தனித்துவமான நடிப்பால் தமிழ் சினிமாவை கலக்கிய மாவீரன் - நெப்போலியன் பிறந்தநாள் சிறப்பு தொகுப்பு
நடிகர், அரசியல்வாதி, தொழிலதிபர், யாருக்கும் கிடைத்திடாத பாசமான தந்தை என பன்முகங்களை கொண்டவர்தான் நெப்போலியன். “புது நெல்லு புது நாத்து” திரைப்படத்தின் மூலம் நடிகராக நமக்கெல்லாம் பரிச்சயமானவர்.
நடிகர், அரசியல்வாதி, தொழிலதிபர், யாருக்கும் கிடைத்திடாத பாசமான தந்தை என பன்முகங்களை கொண்டவர்தான் நெப்போலியன். “புது நெல்லு புது நாத்து” திரைப்படத்தின் மூலம் நடிகராக நமக்கெல்லாம் பரிச்சயமான இவர், தமிழகத்தில் பிறந்து தற்போது அமெரிக்காவில் வசித்து வருகிறார். சமீபத்தில்தான் தன் மகன் தனுஷிற்கு ஜப்பானில் கோலாகலமாக திருமணம் நடத்திவைத்து இவரைப் போன்றதொரு தந்தையை இவ்வுலகம் பார்த்திருக்க வாய்ப்பில்லை என்று எல்லோராலும் பாராட்டப்பட்டார். கடின உழைப்பு மற்றும் விடா முயற்சிக்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டான நெப்போலியன், 62-வது வயதில் காலடி எடுத்து வைத்துள்ளார். இந்த நிலையில், குடும்பத்தினர் மற்றும் உறவினர்களின் முன்னிலையில் இவரின் பிறந்தநாள் (02.12.24) கோலாகலமாக கொண்டாடப்பட்டது. பல்வேறு தரப்பில் இருந்தும் வாழ்த்துச் செய்திகள் வந்த நிலையில் அவரின் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக அவரின் திரை வாழ்க்கை குறித்த பல சுவாரஸ்யமான தகவல்களின் தொகுப்பை இந்த கட்டுரையில் காணலாம்.
வில்லனாக மிரட்டல்
'அசுரனில்' மார்த்தாயனாக சிறப்பு தோற்றத்தில் நெப்போலியன்
தமிழ் சினிமாவின் வரலாற்றில் ஒரு தனி அடையாளமாக திகழ்பவர் நெப்போலியன். திரையில் வில்லனாக வலம் வந்து, அரசியல் களத்தில் தன்னை நிரூபித்து, இன்று தொழிலதிபராகவும் திகழும் இவரது வாழ்க்கைப் பயணம், உத்வேகம் தரும் ஒன்று. இவரது உண்மையான பெயர் குமரேசன் துரைசாமி. கிராமத்து இளைஞனான இவர், சினிமாவின் மீது கொண்ட தீரா ஆசையால் சென்னை வந்தார். இயக்குநர் பாரதிராஜாவின் பார்வையில் பட்டார். பின்னர் பாரதிராஜா இயக்கிய 'புது நெல்லு புது நாத்து' படம்தான் நெப்போலியனின் அறிமுக திரைப்படம். அந்தப் படத்தில் 60 வயது முதியவராக நடித்த நெப்போலியன், வில்லத்தனமான கதாபாத்திரத்தில் அத்தனை இயல்பாக இருந்தார். சொல்லப்போனால் அந்த படத்தில் நெப்போலியன் நடிக்கும் போது அவருக்கு 27 வயதுதானாம். இருப்பினும் அனுபவம் வாய்ந்த முதியவராக உருமாறிய அந்த நடிப்பு, அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. ஒரு வட்டிக்காரனுக்கும், பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கும் இடையே நடக்கும் பிரச்சினையை மையமாக வைத்து வெளிவந்த இப்படத்தில் சங்கரலிங்கமாக வந்த நெப்போலியன் கொடூர வில்லனாக மிரட்டியிருப்பார். இந்த ஒரே படத்தின் மூலம், தமிழ் சினிமாவில் ஒரு புதிய வில்லன் உருவாகிவிட்டான் என்பதை அனைவரும் உணர்ந்தனர்.
