இதற்கு முன் வந்த பள்ளி காதல் படங்களை மிஞ்சுமா 'மறக்குமா நெஞ்சம்'?

பள்ளியை மையமாக வைத்து தமிழில் நிறைய படங்கள் வந்து தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.

Update: 2024-02-05 18:30 GMT

பள்ளியை மையமாக வைத்து தமிழில் நிறைய படங்கள் வந்துள்ளன. ஒவ்வொரு காலகட்டத்திலும் அந்த படங்கள் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. ஒரு சில படங்கள் நம்மை பள்ளிக்காலத்திற்கே அழைத்து சென்றுவிடும். முன்பெல்லாம் அடிக்கடி பள்ளி பருவ படங்கள் வந்து கொண்டே இருக்கும். ஆனால் தற்போது குறைந்து விட்டது. கடைசியாக 'முதல் நீ முடிவும் நீ' படம் 2022 ஆம் ஆண்டு வெளியானது. அதன்பிறகு எந்த பள்ளி படமும் இல்லாத நிலையில், யோஹன்ரன் இயக்கத்தில் VJ ரக்ஷன், ஸ்வேதா வேணுகோபால், ப்ராங்க்ஸ்டார் ராகுல் மற்றும் தீனா ஆகியோர் நடிப்பில் தற்போது "மறக்குமா நெஞ்சம்" படம் வெளியாகியிருக்கிறது. 3, முதல் நீ முடிவும் நீ , 96, பசங்க 1 & 2 என இந்த வரிசையில் "மறக்குமா நெஞ்சம்" படம் இணையுமா? என்பதை இக்கட்டுரையில் காணலாம்.

முதல் நீ முடிவும் நீ


நடிகை மீத்தா ரகுநாத் - 'முதல் நீ முடிவும் நீ' படத்தின் ஒரு கட்சியில் கிஷன் தாஸ், மீத்தா ரகுநாத்

2022 ஆம் ஆண்டு இசையமைப்பாளர் தர்புகா சிவா இயக்கத்தில் வெளியான படம்தான் "முதல் நீ முடிவும் நீ". புதுமுகங்களை வைத்து கதையை மட்டுமே நம்பி எடுக்கப்பட்ட படம். கிஷன்தாஸ், மீதா ரகுநாத், ஹரிஸ் குமார் மற்றும் சரஸ் மேனன் ஆகியோர் நடித்திருந்தனர். பள்ளி பருவத்தில் ரேகாவும் வினோத்தும் காதலித்து வருகின்றனர். சந்தர்ப்ப சூழ்நிலையால் இருவரும் பிரிகின்றனர். அப்பொழுது வினோத் கண்முன் குபிட் ( காதல் கடவுள்) தோன்றுகின்றது. அதன்பின் வினோத்தும் ரேகாவும் இணைந்தார்களா? என்பதை விறுவிறுப்பான திரைக்கதையுடன் கூறியிருந்தார் இயக்குநர் தர்புகா சிவா. இந்த படத்திற்கு அவரே இசையும் அமைத்திருந்தார். படத்தை தியேட்டரில் வெளியிட படக்குழு நினைத்தது. ஆனால் நடித்த அனைவரும் புதுமுகங்கள் என்பதால் படத்தை வாங்குவதற்கு எந்த டிஸ்ட்ரிபியூட்டரும் முன்வரவில்லை. அதனால் சோனி லைவ் ஓடிடி தளத்தில் வெளியானது. வெளியான 2 நாட்களில் அதிகம் பேர் பார்த்த படமாக "முதல் நீ முடிவும் நீ" ஆனது. சுமார் 2 லட்சம் பேர் படத்தை பார்த்து ரசித்திருந்தனர். அதன்பின் சமூகவலைத்தளத்தில் படத்தைப்பற்றி நிறைய பாசிட்டிவ் கமென்ட்ஸ் வந்து கொண்டேயிருந்தது. மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றது " முதல் நீ முடிவும் நீ "

