அஜித்துக்கு முதல் ஆளாக வாழ்த்து சொன்ன விஜய்! - இந்த வார கோலிவுட் டாக்ஸ்!

அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்திராவிடம் கேட்டபோது, சமூக ஊடகங்களில் பரவும் இதுபோன்ற செய்திகள் முற்றிலும் ஆதாரமற்றவை என்றும், அஜித்தும் விஜய்யும் நல்ல நண்பர்கள் என்பதால் கார் ரேஸில் ஜெயித்தபோதும் சரி, விருது அறிவிக்கப்பட்டபோதும் சரி, விஜய்தான் முதலில் போன் செய்து வாழ்த்து தெரிவித்தார். எனவே இதுபோன்ற பொய்யான தகவல்களை நம்பவேண்டாம் எனவும் கூறியுள்ளார்.

Update:2025-02-04 00:00 IST
Click the Play button to listen to article

ஒருவழியாக பிப்ரவரி 6ஆம் தேதி வெளியாகவிருக்கிறது அஜித்தின் ‘விடாமுயற்சி’. அதற்கான ப்ரீ புக்கிங் களைகட்ட தொடங்கியிருக்கின்றன. இதனிடையே அஜித்மீது விஜய்க்கு வன்மம் என்று சமூக ஊடகங்களில் கிளப்பிவிடப்பட்ட வதந்திகளுக்கு அஜித் தரப்பிலிருந்து விளக்கமளிக்கப்பட்டிருக்கிறது. வளர்ந்துவரும் இளம்ஹீரோவான சிவகார்த்திகேயன் அடுத்தடுத்த பயோபிக் என பிஸியாக ஓடிக்கொண்டிருக்கிறார். இந்த வாரம் சில நெகிழ்ச்சிகரமான பதிவுகளும், செய்திகளும் தமிழ் திரையுலகை ஆக்கிரமித்திருக்கின்றன. அவற்றில் சில உங்களுக்காக...

அஜித் மீது விஜய்க்கு வன்மமா?

76வது குடியரசு தினத்தை முன்னிட்டு 2025ஆம் ஆண்டிற்கான பத்ம பூஷண் விருதுகள் அறிவிக்கப்பட்டன. அதில் நடிகர் அஜித்துக்கு அவருடைய 30 வருடத்துக்கும் மேலான கலைப்பணியை பாராட்டி விருது அறிவிக்கப்பட்டிருக்கிறது. அஜித்துக்கு பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டதையடுத்து திரையுலகைச் சேர்ந்த பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். ஆனால் ஆரம்பகாலத்திலிருந்தே ஒன்றாக பயணித்த விஜய்யோ எந்தவொரு சமூக ஊடகத்திலும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து போஸ்ட் போடவில்லை. அதேபோல் கார் ரேஸில் ஜெயித்தபோதும் விஜய் வாழ்த்து தெரிவிப்பார் என எதிர்பார்த்த அஜித் ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.


விஜய் - அஜித் குறித்து பரவிவந்த தவறான வதந்திகளுக்கு அஜித் தரப்பு விளக்கம்

இதனையடுத்து தனக்கு விருது கிடைக்காமல் அஜித்துக்கு விருது அறிவிக்கப்பட்டிருப்பது விஜய்க்கு பொறாமை என்றும், அதனாலேயே வன்மத்துடன் அஜித்துக்கு வாழ்த்து தெரிவிக்கவில்லை என்றும் அஜித் ரசிகர்கள் கொந்தளித்துவந்தனர். இதுகுறித்து அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்திராவிடம் கேட்டபோது, சமூக ஊடகங்களில் பரவும் இதுபோன்ற செய்திகள் முற்றிலும் ஆதாரமற்றவை என்றும், அஜித்தும் விஜய்யும் நல்ல நண்பர்கள் என்பதால் கார் ரேஸில் ஜெயித்தபோதும் சரி, விருது அறிவிக்கப்பட்டபோதும் சரி, விஜய்தான் முதலில் போன் செய்து வாழ்த்து தெரிவித்தார். எனவே இதுபோன்ற பொய்யான தகவல்களை நம்பவேண்டாம் எனவும் கூறியுள்ளார்.

இரட்டிப்பு மகிழ்ச்சியில் சினேகன் - கன்னிகா

பாடலாசிரியர் சினேகனும், சின்னத்திரை நடிகை கன்னிகாவும் கடந்த 2021ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்துகொண்டனர். திருமணத்திற்கு பிறகு சோஷியல் மீடியாக்களில் மிகவும் ஆக்ட்டிவாக இருந்துவந்த கன்னிகா, கடந்த ஆண்டு, தான் கர்ப்பமாக இருப்பதை அறிவித்தார். இந்நிலையில் ஜனவரி 25ஆம் தேதி இந்த தம்பதிக்கு இரட்டை பெண் குழந்தைகள் பிறந்திருக்கின்றன. இரட்டை குழந்தைகள் பிறந்த மகிழ்ச்சியை வீடியோவாக எடுத்து சமூக ஊடகங்களில் பகிர்ந்திருக்கின்றனர்.


