"நயன்தாரா : Beyond The Fairy Tale" எப்படி இருக்கிறது?

படம் வெளியாவதற்கு முன்பு இந்த படத்தில் நயன்தாராவின் நடிப்பு தனுஷிற்கு பிடிக்கவில்லை என்றும், படம் வெற்றிபெறாது என நெருங்கிய வட்டாரங்கள் கூறியநிலையில், சொற்ப விலைக்கே படத்தை தனுஷ் விற்றதாகவும் சொல்லப்படுகிறது.

Update:2024-11-26 00:00 IST
Click the Play button to listen to article

எந்த மொழி சினிமாவாக இருந்தாலும் ஹீரோவுக்குத்தான் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்ற கருத்து காலங்காலமாக இருந்துவருகிறது. குறிப்பாக, பாலிவுட், டோலிவுட், மோலிவுட் மற்றும் கோலிவுட் என எல்லா இடங்களிலுமே சூப்பர் ஸ்டார்கள்தான் பெரும்பாலும் தங்கள் படத்திற்கான கதாநாயகிகளை தேர்ந்தெடுக்கிறார்கள் என சில நடிகைகள் வெளிப்படையாகவே கூறிவருகின்றனர். இப்படிப்பட்ட சூழல் அனைத்து திரையுலகங்களிலும் இருக்கும் நேரத்தில்தான் கதாநாயகியை மையப்படுத்திய கதைகளிலும், தனது கேரக்டருக்கு அதிக முக்கியத்துவம் தரும் கதைகளையும் தேர்ந்தெடுத்து நடித்து ‘லேடி சூப்பர் ஸ்டார்’ என்ற அந்தஸ்த்தை பெற்று முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம்வருகிறார் நயன்தாரா. நடிப்பு மட்டுமல்லாமல் பிசினஸிலும் கவனம் செலுத்திவரும் இவர் இயக்குநர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்த கையோடு இரட்டை குழந்தைகளுக்கும் தாயானார். இப்படி குடும்பம், பிசினஸ் என பிஸியாக ஓடிக்கொண்டிருக்கும் இவர் தனது திருமண நிகழ்ச்சியையும் ஆவணப்படமாக்கி ஓடிடி தளத்திற்கு விற்று காசு பார்க்கலாம் என நினைத்து திட்டமிட்ட சமயத்தில்தான் பல்வேறு காரணங்களால் ஆவணப்பட ரிலீஸ் இரண்டு ஆண்டுகளாக தள்ளிப்போய்க்கொண்டே இருந்தது. ஒருவழியாக தங்களுடைய திருமண ஆவணப்படத்தை நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் நயனின் பிறந்தநாளன்று ரிலீஸ் செய்ய திட்டமிட்டு அதன் ட்ரெய்லர்களையும் யுடியூப் மற்றும் சமூக வலைதளங்களில் வெளியிட்டனர். இந்நிலையில்தான் தனது அனுமதி இல்லாமல் தான் தயாரித்த ‘நானும் ரவுடிதான்’ படத்தின் வீடியோ க்ளிப்ஸ்களை பயன்படுத்தி இருப்பதாக நஷ்ட ஈடு கேட்டு நோட்டீஸ் அனுப்பினார் தனுஷ். ஆனால் அந்த படபிடிப்பின்போதுதான் இயக்குநர் விக்னேஷ் சிவனுக்கும் தனக்கும் காதல் மலர்ந்ததால் அந்த படத்தின் காட்சிகளை தனது ஆவணப்படத்தில் சேர்ப்பது மிகவும் முக்கியமானது என நயன் கருதியதால்தான் அந்த BTS க்ளிப்ஸ்களை சேர்த்ததாக நயன் தரப்பில் கூறப்பட்ட போதிலும் ஆவணப்படத்தில் அந்த படத்தின் சீன்களை பயன்படுத்த தனுஷ் கடைசிவரை அனுமதி அளிக்கவில்லை. அதுவரை நயன்தாராவிற்கும் தனுஷிற்கும் இடையே பிரச்சினை இருப்பதாக அரசல்புரசலாக பரவிவந்த வதந்திகள் அனைத்தும் உண்மை என்று சொல்லும்விதமாக ‘3 நொடிகளுக்கு ரூ.10 கோடியா?’ என கேட்டு தனுஷை கண்டித்து 3 பக்க அறிக்கையை வெளியிட்டார் நயன்தாரா. இதனால் நயன்தாராவின் ஆவணப்படம் வெளியாகுமா? என்ற கேள்விகள் எழுந்த நிலையில் திட்டமிட்டபடி ஆவணப்படம் வெளியானபோதிலும் இவர்களுக்கிடையேயான மோதல்போக்கானது தொடர்ந்து நீடித்துவருகிறது. முன்பு இருவரும் நல்ல நண்பர்களாக இருந்த நிலையில் இடையில் என்ன ஆனது? எதனால் இப்படி மனஸ்தாபம் ஏற்பட்டது? என கேட்டுவருகின்றன கோலிவுட் வட்டாரங்கள்.

