வரலாறு படைத்த இசைஞானி இளையராஜா! சிம்பொனியை அரங்கேற்றி சாதனை!

அனைத்து விதமான இசைகளையும் தனது பாடல்களில் பயன்படுத்தி இசை உலகில் தனக்கென தனி சகாப்தத்தை உருவாக்கியவர்தான் இசைஞானி இளையராஜா.;

Update:2025-03-11 00:00 IST
Click the Play button to listen to article

இந்திய சினிமாவில் இசையை சொந்தமாக எழுத்து வடிவில் எழுதக்கூடிய ஒரே இசைக்கலைஞன்… இசையே பார்த்து பொறாமைப்படும் அளவுக்கு ஐந்து தசாப்தங்களாக திரையுலகை இசையால் ஆளும் கலையுலக பொக்கிஷம்… கிராமிய இசை, மேற்கத்திய கிளாசிக், கர்நாடக இசை, இந்துஸ்தானி இசை.... என அனைத்து விதமான இசைகளையும் தனது பாடல்களில் பயன்படுத்தி இசை உலகில் தனக்கென தனி சகாப்தத்தை உருவாக்கிய ராஜா என பல சிறப்புகளை கொண்டவர்தான் இசைஞானி இளையராஜா. ‘அன்னக்கிளி’ படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர், இசையில் நிகழ்த்தாத புதுமைகளே இல்லை. உலகமே பார்த்து வியக்கும் இவர், தலைமுறைகள் கடந்தும் சாதிக்க வேண்டும் என்ற வெறியோடு மீண்டும் ஒரு சாதனையை நிகழ்த்தி காட்டியுள்ளார். அதுதான் அவரின் நீண்ட நாள் கனவான சிம்பொனி இசை வெளியீடு. இளையராஜாவின் இந்த சிம்பொனி இசை முயற்சி மற்றும் அவரின் திரையிசைப்பயணம் குறித்து இந்த கட்டுரையின் வாயிலாக விரிவாக காண்போம்.

சிம்பொனி என்றால் என்ன?

சிம்பொனி என்பது மிகப்பெரும் அளவிலான ஒரு ஆர்கெஸ்ட்ரா இசை வடிவமாகும். இது பல்வேறு இசைக்கருவிகளின் இசையமைப்பு ஒத்திசைவுடன் உருவாக்கப்படும் ஒரு ஆழமான இசை அனுபவமாகும். மேற்கத்திய இசையுலகில், சிம்பொனி என்ற இசை வடிவம் பீத்தோவன் காலத்திலிருந்து இன்று வரை சிறப்பாக நிலைத்து நிற்கிறது. சாதாரணமாக, ஒரு சிம்பொனி நான்கு தனித்துவமான பகுதிகளாக அமைந்திருக்கும். ஒவ்வொரு பகுதிக்கும் தனித்தன்மையான அதிர்வெண், உணர்வு, நடனம் போன்ற அம்சங்கள் இருக்கும். முதற்கட்டத்தில், முதல் பகுதி வேகமாகவும் உற்சாகத்துடனும் ஒலிக்கின்றது. இதனைத் தொடர்ந்து, இரண்டாம் பகுதி மென்மையாகவும், இதமான உணர்வுகளை வெளிப்படுத்தும் விதமாகவும் அமைந்திருக்கும். மூன்றாம் பகுதி பொதுவாக நடன வடிவத்தினைக் கொண்டதாக இருக்கும். இறுதியாக, நான்காம் பகுதி மிகவும் விறுவிறுப்பாக அமைந்து பெரும் உச்சக்கட்டத்துடன் நிறைவடைகிறது. சிம்பொனி இசை உருவாக்கப்படும்போது பெரும்பாலும் பாரம்பரிய இசைக்கருவிகளே பயன்படுகின்றன.


