குழந்தைகளுக்கு மன அழுத்தமா? அடுத்தடுத்து தொடரும் தற்கொலை மரணங்கள்
அண்மை காலமாகவே திரைத்துறையைச் சேர்ந்தவர்களின் மறைவு என்பது ஒரு தொடர்கதையாகவே நிகழ்ந்து வருகிறது.
தமிழ் திரையுலகில் பெரிய நட்சத்திர நடிகர்கள் தொடங்கி அவர்களின் வாரிசுகள் வரை பலர் குறித்தும் திடீர் திடீரென்று வரும் மறைவு செய்திகள் ஒட்டுமொத்த திரையுலகினரையும், தமிழ் சினிமா ரசிகர்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது. அதிலும் அண்மை காலமாகவே திரைத்துறையைச் சேர்ந்தவர்களின் மறைவு என்பது ஒரு தொடர்கதையாகவே நிகழ்ந்து வருகிறது. காலையில் எழும்போது நன்றாக இருப்பவர்கள் அடுத்த சில மணி நேரங்களிலேயே மாரடைப்பு ஏற்பட்டு இறந்து போய்விட்டதாக வரும் செய்திகளை கேட்கும் போது இன்னும் மனம் கனத்துப் போகிறது. இது ஒருபுறம் என்றால் இன்னொரு பக்கம் திரைப் பிரபலங்களின் வாரிசுகள் தங்கள் உயிரை தாங்களே மாய்த்துக் கொள்ளும் நிகழ்வு. அப்படி மாய்த்துக் கொள்பவர்கள் தரப்பில் சொல்லப்படும் ஒரே காரணம் மன அழுத்தம். ஏன் அவர்களுக்கு இந்த மன அழுத்தம் வருகிறது... இதற்கு தீர்வுதான் என்ன... திரையில் எல்லோரையும் மகிழ்ச்சிப்படுத்துபவர்கள், தனிப்பட்ட வாழ்க்கை என்று வரும் பொழுது எங்கே தவறு செய்கிறார்கள்... அவர்களின் வாரிசுகள் தங்கள் உயிரை தாங்களே மாய்த்துக் கொள்ளும் அளவுக்கு அப்படி என்ன பிரச்சனைகள் அவர்களின் வாழ்வில் இருக்கப்போகிறது… போன்ற பல கேள்விகள் நம்மிடத்தில் எழுந்தாலும், திரைபிரபலன்களின் வாரிசுகள் என்று மட்டும் அல்லாமல் பொதுவாகவே இந்த காலத்து குழந்தைகள் ஏன் இப்படிப்பட்ட தவறான முடிவுகளை மிக எளிதாக எடுக்கிறார்கள் என்பது குறித்து இங்கே ஆராயலாம்...
தொடரும் தற்கொலைகள்…
ஒவ்வொருவரும் தங்களுடைய வாழ்க்கையில் ஏதோ ஒன்றை தேடித்தான் ஓடிக்கொண்டிருக்கிறோம். அது அனைத்துமே தங்களை சுற்றி இருப்பவர்களின் நலனுக்காக மட்டுமின்றி தங்களுடைய எதிர்கால கனவுகளை, ஆசைகளை அடைவதற்காகவும் இருக்கலாம். அப்படி நமது குறிக்கோளை அடைவதற்காக நாம் ஓடும் அந்த சமயம் தான் திடீரென மனம் நொறுங்கிப் போகும் படியான தோல்விகளும், விரக்திகளும், ஏமாற்றங்களும் நாம் சந்திக்க வேண்டிய சூழல் வரும். அந்த மாதிரியான சமயங்களில் பெரும்பாலானவர்கள் அவர்களுக்கு வரக்கூடிய தடங்கல்களை, தோல்விகளை ஏற்று சமாளித்து வாழக் கற்றுக் கொள்கின்றனர். ஆனால், ஒருசிலர் இந்தத் தடைகளைக் கடந்து போக முடியாமல் தனது உயிரை தாங்களே மாய்த்துக் கொள்ளும் எண்ணத்திற்கு தள்ளப்படுகின்றனர். அந்த நொடி அவர்கள் எடுக்கும் அந்த விபரீதமான முடிவு நம்மீது அன்பு கொண்டவர்களை எந்த அளவிற்கு காயபப்டுத்தும் என்பதை ஒரு கணம் யாரும் யோசிப்பது இல்லை.