நயன்தாராவின் அறிக்கையால் வெடித்த பூகம்பம்

‘நானும் ரவுடிதான்’ படப்பிடிப்பின்போது இயக்குநர் விக்னேஷ் சிவன் மீது காதல்வயப்பட்ட நயன்தாரா கிட்டத்தட்ட 6 ஆண்டுகள் கழித்து 2022ஆம் ஆண்டு ஜூன் 9ஆம் தேதி அவரை திருமணமும் செய்துகொண்டார். இந்த திருமணம் முடிந்த சமயத்திலேயே நயன்தாராவின் திருமணம் ஆவணப்படமாக நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் விரைவில் வெளியாகும் என்று கூறப்பட்ட நிலையிலும் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக அதன் ரிலீஸ் தள்ளிப்போய்க்கொண்டே இருந்தது. அதுகுறித்து ரசிகர்கள் கேட்டுவந்த நிலையில், அந்த ஆவணப்படத்தில் திருமண நிகழ்வு மட்டுமல்லாமல், நயன்தாராவின் சிறுவயது முதல் திரை அறிமுகம், காதல் தோல்விகள், கடந்து வந்த பாதை, திருமணம், குழந்தைகள் வரை அனைத்தும் இடம்பெறவிருப்பதாகக் கூறப்பட்டது. அந்த ஆவணப்படத்தின் முக்கிய அம்சமாக தனது வாழ்க்கைத்துணையான விக்னேஷ் சிவனை காதலித்த தருணங்கள் இடம்பெற வேண்டுமென நயன் விரும்பியதாக சொல்லப்படும் நிலையில், ‘நானும் ரவுடிதான்’ படத்தின் காட்சிகளையும், BTS க்ளிப்ஸ்களையும் பயன்படுத்த அனுமதி கோரி அப்படத்தின் தயாரிப்பாளரான தனுஷிடம் அனுமதி கேட்டு தொடர்புகொண்டதாக தெரிகிறது. தனுஷ் அதற்கு மறுப்பு தெரிவித்துவிட்ட நிலையில், தயாரிப்பாளரின் அனுமதியின்றி அப்படத்தின் ஷூட்டிங் காட்சிகளை பயன்படுத்தி யூடியூபில் ட்ரெய்லர் வெளியானது. அதன்பிறகுதான் தனுஷ் தரப்பிலிருந்து 3 நொடி காட்சிகளுக்கு ரூ.10 கோடி நஷ்ட ஈடு கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டிருக்கிறது. இவை அனைத்தும் சத்தமின்றி நடந்துமுடிந்த நிலையில் நவம்பர் 16ஆம் தேதி 3 பக்க அறிக்கை ஒன்றை வெளியிட்டார் நயன்தாரா.