'எஜமான்' திரைப்படத்தில் வல்லவராயனாக வரும் நெப்போலியன்
தொடர்ந்து ‘சின்னத்தாயி’, ‘பரதன்’, நாடோடி தென்றல்’, ‘ஊர் மரியாதை’, ‘பங்காளி’, ‘மறவன்’, ‘எங்க முதலாளி’ போன்ற பல படங்களில் விஜயகாந்த், சத்யராஜ், சரத்குமார், கார்த்திக், பிரபு போன்ற முன்னணி நடிகர்களுடன் இணைந்து வில்லனாக தோன்றி, ரசிகர்களின் பாராட்டை பெற்றார். சில படங்களில் வில்லத்தனத்திற்கு அப்பால், கதைக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரங்களிலும் வந்து தனது திறமையை வெளிப்படுத்தினார். இதன் மூலம் அவர் நடித்த ஒவ்வொரு கதாபாத்திரமும், ரசிகர்களின் மனதில் நீங்கா இடமும் பிடித்தது. அதில் குறிப்பாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘எஜமான்’ படத்தில் மிரட்டலான வில்லனாக வல்லவராயன் எனும் கதாபாத்திரத்தில் வரும் நெப்போலியன் வித்தியாசமான வில்லத்தனத்தை செய்து பலரின் கவனத்தை ஈர்த்திருப்பார். படத்தில், நெப்போலியன் தனது எதிரிகளை அழிக்கவும், தனது செல்வாக்கை அதிகரிக்கவும் பல திட்டங்களை வகுப்பார். இந்த நேரத்தில், தனது எதிரியான ரஜினிகாந்தை அவமானப்படுத்தும் விதமாக ஒரு திருமண வீட்டுக்கு வரும் காட்சியில்.வில்லத்தனத்துடன், மிக அழுத்தமான குரலில், "கல்யாண வீடா இருந்தா நான்தான் மாப்பிள்ளையா இருக்கணும், எழவு வீடா இருந்தா நான்தான் பிணமா இருக்கணும்" என்று அவர் பேசிய வசனம் இன்றும் யாராலும் மறக்க முடியாது.
ஹீரோவாக அசத்தல்
'எட்டுப்பட்டி ராசா' திரைப்படத்தில் "பஞ்சு மிட்டாய் சேலை கட்டி" பாடலில் குஷ்பூ, ஊர்வசியுடன்...
என்னதான் வில்லன், குணச்சித்திரம் என தொடர்ந்து பல படங்களில் நடித்து பலரின் பாராட்டைப் பெற்று வந்தாலும், தனக்கென தனித்த அடையாளம் கிடைக்க தொடர்ந்து போராடி வந்தார் நெப்போலியன். இந்த சமயத்தில்தான் அவரது குருநாதர் பாரதிராஜாவின் மூலம் மற்றுமொரு அற்புதமான வாய்ப்பு அவரை தேடி வந்தது. அந்த படம்தான் ‘கிழக்கு சீமையிலே’ திரைப்படம். தமிழ் சினிமாவில் அண்ணன்-தங்கை பாசத்தைப் பற்றி பேசும்போது, முதலில் நினைவுக்கு வருவது 'பாசமலர்' திரைப்படம்தான். ஆனால், 90களில் வெளியான 'கிழக்கு சீமையிலே' படம் அந்த காலகட்டத்தில் பாசமலருக்கு நிகரான பெரும் வெற்றியைப் பெற்றது. இதில் மாயாண்டி தேவராக விஜயகுமார், விருமாயியாக ராதிகா, சிவனாண்டியாக நெப்போலியன் ஆகிய மூவரும் மிக அற்புதமான நடிப்பை வெளிக்காட்டியிருப்பர். படத்தின் கதை ராதிகாவை சுற்றியே அமைக்கப்பட்டிருந்தாலும், நெகடிவ் கதாபாத்திரத்தில் ராதிகாவின் கணவராக வரும் நெப்போலியன் தனக்கே உரிய பாணியில் சிறப்பாக நடித்து கூடுதல் கவனம் பெற்று இருப்பார். இந்த தனித்த அடையாளமே அவருக்கு அடுத்த படத்திலேயே ஹீரோவுக்கான வாய்ப்பையும் பெற்று தந்தது. அந்த பாடம்தான் பிரதாப் போத்தன் இயக்கத்தில் 1993-ஆம் ஆண்டு வெளிவந்து பிளாக்பஸ்டர் வெற்றி பெற்ற ‘சீவலப்பேரி பாண்டி’ திரைப்படம்.