உலகத்தில் ஒரு வருடத்தில் 8 லட்சம் பேர் தற்கொலை செய்துகொள்வதாக ஐ.நா. கூறுகிறது. கடந்த 50 ஆண்டுகளில் தங்கள் உயிரை தாங்களே மாய்த்துக் கொள்பவர்களின் எண்ணிக்கை 60 சதவீதம் அளவுக்கு உயர்ந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்திய அளவில் தமிழகத்தில் தான் இதுபோன்ற மரணங்கள் அதிகமாக நடைபெறுகிறதாம். தங்கள் உயிரை தாங்களே மாய்த்துக் கொள்ளும் மரணங்களில் இந்தியாவிலேயே தமிழகம்தான் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளதாக கூறப்படுகிறது. அதிலும் குறிப்பாக NCRB அதாவது மத்திய குற்றப் பதிவேடு ஆவண காப்பகம் வெளியிட்டுள்ள கணக்கின்படி ஒரு நாளைக்கு 31 மாணவர்கள் தற்கொலை செய்து கொள்கின்றனர் என்ற தகவல் அதிர்ச்சியளிக்கிறது. இந்த தற்கொலைகளுக்கு முக்கிய காரணமாக கூறப்படுவது மன அழுத்தம்.
மன அழுத்தத்தில் குழந்தைகள்
குழந்தைகளுக்கு எதனால் மன அழுத்தம்…
பெரியவர்கள் தொடங்கி குழந்தைகள் வரை எல்லோரும் இன்று மன அழுத்தத்திற்கு அதிகம் ஆளாகிறார்கள். அதற்கு மிக முக்கிய காரணம் இன்றைய வாழ்க்கைச் சூழலில் ஏற்படும் மாற்றங்கள் தான். இன்றைய பெற்றோர்கள் தங்கள் வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக் கொள்வதற்காக வேலை வேலை என்று ஓடிக்கொண்டிருக்கிறார்கள். குழந்தைகளிடம் அவர்கள் செலவழிக்கும் நேரம் என்பது மிகவும் சொற்பமானதாகத்தான் இருக்கும். இதனால் குழந்தைகள் என்ன மாதிரியான மனோநிலையில் இருக்கிறார்கள், அவர்களுக்கு ஏதாவது பிரச்சனைகள் இருக்கிறதா, சுற்றி இருப்பவர்களால் ஏதாவது மன அழுத்தத்துக்கு ஆளாகி இருக்கிறார்களா என்பதை தெரிந்து கொள்ளாமல் அவர்கள் மீது தங்களது எதிர்கால கனவுகளை திணிக்கும் பொழுது ஒருவித மன அழுத்தத்திற்கு ஆளாகிறார்கள். அதே போல கல்வி தொடர்பான விஷயங்களிலும், வயதினால் வரும் மனபிறழ்வுகள் குறித்தும் வெளிப்படையாக அவர்களிடம் பேசாமல் இருப்பதோடு, சிறுவயதில் தாங்கள் சந்தித்த ஏமாற்றங்களை, தங்களது பிள்ளைகளும் சந்தித்து விடக்கூடாது என்று அவர்கள் கேட்பதையெல்லாம் வாங்கிக் கொடுத்து வாழ்க்கையில் ஏமாற்றம் என்றால் என்ன? என்பதே தெரியாமல் வளர்க்கிறார்கள். இதனால் ஏதோ ஒரு சூழ்நிலையில் தோல்வியை சந்திக்கும் பொழுதும், நெருக்கமானவர்களால் ஏமாற்றம் அடையும் பொழுதும், பெற்றோர்கள் தரப்பில் இருந்து 'நோ' சொல்லும் பொழுதும், கோவத்தில் கடுமையான வார்த்தைகளால் திட்டும் பொழுதும் அவர்களால் அதை ஏற்றுக் கொள்ள முடியாமல் மனம் உடைந்து போகின்றனர். பின்னர் ஒரு சூழலில் நாம் ஏன் இந்த உலகில் இருக்க வேண்டும் என்று தங்கள் உயிரை தாங்களே மாய்த்துக் கொள்ளும் முடிவையும் எடுக்கின்றனர்.
தற்கொலைக்கு முயலும் குழந்தைகள்
திரைப் பிரபலங்களின் வாரிசுகள் மரணம்...
தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக பெண் பிள்ளைகள் தங்களை தாங்களே மாய்த்துக்கொள்ளும் நிகழ்வுகள் சர்வ சாதாரணமாக நிகழ்ந்து வருகிறது. அதிலும் பதின்ம வயதில் அவர்கள் எடுக்கும் இந்த தவறான முடிவுகளால் தவித்து போவது என்னவோ அவர்களின் குடும்பத்தினர்தான். சாதாரண நடுத்தர குடும்பம் தொடங்கி திரைப்பிரபலங்கள் வரை அனைவரின் வீடுகளிலும் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்கதையாகி வருகின்றது. பொதுவாகவே திரைப் பிரபலங்களின் வாழ்க்கை முறை என்பது நேரம், காலத்திற்கு அப்பாற்பட்டது, தொடர்ந்து ஓடிக் கொண்டே தான் இருக்க வேண்டும். இதில் குடும்பம், குழந்தை மாதிரியான விஷயங்களில் கவனம் செலுத்துவது மிக கடினமான ஒன்று. அவர்களுக்கு என்ன குறைச்சல், நன்கு வசதி படைத்தவர்களாகத் தானே இருக்கிறார்கள். இவர்களுக்கெல்லாம் என்ன மன கஷ்டம் வரப்போகிறது என்று தான் தூரத்தில் இருந்து பார்ப்பவர்கள் கூறுவார்கள். ஆனால் மன அழுத்தம் என்பது வசதி, பணத்தை பார்த்து வருவதில்லை. ஏதோ ஒரு இடத்தில் பெற்றோர்கள் கொடுக்கும் வசதியான அதே நேரம் சுதந்திரமான வாழ்க்கை, அதனால் ஏற்படும் தனிமை போன்றவை ஆரம்பத்தில் அந்த குழந்தைகளுக்கு மகிழ்ச்சியை கொடுத்தாலும், ஒரு கட்டத்தில் அதுவே அவர்களுக்கு பிரச்சினையாக மாறுகிறது. அந்த பிரச்சனைகள் நாளாக நாளாக வேறுவிதமாக மாறி அவர்கள் உயிரை அவர்களே மாய்த்துக் கொள்ளும் அளவிற்கு கொண்டு செல்கிறது.
அந்த வகையில், திரைத்ததுறையில் மிகவும் பிரபலமாக அறியப்பட்ட பாடலாசிரியர் கபிலனின் மகள் தூரிகை, அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கடந்த 2022 ஆம் ஆண்டு கடும் பரபரப்பை ஏற்படுத்தி ஒட்டுமொத்த திரையுலகினரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. 27 வயதிலேயே, பிரபல ஆங்கில மேகஸீனில் எழுத்தாளராகவும், ஆடை வடிவமைப்பாளராகவும் இருந்தது மட்டும் இன்றி... பெண்களுக்கான ஆன்லைன் இணையதள வார இதழ் ஒன்றையும் நடத்தி வந்தார் அவர். மிகவும் தைரியமான அதே நேரம் பாசிட்டிவான மனநிலை கொண்டவராக இருந்த தூரிகையின் இந்த முடிவு பலரையும் அன்று சோகத்தில் ஆழ்த்தியது.
பாடலாசிரியர் கபிலன் மற்றும் விஜய் ஆண்டனி
அதே மாதிரியான ஒரு நிலையில் தான் தற்போது மிகவும் புகழ்பெற்ற நடிகரும், இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனியும் இருக்கிறார். அவரது மூத்த மகளான மீராவின் மறைவு செய்தி தமிழ் திரையுலகினரை மட்டுமின்றி ஒட்டுமொத்த தமிழகத்தையும் தற்போது சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. பள்ளியில் ஸ்கூல் டாப்பர்., எல்லாவற்றிலும் தனித்து தெரிய கூடிய அளவில் திறமையான மாணவி, அதீத தன்னம்பிக்கை கொண்டவர், என்றெல்லாம் சொல்லப்படும் விஜய் ஆண்டனியின் மகள் மீரா கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது வீட்டில் தூக்கிட்டு தனது உயிரை மாய்த்துக்கொண்டார். அதற்கு சொல்லப்பட்ட காரணம் மன அழுத்தம். இத்தனைக்கும் தற்கொலை செய்து கொள்வது என்றுமே பிரச்சினைக்கு தீர்வாகாது என்று விஜய் ஆண்டனி பல மேடைகளில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக பேசியிருக்கிறார். அப்படி இருக்கும் பொழுது அவரது மகளே இப்படி ஒரு முடிவை தேடிக்கொண்டதுதான் வேதனையின் உச்சம்.
