நாக சைதன்யா - சோபிதா நிச்சயதார்த்தம்! கொதித்தெழுந்த சமந்தா ரசிகர்கள்!

ஒருபுறம் ஜாலியாக இருந்தாலும் மற்றொருபுறம் தான் மீண்டுவந்த மன உளைச்சல் குறித்தும், அதுபோன்று கஷ்டப்படுபவர்களை ஊக்குவிக்கும் விதமான பேட்டிகளையும் தனது இன்ஸ்டாகிராமில் அவ்வப்போது பகிர்வதை வழக்கமாக வைத்திருக்கிறார்.

Update:2024-08-13 00:00 IST
Click the Play button to listen to article

இப்போது ஒட்டுமொத்த திரையுலகிலும் ஹாட் டாப்பிக் என்றால் அது நாக சைதன்யா - சோபிதா துலிபாலா நிச்சயதார்த்தம்தான். நடிகை சமந்தாவும் நாக சைதன்யாவும் தங்களுடைய விவாகரத்தை அறிவித்தபோது இருவருமே தங்களது பிரிவிற்கான காரணத்தை வெளிப்படையாக தெரிவிக்கவில்லை. இருப்பினும், சமூக ஊடகங்களில் இவர்களுடைய பிரிவுக்கு இதுதான் காரணம் அதுதான் காரணம் என பல வதந்திகள் பரவினாலும் இருவரும் அதுகுறித்து வாய்திறக்காமல் அடுத்தடுத்து தங்களது கெரியரில் கவனம் செலுத்திவந்தனர். இதற்கிடையே சமந்தாவிற்கு மயோசிட்டிஸ் எனும் நோய் ஏற்பட்டதால் அவருடைய ரசிகர்கள் மிகுந்த சோகத்தில் இருந்தனர். அதனால் மீண்டும் நாக சைதன்யாவும், சமந்தாவும் ஒன்றுசேர வேண்டும் என கோரிக்கையும் விடுத்துவந்தனர். இந்நிலையில்தான் ‘பொன்னியின் செல்வன்’ நடிகை சோபிதாவும், நாக சைதன்யாவும் டேட்டிங் செய்வதாக கடந்த ஆண்டு தகவல்கள் வெளியாகி ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்தன. ஆனாலும் அதுகுறித்து உறுதியான தகவல்கள் எதுவும் வெளியாகாத நிலையில் இப்போது அவர்களுடைய நிச்சயதார்த்த புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியை கொடுத்திருக்கின்றன. பலரும் இந்த ஜோடியை வாழ்த்தாமல் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

சமந்தாவுடனான காதல்

நடிகை சமந்தா முதலில் தமிழில் ஹீரோயினாக அறிமுகமானாலும் அதே அளவிற்கு தெலுங்கு திரையுலகிலும் பிரபலமானார். தமிழில் மெகா ஹிட்டடித்த ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக்கான ‘ஏ மாயா சேசாவே’ திரைப்படத்தில்தான் தெலுங்கில் ஹீரோயினாக அறிமுகமானார் சமந்தா. பிரபல டோலிவுட் ஹீரோவான நாகர்ஜுனாவின் மகனான நாக சைதன்யா டோலிவுட்டில் கால் பதிக்க போராடிக்கொண்டிருந்த சமயத்தில் சைதன்யா - சமந்தா ஜோடி தெலுங்கு ரசிகர்களை அதிகம் கவர்ந்தது. இவர்கள் இருவரையும் சேர்த்துவைத்து தெலுங்கு ஊடகங்கள் செய்திகளை வெளியிட, அதனை உறுதிசெய்யும்விதமாக இருவரும் காதலில் விழுந்தனர்.