‘கிழக்கு சீமையிலே’ திரைப்படத்தில் ராதிகாவின் கணவர் சிவனாண்டியாக நெப்போலியன்
இந்த படம், திருநெல்வேலி மாவட்டத்தில் சீவலப்பேரி எனும் கிராமத்தில் வாழ்ந்து மறைந்த பாண்டி என்கிற ஒரு உண்மையான நபரின் வாழ்க்கை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படமாகும். தன்னை ஏமாற்றியவர்களை பாண்டி பழி வாங்கினாரா? போலீசாரிடமிருந்து தப்பித்தாரா? அவருடைய குடும்பம் என்னவாயிற்று? என்பதுதான் இந்த படத்தின் கதை. இதில் சீவலப்பேரி பாண்டியாக வரும் நெப்போலியன் தன்னுடைய கம்பீரமான நடிப்பை வெளிக்காட்டி மிரட்டியிருப்பார். குறிப்பாக அவரது நடிப்பு, பாண்டியின் கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்ததோடு, பாண்டியின் கோபம், வேதனை, காதல் என அனைத்து உணர்ச்சிகளையும் தன் நடிப்பின் மூலம் வெளிக்காட்டி பலரின் உள்ளங்களை கலங்க வைத்திருப்பார். தமிழ் சினிமாவில் கிராமப்புற வாழ்க்கை மற்றும் சமூக பிரச்சினைகளை பேசும் படங்களுக்கு ஒரு புதிய திசையை அமைத்து கொடுத்த ‘சீவலப்பேரி பாண்டி’ படத்திற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து நெப்போலியன் ஒரு ஸ்டார் நடிகராக மாறினார்.
கோலிவுட் டு ஹாலிவுட்
'சீவலப்பேரி பாண்டி' திரைப்படத்தில் பாண்டியாக வரும் நெப்போலியன்
ஹீரோவாக மாறிய பிறகு தொடர்ந்து ‘தாமரை’, ‘ராஜமுத்திரை’, ‘முத்துக்காளை’, ‘சின்னமணி’ என பல படங்களில் கதாநாயகனாக நெப்போலியன் நடித்து வந்தாலும் சொல்லும்படியான பெரிய வெற்றி எதுவும் கிடைக்கவில்லை. இந்த நேரத்தில்தான் கஸ்தூரி ராஜா இயக்கத்தில் வெளிவந்த ‘எட்டுப்பட்டி ராசா’ திரைப்படம் ஒரு வெற்றியை அவருக்கு பெற்று தந்தது. இதில் சிங்கராசா என்ற கதாபாத்திரத்தில் வரும் நெப்போலியன் நண்பனின் துரோகத்தால் வீழ்த்தப்பட்டு. தனது மனைவியின் இறப்புக்கு தானே காரணம் என்ற குற்ற உணர்ச்சியால் கலங்கி நின்று, தான் அனுபவிக்கும் வேதனையை மிக சிறப்பாக வெளிப்படுத்தியிருப்பார். அவருடைய நடிப்பு பார்வையாளர்களை கலங்கடிக்கும் வகையில் இருந்ததாலேயே, இப்படத்திற்காக சிறந்த நடிகருக்கான தமிழக அரசின் விருதும் நெப்போலியனுக்கு கிடைத்தது. இதே காலகட்டத்தில் ஹீரோவாக மட்டும் இல்லாமல் ‘தாயகம்’, ‘அசுரன்’, ‘எதிரும் புதிரும்’, ‘கிழக்கும் மேற்கும்’ போன்ற படங்களில் தனித்துவமான கதாபாத்திரங்களையும் ஏற்று நடித்து வந்த நெப்போலியன், நகைச்சுவையிலும் கலக்கினார். அதில் குறிப்பாக கேயார் இயக்கத்தில் வெளிவந்த ‘வனஜா கிரிஜா’, சுப்ரீம் ஸ்டார் சரத்குமாருடன் இணைந்து கலக்கிய ‘தென்காசி பட்டணம்’ போன்ற திரைப்படங்கள் நெப்போலியனுக்கு தனித்த அடையாளங்களை பெற்று தந்தன.