இரட்டை பெண் குழந்தைகள் பிறந்த மகிழ்ச்சியில் சினேகன் - கன்னிகா தம்பதி

அந்த பதிவில், “இறைவா நீ ஆணையிடு தாயே எந்தன் மகளாய் மாற” என்ற எனது அன்பின் கோரிக்கை இரட்டிப்பாய் நிறைவேறியது... தாயே எந்தன் மகளாகவும்... மகளே எந்தன் தாயாகவும்... இரு தேவதைகள் 25.01.2025 அன்று பிறந்திருக்கிறார்கள்... இதயமும், மனமும் மகிழ்ச்சியில் நெகிழ்ந்து நிரம்பி வழிகிறது... உங்களின் தூய அன்பினால் எங்கள் வாரிசுகளை வாழ்த்துங்கள்” என்று அன்பாக கேட்டுக்கொண்டுள்ளனர். இந்த பதிவுக்கு பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

மனம்வருந்திய மகிழ் திருமேனி

2023ஆம் ஆண்டு வெளியான ‘துணிவு’ திரைப்படத்திற்கு பிறகு அஜித் நடிப்பில் எந்த படமுமே வெளியாகாததால் அவருடைய ரசிகர்கள் வருத்தத்தில் இருந்தனர். அந்த படம் முடிந்த கையோடு மகிழ் திருமேனி இயக்கத்தில் ‘விடாமுயற்சி’ படத்தில் கமிட்டானார் அஜித். அந்த படத்தின் படப்பிடிப்பு ஆமை வேகத்தில் போனதால் இடையே ‘குட் பேட் அக்லி’ திரைப்படத்திலும் நடித்துவந்தார் அஜித். அந்த படமே ரிலீஸுக்கு தயாரான நிலையிலும் ‘விடாமுயற்சி’ தயாராகாததால் அஜித்துக்கும் மகிழ் திருமேனிக்கும் பிரச்சினை என்றும், அதனால்தான் படப்பிடிப்பு தாமதமானதுடன் ரிலீஸ் தேதியும் மாற்றிவைக்கப்பட்டுக்கொண்டே இருக்கிறது என்றும் பேச்சுகள் அடிபட்டன. ஒருவழியாக இப்படம் பிப்ரவரி 6ஆம் தேதி ரிலீஸாகவிருக்கும் நிலையில் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் ஈடுபட்டு வருகிறார் மகிழ் திருமேனி.


அஜித் குறித்து ‘விடாமுயற்சி’ இயக்குநர் மகிழ் திருமேனி பகிர்வு

தனக்கும் அஜித்துக்கும் பிரச்சினை இருப்பதாக பரவும் செய்திகள் குறித்து ஒரு பேட்டியில் அவர் விளக்கமளித்திருக்கிறார். தன்னைப்பற்றி இதுபோன்று பரவும் வதந்திகளால் தான் அப்செட்டானதாகவும், இருவருக்கும் இடையே நல்ல புரிதல் இருப்பதாகவும், தான் ஏதாவது ஒரு மாஸான காட்சியை வைப்பது பற்றி அஜித்திடம் கேட்டால் அடுத்த படத்தில் பண்ணலாம் மகிழ் என்று அவர் கூறுவார் என்றும் தெரிவித்திருக்கிறார். மேலும் ஒரு சாதாரண மனிதருக்கு ஏற்படும் பிரச்சினைகளை எப்படி புத்திசாலித்தனமாக அவர் சமாளிக்கிறார் என்பதே ‘விடாமுயற்சி’ படத்தின் ஒன்லைன் என்றும் அவர் கூறி, அஜித் ரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டியிருக்கிறார்.

சினிமா வாழ்க்கை குறித்து பூஜா ஹெக்டே

‘புட்ட பொம்மா’ பாடல் மூலம் தெலுங்கு மட்டுமல்லாமல் தமிழ் ரசிகர்களிடமும் பிரபலமானவர் பூஜா ஹெக்டே. அந்த புகழ் அடங்குவதற்குள்ளாகவே விஜய்க்கு ஜோடியாக ‘பீஸ்ட்’ படத்தில் நடித்தார். அதன்பிறகு தமிழில் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு வாய்ப்பு கிடைக்காவிட்டாலும் தெலுங்கு, இந்தி என பிஸியாக ஓடிக்கொண்டிருக்கிறார். ஷாஹித் கபூருக்கு ஜோடியாக இவர் நடித்த ‘தேவா’ திரைப்படம் ஜனவரி 31ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது.


பூஜா ஹெக்டே சினிமா துறையில் சந்தித்த சவால்கள்

இதனிடையே விஜய்யின் கடைசிபடமான ‘ஜனநாயகன்’ திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாகவும், ‘ரெட்ரோ’ படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாகவும் தமிழில் நடித்துவருகிறார். இந்நிலையில் தனது 12 வருட சினிமா அனுபவம் குறித்து மனம்திறந்திருக்கிறார். அதில் சினிமா பயணம் தனக்கு ரோலர் கோஸ்டரில் சவாரி செய்ததுபோல் இருந்ததாகவும், அதில் வருகிற ஏற்றம், இறக்கம் மற்றும் சரிவுபோல வெற்றி - தோல்விகளையும், உயர்வு - தாழ்வுகளையும் பார்த்துவருவதாகவும் கூறியிருக்கிறார்.

