மிமிக்கிரி கலைஞர் டு லவ்வர் பாய் - நம்பிக்கையூட்டும் மணிகண்டனின் ‘Love’ ஸ்டோரி

தமிழ் திரையுலகில் விடாமுயற்சியோடு, போராடி, வெற்றி என்ற இலக்கை அடைந்து புகழ் பெற்றிருப்பவர்தான் ‘குட் நைட்’ பட புகழ் நடிகர் மணிகண்டன்.

Update: 2024-01-01 18:30 GMT
Click the Play button to listen to article

பொதுவாகவே வெற்றி என்பது யாருக்கும் அவ்வளவு எளிதாக அமைந்து விடுவதில்லை. அந்த வெற்றி என்ற இலக்கை அடைய தொடர்ந்து போராடுபவர்கள்தான் இங்கு அதிகம். அந்த வகையில், தமிழ் திரையுலகில் விடாமுயற்சியோடு, உண்மையாக போராடி, தற்போது வெற்றி என்ற இலக்கை அடைந்து புகழ் பெற்றிருப்பவர்தான் ‘குட் நைட்’ பட புகழ் நடிகர் மணிகண்டன். போட்டிகள் நிறைந்த கலைத்துறையில் சாதாரண ஒரு போட்டியாளராக தனது வாழ்க்கையை துவங்கி இன்று சிறந்த திரைக்கதை எழுத்தாளர், பின்னணி குரல் கொடுப்பவர், நடிகர் என பன்முகத்திறமையாளராக வலம் வரும் மணிகண்டன் தமிழ் சினிமாவில் கடந்து வந்த பாதை.. 2023 - ல் அவர் கொடுத்த வெற்றிப் படங்கள் மற்றும் தற்போது நடித்து வரும் படங்கள் குறித்த ஒரு ஸ்வாரஸ்யமான பதிவை இங்கே காணலாம்.

மணிகண்டனின் ஆரம்பகால வாழ்க்கை

தமிழ் சினிமாவில் பல திறமைகளை கொண்டு வளர்ந்து வரும் நடிகராக திகழும் மணிகண்டன், ராஜன்- சுந்தரி அம்மாள் தம்பதியருக்கு மகனாக சாதாரண நடுத்தர குடும்பத்தில் 1987-ஆம் ஆண்டு நவம்பர் 29ஆம் தேதி சென்னையில் பிறந்தார். சிறுவயதில் இருந்தே ஓரளவுக்கு படிக்கக் கூடிய மாணவரான மணிகண்டன் தனது பள்ளி படிப்பு முழுவதையும் சென்னையிலேயே படித்து முடித்துள்ளார். பின்னர் உயர்கல்வியில் பொறியியல் பாடப்பிரிவை தேர்ந்தெடுத்து படித்து முடித்தவருக்கு, கலைத்துறையின் மீது ஆதீத ஆர்வம் ஏற்பட்டு முதலில் தொலைக்காட்சி பக்கம் வந்துள்ளார். பொறியியல் மாணவராக இருந்தும் கலைமீது ஆர்வம் ஏற்பட்டு இவர் சின்னத்திரை பக்கம் வருவதற்கு மிக முக்கிய காரணம், மணிகண்டன் சிறுவனாக இருக்கும் போதே அவர் வீட்டிற்கு பின்புறம் நிறைய படப்பிடிப்புகள் நடைபெறுமாம். அந்த படபிடிப்பை தினமும் பார்ப்பதுடன், அதில் நடிக்கும் நடிகர் நடிகைகளின் நடிப்பை பார்த்து ரசித்து விட்டு, நடிகரானால் இப்படியெல்லாம் நடிக்க வேண்டி இருக்குமா? என்று ஆச்சர்யப்படுவாராம். அப்படி இவர் பார்த்து ரசித்த நடிகர், நடிகைகளில் இவருக்கு மிகவும் பிடித்தது என்றால் அது ஆச்சி மனோரம்மாவின் நடிப்புதானாம். இப்படி அங்கிருந்து ஆரம்பித்த சினிமா கனவு கல்லூரி காலங்களிலும் ஏதோவொரு வகையில், அவ்வப்போது வெளிப்பட்டு வந்துள்ளது. அப்படி பலமுறை தனது நண்பர்கள் முன்னிலையில், பிறரை இமிடேட் அதாவது மிமிக்கிரி செய்து அசத்தி வந்ததை பார்த்து, அவர்கள் கொடுத்த உந்துதலினால் அப்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு சீசன் 4 நிகழ்ச்சியிலும் போட்டியாளராக கலந்துகொண்டு 600 பேரில் ஒருவராக போட்டியின் இறுதிவரை பயணித்து இரண்டாம் இடத்தினையும் வென்றுள்ளார். இதன் பிறகு பெரிதும் வாய்ப்புகள் கிடைக்காமல் சிறிதுகாலம் ரேடியோவில் ஆர்.ஜே வாகவும் பணியாற்றியுள்ளார்.