‘ஏ மாயா சேசாவே’ திரைப்படத்தில் நாக சைதன்யா - சமந்தா

ஓரிரு ஆண்டுகள் ரகசியமாக டேட்டிங் செய்துவந்த இவர்கள், ஒரு கட்டத்தில் வெளிப்படையாக தங்களது காதலை அறிவித்தனர். பின்னர் இருவீட்டார் சம்மதத்துடன் 2017ஆம் ஆண்டு இந்து மற்றும் கிறிஸ்துவ முறைப்படி திருமணமும் செய்துகொண்டனர். திருமணத்திற்குப் பிறகு, தொடர்ந்து வெளிநாட்டுப் பயணங்கள், அடுத்தடுத்து திரைப்படங்கள் என இருவரும் பிஸியாக ஓடிக்கொண்டிருந்தாலும், அவ்வப்போது ஒன்றாக ஊடகங்களுக்கு பேட்டி கொடுப்பது, சமூக ஊடகங்களில் ஒன்றாக புகைப்படங்களை பதிவிடுவது என தங்களது காதலை வெளிப்படுத்தி வந்தனர். மேலும் பல நேர்காணல்களில் ஜோடியாக கலந்துகொண்டு ரசிகர்களை குஷிப்படுத்தினர். இந்நிலையில்தான் திருமணத்திற்கு பிறகு சமந்தா அதிகம் கவர்ச்சி காட்டுவதாக சமூக ஊடகங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டார். ஆனால் அவற்றையெல்லாம் கண்டுகொள்ளாத அவர், முன்னணி ஹீரோக்களுடன் க்ளாமராக நடித்து அசத்தினார். இது ஒரு கட்டத்தில் அவர்களுடைய குடும்பத்தில் பிரச்சினையை கிளப்பியது. குறிப்பாக, அக்கினேனி குடும்பத்து மருமகளாக இருந்துகொண்டு, சமந்தா அதுபோன்று க்ளாமர் ரோல்களில் நடிக்கவேண்டாம் என நாகர்ஜுனாவும், அமலாவும் கூறியதாகவும், ஆனால் சமந்தா அவர்களுடைய பேச்சை கண்டுகொள்ளாததால் ஒரு கட்டத்தில் நடிக்கவே வேண்டாம் என அவர்கள் வற்புறுத்தியதாகவும் தகவல்கள் வெளியாகின.


நாக சைதன்யா - சமந்தா திருமண புகைப்படம்

இதனால் ஆரம்பத்தில் சமந்தாவுக்கு சப்போர்ட்டாக இருந்த சைதன்யா, பிறகு குடும்பத்துடன் சேர்ந்துகொண்டு சமந்தா நடிப்பதற்கு நோ சொன்னதால் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டிருப்பதாக அவ்வப்போது ஊடகங்களில் செய்திகள் பரவின. அந்த சமயத்தில் நடைபெற்ற குடும்ப நிகழ்வு ஒன்றில் ஜோடியாக சைதன்யா - சாம் இருவரும் கலந்துகொண்டனர். இதனால் இவர்கள் விவாகரத்து குறித்து வெளியான தகவல்கள் அனைத்தும் பொய்யென சொல்லப்பட்ட அதேசமயத்தில், யாரும் எதிர்பாராதவிதமாக 2021ஆம் ஆண்டு சமந்தாவும், நாக சைதன்யாவும் தங்களது பிரிவு குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவித்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்தனர். அக்கினேனி குடும்பத்தைவிட்டு தனியாக பிரிந்துசென்ற சமந்தாவிற்கு ரூ.250 கோடி ஜீவனாம்சமாக கொடுக்க நாக சைதன்யாவின் குடும்பத்தினர் முன்வந்ததாகவும், ஆனால் அதை ஏற்க மறுத்த சமந்தா, சிறுவயதிலிருந்தே தான் மிகவும் கஷ்டப்பட்டு வளர்ந்ததாகவும், 500 ரூபாய்க்கு கூட வெல்கம் கேர்ளாக வேலை பார்த்திருப்பதாகவும், அதனால் தன்னை தானே பார்த்துக்கொள்ள முடியும் எனவும் தெளிவான விளக்கமும் கொடுத்தார். இதனால்தான் சமந்தாவை பலருக்கும் பிடித்துப்போனது.

மன உளைச்சலுக்கு ஆளான சமந்தா

பிரிவுக்கான காரணம் குறித்து இருவரும் வெளிப்படையாக வாய்திறக்காத நிலையில், விவாகரத்தான அதே ஆண்டு ‘புஷ்பா’ படத்தில் ‘ஊ சொல்றியா மாமா’ பாடலுக்கு சமந்தா படு கவர்ச்சியாக ஆடி இந்தியா முழுக்க ரசிகர்களைப் பெற்றதுடன் பாலிவுட் முதல் ஹாலிவுட் வரை நடிக்கும் வாய்ப்புகளையும் பெற்றார். அதேசமயம் இப்படி பீக்கில் சென்றுகொண்டிருந்த சமந்தா மயோசிட்டிஸ் எனும் நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக போஸ்ட் ஒன்றை பதிவிட்டு தனது ரசிகர்களுக்கு அடுத்த ஷாக்கை கொடுத்தார். இப்படி உடல்நல குறைபாடு ஒருபுறம் இருந்தாலும் ஏற்கனவே கமிட்டாகி இருந்த படங்களை முடிப்பதில் முனைப்பு காட்டிய சமந்தா, சிகிச்சை, நடிப்பு என தொடர்ந்து ஓடிக்கொண்டிருந்தார்.