‘நானும் ரவுடிதான்’ படப்பிடிப்பின்போது எடுக்கப்பட்ட புகைப்படம்

அந்த அறிக்கையில் 3 நொடிக்கு ரூ.10 கோடி நஷ்ட ஈடு கேட்டிருப்பது ஒரு கீழ்த்தரமான செயல் என்றும், ஒரு மனிதராக நீங்கள் எப்படிப்பட்டவர் என்பதை இச்செயல் வெளிச்சம் போட்டு காட்டுவதாகவும் கடுமையாக சாடியுள்ளார். குறிப்பாக, அடுத்த இசை வெளியீட்டு விழாவின்போது தனது வார்த்தைகளை திரித்து கற்பனை கதையாக்கி, அதில் பஞ்ச் டயலாக்குகளை சேர்த்து பேசி, அப்பாவி ரசிகர்களை ஏமாற்றவேண்டாம் என்று கூறியதுடன், தனுஷை போன்று குடும்ப பின்னணியை வைத்து, தான் சினிமாவுக்கு வரவில்லை என்றும், தன்னையும் தன் கணவர் விக்னேஷ் சிவனையும் பழிவாங்கும் நோக்கில் தனுஷ் செயல்படுவதாகவும் கூறியிருந்தார். மேலும் தன்னுடைய ஆவணப்படத்தை ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்திருப்பதாகவும், அதில் தன்னுடைய திரையுலக பயணம், காதல் வாழ்க்கை மற்றும் திருமணம் உள்ளிட்ட பல விஷயங்கள் இடம்பெற்றிருப்பதாகவும் தெரிவித்ததுடன், தனுஷ் தனிப்பட்ட வெறுப்பு காரணமாகவே அனுமதி வழங்கவில்லை என்றும் கூறியிருந்தார். படம் ரிலீஸுக்கு முன்பே தனுஷ் பயன்படுத்திய வார்த்தைகள் தன்னை மிகவும் காயப்படுத்தியதாகவும், கடைசிவரை தனது ‘நயன்தாரா- Beyond The Fairy Tale’ ஆவணப்படத்தில் ‘நானும் ரவுடிதான்’ காட்சிகளை பயன்படுத்த அனுமதி வழங்காததால் கடைசி நிமிடத்தில் மீண்டும் எடிட்டிங் செய்யப்பட்டு அந்த காட்சிகள் நீக்கப்பட்டதாகவும் தெரிவித்திருந்தார். நயன்தாராவின் அறிக்கைக்கு பார்வதி திருவோத்து, அனுபமா பரமேஸ்வரன், ஸ்ருதி ஹாசன், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட பல நடிகைகள் லைக் செய்து ஆதரவு தெரிவித்தனர். இதனிடையே ஒரு ஆடியோ லாஞ்ச் விழாவில் தனுஷ் பேசிய வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த விக்னேஷ் சிவன், ‘வாழுங்க வாழவிடுங்க’ என்று குறிப்பிட்டு தனுஷ் தரப்பிலிருந்து அனுப்பப்பட்ட நோட்டீஸையும் பகிர்ந்திருந்தார். பின்னர் அவற்றில் இரண்டு பக்கங்களை நீக்கிவிட்டார்.

