2025-ஆம் ஆண்டு ஆஸ்கருக்கு இந்தியாவிலிருந்து தேர்வான திரைப்படங்கள்!

‘லாபதா லேடீஸ்’ தேர்வு செய்யப்பட்டதற்காக தான் மிகவும் பெருமைப்படுவதாகவும், தங்களுடைய குழுவின் அயராத உழைப்பு இது ஒரு சான்று என்றும், அவர்களுடைய முழு அர்ப்பணிப்பும் ஆர்வமும்தான் கதைக்கு உயிர் கொடுத்தது என்றும் கூறியிருக்கிறார். மேலும், இந்தியாவைப் போலவே இந்த படம் உலகம் முழுவதுமுள்ள ரசிகர்களிடையே எதிரொலிக்கும் என்று நம்புவதாகவும் தெரிவித்திருக்கிறார்.

Update: 2024-09-30 18:30 GMT
Click the Play button to listen to article

உலக சினிமாவை பொருத்தவரை உயரிய விருதாக கருதப்படுவது ஆஸ்கர் விருது. 1929ஆம் ஆண்டுமுதல் வருடந்தோறும் ஆஸ்கர் விருதுகள் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் வைத்து வழங்கப்பட்டு வருகின்றன. இந்த விருதை பெற உலகளவில் பல்வேறு மொழிகளைச் சேர்ந்த படங்கள் தேர்வு செய்யப்பட்டு அனுப்பப்படுகின்றன. கடந்த ஆண்டு நடைபெற்ற ஆஸ்கர் விழாவில் ஹாலிவுட் படமான ‘ஒப்பன்ஹெய்மர்’ 13 பிரிவுகளில் பரிந்துரை செய்யப்பட்டு அதில் 7 விருதுகளை தட்டிச்சென்றது. 2024ஆம் ஆண்டிற்கான ஆஸ்கர் விழா மார்ச் 10ஆம் தேதி நடைபெற்ற நிலையில், 2025ஆம் ஆண்டிற்கான 97வது ஆஸ்கர் விருது விழா மார்ச் 2ஆம் தேதி (மார்ச் 3 - இந்திய தேதி), அதாவது ஒரு வாரத்திற்கு முன்பே நடைபெறவிருக்கிறது. இதுகுறித்த அறிவிப்பு வெளியானதிலிருந்தே இந்தியா சார்பில் எந்த படம் தேர்வாகும் என்ற எதிர்பார்ப்பானது மிகவும் அதிகமாகவே இருந்தது. இந்நிலையில், முதற்கட்டமாக 29 படங்கள் பரிந்துரை செய்யப்பட்ட நிலையில், அதில் அமீர்கான் தயாரிப்பில் கிரண் ராவ் இயக்கிய ‘லாபதா லேடீஸ்’ திரைப்படம் தேர்வுசெய்யப்பட்டிருக்கிறது. இந்த படமானது ‘சிறந்த வெளிநாட்டு திரைப்படம்’ என்ற பிரிவில் இடம்பெறுகிறது. நல்ல கதையம்சம் மற்றும் கருத்துமிக்க படங்கள் பல இருந்தும் ‘லாபதா லேடீஸ்’ படத்தை தேர்ந்தெடுத்ததற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதற்கிடையே மேலும் ஒரு இந்தி படம் ஆஸ்கருக்கு தேர்வு செய்யப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது. சுதந்திர போராட்ட வீரரான விநாயக் தாமோதர் சாவர்க்கரின் வாழ்க்கையை மையமாகக்கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படமான வீர் சாவர்க்கர் படமும் அடுத்த ஆண்டு ஆஸ்கர் பரிந்துரை பட்டியலில் சேர்ந்திருக்கிறது.

லாபதா லேடீஸ் தேர்வானது எப்படி? 

