மனைவியை பிரியும் ஜெயம் ரவி! - மீண்டும் இணையும் தனுஷ், ஐஸ்வர்யா ஜோடி?

அமீரக நாடுகளிலிருந்து தங்கம் கடத்தப்படுவதை மையப்படுத்திய கதையாக கூலி திரைப்படம் இருக்கலாம் என விளக்கமளித்து வருகின்றனர் நெட்டிசன்கள். மேலும் அதை உறுதிசெய்யும்விதமாக போஸ்டரிலும் தங்கத்தாலான பொருட்கள் பல இடம்பெற்றிருப்பதால் இப்படத்தின் கதை தங்கக்கடத்தலை மையமாக கொண்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

Update:2024-09-10 00:00 IST
Click the Play button to listen to article

வருட இறுதியை நெருங்க நெருங்க தென்னிந்திய சினிமா களைகட்ட தொடங்கியிருக்கிறது. தொடர்ந்து அடுத்தடுத்த படங்கள் ரிலீஸுக்கு தயாராகிவரும் நிலையில் பெரிய ஸ்டார்கள் புதிய படங்களில் கமிட்டாகி வருகின்றனர். அதுகுறித்த அப்டேட்ஸ் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கின்றன. இந்த வாரம் கோலிவுட் முதல் பாலிவுட் வரை அதிகம் பேசப்பட்ட சினிமா செய்திகளை பார்க்கலாம்.

‘டாக்சிக்’கில் நயன்?

பாலிவுட்டில் ‘ஜவான்’ படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு நயன்தாரா, மீண்டும் கோலிவுட்டில் கவனம் செலுத்திவருகிறார். இவர் நடிப்பில் ‘டெஸ்ட்’ மற்றும் ‘மண்ணாங்கட்டி சின்ஸ் 1960’ ஆகிய படங்கள் அடுத்தடுத்து ரிலீஸுக்கு தயாராகிவருகின்றன. மேலும் நிவின் பாலியுடன் இணைந்து ‘டியர் ஸ்டூடண்ட்ஸ்’ என்ற மலையாளப் படத்திலும் நடித்துவருகிறார். இதற்கிடையே கன்னட ஸ்டார் யஷ் ஹீரோவாக நடிக்கும் ‘டாக்சிக்’ திரைப்படத்தில் நயன்தாராவும் நடிப்பதாக சமீபத்தில் செய்திகள் வெளியாகின.


 ‘டாக்சிக்’ படத்தில் நயன் நடிப்பது குறித்து ரசிகர்களின் டாக்

அதிலும் யஷ்ஷுக்கு அக்காவாக நயன் நடிப்பதாக கூறப்பட்ட நிலையில், படப்பிடிப்பானது தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நயன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள், அது ‘டாக்சிக்’ படத்தின் அப்டேட் என்று கூறிவருகின்றனர். இருப்பினும், நயன் தரப்பிலிருந்தோ அல்லது படக்குழு தரப்பிலிருந்தோ அதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.

மீண்டும் இணைகிறார்களா தனுஷ் - ஐஸ்வர்யா?

காதலித்து திருமணம் செய்துகொண்ட தனுஷ் - ஐஸ்வர்யா இருவரும் 18 ஆண்டுகால திருமண வாழ்க்கையிலிருந்து விலகுவதாக கடந்த 2 வருடங்களுக்கு முன்பு அறிவித்தனர். இருவீட்டாரும் இருவரையும் அழைத்து சமரசம் செய்ய முற்பட்டும் எந்த பலனும் கிடைக்கவில்லை. இந்நிலையில்தான் இருவரும் விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர்.


ஐஸ்வர்யாவின் போஸ்ட்டுக்கு லைக் செய்த தனுஷ்

அந்த மனு வருகிற அக்டோபரில் விசாரணைக்கு வரவிருக்கிறது. இந்த சூழலில், ஐஸ்வர்யா கடந்த ஜூலை மாதம் தனது மகன்களுடன் வெளிநாட்டில் செலவிட்ட இனிமையான தருணங்களை இன்ஸ்டாவில் பகிர்ந்திருக்கிறார். அந்த போஸ்ட்டுக்கு தனுஷும் லைக் செய்திருக்கிறார். இதனால் தங்களது மகன்களுக்காகவாவது இருவரும் மீண்டும் ஒன்றுசேர்வார்கள் என கூறிவருகின்றனர் தனுஷின் ரசிகர்கள்.