இசை கலைஞர்கள் இன்ஸ்ட்ருமெண்ட்டுடன் ஒன்றாக கூடியிருக்கும் காட்சி

இதில் முதன்மையாக தொடை இசைக்கருவிகள் (வயலின், வீணை போன்றவை), காற்று இசைக்கருவிகள் (நாகசுரம், குழல், புல்லாங்குழல் போன்றவை), மற்றும் தாள இசைக்கருவிகள் (மிருதங்கம், தவில், கடம் போன்றவை) ஆகியவை ஒருங்கிணைந்து இசையமைக்கின்றன. சிம்பொனி இசைக்கென்று தனி இசைக்கோட்பாடுகள் உள்ளன. இது பொதுவாக சொனாட்டா அல்லது பிற கட்டமைப்புகளின் அடிப்படையில் உருவாக்கப்படுகிறது. சிம்பொனி இசையைக் கேட்கும் போது, அது ஒரு முழுமையான இசை அனுபவத்தைக் கொடுப்பதோடு, ஒரு கதையை சொல்லும் விதமான மனநிலைகளையும் உணர்ச்சிகளையும் வெளிப்படுத்துகிறது. பொதுவாக ஒரு இசையமைப்பாளரின் திறமையை வெளிப்படுத்த சிறந்த வாய்ப்பாக பயன்படுத்தப்படும் இந்த சிம்பொனி இசையின் தாக்கம் நம் தமிழ் திரையிசையிலும் தனிப்பாடல் இசையிலும் சிறிய அளவிலாவது வெளிப்பட்டுக் காணப்படுகிறது. இதற்கு உதாரணங்களும் இங்கு பல உண்டு.

தமிழ் சினிமாவில் சிம்பொனி


சிம்பொனி எனும் இசை வடிவத்தை உருவாக்கும் ஒத்திகை நிகழ்வு 

தமிழ்த் திரைப்பட இசையில் சிம்பொனி எனும் இசை வடிவம் மிகக் குறைவாகவே பயன்படுத்தப்பட்டிருந்தாலும், சில முக்கியமான திரைப்படங்களில் இதன் தாக்கம் பெரிதாகவே காணப்படுகிறது. குறிப்பாக, இசைஞானி இளையராஜா தமிழ் திரையிசையில் மேற்கத்திய சிம்பொனியின் தாக்கத்தை வலுவாக கொண்டுவந்த முன்னோடி இசையமைப்பாளராக அறியப்படுகிறார். 1980 மற்றும் 1990-ஆம் ஆண்டுகளில், இளையராஜா தனது இசையில் மேற்கத்திய சிம்பொனிக்கே உரிய ஒழுங்கமைப்பு, மேம்பட்ட இசைக்கட்டமைப்பு மற்றும் பரந்த இசைக்கருவிகள் கொண்ட பின்னணி இசையை மிகச்சிறப்பாக உருவாக்கினார். மேற்கத்திய இசையின் தனித்துவமான அமைப்புகளையும், இந்திய இசையின் நுட்பங்களையும் நேர்த்தியாக இணைத்து, ஒவ்வொரு திரைப்படத்திற்கும் தனித்துவமான பின்னணி இசையையும், பாடல்களையும் உருவாக்கினார். இதற்கு சில சிறந்த எடுத்துக்காட்டுகளாக, ‘தளபதி’ திரைப்படத்தில் இடம்பெற்ற "சுந்தரி கண்ணால் ஒரு சேதி" பாடலின் இடையில் வரும் பிரம்மாண்டமான இசை அமைப்பு, ‘இதயத்தை திருடாதே’ திரைப்படத்தில் "ஓ பிரியா பிரியா" பாடலின் பின்னணி இசையில் காணப்படும் சிம்பொனி அமைப்பு, ‘மூடுபனி’ திரைப்படத்தில் "என் இனிய பொன் நிலாவே" பாடலின் மெழுகும் இசை பரவல், ‘சிவப்பு ரோஜாக்கள்’ திரைப்படத்தில் "நினைவோ ஒரு பறவை" பாடலில் வரும் உணர்வுபூர்வமான சிம்பொனி இசைக் கட்டமைப்பு ஆகியவை குறிப்பிடத்தக்கவை.