‘ஊ சொல்றியா மாமா’ பாடலில் சமந்தாவின் கவர்ச்சி நடனம்

உடல்நல குறைபாட்டால் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளான அவர், அதுகுறித்து பல நேர்காணல்களில் கண்ணீர்மல்க பேட்டி கொடுத்திருந்தார். மேலும் கடுமையான சூழல்களை மன தைரியத்துடன் மேற்கொண்டுவருவதாகவும், மயோசிட்டிஸால் தனது தசைகளும் எலும்புகளும்கூட பலவீனமாகி தான் சோர்ந்துவிட்டதாகவும் கூறியிருந்தார். சமந்தாவின் இந்த நிலைமைக்கு நாக சைதன்யாதான் காரணம் என அவருடைய ரசிகர்கள் சைதன்யாமீது வெறுப்பு காட்டி வந்தனர். இதனிடையே, ‘குஷி’ படத்தில் தன்னுடன் சேர்ந்து நடித்த விஜய் தேவரகொண்டாவிடம் சமந்தா நெருக்கம் காட்டுவதாக செய்திகள் பரவிய நிலையில், அதனை உடைக்கும்விதமாக ராஷ்மிகாவும் விஜய் தேவரகொண்டாவும் மாறி மாறி போஸ்ட் மற்றும் கமெண்டுகளை பதிவிட்டு தங்களது காதலை மறைமுகமாக வெளிப்படுத்தினர். அந்த காதலும் இன்றுவரை உறுதியாகாவிட்டாலும், விஜய் தேவரகொண்டாவிற்கும் சமந்தாவிற்குமிடையே எதுவும் இல்லை என்பது மட்டும் ரசிகர்களுக்கு உறுதியாகிவிட்டது. அதனைத் தொடர்ந்து சினிமாவிலிருந்து சிலகாலம் விலகியிருந்து, சிகிச்சை மேற்கொள்ளப்போவதாக அறிவித்தார் சமந்தா. இதனால் சமந்தாவுக்கு வந்த ஹாலிவுட் வாய்ப்பானது ஸ்ருதிஹாசனுக்குப் போய்விட்டது. இது அவருடைய ரசிகர்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தினாலும், வெகு சீக்கிரத்தில் கம்பேக் கொடுத்துவிட்டார்.


விஜய் தேவரகொண்டாவுடன் கிசுகிசுக்கப்பட்ட சமந்தா

எப்போதும் சோஷியல் மீடியாவில் ஆக்ட்டிவாக இருக்கும் இவர், போட்டோஷூட்கள், உடற்பயிற்சி, அன்றாட நிகழ்வுகள் என அனைத்தையும் போஸ்ட் செய்து ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார். இப்படி ஒருபுறம் ஜாலியாக இருந்தாலும் மற்றொருபுறம் தான் மீண்டுவந்த மன உளைச்சல் குறித்தும், அதுபோன்று கஷ்டப்படுபவர்களை ஊக்குவிக்கும் விதமான பேட்டிகளையும் தனது இன்ஸ்டாகிராமில் அவ்வப்போது பகிர்வதை வழக்கமாக வைத்திருக்கிறார்.

சோபிதாவுடன் கிசுகிசுக்கப்பட்ட சைதன்யா

‘பொன்னியின் செல்வன்’ படத்தில் வானதியாக நடித்து பிரபலமானவர் சோபிதா துலிபாலா. ஏற்கனவே இந்தி, தெலுங்கு மற்றும் மலையாள திரையுலகில் நன்கு அறியப்பட்ட இவருக்கும், நாக சைதன்யாவிற்குமிடையே காதல் இருப்பதாக 2022ஆம் ஆண்டு வதந்திகள் பரவின. ஆனால் இவர்கள் இருவரும் அதுகுறித்து வாய்திறக்காமலேயே இருந்துவந்தனர். இந்நிலையில் கடந்த ஆண்டு நாக சைதன்யாவும், சோபிதாவும் லண்டனிலிருக்கும் ஒரு ரெஸ்டாரண்டில் ஒன்றாக இருக்கும் புகைப்படங்களையும், ஒரே இடத்தில் இருவரும் தனித்தனியாக எடுத்துக்கொண்ட புகைப்படங்களையும் தங்களது சோஷியல் மீடியாக்களில் பகிர்ந்தனர்.