மனநல மருத்துவர்கள் கூறும் ஆலோசனை
ஒரு சிறு தீப்பொறி தான், சில மணிநேரங்களில் ஒட்டுமொத்த காட்டையும் அளித்து சாம்பலாக்கிவிடுகிறது. ஆனால் தன்னை தானே அழித்துக் கொள்ளும் மனநிலையில் இருக்கும் ஒருவருக்கு நாம் தரும் சிறு ஆறுதல் தான் அவரது உயிரை காக்கும் என்கின்றனர் மனநல மருத்துவர்கள். வேலைக்குச் செல்லும் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கான நேரத்தை ஒதுக்கி அவர்களுடன் இருக்க வேண்டும். அப்போதுதான் அவர்கள் என்ன நினைக்கிறார்கள். என்ன செய்ய விரும்புகிறார்கள் என்பதை நம்மால் தெரிந்து கொள்ள முடியும். இருவரும் வேலைக்குச் செல்லும் பொழுது எங்களால் கவனிக்க முடியவில்லை என்று சிலர் கூறுவார்கள். சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும் என்ற ஒரு பழமொழி இருக்கிறது. அதுபோலவே பிள்ளைகள் நலமோடு இருந்தால் தான், குடும்பம் என்ற கட்டமைப்பும் நன்றாக இருக்கும். எந்த பிள்ளைகளுக்காக ஓட நினைக்கிறோமோ அந்த பிள்ளையே நம்மோடு இல்லை என்றால் அதன் பிறகு நாம் ஓடியோ, வருத்தப்பட்டோ பயன் இல்லை.பிள்ளைகளை வீட்டிற்குள்ளேயே வைத்து வளர்ப்பதும் அவர்களை ஒருவித மன அழுத்தத்திற்கு ஆளாக்குகிறது. அவர்களுக்கான சுதந்திரத்தை சரியான நேரத்தில் கொடுத்து வழி நடத்தினால் அவர்கள் எடுக்கும் தவறான முடிவுகளிலிருந்து தடுக்க முடியும். மேலும் பெற்றோர்களில் யாரோ ஒருவர் பிள்ளைகளின் எதிர்கால நலனுக்காக உடன் இருந்து அவர்களை நல்வழிப்படுத்துவது நல்லது.
மனநல மருத்துவர்கள்
தற்கொலை என்றும் தீர்வாகாது…
பிரபலங்களின் வாரிசுகள் என்பதால் அவர்களின் மரணம் குறித்த செய்திகள் பெரிய அளவில் பேசு பொருளாக மாறுகிறது. அதுவும் சிறிது நாட்களில் மறைந்து ஓய்ந்து போகும். ஆனால் இதுபோன்ற குழந்தைகளின் தற்கொலை முடிவுகளுக்கு என்னதான் தீர்வு என்பது குறித்து யாராலும் ஆராயப்படுவதில்லை. தற்கொலை எண்ணத்திற்கு உயிரியல் காரணிகள் இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. இருந்தும் குடும்ப சூழலும், சமூக கட்டமைப்பும் பலமாக இருந்தால் நிச்சயம் ஒரு உயிரை காக்க முடியும் என நாம் நம்புவோம். இதனால் சமூகத்தில் உள்ள அனைவரும் தற்கொலைகளை தடுக்க தங்களாலான பங்களிப்பைக் கொடுக்க வேண்டும். இது கடவுள் கொடுத்த வாழ்க்கை. அதை நமே அளித்துக் கொள்ளும் உரிமை நமக்கு இல்லை. உயிரை மாய்த்துக் கொள்ள முடிவெடுக்கும் முன்பு நமக்காக வாழும் நமது குடும்பத்தினரை ஒரு நிமிடம் யோசிப்போம். இந்த முடிவை எடுத்து உங்கள் குடும்பத்திற்கு தீராத வேதனையை கொடுக்காதீர்கள். தற்கொலை ஒருபோதும் தீர்வாகாது.
தற்கொலை தீர்வாகாது