எதிர்பார்த்ததுதான்!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபல நிகழ்ச்சியான பிக் பாஸை கடந்த 7 சீசன்களாக கமல்ஹாசன் தொகுத்து வழங்கிவந்தார். அதனாலேயே அந்த ஷோ தமிழகம் முழுக்க மிகவும் பிரபலமடைந்தது. இந்நிலையில் சினிமா பணிகள் காரணமாக பிக் பாஸிலிருந்து விலகுவதாக கமல் ஏற்கனவே அறிவித்துவிட்ட நிலையில், அடுத்து யார் தொகுத்து வழங்கப்போகிறார்கள்? என்ற எதிர்பார்ப்பானது மிகவும் அதிகமாகவே இருந்தது.


பிக் பாஸ் 8ஐ தொகுத்து வழங்கும் விஜய் சேதுபதி

சிம்பு அல்லது சரத் குமார் அல்லது விஜய் சேதுபதி தொகுத்து வழங்குவார்கள் என்று கூறப்பட்ட நிலையில், பிக் பாஸ் சீசன் 8ஐ விஜய் சேதுபதி தொகுத்து வழங்கவிருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி இருக்கிறது. ஏற்கனவே சில ரியாலிட்டி ஷோக்களை இவர் தொகுத்து வழங்கியிருக்கும் நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்த அதிகாரப்பூர்வ புரோமோ வெளியாகி இருக்கிறது.

கோட் - சூட்டில் அசத்திய இசைஞானி!

எப்போதும் வெள்ளை கலர் ஜிப்பா, வேஷ்டி மற்றும் மேலே ஒரு துண்டு என்று மட்டுமே வரும் இசைஞானி இளையராஜா, வெளிநாடுகளுக்குச் செல்லும்போதெல்லாம் கலர் கலர் உடைகளை அணிந்து அசத்துவதுண்டு. அதுபோல சமீபத்தில் லண்டனிலிருந்து பாரீஸுக்கு கோட் - சூட் அணிந்துகொண்டு சென்ற வீடியோ ஒன்றை அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். அந்த வீடியோவுக்கு பின்னணியில் ‘ராஜா ராஜாதி ராஜன்’ என்ற பாடலை ஒலிக்கவிட்டிருக்கிறார்.


பாரீஸில் கோட் - சூட்டில் உலா வந்த இசைஞானி

உலகளவில் ரசிகர்களை வைத்திருக்கும் இசைஞானியின் பயோபிக்கில் அவருடைய தீவிர ரசிகரான தனுஷ் நடிக்க, அந்த படத்திற்கு தானே இசையமைக்கிறார் இளையராஜா. அருண் மாதேஸ்வரன் இயக்கும் இப்படம் அடுத்த ஆண்டு திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே வெற்றிமாறனின் ‘விடுதலை 2’ படத்திற்கும் இவர் இசையமைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ரஜினி கையிலிருக்கும் அந்த எண்!

ரஜினியின் 171வது படமான ‘கூலி’ படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க, நாகர்ஜூனா, சத்யராஜ், சௌபின் சாகிர், உபேந்திரா, ஸ்ருதி ஹாசன் போன்ற பல மொழிகளைச் சேர்ந்த பெரிய ஸ்டார்கள் அதில் இடம்பெற்றிருக்கின்றனர். ஒவ்வொருவரின் கதாபாத்திரங்களின் பெயர்களை படக்குழு போஸ்டர்களாக வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வரும் நிலையில் ரஜினிக்கு இப்படத்தில் தேவா என பெயரிடப்பட்டிருக்கிறது. அந்த போஸ்டரில் ரஜினி கையிலிருக்கும் பேட்ஜ் ஒன்றில் ‘1421’ என்ற எண் இடம்பெற்றிருப்பதால் அந்த எண் எதை குறிக்கிறது என்ற கேள்வியை ரசிகர்கள் எழுப்பிவந்தனர்.