நடிகை துலிபாலாவுடன் ரகசிய டேட்டிங் செய்த நாக சைதன்யா

இதனால் இவர்கள் இருவரும் காதலிப்பது உறுதியானது. இருப்பினும், இதுகுறித்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு சோபிதாவிடம் கேடட்டபோது, உண்மை என்ன என்பது பற்றி தெரியாமல் பேசுபவர்களுக்கும், எழுதுபவர்களுக்கும் பதிலளிக்கவேண்டிய அவசியமில்லை என்று கடுமையாக சாடினார். மேலும் எந்த தவறும் செய்யாதபோது அதைபற்றி விளக்கம் கொடுக்கவேண்டிய எந்த அவசியமும் இல்லை என்றும், அரைகுறை அறிவுடன் எழுதுபவர்களுக்கெல்லாம் பதில் கொடுப்பதைவிட வாழ்க்கையை பார்ப்பதுமேல் என்றும் கூறியிருந்தார். இதனால் நாக சைதன்யா - சோபிதா இடையே எதுவும் இல்லை என்பது உறுதியானதாக செய்திகள் வெளியாகின. இந்நிலையில்தான் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்திருக்கிறது.

நடந்துமுடிந்த நிச்சயதார்த்தம்

தனது மகன் நாக சைதன்யாவிற்கும், சோபிதாவிற்கும் தங்களது இல்லத்தில் வைத்து நிச்சயதார்த்தம் நடந்திருப்பதாக நாகர்ஜுனா தனது எக்ஸ் தள பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். மேலும் அந்த பதிவில், சோபிதாவை தங்கள் வீட்டிற்கு வரவேற்பதில் மகிழ்ச்சியடைவதாகவும், 8.8.8 அன்பின் தொடக்கம் அவர்கள் வாழ்நாள் முழுவதும் மகிழ்ச்சியாக இருக்க வாழ்த்துகள் எனவும் அதில் குறிப்பிட்டிருக்கிறார்.

இந்த அறிவிப்பைத் தொடர்ந்து நிச்சயதார்த்த புகைப்படங்களும் சமூக ஊடகங்களில் பரவி ட்ரெண்டாகி வருகின்றன. இதே தேதியில்தான் நாக சைதன்யா சமந்தாவிடம் தனது காதலை வெளிப்படுத்தினாராம். அதனால் அதே தேதியில் சோபிதாவுடன் தனக்கு நிச்சயதார்த்தத்தை நடத்தவேண்டுமென்று அவர் கேட்டுக்கொண்டதன் பேரில்தான் இந்த நிச்சயதார்த்தம் நடந்ததாகவும் சொல்லப்படுகிறது. ரேஸ் கார்கள் மற்றும் ஃபார்முலா 1 ரேஸ்மீது சைதன்யா மற்றும் சோபிதா இருவருக்கும் அதிக ஆர்வம் இருப்பதாகவும், அதன்மூலம்தான் இந்த காதல் மலர்ந்ததாகவும் அவர்களுக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் நாக சைதன்யா சமந்தாவிற்கு துரோகம் செய்துவிட்டதாக அவருடைய ரசிகர்கள் சொல்ல, மறுதரப்பில் சமந்தாதான் துரோகம் செய்ததாக சைதன்யாவின் ரசிகர்கள் மாறி மாறி கருத்துமோதல்களை நடத்திவருகின்றனர்.


சைதன்யா - சோபிதாவின் நிச்சயதார்த்த புகைப்படங்கள்

ஆனால் இதுபற்றி எதுவும் கருத்து தெரிவிக்காத சமந்தா, மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத்திற்கு ஆதரவு தெரிவித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கடைசியாக போஸ்ட் செய்திருக்கிறார். இதனால் பிரபலங்களும் நம்மைபோன்ற மனிதர்கள்தான், அவர்களுக்கும் விருப்பு வெறுப்புகள் இருக்கத்தான் செய்யும், ஒருவருடைய தனிப்பட்ட வாழ்க்கையில் யாரும் தலையிடக்கூடாது என்பதுபோன்ற கருத்துகளும் சமூக ஊடகங்களில் பரவிவருகின்றன.

Tags:    

மேலும் செய்திகள்