இளமை காலத்தில் நடிகர் மணிகண்டன் 

பெரியத்திரை அறிமுகம் நிகழ்ந்தது எப்படி?

ரேடியோ தொகுப்பாளராக ஒன்றரை ஆண்டுகள் பணியாற்றிய போதுதான், தனக்குதான் நன்றாக பேச வருகிறதே என்று டப்பிங் துறையை தேர்ந்தெடுத்து பெரியத்திரையில் அதுவும், நடிகர்கள் மற்றும் துணை நடிகர்களுக்கு பின்னணி குரல் கொடுக்கும் பணியை செய்து வந்துள்ளார். அப்போது பெரிய அறிமுகங்களின் நட்பு கிடைத்து உதவி இயக்குநராகவும் பணியாற்ற தொடங்கியபோதுதான், ‘பீட்சா II வில்லா’, ‘இந்தியா பாகிஸ்தான்’, ‘இன்று நேற்று நாளை’ ஆகிய படங்களில் சிறு சிறு வேடங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்து நடித்தார். இதுதவிர கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நாளைய இயக்குநர் நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டு தனது பங்களிப்பை வழங்க ஆரம்பித்தார். அங்கு கிடைத்த பாராட்டுகளும், ஜட்ஜாக வந்திருந்த இயக்குநர்கள் கொடுத்த நம்பிக்கையும் அவரை அடுத்தக்கட்டத்திற்கு கொண்டு செல்ல உதவியாக இருந்தது. மேலும் அந்த நிகழ்ச்சியின் வாயிலாக இயக்குநர் நலன் குமாரசாமியின் அறிமுகம் கிடைத்து அவர் இயக்கிய ‘காதலும் கடந்து போகும்’ என்ற படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பும் கிடைத்து அப்படத்தில் விஜய் சேதுபதியுடன் பணியாற்றியுள்ளார். அப்போது நடிகர் விஜய் சேதுபதியுடன் மணிகண்டனுக்கு மிகவும் நெருக்கமான நட்பு ஏற்பட்டுள்ளது. இதன் பிறகு 2018ஆம் ஆண்டு ஸ்ரீ கணேஷ் என்பவரது இயக்கத்தில், ‘8 தோட்டாக்கள்’ படத்தில் ஜெய் என்ற கதாபாத்திரத்தில் நடித்து கவனம் பெற்றார். இப்படத்திற்கு பிறகு அதே ஆண்டில் புஷ்கர்-காயத்ரி இயக்கி வெளிவந்த ‘விக்ரம் வேதா’ படத்தில் நடிக்க வாய்ப்பு கேட்டுச் சென்றவருக்கு ஒரே கல்லில் ரெண்டு மாங்காய் என ஜாக்பாட் அடித்தது போல் நடிகராக மட்டுமின்றி விஜய் சேதுபதி கொடுத்திருந்த நம்பிக்கையான வார்த்தைகளால் அப்படத்திற்கு வசனம் எழுதும் வாய்ப்பையும் பெற்று எழுத்தாளராகவும் பணியாற்றினார். மேலும் இப்படத்திற்கு கிடைத்த வெற்றியால் சிறந்த எழுத்தாளருக்கான ‘Behindwoods Gold Medal’ விருதையும் பெற்றார்.