‘லாபதா லேடீஸ்’ அதாவது காணாமல்போன பெண்கள் என்று தலைப்பிடப்பட்டிருக்கும் இந்த படம், பெண்ணியம், பெண் கல்வி மற்றும் அவர்களுடைய உரிமையை மையமாகக் கொண்ட எளிமையான கதையம்சம் கொண்ட ஒரு இந்தி திரைப்படம். வட இந்திய கிராமத்தைச் சேர்ந்த இரண்டு பெண்கள் திருமணமாகி தங்களுடைய கணவரின் ஊருக்கு ரயிலில் செல்லும்போது முக்காடு அணிந்திருப்பதால் ஒரு ஆண் தன்னுடைய மனைவியை மாற்றி அழைத்துச் சென்றுவிடுகிறான். இதனால் அந்த நபரின் மனைவி காணாமல் போகிறாள். தங்களுடைய சொந்த ஊருக்கு வந்தபிறகுதான் தனது மனைவி மாறியிருப்பது அந்த நபருக்கு தெரிகிறது. இந்த சூழலில் தான் கூட்டிவந்த பெண் யார் என கேட்க, அந்த பெண் தனது பெயர், ஊர், பெற்றோர், கணவர் என அனைத்தையும் மாற்றி பொய் சொல்கிறாள். புதிதாக திருமணமான அந்த பெண் ஏன் பொய் சொல்லவேண்டும்? காணாமல்போன மனைவியை தேடும் கணவர் என கதை எளிமையாக செல்கிறது. அதே சமயம், மதிப்பு, மரியாதை என்ற பெயரில் கணவரின் பெயரைக்கூட சொல்ல மறுக்கும் பெண்கள், இன்றளவும் கிராமங்களில் பெண் கல்வி எப்படி மறுக்கப்படுகிறது? பெண்கள் சொந்த காலில் நிற்க வேண்டும் என்பது போன்ற கருத்துகளை ஆழமான வசனங்கள் மூலம் சொல்லிவிடுகிறார் படத்தின் இயக்குநர் கிரண் ராவ்.


2025ஆம் ஆண்டு ஆஸ்கருக்கு இந்தியா சார்பில் தேர்வு செய்யப்பட்டிருக்கும் ‘லாபதா லேடீஸ்’ திரைப்படம்

ஒட்டுமொத்த படமும் ஆண்களின் உலகத்தில் பெண்கள் எப்படி தொலைந்துபோகிறார்கள்? என்பதை மையமாகக்கொண்டு நகர்கிறது. நமது சமூகத்தில் இன்றளவும் மேலோங்கி நிற்கும் ஆணாத்திக்கத்தை சற்று நகைச்சுவையாக திரையில் காட்டியிருப்பார். மேலும் சிறிய கதாபாத்திரம் என்றாலும் டீக்கடை பெண்ணாக வரும் மஞ்சு மாய் மூலம் சமூகத்தில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையே இருக்கும் பாலின இடைவெளியை சிறப்பாக காட்டியிருக்கிறார். தனது படம் ஆஸ்கருக்கு தேர்வானது குறித்து கிரண் ராவ் மகிழ்ச்சி தெரிவித்திருக்கிறார். ஆஸ்கருக்கு ‘லாபதா லேடீஸ்’ தேர்வு செய்யப்பட்டதற்காக தான் மிகவும் பெருமைப்படுவதாகவும், தங்களுடைய குழுவின் அயராத உழைப்புக்கு இது ஒரு சான்று என்றும், அவர்களுடைய முழு அர்ப்பணிப்பும் ஆர்வமும்தான் கதைக்கு உயிர் கொடுத்தது என்றும் கூறியிருக்கிறார். மேலும், இந்தியாவைப் போலவே இந்த படம் உலகம் முழுவதுமுள்ள ரசிகர்களிடையே எதிரொலிக்கும் என்று நம்புவதாகவும் தெரிவித்திருக்கிறார். உச்ச நீதிமன்றத்தின் 75வது ஆண்டுவிழாவில் அங்கு ‘லாபதா லேடீஸ்’ திரைப்படம் திரையிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.


இந்தியா சார்பாக ஆஸ்கருக்கு செல்லும் மற்றொரு படமான ‘வீர் சாவர்க்கர்’

இதுபோக, ‘வீர் சாவர்க்கர்’ திரைப்படமும் ஆஸ்கருக்கு இந்தியா சார்பில் பரிந்துரை செய்யப்பட்டிருக்கிறது. சுதந்திர போராட்ட வீரரான விநாயக் தாமோதர் சாவர்க்கரின் வாழ்க்கையை மையமாகக்கொண்டு எடுக்கப்பட்ட இப்படத்தில் ரன்தீப் ஹுடா, சாவர்க்கர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். ஆஸ்கருக்கு இப்படம் தேர்வு செய்யப்பட்டிருப்பது குறித்து படத்தின் தயாரிப்பாளர் சந்தீப் சிங் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். அதில், தனக்கு பெருமையாக இருப்பதாகவும், ஃபிலிம் ஃபெடரேஷன் ஆஃப் இந்தியாவுக்கு நன்றி தெரிவிப்பதாகவும், இந்த பயணத்தில் தங்களுக்கு உதவிய அனைவருக்கும் நன்றி எனவும் தெரிவித்திருக்கிறார். படத்தின் ஹீரோவான ரன்தீப், ‘சாவர்க்கரின் மொத்த கதையையும் படித்துவிட்டு, அவருடைய வாழ்க்கையை அப்படியே திரையில் பிரதிபலித்திருப்பதாகவும், சாவர்க்கரின் 53 வருட வாழ்க்கையை 3 மணிநேரத்தில் காட்டியிருப்பதாகவும், இந்த அங்கீகாரமே தங்களுக்கு விருது கிடைத்ததுபோல் உள்ளது எனவும் தெரிவித்திருக்கிறார்.

