லட்சுமி மேனனா இது! நீண்ட இடைவெளிக்கு பின் கம்பேக் கொடுப்பவருக்கு கைகொடுக்குமா ‘சப்தம்’?
மாடர்ன் கெட்டப் தனக்கு கைகொடுக்கவில்லை என்பதை புரிந்துகொண்ட லட்சுமி, ‘ஜிகர்தண்டா’, ‘கொம்பன்’ மற்றும் ‘வேதாளம்’ ஆகிய படங்களில் மீண்டும் ஹோம்லி மற்றும் கிராமத்துப் பெண் கதாபாத்திரங்களை தேர்ந்தெடுக்க அவை வெற்றிப்படங்களாக அமைந்தன.
ஒரு சில நடிகைகளுக்குத்தான் அவர்களுடைய அழகை வர்ணித்து பாடல் எழுதும் அதிர்ஷ்டம் கிடைக்கும். அப்படி ‘அடி கருப்பு நிறத்தழகி உதட்டு சிவப்பழகி’ என வர்ணித்து பாடப்பட்ட நடிகைதான் லட்சுமி மேனன். அந்த அளவிற்கு ஹோம்லி மற்றும் கிராமத்துக் கதைகளுக்கு ஒத்துப்போன நடிகையாக இருந்தபோதிலும், அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்திருந்தாலும் லட்சுமி மேனனுக்கு ஏனோ மார்க்கெட் அமையவில்லை. இவருடைய நிறம், உயரம் போன்றவற்றால் அதிகம் ட்ரோல் செய்யப்பட்டதுடன், நடிக்கவே தெரியவில்லை என்றும் விமர்சிக்கப்பட்டார். அதனாலேயே திரையுலகில் அடுத்தடுத்த சரிவுகளை சந்திக்கவே, கிட்டத்தட்ட 5 ஆண்டுகள் திரைப்படங்களில் நடிக்காமல் ஒதுங்கியிருந்தார். தற்போது மீண்டும் படங்களில் நடிக்க தொடங்கியிருக்கும் இவர், தனக்கு பொருந்தும்வகையில் நல்ல கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடிக்க தொடங்கியிருப்பதாக கூறியுள்ளார். இந்த மாத இறுதியில் இவருடைய நடிப்பில் ‘சப்தம்’ திரைப்படம் ரிலீஸாகவுள்ள நிலையில், கடந்த ஆண்டே எதிர்பார்க்கப்பட்ட ‘மலை’ திரைப்படமும் அடுத்து ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. லட்சுமி மேனனின் திரை அறிமுகம் மற்றும் சந்தித்த சறுக்கல்கள் குறித்து பார்க்கலாம்.
பள்ளி பருவத்திலேயே திரை அறிமுகம்
கேரளாவை பூர்விகமாகக் கொண்ட நடிகை லட்சுமி மேனன். அப்பா துபாயைச் சேர்ந்தவர். அம்மா கொச்சினில் நடனப்பள்ளி நடத்தி வந்தவர். இதனால் சிறுவயதிலிருந்தே படிப்பின்மீது நாட்டமில்லை என்றாலும் கலைத்துறைமீது அதிக ஆர்வம்கொண்ட லட்சுமி, பரதநாட்டிய பயிற்சி பெற்றவர். இவர் 8ஆம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தபோதே ‘ரகுவிண்டே ஸ்வந்தம் ரசியா’ என்ற மலையாளப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்த படத்திற்கு பிறகு, ‘இட்லி கப்பிள்’ என்ற மலையாளப் படத்தில் நடித்தபோது, ‘கும்கி’ படத்தின் ஆடிஷனுக்குச் சென்று, அதில் செலக்ட் ஆகவே அந்த படத்தில் கதாநாயகியாக நடித்துகொண்டிருந்தார். லட்சுமி மேனனுக்கு படிப்பு சரியாக வரவில்லை என்பதால் தனக்கு பிடித்த சினிமாத்துறையில் முழுமையாக இறங்கிவிடலாம் என்று நினைத்தாராம். ‘கும்கி’ படப்பிடிப்பில் இருந்தபோது சசிகுமார் படத்திற்காக இவரை வந்து போட்டோ எடுத்துச் சென்றுள்ளனர். ஆனால் அதுகுறித்து எந்த தகவலும் இல்லாததால், தான் நடித்துக்கொண்டிருந்த படத்திம் மட்டுமே முழு ஈடுபாட்டுடன் இருந்தாராம். திடீரென ‘சசிகுமார் சார் படத்திற்கு நீங்க ஓகே. அவர் உங்களை ஓகே செய்துவிட்டார்’ என்று அழைப்பு வரவே, சசிகுமாருக்கு ஜோடியாக கமிட்டானார். ஆனால் ‘கும்கி’ திரைப்படம் 2012ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ரிஸுக்கு தயாராக அதற்கு முன்பே செப்டம்பர் மாதத்திலேயே‘சுந்தரபாண்டியன்’ ரிலீஸானது. இப்படி தமிழ் திரையுலகில் அறிமுகமானார் லட்சுமி மேனன்.