இதுவும் பயோபிக்தான்!

சிவகார்த்திகேயனின் கெரியரில் முக்கியப்படமாக அமைந்தது, கடைசியாக வெளியான ‘அமரன்’ திரைப்படம். இந்த படத்தில், வீரமரணம் அடைந்த மேஜர் முகுந்த் வரதராஜன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் சிவா. அதனைத் தொடர்ந்து தற்போது சுதா கொங்கரா இயக்கத்தில் ‘பராசக்தி’ என்ற படத்தில் நடித்துவருகிறார். இந்த படத்தில் ரவி மோகன் வில்லனாக நடிக்க, சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ஸ்ரீலீலா நடிக்கிறார். இந்த படம் 1965ஆம் ஆண்டு இந்தி மொழி திணிப்பை எதிர்த்து போராடி தீக்குளித்த இளைஞர்களுக்கு வீர வணக்கம் செலுத்தும் விதமாக எடுக்கப்பட்டுவருகிறது. அந்த போராட்டத்தின்போது போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் நெற்றியில் குண்டுபாய்ந்து உயிரிழந்த ராசேந்திரன் என்பவரின் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் சிவகார்த்திகேயன்.


சிவகார்த்திகேயனின் ‘பராசக்தி’ பட டைட்டிலுக்கு ஏற்பட்டிருக்கும் சர்ச்சை

‘அமரன்’ போலவே ‘பராசக்தி’யும் மற்றொரு பயோபிக் படமாக அமைந்திருக்கிறது. ஆனால் ‘பராசக்தி’ என்ற தலைப்பு தங்களுக்கு மட்டும் சொந்தம் என நேஷனல் பிக்சர்ஸ் நிறுவனம் அறிக்கை வெளியிட்டிருக்கிறது. அந்த அறிக்கையில் கிருஷ்ணன் - பஞ்சு இயக்கத்தில், கருணாநிதி வசனத்தில், சிவாஜி கணேசன் நடிப்பில் 1952ஆம் ஆண்டு வெளியான ‘பராசக்தி’ படத்தை நேஷனல் பிக்சர்ஸ்தான் தயாரித்தது என்றும், ஏவிஎம் நிறுவனம் சில ஏரியாக்களின் விநியோக உரிமையை மட்டுமே பெற்றிருந்தது என்றும் கூறப்பட்டிருக்கிறது. கடந்த ஆண்டே இந்த தலைப்பால் விஜய் ஆண்டனிக்கும், சுதா கொங்கராவுக்கும் சச்சரவு ஏற்பட்ட நிலையில் ஏ.வி.எம் நிறுவனம் தலையிட்டு சரிசெய்து வைத்தது குறிப்பிடத்தக்கது.

விஷாலா? நோ!

50 வயதை நெருங்கிவரும் நடிகர் விஷாலுக்கு இன்னும் திருமணமாகாத நிலையில், பல நடிகைகளுடன் அவர் அவ்வப்போது இணைத்து பேசப்படுவது வழக்கம். இடையில் தெலுங்கு தொழிலதிபரின் மகளுடன் நடந்த நிச்சயதார்த்தமும் நின்றுபோன நிலையில், விஷால் இவரை காதலிக்கிறார் அவரை காதலிக்கிறார் என்பதுபோன்ற செய்திகள் தொடர்ந்து வந்துகொண்டே இருக்கின்றன. இந்நிலையில் ‘நாடோடிகள்’ படத்தின்மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான அபிநயாவும் விஷாலும் காதலித்துவருவதாக கடந்த சில நாட்களாக செய்திகள் பரவிவந்தன. குறிப்பாக, ‘மார்க் ஆண்டனி’ படத்தில் இருவரும் சேர்ந்து நடித்தபோது பழக்கம் ஏற்பட்டதாக சொல்லப்பட்டது.


விஷாலுடன் தனக்கு இருக்கும் நட்பு குறித்து அபிநயா

வாய் பேசமுடியாத நிலையில் பல மொழிப்படங்களில் தொடர்ந்து நடித்துவரும் அபிநயா, தன்னை பற்றி பரவும் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும்விதமாக தனக்கும் விஷாலுக்கும் இடையே எதுவும் இல்லை எனவும், அதுபோன்று பரவும் செய்திகள் முட்டாள்தனமானது என்றும் கூறியிருக்கிறார். மேலும் 15 வருடங்களாக தான் ஒருவரை காதலித்து வருவதாகவும், இருவரும் சிறுவயதிலிருந்தே நல்ல நண்பர்கள் என்றும், திருமணம் எப்போது செய்துகொள்வது என இன்னும் முடிவெடுக்கவில்லை என்றும் விளக்கமளித்திருக்கிறார்.

Tags:    

மேலும் செய்திகள்