பெரிய திரையில் அறிமுகமான காலகட்டங்களில் நடிகர் மணிகண்டன் 

இதனைத்தொடர்ந்து, மணிகண்டனுக்கு என்று தனித்துவமான அடையாளம் கிடைத்து அவரது திரைப்பயணம் சூடு பிடிக்க ஆரம்பித்தது. அப்படி பா.ரஞ்சித் இயக்கத்தில் வெளிவந்த ‘காலா’ படத்தில் ரஜினிக்கு இளைய மகனாக தனது சிறப்பான பங்களிப்பை வழங்கி நடித்திருந்தவர் தொடர்ந்து ‘சில்லு கருப்பட்டி’, ‘பாவ கதைகள்’, ‘ஏலே’, ‘நெற்றிக்கண்’ போன்ற படங்கள் மற்றும் வெப் தொடர்களில் நடித்தார். இந்த நேரம்தான் மணிகண்டன் திரைவாழ்க்கையில் அதுவரை கடந்து வந்த போராட்டத்தின் வெற்றியாகவும், தான் ஒரு சிறந்த நடிகர் என்பதை பறைசாற்றுவதற்கான வாய்ப்பாகவும் வந்து அமைந்தது சூர்யாவின் ‘ஜெய் பீம்’ திரைப்படம். உண்மை சம்பவத்தை பின்னணியாகக் கொண்டு வெளிவந்த இப்படத்தில் ‘ராஜா கண்ணு’ என்னும் கதாபாத்திரத்தில் தனது தேர்ந்த நடிப்பை வழங்கி அந்த பாத்திரப்படைப்பாகவே வாழ்ந்து ஒட்டு மொத்த திரையுலகினர் மற்றும் ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்தார். இப்படத்தில் மணிகண்டனுக்கு கிடைத்த வரவேற்பால் விஷால் வெங்கட் என்பவரது இயக்கத்தில், நடிகர்கள் நாசர், அசோக் செல்வன் ஆகியோரது கூட்டணியில் ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ என்ற படத்தில் ராஜசேகர் என்ற முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்தார். இதற்கிடையில், ‘நரை எழுதும் சுயசரிதம்’ என்ற வெப் தொடரையும் இயக்கி முடித்தார்.

மணிகண்டன் கொடுத்த வெற்றிகள்


மணிகண்டனின் ‘ஜெய் பீம்’ மற்றும் 'குட் நைட்' பட காட்சிகள் 

‘ஜெய் பீம்’ என்ற மாபெரும் வெற்றிப்படத்திற்கு பிறகு மணிகண்டனின் வாழ்க்கையில் இரண்டாவது வெற்றியாக வந்து அமைந்ததுதான் ‘குட் நைட்’ திரைப்படம். அறிமுக இயக்குநர் விநாயக் சந்திரசேகரன் இயக்கத்தில் வெளிவந்த இப்படத்தில் கதையின் நாயகியாக, மணிகண்டனுக்கு ஜோடியாக மீதா ரகுநாத் நடித்திருந்தார். குறட்டையால் வரும் பிரச்சினைகளை மையமாக வைத்து வெளிவந்த படம் என்றாலும் அதைச் சுற்றி நாயகனின் குடும்பம், நாயகிக்கு என்று தனித்துவமான பின்னணி, அழகான காதல் காட்சிகள், அதன் பிறகு குறட்டையால் திருமண வாழ்வில் ஏற்படும் பிரச்சினைகள் என இயல்பான அதே நேரம் உணர்வுபூர்வமான வகையில் வெளிவந்து பலரையும் ரசிக்க வைத்திருந்தது ‘குட் நைட்’. இப்படத்தில் மணிகண்டன் தனது கதாபாத்திரத்தின் தன்மையை நன்கு உள்வாங்கி மிகவும் எதார்த்தமான நடிப்பை தந்திருப்பார். அதே போன்று நாயகி மீதா ரகுநாத்தும் வெகு இயல்பான நடிப்பால் ரசிக்க வைத்திருப்பார். இவ்விருவரின் நடிப்பும், அவர்கள் ஏற்றிருந்த வேடங்களும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தன. அழகான ‘ஃபீல்குட்’ படமாக திரைக்கு வந்து பெரிய அளவில் வெற்றி பெற்ற இப்படம், மணிகண்டனுக்கு என்று தனித்துவமான அடையாளத்தை உருவாக்கிக் கொடுத்தது. ‘குட் நைட்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு தொடர்ந்து சோலோ ஹீரோ படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பு மணிகண்டனை தேடி வந்தது. அந்த வகையில், மணிகண்டன் தற்போது ‘Lover’ என்ற படத்தில் நடித்துள்ளார்.