‘கூலி’ படத்தில் ரஜினி கையிலிருக்கும் பேட்ஜ் எண்ணிற்கான விளக்கம் 

இந்நிலையில் 14 மற்றும் 21 ஆகிய எண்கள் தங்கத்தின் கேரட் மதிப்புகளை குறிப்பதாகவும், இந்தியா, அமெரிக்கா மற்றும் கனடா உள்ளிட்ட நாடுகளில் பயன்படுத்தும் தங்கத்தை 14 கேரட் மதிப்பிலும், சவுதியில் பயன்படுத்தும் தங்கத்தை 21 கேரட் மதிப்பிலும் குறிப்பிடுவதால் இப்படம் அமீரக நாடுகளிலிருந்து தங்கம் கடத்தப்படுவதை மையப்படுத்திய கதையாக இருக்கலாம் என விளக்கமளித்து வருகின்றனர் நெட்டிசன்கள். மேலும் அதை உறுதிசெய்யும்விதமாக போஸ்டரிலும் தங்கத்தாலான பொருட்கள் பல இடம்பெற்றிருப்பதால் இப்படத்தின் கதை தங்கக்கடத்தலை மையமாக கொண்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

கமல் - சல்மான் காம்போ!

‘10 படங்களின் கதைகளையும் சேர்த்து ஒரே படமாக பார்க்கவேண்டுமா? அப்போ அட்லீ படத்தை பாருங்க’ என்று கிண்டலாக விமர்சிக்கப்படும் இயக்குநர்களில் ஒருவராக அட்லீ இருந்தாலும், இவருடைய படங்கள் எப்போதுமே பாக்ஸ் ஆபீஸ் ஹிட்தான். அதற்கு ‘ராஜா ராணி’ தொடங்கி ‘ஜவான்’ வரையிலான அனைத்துப்படங்களையுமே உதாரணமாக சொல்லலாம். குறிப்பாக, பாலிவுட்டில் இறங்கி, முதல் படத்தையே ஷாருக்கானை வைத்து இயக்கி ரூ.1000 கோடிக்கும் மேல் வசூலித்தும் காட்டிவிட்டார்.


கமல்ஹாசன் மற்றும் சல்மான் கானை வைத்து புதிய படம் இயக்கவிருக்கும் அட்லீ

இதனைத் தொடர்ந்து அட்லீக்கு பல மொழிகளிலிருந்தும் வாய்ப்புகள் வந்தவண்ணம் இருக்கின்றன. இந்நிலையில் கமல்ஹாசன் மற்றும் சல்மான் கானை வைத்து பான் இந்தியா படம் ஒன்றை அட்லீ இயக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இப்படத்திற்கு கமல் ஓகே சொல்லிவிட்டால் அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்தில் படப்பிடிப்பு தொடங்கப்படலாம் என்று கூறப்படுகிறது. 

ஜெயம் ரவி - ஆர்த்தி விவாகரத்து

நடிகர் ஜெயம் ரவி தனது கல்லூரிக்கால தோழியான ஆர்த்தி என்பவரை காதலித்து 2009ஆம் ஆண்டு இருவீட்டார் சம்மதத்துடன் திருமணமும் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு இரு மகன்கள் இருக்கும் நிலையில், கடந்த சில வருடங்களாகவே ஆர்த்தி தனிப்பட்ட போட்டோஷூட்களை எடுத்து தனது சமூக ஊடக பக்கங்களில் பதிவிட்டு வந்தார். மேலும் அவருடைய பெற்றோரும் திரைத்துறையைச் சேர்ந்தவர்கள் என்பதால் இவருக்கும் திரைத்துறையில் ஆர்வம் இருப்பதாகவும், ஆனால் அதற்கு ஜெயம் ரவி குடும்பம் அனுமதி அளிக்கவில்லை என்றும் சொல்லப்பட்டது.


மனைவி ஆர்த்தியை பிரிவது குறித்து ஜெயம் ரவி அதிகாரப்பூர்வ அறிவிப்பு

அதனாலேயே இருவருக்குமிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டிருப்பதாகவும் கடந்த சில மாதங்களாகவே தகவல்கள் வெளிவந்துகொண்டிருந்தன. இந்நிலையில், நீண்டகால யோசனை மற்றும் பரிசீலனைக்குப் பிறகு தனது மனைவி ஆர்த்தியை பிரிவதாக ஜெயம் ரவி அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்.

ஜெயம் ரவியின் 15 ஆண்டுகால திருமண வாழ்க்கை முடிவுக்கு வரும் செய்தி திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. 

Tags:    

மேலும் செய்திகள்