தனுஷிற்கு கிடைத்த ஆதரவு

தனுஷ் தனது மனைவி ஐஸ்வர்யாவை பிரிந்த பிறகு அவர்மீது ஏற்கனவே பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வந்த நிலையில், நயன்தாராவின் இந்த அறிக்கைக்கு ஆரம்பத்தில் நிறையப்பேர் ஆதரவு அளித்தாலும், பின்னர் தனுஷின் அறிக்கையை பார்த்தபிறகு அவருக்கும் ஆதரவு பெருகத் தொடங்கியது. தனுஷின் அறிக்கையில், ‘நானும் ரவுடிதான்’ படத்தின் பதிப்புரிமையானது வொண்டர்பார் தயாரிப்பு நிறுவத்திற்குத்தான் உள்ளது என்பதை நயன்தாரா தரப்பிலிருந்து மறுக்கவில்லை என்பதே படப்பிடிப்பின்போது எடுக்கப்பட்ட காட்சிகளின் உரிமையும் அந்நிறுவனத்திற்குத்தான் உள்ளது என்பதையும் புரிந்துகொள்ள போதுமானது என்று கூறப்பட்டிருந்தது. மேலும் ‘நானும் ரவுடிதான்’ படப்பிடிப்பு காட்சிகள் 2015ஆம் ஆண்டே வொண்டர்பார் யூடியூப் சேனலில் ரிலீஸ் செய்யப்பட்டதால் இது நயன்தாராவுக்கு தெரியவில்லை என்று மறுக்கமுடியாது என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. அதிலும் குறிப்பாக, தனுஷ் தயாரித்த படம் சம்பந்தப்பட்ட அனைத்திற்குமே தனுஷ்தான் உரிமையாளர் எனவும், நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனத்தை நயன்தாரா தவறாக வழிநடத்த முயல்வதாகவும் அந்த நோட்டீஸில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதனால் நயன்தாரா தனது திருமண நிகழ்வை ரூ.80 கோடிக்கு விற்று காசு பார்க்கும்போது, தனது படத்தின் காட்சிகளை பயன்படுத்தியதற்காக தனுஷ் நஷ்ட ஈடு கேட்பதும் நியாயம்தான் என்று கூறினர். மேலும் ‘நானும் ரவுடிதான்’ படப்பிடிப்பின்போது நயன்தாராவுடன் காதல் ஏற்பட்டதால் முதலில் ரூ.6 கோடி என தீர்மானிக்கப்பட்டிருந்த படத்தின் பட்ஜெட்டை ரூ.16 கோடிவரை விக்னேஷ் சிவன் கொண்டுசென்றதாக சொல்லப்படுகிறது. படம் வெளியாவதற்கு முன்பு இந்த படத்தில் நயன்தாராவின் நடிப்பு தனுஷிற்கு பிடிக்கவில்லை என்றும், படம் வெற்றிபெறாது என நெருங்கிய வட்டாரங்கள் கூறியநிலையில், சொற்ப விலைக்கே படத்தை தனுஷ் விற்றதாகவும் சொல்லப்படுகிறது. ஆனால் படம் எதிர்பார்த்ததைவிட சூப்பர் ஹிட்டடித்ததால் தியேட்டர் உரிமையாளர்களும், விநியோகஸ்தர்களும்தான் லாபம் அடைந்ததால் தனுஷிற்கு இதில் நஷ்டம் ஏற்பட்டதாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்த நிலையில், பிசினஸ் என்று வந்துவிட்டால் இரண்டுமே பிசினஸ்தான் என்று சமூக ஊடகங்களில் வார்த்தைபோரையே நடத்தினர் தனுஷ் மற்றும் நயன் ஆதரவாளர்கள்.


ஓடிடியில் வெளியான விக்னேஷ் சிவன் - நயன்தாரா திருமண ஆவணப்படத்தின் ஒரு காட்சி 

நெட்ஃப்ளிக்ஸில் வெளியான நயன்தாரா : Beyond The Fairy Tale

நயன்தாராவின் ஆவணப்படம் வெளியாவதற்கு முன்பு சமூக ஊடகங்களில் புயலே வீசிய நிலையில், குறிக்கப்பட்ட தேதியில் நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகுமா? என்று கேள்விகள் எழுந்தன. ஆனால் நயன்தாராவின் 40வது பிறந்தநாளை முன்னிட்டு ஏற்கனவே திட்டமிட்டபடி நயன்தாரா : Beyond The Fairy Tale வெளியானது. அந்த ஆவணப்படத்தில் நயன்தாராவின் திருமணம் குறித்த காட்சிகள்தான் அதிகம் இடம்பெறும் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும்விதமாக தனது வாழ்க்கையில் தான் சந்தித்த கடினமாக காலகட்டங்கள், காதல் தோல்விகள் குறித்து வெளியான வதந்திகள், குடும்பம் மற்றும் பெற்றோர், சிறுவயது புகைப்படங்கள் என அனைத்தையும் முதல் பாகத்தில் வைத்து, கடைசியாக தங்களது காதல் மற்றும் திருமணம் குறித்து பகிரப்பட்டது. இந்த ஆவணப்படம் முழுக்க நயன்தாராவின் எலைட் லைஃப்ஸ்டைல், அதிலிருந்த வெறுமை, அதை விக்னேஷ் சிவன் நிரப்பிய விதம் என அனைத்தும் நேர்த்தியாக காட்டப்பட்டிருக்கிறது. ஆவணப்படத்தில் இதுவரை பார்த்திராத நயன்தாராவின் மற்றொரு பகுதியை காட்ட முயற்சித்திருக்கிறார்கள். அதில் தனது முதல் காதல்மீது தான் அளவுகடந்த நம்பிக்கை வைத்திருந்ததாகவும், அதனாலேயே சினிமாவை விட்டு விலக முடிவெடுத்ததாகவும், அந்த முடிவு தன்னுடையதில்லை என்றும் தெளிவுபடுத்தியிருந்தார்.