96 திரைப்படம்


'96' படத்தில் விஜய் சேதுபதி மற்றும் நடிகை திரிஷா

2018-இல் அறிமுக இயக்குனர் C. பிரேம்குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி, திரிஷா, கௌரி கிஷன், ஆதித்யா பாஸ்கர் ஆகியோர் நடித்திருந்த படம்தான் "96". எதிர்பார்ப்பே இல்லாமல் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது "96". பள்ளி பருவத்தில் காதலித்த இரு காதலர்கள் 22 வருடத்திற்கு பிறகு மீண்டும் சந்திக்கின்றனர். அதன்பிறகு அவர்களுக்கு இடையில் இருக்கும் புரிதலே இப்படத்தின் கரு. குறைந்த செலவில் எடுக்கப்பட்டு வசூலை அள்ளிக்குவித்தது. சிறுவயது ராமாக நடித்த ஆதித்யா பாஸ்கரையும், சிறுவயது ஜானுவாக நடித்த கௌரி கிஷனையும் மக்கள் வெகுவாக பாராட்டினார்கள். யதார்த்தமான திரைக்கதையால் நம்மை வியக்க வைத்தார் பிரேம்குமார். மஹேந்திரன் ஜெயராஜுவின் ஒளிப்பதிவு படத்திற்கு கூடுதல் பலம். கோவிந்த் வசந்தாவின் இசை பட்டி தொட்டி எங்கும் ஒலித்தது. குறிப்பாக பிரதீப் குமார் குரலில் வெளிவந்த "தி லைஃப் ஆப் ராம் " மற்றும் சின்மயி குரலில் வெளிவந்த "காதலே காதலே " பாடல்கள் பெரும் வரவேற்பை பெற்றன. விஜய் சேதுபதியும், த்ரிஷாவும் ராமாகவும் ஜானுவாகவும் வாழ்ந்திருந்தனர். ராட்சஸன் படத்துடன் இப்படம் வெளிவராமல் இருந்திருந்தால் இன்னும் அதிக வசூலை எட்டியிருக்கும் "96".

3 திரைப்படம்


'3' படத்தில் தனுஷ் மற்றும் ஸ்ருதிஹாசன்

இது ஒரு ரொமான்டிக் திரில்லர் படம். ஆனால் இந்த படத்தில் வரும் பள்ளிக்காட்சிகளுக்கு மக்கள் ஏகோபித்த வரவேற்பை கொடுத்தனர். 2012 ஆம் ஆண்டு ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் தனுஷ், ஸ்ருதிஹசான் மற்றும் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியானது. இப்படத்திற்கு பெரிய பலமாக இருந்தது அனிருத்தின் பாடல்கள்தான். அனிருத்துக்கு இதுதான் முதல்படம். அதுமட்டுமில்லாமல் ஐஸ்வர்யா ரஜினிகாந்திற்கும் இதுதான் முதல்படம். "வொய் திஸ் கொலவெறி " பாடல் பட்டி தொட்டி எங்கும் பரவியது. இதனால் படமும் நல்ல வியாபாரம் ஆனது. பைபோலார் டிசார்டர் எனப்படும் நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் ராம். அதனால் அவருக்கு நடக்கும் மனப்போராட்டமே இந்த "3" படம். வெளியானபோது பெரியதாக இந்த படம் வரவேற்கப்படவில்லை. ஆனால் தற்போது இந்த படத்தை ரசிகர்கள் தூக்கிவைத்து கொண்டாடுகின்றனர். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளிவந்த படங்களை விட, அப்போது ரீ ரிலீஸ் செய்யப்பட்ட "3" படம்தான் அதிக வசூலை ஈட்டியது.