இசைஞானியின் இசை கச்சேரி நிகழ்ச்சி 

இளையராஜாவிற்குப் பிறகு, 1990-ஆம் ஆண்டுகளில் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் தமிழ் திரையிசையில் புதிய மாற்றங்களை ஏற்படுத்தினார். அவருடைய இசையிலும் சிம்பொனி வடிவமைப்பின் மேம்பட்ட தொழில்நுட்பப் பயன்பாடு தெளிவாகக் காணப்பட்டது. இதற்கு எடுத்துக்காட்டாக, ‘ரோஜா’, ‘பம்பாய்’, ‘ஜீன்ஸ்’, ‘எந்திரன்’, ‘கடல்’ போன்ற திரைப்படங்களில் இடம்பெற்ற பாடல்களும், பின்னணி இசைகளையும் குறிப்பிடலாம். இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் ஆகியோரின் பாதையில், அனிருத், ஜி.வி.பிரகாஷ், ஹாரிஸ் ஜெயராஜ் போன்ற தற்போதைய முன்னணி இசையமைப்பாளர்களும் சிம்பொனி அமைப்புகளைத் தங்களுடைய இசையில் பயன்படுத்தி வருகின்றனர். மேலும், ஹாலிவுட், லண்டன், ரஷ்யா போன்ற நாடுகளில் உள்ள புகழ்பெற்ற இசைக்குழுக்கள் தமிழ்த் திரைப்படங்களுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டு, அவர்களிடமிருந்து சிம்பொனி வடிவிலான இசையை நம் திரைப்படங்களுக்காக உருவாக்கும் நிகழ்வுகள் அதிகரித்துள்ளன. இருப்பினும் இந்த நிகழ்வுகளுக்கெல்லாம் முன்னோடியாகவும், வழிகாட்டியாகவும் இருந்தவர் இளையராஜா என்பதை யாராலும் மறுக்க முடியாது.


தமிழ் திரையிசையில் இளையராஜாவுக்கு பிறகு புதிய மாற்றங்களை ஏற்படுத்திய இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் 

இளையராஜாவின் சிம்பொனி கனவு

இந்திய சினிமாவின் முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் இளையராஜாவுக்கு, இந்தியா முழுவதும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். தமிழ்த் திரைப்பட இசையில் மட்டுமல்லாது, தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி மொழிகளிலும் ஏராளமான பாடல்களுக்கு இசையமைத்து, தனக்கென ஒரு சங்கீத பேரரசை உருவாக்கியுள்ள இவர், இதுவரை ஏழாயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களுக்கு இசையமைத்துள்ளார். குறிப்பாக பல்வேறு இசை விதங்களை ஒருங்கிணைத்து புதிய இசை அனுபவங்களை தமிழ் மக்களுக்கு வழங்கிய விதம் மிகவும் ரசிக்கப்பட்டதோடு, அந்த இசையில் மனித உணர்வுகளை மாற்றும் திறனும் இருந்தது. பாடல்களின் வழியாக மக்களின் உள்ளத்தைத் தொடும் அவரின் இசை, எத்தனை ஆண்டுகள் கடந்தாலும் அழியாத ஒரு முத்தான நினைவாகவே திகழ்கிறது. இப்படிப்பட்ட இளையராஜாதான் மேற்கத்திய நாடுகளில் பிரபலமான ‘சிம்பொனி’ இசை வடிவத்தை 50 ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்களுக்கு அறிமுகப்படுத்தியவராகத் திகழ்கிறார். உலகளவில் இசையின் பல்வேறு கோட்பாடுகள் காணப்படுவதை முதன் முதலில் தமிழ் மக்களிடம் எடுத்துச் சொன்னவர் இவரே. மேற்கத்திய இசை கலாசாரத்தைத் தன்னுடைய தனித்துவமான மெலோடிகளில் இணைத்து, அதைத் தமிழ் ரசிகர்களுக்கு அர்ப்பணித்த பெருமை இவருக்கு உண்டு. 