'தாமரை' திரைப்படத்தில் நடிகை ரோகிணியுடன் நெப்போலியன்
2000-ஆம் ஆண்டுக்கு பிறகு குறிப்பிட்ட சில படங்களை மட்டுமே தேர்வு செய்து நடித்துவந்த நெப்போலியன் அதிலும் தனது தனித்த திறமையை நிரூபித்து வந்தார். அதில் குறிப்பாக உலகநாயகன் கமல்ஹாசனுடன் இணைந்து நடித்த ‘விருமாண்டி’, ‘தசாவதாரம்’ திரைப்படங்கள் இவரது திரைப்பயணத்தில் முக்கிய மைல் கற்களாக அமைந்தன. ஏற்கனவே கமல் இயக்கத்தில் வெளிவர இருந்த ‘மருதநாயகம்’ படத்திலேயே வில்லனாக நடிக்க கேட்டு கமல் நெப்போலியனை அணுகிய போது, நெகடிவ் கேரக்டர் வேண்டாம் என அவர் மறுத்திருந்தாராம். இருப்பினும் நெப்போலியனின் நடிப்பு கமலுக்கு மிகவும் பிடிக்கும் என்பதாலேயே, எதிர்பார்க்காத நேரத்தில் ‘விருமாண்டி’ படத்தில் நல்லம்ம நாயக்கர் என்கிற பாசிட்டிவான கேரக்டரை நெப்போலியனுக்கு கொடுத்து பெருமைப்படுத்தினார் கமல். அதன்பின்னரும் ‘தசாவதாரம்’ படத்தில் நெப்போலியனுக்கு இரண்டாம் குலோத்துங்கச் சோழன் கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பை வழங்கி இந்திய அளவில் கவனம் பெற செய்தார். இது தவிர விஜய்யுடன் ‘போக்கிரி’, சிவகார்த்திகேயனுடன் ‘சீமராஜா’, கார்த்தியுடன் ‘சுல்தான்’ என அடுத்தகட்ட நட்சத்திர நடிகர்களுடனும் இணைந்து கலக்கிய நெப்போலியன் ஹாலிவுட்டிலும் கால் பாதிக்க தவறவில்லை.
'விருமாண்டி' திரைப்படத்தில் நல்லம்ம நாயக்கர் வேடத்தில்...
கடந்த 2019-ஆம் ஆண்டு வெளிவந்த 'டெவில் நைட்', 'டான் ஆஃப் தி நேன் ரோக்' எனும் சூப்பர் திரில்லர் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த நெப்போலியன் அடுத்த ஆண்டே வெளிவந்த ‘கிறிஸ்துமஸ் கூப்பன்’ எனும் காதல் கதையில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அசத்தினார். இதுதவிர 2022-ஆம் ஆண்டு வெளிவந்த ‘ஒன் மோர் ட்ரீம்’ எனும் படத்தில் பள்ளி தாளாளராக நடித்திருந்த நெப்போலியன், அப்படத்தின் நிர்வாக தயாரிப்பாளராகவும் பணியாற்றி இருந்தார். இப்படி 90களின் துவக்கத்தில் இருந்து இன்றுவரை தனது தனித்துவமான நடிப்பால் கவனம் பெற்று வரும் நெப்போலியன் எத்தனையோ படங்களில் நடித்திருந்தாலும், வில்லன், ஆக்சன் ஹீரோ என்பதை தாண்டி குடும்பங்கள் விரும்பும் நாயகனாகவே பார்க்கப்பட்டு வருகிறார். அதற்கு முக்கிய காரணம் சினிமாவில் இருந்தும் எந்த கிசுகிசுவிலும் சிக்காமல் ஒழுக்க நெறியுடன் அவர் வாழ்ந்த முறையே என்று கூட கூறலாம். அப்படிப்பட்ட தனித்துவ நாயகனான நெப்போலியன் இன்றுபோல் என்றுமே மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ்ந்திட நாமும் வாழ்த்திடலாம்.