கணவர் மற்றும் குழந்தைகளுடன் நயன்தாரா

மேலும் காதல் முறிவு என்றாலே ஏன் எல்லாரும் ஒரு பெண்ணையே கேள்வி கேட்கவேண்டும்? தவறாக சித்தரிக்க வேண்டும்? சம்பந்தப்பட்ட ஆண்களிடமும் கேட்கவேண்டுமல்லவா? என கேள்வி எழுப்பியிருந்தார். அந்த தோல்வியிலிருந்து மீண்டு கெரியரில் கவனம் செலுத்திக்கொண்டிருந்த சமயத்தில், ‘நானும் ரவுடிதான்’ படப்பிடிப்பின்போது விக்னேஷ் சிவனை பார்த்து தனக்குள் வித்தியாசமான உணர்வு வந்ததாகவும், தனக்குதான் முதலில் காதல் உருவானதாகவும் விக்னேஷ் சிவன் அதை ஏற்க பயந்ததாகவும் கூறியுள்ளார். மேலும் தனது அப்பா மீது கொண்டிருக்கும் பாசம் குறித்தும், அவருடைய உடல்நல குறைபாட்டால் மனமுடைந்தது குறித்தும் பேசியிருக்கிறார். நயன்தாராவின் அம்மாவும், ஒவ்வொரு முறையும் தனது மகளை பற்றி தவறான செய்திகள் வந்தபோதும், நயன் உடைந்து அழுதபோது ஏற்பட்ட வலி குறித்தும், விக்னேஷ் சிவன் தனது சொந்த மகன்போல தன்னை பார்த்துக்கொள்வது குறித்தும் ஆவணப்படத்தில் பேசியிருக்கிறார். அதனைத் தொடர்ந்து திருமண ஏற்பாடுகளை தனி ஆளாக நின்று முன்னெடுத்து செய்தது குறித்தும், திருப்பதியில் திருமணம் நடத்த அனுமதி வழங்கப்படாதது குறித்தும் பகிர்ந்ததுடன், கடைசியாக தங்களுடைய மகன்களுடன் தற்போது எப்படி வாழ்க்கை மகிழ்ச்சியாக போய்க்கொண்டிருக்கிறது என்பதை காட்டி ‘நயன்தாரா: Beyond The Fairy Tale’ முடிக்கப்பட்டிருக்கிறது.

இந்த ஆவணப்படத்தின் வெளியீட்டுக்கு பின்பு மீண்டும் ஒரு 3 பக்க அறிக்கையை வெளியிட்ட நயன்தாரா, தனது ஆவணப்படத்தில் தங்களுடைய படக் காட்சிகளை பயன்படுத்த தடையில்லா சான்று வழங்கி அனுமதி அளித்த தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் மற்றும் நடிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். அதில் தனுஷின் பெயரை குறிப்பிடவில்லை. இந்த விஷயத்தில் என்னவாக இருந்தாலும் தனுஷ் சட்டரீதியாக அணுகுவார் என்று ஏற்கனவே கூறப்பட்ட போதிலும் நயன்தாரா இந்த அறிக்கையை வெளியிட்டிருப்பது மீண்டும் அவரை சீண்டும்விதமாக உள்ளதாக சமூக ஊடகவாசிகளும், தனுஷிற்கு நெருங்கிய வட்டாரங்களும் கூறிவருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்