ராயல் ஃபில்ஹார்மோனிக் இசைக்குழுவினருடன் இளையராஜா 

இப்படி பல பெருமைகளுக்கு சொந்தக்காரரான இளையராஜாவுக்கும் ஒரு கனவு இருந்தது. அதுதான் மேற்கத்திய இசையின் சிகரமாகப் போற்றப்படும் ‘சிம்பொனி’ இசை வடிவில் ஒரு தொகுப்பை உருவாக்க வேண்டும் என்பதே. இதை நினைவில் கொண்டு, 1993ஆம் ஆண்டு லண்டனின் புகழ்பெற்ற "ராயல் ஃபில்ஹார்மோனிக் இசைக்குழுவின்" தலைவரான ஜான் ஸ்காட்டை நேரில் சந்தித்து, அவர்களுக்காக ஒரு சிறப்பு சிம்பொனி இசையமைத்தார். ஆனால், ஆசிய நாடுகளின் இசை வடிவங்களையும், அதன் தனித்துவத்தையும் புரிந்து கொள்ள முடியாத மேற்கத்திய விமர்சகர்கள், அவரின் அந்த சிம்பொனியை எதிர்மறையாக விமர்சித்ததாக கூறப்படுகிறது. இதனால், மிகுந்த வேதனை அடைந்த இளையராஜா, அந்த இசைத்தொகுப்பை வெளியிடாமல் வைத்துவிட்டார். இருந்தாலும், அவரின் இசை திறனை உணர்ந்த ஜான் ஸ்காட், அவர் மேற்கொண்ட முயற்சியில் வியப்புக்குள்ளாகி பெருமை கூறியதாக செய்திகள் வெளிவந்தன. இந்தச் சம்பவத்திற்கு பின்னர், தமிழ்த் திரைப்பட உலகத்தினர் இளையராஜாவை "மேஸ்ட்ரோ" என அழைக்கத் தொடங்கினர். இதற்குக் காரணம், "ராயல் ஃபில்ஹார்மோனிக் இசைக்குழுவில்" இசையமைப்பவர்களை ‘மேஸ்ட்ரோ’ என அழைக்கும் மரபு இருந்ததால் தான். இந்த சூழலில்  இளையராஜா தனது நீண்ட நாள் கனவை கிட்டத்தட்ட 32 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் நினைவாக்கியுள்ளார். அதுதான் “சிம்பொனி நம்பர் 1 வேலியன்ட்” என்ற தலைப்பில் இசைஞானி இளையராஜா லண்டனில் நிகழ்த்திய சிம்பொனி அரங்கேற்றம்.

சாதனை படைத்த இளையராஜா


சிம்பொனி நிகழ்ச்சிகாக லண்டனில் கோட் ஷூட்டுடன் காணப்படும் இளையராஜா 

இந்திய நேரப்படி மார்ச் 9 ஆம் தேதி விடியற்காலை 12.30 மணிக்கு, லண்டனில் உள்ள அப்பல்லோ அரங்கில் இசைஞானி இளையராஜா தனது முதல் சிம்பொனி நிகழ்ச்சியை 'வேலியன்ட்' என்ற தலைப்பில் சிறப்பாக அரங்கேற்றினார். சர்வதேச மகளிர் தினத்தன்று நடைபெற்ற இந்த நிகழ்ச்சி, வெறும் 34 நாட்களில் உருவாக்கப்பட்டு இசை ரசிகர்களுக்கு அற்புதமான அனுபவமாக அமைந்தது. இந்த நிகழ்ச்சி பற்றிய அறிவிப்பு வெளியானதிலிருந்து, இசைஞானி இளையராஜாவிற்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், விசிக தலைவர் திருமாவளவன், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, தமாகா தலைவர் ஜி.கே. வாசன், மக்கள் நீதி மைய தலைவர் மற்றும் பிரபல நடிகர் கமல்ஹாசன் உள்ளிட்ட பல அரசியல் மற்றும் திரையுலக பிரபலங்கள் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தனர். மார்ச் 6 ஆம் தேதி, நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இளையராஜா லண்டன் புறப்பட்டு சென்றார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், “நான் நடத்தவுள்ள இந்த சிம்பொனி இசை நிகழ்ச்சி, இசை ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்தாக அமையும். இது எனக்கு மட்டுமல்ல, இந்தியா முழுவதற்கும் பெருமை சேர்க்கும் நிகழ்வாக இருக்கும். உலகின் தலைசிறந்த இசைக்குழுக்களில் ஒன்றான ராயல் ஃபில்ஹார்மோனிக் ஆர்கெஸ்ட்ரா, இந்த வரலாற்று சிறப்புமிக்க நிகழ்ச்சியில் என்னுடன் இணைந்துள்ளது. அப்பல்லோ அரங்கில் நடைபெறும் இந்த நிகழ்வு, சிம்பொனி இசை ஆர்வலர்களுக்கு மறக்க முடியாத ஒரு இசை விருந்தாக இருக்கும்” என்று கூறினார். மேலும், “நான் மிகவும் மகிழ்ச்சியுடனும் பெருமையுடனும் இருக்கிறேன். அனைவரும் என்னை வாழ்த்தி, இசை நிகழ்ச்சியின் வெற்றிக்காக பிரார்த்தனை செய்ய வேண்டும்” என்றும் தெரிவித்தார். இசைஞானி இளையராஜா எதிர்பார்த்தது போலவே, “சிம்பொனி நம்பர் 1 வேலியன்ட்” இசை நிகழ்ச்சி குறிப்பிட்ட தேதியில், சரியான நேரத்தில் அப்பல்லோ அரங்கில் நடைபெற்றது. 