பசங்க 1 & 2


நடிகர் சூர்யா 'பசங்க 2' திரைப்படத்தில் குழந்தைகளுடன்

இந்த படம் சிறுவர்களை குறிவைத்து எடுக்கப்பட்ட படம். 2009 - இல் இந்த படம் வெளியானது. இயக்குநர் பாண்டிராஜின் முதல் படம். முதல் படமே இவருக்கு தேசிய விருதை வாங்கித்தந்தது. அதுவும் 3 தேசிய விருதை வென்றது. தேசிய விருது மட்டுமில்லாமல் 10 சர்வதேச திரைப்படவிழாக்களில் இப்படம் திரையிடப்பட்டது. அதிக சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்ட படமும் இதுவே. இந்த படத்தில் நடித்த அனைத்து சிறுவர்களுமே அருமையாக நடித்தனர். குறிப்பாக கிஷோர், ஸ்ரீராம், பாண்டியன் ஆகியோர் தியேட்டரில் சிரிக்க மட்டும் வைக்காமல் கண்கலங்கவும் வைத்தனர். அத்துடன் விமலின் நடிப்பு படத்திற்கு கூடுதல் பலம். சிறுவர்களை மட்டுமே குறிவைத்து பட்டி தொட்டி எங்கும் இந்த படம் பேசப்பட்டது. முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இந்த படத்தின் இரண்டாம் பாகத்தில் சூர்யா நடித்தார். ஆனால் படம் எதிர்பார்த்த அளவிற்கு செல்லவில்லை.

மறக்குமா நெஞ்சம்


'மறக்குமா நெஞ்சம்' திரைப்படத்தில் பள்ளி மாணவர்களாக VJ ரக்ஷன், ப்ராங்க்ஸ்டார் ராகுல் மற்றும் தீனா

தற்போது திரையரங்கில் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கும் படம்தான் "மறக்குமா நெஞ்சம் ". விஜய் டிவியின் பிரபல தொகுப்பாளர் VJ ரக்ஷன், ப்ராங்க்ஸ்டார் ராகுல் மற்றும் தீனா ஆகியோர் நடித்துள்ளனர். பள்ளி பருவத்தில் கதாநாயகன் ரக்ஷன், கதாநாயகி பிரியதர்ஷினியை ஒருதலையாக காதலித்து வருகிறார். தனது காதலை இப்போ சொல்லிவிடுவேன், நாளை சொல்லிவிடுவேன் என பள்ளி முடியும் வரை தனது காதலை பிரியதர்ஷினியிடம் சொல்லாமல் போய் விடுகிறார் ரக்ஷன். 2008ல் இவர்களுடைய பள்ளி வாழ்க்கை முடிவுக்கு வந்த நிலையில், மீண்டும் 10 ஆண்டுகள் கழித்து அனைவரும் அதே பள்ளியில் முக்கிய காரணத்திற்காக ரீயூனியன் ஆகிறார்கள். அப்போதாவது தனது காதலை பிரியதர்ஷினியிடம் ரக்ஷன் கூறினாரா? இல்லையா? என்பதே படத்தின் மீதி கதை. எடுத்துக்கொண்ட கதைக்களம் நம் மனதை தொடுவது போல இருந்தாலும், திரைக்கதை வலுவாக இல்லை எனக் கூறப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் கதாபாத்திர தேர்வும் பொருத்தமாக இல்லை என்று சொல்லப்படுகிறது. ஹீரோ, ஹீரோயின், அவர்களுடன் இருப்பவர்கள் என யாருமே பள்ளி மாணவர்கள் கதாபாத்திரத்தில் கொஞ்சம் கூட பொருந்தவில்லை என்றும் கூறப்படுகிறது. நகைச்சுவையும் சில இடங்களில் ஒர்கவுட் ஆகவில்லையாம். ஆனால், நமக்குள் இருக்கும் தாழ்வு மனப்பான்மை குறித்தும், அதை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பது குறித்தும் இயக்குநர் காட்டியுள்ள விஷயம் நன்றாக உள்ளதாகவும் கூறப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்