‘கும்கி’ படத்தின்மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான லட்சுமி மேனன்
முதல் இரண்டு படங்களுமே சூப்பர் ஹிட்டடிக்க, தமிழ் திரையுலகை தனக்கு மிகவும் பிடித்திருப்பதாகவும், எப்போதும் தனது முன்னுரிமை கோலிவுட்டுக்குத்தான் எனவும் பல்வேறு பேட்டிகளில் தெரிவித்த லட்சுமி, தொடர்ந்து தமிழ்மொழியை கற்றுக்கொள்ளவும் தொடங்கியிருப்பதாக கூறினார். அடுத்தடுத்து சசிக்குமாருடன் ‘குட்டிப்புலி’, விஷாலுடன் ‘பாண்டிய நாடு’, ‘நான் சிகப்பு மனிதன்’ ஆகிய படங்களில் நடித்தார். பொதுவாகவே விஷாலுடன் ஜோடி சேரும் நடிகைகளை அவருடன் சேர்த்து கிசுகிசுப்பது வழக்கம். இரண்டு படங்களில் இருவரும் ஒன்றாக நடிக்க, மிகப்பெரிய வயது வித்தியாசம் இருந்தாலும் லட்சுமி மேனனும் விஷாலும் காதலித்து வருவதாகவும், இருவரும் விரைவில் திருமணம் செய்துகொள்ளப்போகிறார்கள் என்றும் அப்போதைய பத்திரிகைகளில் ஹாட் டாப்பிக்காக பேசப்பட்டது. லட்சுமி மேனன் என்றாலே ஹோம்லி கெட்டப்தான் பொருந்தும் என்ற கருத்தை மாற்றவேண்டுமென நினைத்த அவர், உடல் எடையை சற்று குறைத்து ‘மஞ்சப்பை’ படத்தில் சிட்டி கேர்ளாக நடித்தார். அதற்கு முன்பே, மாடர்ன் ரோலில் நடிக்காதது குறித்து அவரிடம் கேட்டபோது, தான் கொஞ்சம் வெயிட்டாக இருப்பதாகவும், ‘பில்லா’ நயன்தாரா போன்று க்ளாமர் கதாபாத்திரங்களில் நடிக்க தனக்கு ஆசை இருந்தாலும், அதற்காக தனது உடலை ஃபிட்டாக்கவேண்டும் என நினைத்திருப்பதாகவும் கூறினார். மாடர்ன் கெட்டப் தனக்கு கைகொடுக்கவில்லை என்பதை புரிந்துகொண்ட லட்சுமி, ‘ஜிகர்தண்டா’, ‘கொம்பன்’ மற்றும் ‘வேதாளம்’ ஆகிய படங்களில் மீண்டும் ஹோம்லி மற்றும் கிராமத்துப் பெண் கதாபாத்திரங்களை தேர்ந்தெடுக்க அவை வெற்றிப்படங்களாக அமைந்தன.
லட்சுமி மேனனை ராசியான ஹீரோயினாக்கிய கிராமத்து கெட்டப்கள்
அடுத்தடுத்த சரிவுகளால் எடுத்த முடிவு!
தொடர்ந்து வெற்றிப்படங்களில் நாயகியாக வலம்வந்த லட்சுமி மேனன் திடீரென தனது ஆர்வத்தை பரதநாட்டியத்தின் பக்கம் திருப்பினார். ஒரு மேடையில் லட்சுமி மேனன் ஆடிய பரதநாட்டிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலானதையடுத்து, இவருக்கு ஆடவும் தெரியவில்லை, நடிக்கவும் தெரியவில்லை என்பது போன்ற கடுமையான விமர்சனங்களுக்கு ஆளானார். இதனிடையே தொடர்ந்து இரண்டு படங்களில் ஒன்றாக நடித்தபோது விஷாலுடன் காதல் ஏற்பட்டதாக கிசுகிசுக்கப்பட்ட நிலையில், திரைத்துறையில் சரிவை சந்திக்க ஆரம்பித்தார். இதுபோன்ற வதந்திகளால் லட்சுமி மேனன் மன உளைச்சலுக்கு ஆளாகி இருப்பதாக சொல்லப்பட்ட நிலையில், சற்று உடல் எடை அதிகரித்தவாறு திரைமுன் தோன்றினார். அதன்பிறகு இவர் நடித்த ‘மிருதன்’ மற்றும் ‘றெக்க’ ஆகிய படங்கள் கடும் சரிவை சந்திக்க, நடிப்பே வேண்டாம் என முடிவெடுத்து சொந்த ஊருக்கே கிளம்பிவிட்டார். இப்படி 5 ஆண்டுகள் திரைத்துறையிலிருந்து விலகியிருந்த லட்சுமி மேனன், 2021ஆம் ஆண்டு வெளியான ‘புலிக்குத்தி பாண்டி’ படத்தில் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக மீண்டும் கம்பேக் கொடுத்தார். அவருடன் நடித்த ‘கும்கி’ படத்தால் தனக்கு அதிர்ஷ்டம் கிட்டியதைப்போன்றே இந்த முறையும் இப்படம் நல்ல தொடக்கமாக அமையும் என எதிர்பார்த்த லட்சுமி மேனனுக்கு இம்முறை தோல்வியே கிட்டியது. அந்த படம் எதிர்பார்த்த வெற்றி பெறவில்லை. இருந்தாலும் ‘சந்திரமுகி’ இரண்டாம் பாகத்தில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார். ஆனால் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இப்படம் கடும் சரிவையும், மோசமான விமர்சனங்களையும் பெற்றது.