சிம்பொனி நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்பாக தயார் நிலையில் இருக்கும் அரங்கம்

பிரம்மாண்டமான மேடையில், ஒளிவெள்ளத்தில், நூற்றுக்கணக்கான இசைக்கலைஞர்களுடன் இணைந்து, தனது இசை வெள்ளத்தால் ரசிகர்களை மெய்சிலிர்க்க செய்தார் இளையராஜா. செல்லோ, வயலின், பியானோ, ட்ரம்பெட் மற்றும் டிரம்ஸ் போன்ற இசைக்கருவிகள், ராஜாவின் எண்ணங்களுக்கு ஏற்ப ஒலிக்க, முழு அரங்கமும் இசையால் அதிர்ந்தது. சுமார் 90 நிமிடங்கள் நீடித்த இந்த சிம்பொனி நிகழ்ச்சியில், இடையே சில திரைப்படப் பாடல்களின் மெட்டுகளும் சிம்பொனி இசைக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டு இசைக்கப்பட்டன. இதனால் ரசிகர்கள் பெரும் உற்சாகம் அடைந்தனர். குறிப்பாக, “அபூர்வ சகோதரர்கள்” படத்தில் இடம்பெற்ற 'ராஜா கைய வச்சா, அது ராங்கா போனதில்லை' பாடலின் இசை, சிம்பொனியில் இசைக்கப்பட்ட போது, ரசிகர்கள் கைதட்டலால் அரங்கமே அதிர்ந்தது. நிகழ்ச்சியின் இறுதியில், “இதயம் போகுதே...” பாடலைப் பாடி, அரங்கில் இருந்த அனைவரையும் உருக செய்தார் இளையராஜா. சிம்பொனி நிறைவடைந்ததும், அரங்கமே எழுந்து நின்று கைகளைத் தட்டி இசைஞானிக்கு மரியாதை செலுத்தியது.


சிம்பொனி நிகழ்ச்சி மேடையில் இசைஞானியுடன் இசைக்கலைஞர்கள் 

இந்த நிகழ்ச்சியில் இசையமைப்பாளர்களும், இளையராஜாவின் மகன்களுமான யுவன் சங்கர் ராஜா, கார்த்திக் ராஜா ஆகியோர் உடனிருந்தனர். நிகழ்ச்சியின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் ஊடகங்களிலும், சமூகவலைத்தளங்களிலும் வைரலாகி, உலகம் முழுவதும் அவருக்கு வாழ்த்துகள் குவிந்தன. இந்த நிலையில், சென்னை திரும்பிய இளையராஜாவுக்கு, தமிழக அரசு சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அமைச்சர் தங்கம் தென்னரசு நேரில் சென்று அவருக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். மேலும், பல்வேறு கட்சிகளின் பிரமுகர்களும், ரசிகர்களும் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். அந்த சமயம் தன் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்ட இளையராஜா, “சிம்பொனி இசைப்பது சாதாரண விஷயம் அல்ல. இறைவனின் அருளால் இந்த நிகழ்ச்சி மிகப்பெரிய வெற்றியாக மாறியது” என்று தெரிவித்தார். மேலும், சிம்பொனி நிகழ்ச்சியின் போது, பார்வையாளர்கள் தொடர்ந்து உற்சாகப்படுத்தியதை குறிப்பிட்ட அவர், இதேபோன்ற நிகழ்வை துபாய், பாரிஸ் உள்ளிட்ட 13 நாடுகளில் நடத்த திட்டம் இருப்பதாக அறிவித்தார். இதன் மூலம் இளையராஜாவின் இந்த சிம்பொனி நிகழ்ச்சி, இசை ரசிகர்களுக்கு மறக்க முடியாத ஒரு விருந்தாக அமைந்துள்ளதோடு, அவரது இசை திறனை உலகளவில் மேலும் ஒரு முறை நிரூபிக்கும் விதமாக அமைந்துள்ளது. இது இசை வரலாற்றில் குறிப்பிடத்தக்க ஒரு முக்கிய நிகழ்வாகும்.

Tags:    

மேலும் செய்திகள்