"அம்மாக்கள் சும்மா இருப்பது இல்லை" - நடிகை வனிதா கிருஷ்ணசந்திரன் அம்மா கமலா!
வனிதா கிருஷ்ணச்சந்திரன் 1980களில் ஒரு முக்கிய முன்னணி நடிகையாகவும் நகைச்சுவை கலைஞராகவும் இருந்தவர். மேலும் பல மலையாள மற்றும் தமிழ் தொலைக்காட்சி தொடர்கள் மற்றும் மலையாளம், தமிழ், கன்னடம் மற்றும் தெலுங்கு படங்களில் கிட்டத்தட்ட 180 படங்களில் நடித்துள்ளார்.;
(10.05.1981 தேதியிட்ட ‘ராணி’ இதழில் வெளியானது)
நான் நடிகை ஆக முயன்றேன், முடியவில்லை. அதனால், என் மகள் வனிதாவை நடிகை ஆக்கினேன்" என்று சொன்னார், வனிதாவின் அம்மா, கமலா.
கமலாவின் பூர்வீகம் திருவரங்கம். கமலாவின் 4-வது மகள் வனிதா.
வனிதா நடிகை ஆனதும், குடும்பம் சென்னைக்கு வந்தது.
கமலா சொல்லுகிறார்:
சினிமா ஆசை
“சிம்லா ஸ்பெஷல்” திரைப்படத்தில் பதட்டமான காட்சி ஒன்றில் நடிகை வனிதா கிருஷ்ணச்சந்திரன்
"எனக்கு சின்ன வயதில் சினிமாவில் நடிக்க வேண்டும் என்று ஆசையிருந்தது. ஆனால், வீட்டில் கட்டுப்பாடு அதிகம். வீட்டை விட்டு வெளியே வர முடியாது. ஆனாலும், நடிகை ஆக வேண்டும் என்ற ஆசை துளிர்விட்டுக் கொண்டேயிருந்தது.
அந்தக் காலத்தில் பெண் பார்க்க வருபவர்கள் "பெண்ணுக்கு பாடத் தெரியுமா?" என்று கேட்பார்கள். அதனால், என் வீட்டில் எனக்கு பாட்டு கற்றுக் கொடுக்க ஏற்பாடு செய்தார்கள். நான் பாட பயிற்சி பெற்றதும், சினிமா ஆசை மேலும் வளர்ந்தது. ஆனால், கடைசிவரை என்னால் நடிகை ஆக முடியாமல் போய்விட்டது!
அதனால், என் மகள்களை நடிகை ஆக்கிப் பார்க்க வேண்டும் என்று விரும்பினேன். எந்த மகளை நடிக்க வைப்பது என்று, யோசித்ததில், அழகும், சுறு சுறுப்பும் நிறைந்த என் நான்காவது மகள் வனிதாவை நடிகை ஆக்குவது என்று முடிவு செய்தேன்.
வனிதாவைக் கேட்டேன். அவளும் "தயார்" என்றாள். நடிகையாக ஆசைப்பட்ட எனக்கு, கடைசியில் நடிகையின் அம்மா ஆகத்தான் முடிந்தது !
மரியாதை
ஹோம்லி லுக்கில் வனிதா
வனிதா நடிகை என்றாலும், அவளுக்கு என்று வீட்டில் தனி மரியாதை அளிப்பது இல்லை. மற்ற குழந்தைகளைப் போலத்தான், அவளும் எனக்கு ஒரு குழந்தை. எல்லோரும் காலை 6 மணிக்கு எழுவார்கள். அவர்களோடுதான் வனிதாவும் எழுவாள். அவளாக எழுந்திருக்கவில்லை என்றால், ''வனிதா! என்று நான் குரல் கொடுப்பேன். பட்டென்று எழுந்துவிடுவாள்!"
"ஏன், உங்களிடம் அவ்வளவு பயமா?" என்று நிருபர் கேட்டார்.
கமலா தொடர்ந்தார்:
"என் குழந்தைகளை நான் அடிமைகளாக நடத்தவில்லை. கை நீட்டி அடிப்பதும் இல்லை. ஆனால், கண்டிப்புடன் நடந்து கொள்வேன். என் குரலின் வேகத்தைப் புரிந்து கொண்டு, அவர்களும் ஒழுங்காக நடந்து கொள்ளுவார்கள். அது ஒரு மரியாதை!
உடற்பயிற்சி
அழகான புன்னகையுடன் காட்சியளிக்கும் நடிகை வனிதா கிருஷ்ணச்சந்திரன்
வனிதா எழுந்ததும் ஒரு கப் "நியூட்ரமுல்" கொடுப்பேன். அதை குடித்துவிட்டு, உடற்பயிற்சி செய்வாள். தண்டால் எடுப்பாள், கயிறு தாண்டுவாள், நடனம் ஆடுவாள். ஆடி களைத்ததும் குளிப்பு. காலையில் இரண்டு இட்லி; ஒரு தோசை சாப்பிடுவாள். காலைச் சிற்றுண்டி முடிந்ததும், படப்பிடிப்புக்குப் புறப்படுவாள்.
வனிதாவுடன் நானும் படப்பிடிப்புக்குச் செல்லுவேன். படப்பிடிப்பின் போது ஒரு ஓரத்தில் உட்கார்ந்துவிடுவேன். மேக்கப் பெண்தான், வனிதா கூடவே இருப்பாள். நடிகையின் அம்மா என்பதற்காக, தயாரிப்பாளர்களிடம், ''குடிக்கக் கொடு; சாப்பிடக் கொடு" என்று எதுவும் கேட்பது இல்லை. வீட்டில் இருந்து சாப்பாடு கொண்டுபோய்தான் சாப்பிடுவேன். சில நாட்களில், சாப்பிட வீட்டுக்கு வந்துவிடுவேன். நான் படப்பிடிப்புக்கு செல்வது, வனிதாவுக்கு உதவி செய்ய அல்ல; ஒரு பாதுகாப்புக்காகவே செல்கிறேன்.
கால்ஷீட்
கையில் சில்வர் டம்ளருடன் நடிகை வனிதா கிருஷ்ணச்சந்திரன்
வனிதாவின் "கால்ஷீட்டு" விவகாரங்களை நான்தான் கவனிக்கிறேன். ஆனால், புதுப்படங்கள் ஒப்பந்தம் செய்யும் பொழுது, வனிதாவிடம் கேட்காமல் ஒப்புக்கொள்ள மாட்டேன். வனிதா கதையைக் கேட்டு, அது அவளுக்குப் பிடித்து இருந்தால்தான் ஏற்பேன். வனிதா, எனக்கு அடிக்கடி முத்தம் கொடுப்பாள். ஆனால், சாப்பாடு விஷயத்தில் சுத்த மோசம். உடம்பு தடிமனாகி விடக்கூடாது என்பதற்காக. குறைத்து குறைத்து சாப்பிடுவாள். உழைத்துக் கொடுக்கிற மகள் இப்படி பட்டினியாகக் கிடப்பதைப் பார்த்தால், எனக்குக் கஷ்டமாக இருக்கும். ஐஸ்கிரீம் என்றால் வனிதா விரும்பி சாப்பிடுவாள்.
(அடுத்த வாரம், நடிகை ஒய். விஜயா அம்மா உங்களை சந்திக்கிறார்.)