நேரடியாக ஓடிடியில் வெளியாகும் மாரி செல்வராஜின் திரைப்படம்

இதுவரை மூன்று திரைப்படங்களை இயக்கி மக்களின் நல்ல வரவேற்பை பெற்ற இயக்குநர் மாரி செல்வராஜின் நான்காவது திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகாமல் நேரடியாக ஓடிடியில் வெளியாகவுள்ளது.

Update:2023-11-20 14:55 IST

இதுவரை மூன்று திரைப்படங்களை இயக்கி மக்களின் நல்ல வரவேற்பை பெற்ற மாரி செல்வராஜின் நான்காவது திரைப்படம் திரையரங்குகளில் வெளியிடப்படாமல் நேரடியாக ஓடிடியில் வெளியாகவுள்ளது.

சாதிய பிரச்சினையை முன்னிலைப்படுத்தி ‘பரியேறும் பெருமாள்’ என்ற திரைப்படத்தின் மூலம் தனது இயக்குநர் திறமையை வெளிப்படுத்திய மாரி செல்வராஜ், தனது இரண்டாவது படமான கர்ணனில், கிராமங்களில் இன்றளவும் நிகழும் பேருந்து நிலையம் பிரச்சினைகளை பேசியிருந்தார். நடிகர் தனுஷ், ரஜிஷா விஜயன், யோகி பாபு நடித்த இந்த திரைப்படமும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அதேபோல் இந்த படத்தில் இடம்பெற்ற ‘கண்டா வர சொல்லுங்க…’, ‘என் ஆளு பண்டாரத்தி எடுப்பான செம்பருத்தி…’, ‘தட்டான் தட்டான் வண்டிகட்டி பறந்தேன் கோழி தூவாட்டம்…’ என்று சந்தோஷ் நாராயணன் இசையில் அமைந்த பாடல்கள் செம ஹிட் அடித்தன.

மீண்டும் சமூக பிரச்சினைகளை முன்னிலைப்படுத்தி மாமன்னன் என்ற பெயரில் மூன்றாவது திரைப்படத்தை இயக்கியிருந்தார் மாரி செல்வராஜ்.    உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, ஃபஹத் பாசில், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த ஜூன் மாதம் வெளியான ‘மாமன்னன்’ திரைப்படமும் வெற்றி படமாகவே அமைந்தது. இந்த திரைப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளின்போதே இயக்குநர் மாரி செல்வராஜ் தனது அடுத்த படத்தை தொடங்கிவிட்டார்.


மாரி செல்வராஜின் இந்த 4வது படத்திற்கு ‘வாழை’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதில் கலையரசன், நிகிலா விமல் மற்றும் சிறுவர்கள் சிலரும் நடித்துள்ளனர். இதுவரை மாரி செல்வராஜ் இயக்கிய திரைப்படங்கள் பெரும்பாலும் சந்தோஷ் நாராயணன் இசையில் அமைந்திருந்து ஹிட் அடித்த நிலையில் இந்த படத்திற்கும் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தான். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பானது நெல்லை, தூத்துக்குடி என்று பல பகுதிகளில் எடுக்கப்பட்டு போஸ்ட் புரொடக்ஷன் பணி நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகாமல், நேரடியாக ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாக இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த தகவல் மாரி செல்வராஜ் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே தன்னுடைய இயக்குநர் பணியில் கவனமாக இருக்கும் மாரி செல்வராஜ், தனது அடுத்த படத்தின் படப்பிடிப்பை தொடங்கிவிட்டார். துருவ் விக்ரம் கதாநாயகனாக நடிக்கும் இந்த திரைப்படம் கபடி விளையாட்டை முதன்மைப்படுத்தி எடுக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்