப் பிரச்சினையின் தீவிரத்தன்மையை எங்களால் புரிந்துக் கொள்ள முடிகிறது. கடவுளின் மீது மிகுந்த நம்பிக்கை கொண்டு எல்லா மதத்தினரின் வழிபாட்டு தலங்களுக்கும் செல்வதை வழக்கமாக வைத்திருக்கும் நான் ஒருபோதும் இதை உள்நோக்கத்துடன் செய்திருக்க மாட்டேன். அதையும் மீறி உங்களின் உணர்வுகளை எந்த வகையிலாவது காயப்படுத்தி இருந்தால் அதற்கு நான் எனது உண்மையான மற்றும் இதயப்பூர்வமான மன்னிப்பைக் கோருகிறேன். 'அன்னபூரணி' திரைப்படத்தின் உண்மையான நோக்கம் உயர்த்துவதும் ஊக்கமளிப்பதும் தானே தவிர யார் மனதையும் புண்படுத்துவது அல்ல. எனது 20 ஆண்டுகால திரை பயணத்தின் நோக்கமும் ஒன்றே ஒன்றுதான், அது நேர்மறையான சிந்தனைகளை பரப்புவதும், அடுத்தவர்களிடம் இருந்து நல்லவற்றை கற்றுக் கொள்வதும் மட்டுமே எனக் கூறி சர்ச்சைக்கு நயன்தாரா முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
Fanaticism won, creativity lost.
— Siddharth (@DearthOfSid) January 11, 2024
Shame on @NetflixIndia for giving in to majoritarian bullying. https://t.co/Gxh3zUF6nW