இதை ஏற்றுக்கொள்ள முடியாது!

ஆஸ்கருக்கு பரிந்துரை செய்யப்படும் படங்களிலிருந்து சிறந்த படங்களை பிலிம் ஃபெடரேஷன் ஆஃப் இந்தியா அமைப்பின்கீழ் 13 பேர் கொண்ட குழுதான் தேர்வு செய்யும். பல்வேறு கட்ட தேர்வுகளுக்கு பிறகு கடைசியில் ஒன்று அல்லது இரண்டு படங்கள் தேர்வு செய்யப்பட்டு அனுப்பப்படுவது வழக்கம். அந்த வரிசையில் இந்த ஆண்டு இறுதிப்போட்டி வரை ‘வாழை’ திரைப்படம் இடம்பெற்ற நிலையில் கடைசியாக அப்படம் தேர்வு செய்யப்படவில்லை.


ஆஸ்கருக்கு தேர்வாகும் என மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ‘வாழை’ திரைப்படம்

இதனை ஏற்றுக்கொள்ள முடியாது என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியிருக்கிறார். நல்ல கதையும், கருத்தும், தாக்கமும் மிகுந்த தமிழ்ப்படங்கள் வெளியாகியிருந்தபோதும் இந்தி படம் என்பதாலேயே ‘லாபதா லேடீஸ்’ தேர்வு செய்யப்பட்டிருப்பதாகவும், நகைச்சுவையோடு கருத்துக்களை சொன்னாலும், அது உணர்வுப்பூர்வமாக இல்லை என்றும் தெரிவித்திருக்கிறார். மேலும் எந்த மொழியில் படம் இருக்கிறது என்று பார்க்காமல், மக்களின் வாழ்வியலுடன் கலந்த படங்களை அங்கீகரிப்பதே ஆஸ்கருக்கு நாம் போடும் அடித்தளம் என்றும், இந்தியாவில் மட்டும்தான், ஆஸ்கர் விருதிற்கான தேர்வு விதத்தினாலேயே படம் இங்கேயே தோற்றுவிடுவதாகவும் தெரிவித்திருக்கிறார்.

Full View

இயக்குநர் வசந்தபாலனும், ‘லாபதா லேடீஸ்’ இந்தி திரைப்படம் பொழுதுபோக்கு தன்மைக்காகவும் சுவாரஸ்யத்திற்காகவும் உருவாக்கப்பட்ட ஒரு ஃபீல் குட் திரைப்படம். ஆனால் அதைவிட கொட்டுக்காளியோ, உள்ளொழுக்கோ, ஆடு ஜீவிதமோ இந்தியா சார்பாக ஆஸ்கருக்கு அனுப்பப் பட்டிருக்கலாம் என்று தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.


இந்த ஆண்டு ஆஸ்கருக்கு பரிந்துரை செய்யப்பட்ட படங்களில் சில...

29 படங்கள் எவை?