லட்சுமி மேனனின் பரதநாட்டிய மேடை அரங்கேற்றம்
முதல் காதல் குறித்து...
‘சந்திரமுகி 2’ வெற்றிபெறாவிட்டாலும் லட்சுமி மேனனை மீண்டும் இயக்குநர்கள் மற்றும் நடிகர்களின் ஞாபகத்திற்கு கொண்டுவந்த படமாக அமைந்தது. கம்பேக் கைகொடுக்காததால் பெரிய பட்ஜெட் படங்களைவிட, நல்ல கதையம்சம் மற்றும் தனது கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் தரும் கதைகளையே தேர்ந்தெடுத்து நடிப்பது என முடிவுசெய்த லட்சுமி மேனன், ‘மலை’ என்ற படத்தில் காமெடி நடிகர் யோகி பாபுவுக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமானார். அறிமுக இயக்குநர் முருகேஷ் பூபதி இயக்கிய இப்படமானது எமோஷனல் கலந்த காதல் - காமெடி படமாக உருவாகியிருக்கிறது. வழக்கத்திற்கு மாறுபட்ட கதையாக இப்படம் இருக்கும் என்று இயக்குநர் கூறியிருக்கும் நிலையில் மனிதர்களின் பேராசையால் காடு, மரங்கள் மற்றும் ஆறுகள் போன்ற இயற்கை வளங்கள் எப்படி சுரண்டப்படுகின்றன என்பதை மையமாக வைத்து உருவாகியிருக்கும் இப்படம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதமே வெளியாகவிருப்பதாக கூறப்பட்டது. ஆனால் சில காரணங்களால் படத்தின் ரிலீஸானது தள்ளிப்போயுள்ளது. இப்படம் இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வெளியாகும் என்று சொல்லப்படுகிறது. இந்த படத்திற்கு பிறகு ‘சப்தம்’ படத்தில் கமிட்டானபோது விஷாலுடன் இணைத்து பேசப்பட்டது மற்றும் காதல் குறித்தெல்லாம் லட்சுமி மேனனிடம் கேட்கப்பட்டது.
அடுத்து ரிலீஸாகவிருக்கும் ‘சப்தம்’ படத்தில் லட்சுமி மேனன்
அதற்கு வெளிப்படையாக பதிலளித்த அவர், “இதுவரை யாரும் என்னை காதலிப்பதாக கூறியதில்லை. ஆனால் நான் பள்ளியில் படித்துக்கொண்டிருந்தபோது என்னுடன் நெருங்கிய நண்பராக இருந்த ஒருவரை காதலித்தேன். அவரிடம் நான் என் காதலை சொல்லிய சில நாட்களுக்குப் பிறகு அவரும் எனக்கு ஓகே சொன்னார். இருவரும் தொடர்ந்து போனில் நிறைய பேசிக்கொண்டிருந்தோம். இருந்தாலும் நான் அப்போது படங்களில் பிஸியாக இருந்ததால் என்னால் பள்ளிக்கு சரியாக போகமுடியவில்லை. அதனால் என்னுடைய காதலையும் தொடர முடியாமல் போய்விட்டது, அவருக்கு சமீபத்தில்தான் திருமணமானதாக கேள்விப்பட்டேன்” என்று தனது முதல் காதல் குறித்து வெளிப்படையாகவே பகிர்ந்திருந்தார். மேலும் இனிமேல் தனது கெரியரில் கவனம் செலுத்தப்போவதாக கூறிய லட்சுமி மேனன், ஆதியுடன் சேர்ந்து நடித்த ‘சப்தம்’ திரைப்படம் இந்த மாத இறுதியில் ரிலீஸாகவிருக்கிறது. ‘ஈரம்’ படத்தை இயக்கிய அறிவழகன் இந்த படத்தை இயக்கியிருக்கிறார். இதுபோக, பிக் பாஸ் புகழ் ஆரி கதாநாயகனாக நடிக்கும் மற்றொரு படத்திலும் லட்சுமி மேனன் கமிட்டாகி இருக்கும் நிலையில், ‘கண்ணப்பா’ என்ற படத்தின்மூலம் தெலுங்கிலும் கம்பேக் கொடுக்கவுள்ளார். 28 வயதேயாகும் லட்சுமி மேனன் தொடர்ந்து நல்ல கதைகளை தேர்ந்தெடுத்தால் மீண்டும் ஒரு ரவுண்டு வருவார் என கூறிவருகின்றன திரை வட்டாரங்கள்.