எதிர்பார்ப்பை எகிற வைக்கும் ‘லவ்வர்’


'லவ்வர்’ திரைப்படத்தில் நடிகர் மணிகண்டனின் பல்வேறு விதமான காட்சிகள் 

அறிமுக இயக்குநர் பிரபுராம் வியாஸ் எழுதி இயக்கியுள்ள ‘லவ்வர்’ (lover) திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார் மணிகண்டன். மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் மற்றும் எம்ஆர்பி என்டர்டெயின்மென்ட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தில், நாயகன் மணிகண்டனுடன் ஸ்ரீகெளரி பிரியா, கண்ணன் ரவி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஷான் ரோல்டன் இசையமைத்துள்ள இப்படத்தின் டீசரை படக்குழு கடந்த டிசம்பர் மாதம் 24-ஆம் தேதி வெளியிட்டது. ரசிகர்களை வெகுவாக கவர்ந்த அந்த டீசரை பார்க்கும் போது படம் முழுக்க முழுக்க காதலை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது என்பதை தெளிவாக நமக்கு உணர்த்துகிறது. மேலும் நாயகன் மணிகண்டனின் அறிமுகத்துடன் தொடங்கும் அந்த டீசரில் காதலர்களுக்கிடையே நடக்கும் சண்டை மற்றும் வாக்குவாதங்கள் இடம் பெறுவதுடன், ‘பசங்களுக்குத்தான் பசங்கள பத்தி தெரியும்’ என மற்றவர்களுடன் பழகுவது குறித்து மணிகண்டன் ஆக்ரோஷமாக தன் காதலியை பார்த்து பேசும் வசனங்களும் இடம் பெறுகிறது. இதன் மூலம் காதலில் இருக்கும் சைக்கோதனமான ஆணாதிக்க செயல்பாடுகள் பற்றியும் காண்பிக்கப்படுகிறது. தொடர்ந்து வரும் டீசரில் ‘6 வருஷ லவ் ப்ரோ. அவள என் பொண்டாட்டியா தான் பாத்தேன்’ என பிரிவை பேசும் வசனங்கள் இடம்பெறுகின்றன. டீசரில் புதிதான விஷயங்கள் எதுவும் இல்லை என்றாலும், நாம் பார்த்து பழகிய காதலை அப்படியே காட்டி மிக அழகாக எடுக்கப்பட்டுள்ள விதம் ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது. காதலர் தினத்தை முன்னிட்டு திரைக்கு வர உள்ள இப்படம் நிச்சயம் மணிகண்டனுக்கு மற்றுமொரு வெற்றி சரித்திரமாக அமையும் என்று அவரது ரசிகர்கள் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். நாமும் பிறக்கப்போகும் புதிய வருடம் மணிகண்டனுக்கானதாக இருக்க வாழ்த்துவோம்.

Tags:    

மேலும் செய்திகள்