2025ஆம் ஆண்டு ஆஸ்கர் விருதுக்கு முதலில் 29 படங்கள் பரிந்துரை செய்யப்பட்டன. அதில் இந்தியில் கில், அனிமல், சந்து சாம்பியன், லாபதா லேடீஸ், குட் லக், சாம் பகதூர், ஜோரம், ஸ்ரீகாந்த், ஸ்வதந்த்ரிய வீர் சாவர்க்கர், சோட்டா பீம் & தி கர்ஸ் ஆஃப் தம்யன் மற்றும் ஆர்டிகிள் 370 ஆகிய 11 படங்களும், தெலுங்கில், கல்கி 2898 ஏடி, அனுமான், மங்களவாரம் ஆகிய 3 படங்களும், தமிழில் தங்கலான், வாழை, ஜிகர்தண்டா டபுள் எக்ஸ், கொட்டுக்காளி, ஜமா மற்றும் மகாராஜா ஆகிய 6 படங்களும், மலையாளத்தில் ஆடுஜீவிதம், உள்ளொழுக்கு, ஆட்டம் மற்றும் ஆல் வி இமாஜின் ஏஸ் லைட் ஆகிய 4 படங்களும், மைதான், காரத் கணபதி மற்றும் ஸ்வார கந்தர்வ வீர் பாட்கே ஆகிய 3 மராத்தி படங்களும், ஆபா என்ற ஒடியா படமும் இந்த லிஸிட்டில் இடம்பெற்றிருந்தன. குறிப்பாக, தமிழில் ‘வாழை’, ‘கொட்டுக்காளி’ ஆகிய படங்களும் மலையாளத்தில், ‘ஆடுஜீவிதம்’ மற்றும் ‘உள்ளொழுக்கு’ ஆகிய படங்களும் தேர்வாகும் என மிகவும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தென்னிந்தியாவிலிருந்து ஒரு படமும் தேர்வு செய்யப்பட்டவில்லை என்பது சற்று வருத்தத்திற்குரியதாக பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு மலையாளப்படமான ‘2018’ இந்தியா சார்பில் ஆஸ்கருக்கு அனுப்பப்பட்டிருந்த நிலையில், அப்படம் எந்த விருதையும் பெறவில்லை. இந்நிலையில் இந்த ஆண்டு ஆழமான கதையம்சம் மற்றும் பெஸ்ட் ஸ்க்ரீன்ப்ளே கொண்ட பல படங்கள் வெளியாகியிருந்தாலும் ஒரு படம்கூட தேர்வு செய்யப்படாதது ஏன்? என்பது பலரின் கேள்வியாக இருக்கிறது.


இதுவரை ஆஸ்கருக்கு தேர்வான தமிழ்ப்படங்களில் முக்கியமானவை

தமிழில் தேர்வான 6 படங்கள்

இந்த ஆண்டு ஒரு தமிழ்ப்படம்கூட ஆஸ்கர் தேர்வு பட்டியலில் இல்லையென்றாலும் இதுவரை 10 தமிழ்ப்படங்கள் ஆஸ்கருக்கு அனுப்பப்பட்டிருக்கின்றன. முதன்முதலாக 1969ஆம் ஆண்டு சிவாஜி - ஜெயலலிதா நடிப்பில் வெளியான ‘தெய்வ மகன்’ திரைப்படம் ஆஸ்கருக்கு தேர்வு செய்யப்பட்டது. அதன்பிறகு 18 ஆண்டுகள் கழித்து 1987ஆம் ஆண்டு கமல் நடிப்பில் வெளியான ‘நாயகன்’ தேர்வானது. அடுத்து 1990ஆம் ஆண்டு வெளியான ‘அஞ்சலி’, 1992ஆம் ஆண்டு வெளியான ‘தேவர் மகன்’, 1995ஆம் ஆண்டு வெளியான ‘குருதிப்புனல்’, 1996ஆம் ஆண்டு வெளியான ‘இந்தியன்’, 1998ஆம் ஆண்டு வெளியான ‘ஜீன்ஸ்’, அடுத்து ‘ஹே ராம்’ என குறுகிய கால இடைவெளியில் தமிழ் படங்கள் தேர்வு செய்யப்பட்டிருந்தாலும், அதன்பிறகு 2016ஆம் ஆண்டுதான் ஒரு தமிழ் படம் ஆஸ்கருக்கு தேர்வு செய்யப்பட்டது. வெனிஸ் திரைப்பட விருது வாங்கவேண்டும் என்ற கனவோடு வெற்றிமாறன் உருவாக்கிய திரைப்படமான ‘விசாரணை’தான் அது. இந்த படம் ஆஸ்கர் விருது வாங்காவிட்டாலும் இறுதிப்பட்டியலில் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது. கடைசியாக 2021ஆம் ஆண்டு ‘கூழாங்கல்’ திரைப்படம் தேர்வு செய்யப்பட்டிருந்த நிலையில், அடுத்த 3 ஆண்டுகளில் எந்த படமும் தேர்வாகவில்லை. இதுவரை தமிழில் தேர்வு செய்யப்பட்ட 10 படங்களில் 5 படங்கள் கமல்ஹாசன் நடிப்பில் உருவானவை என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ் திரைப்படங்கள் ஆஸ்கர் வாங்காவிட்டாலும் தமிழ்நாட்டிலிருந்து 2 முறை ஆஸ்கர் விருதை வென்ற பெருமையை பெற்றிருக்கிறார் இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான்.

Tags:    

மேலும் செய்திகள்