காதலில் சாய்பல்லவி? ரிலீஸுக்கு வரிசைகட்டும் டாப் ஹீரோக்களின் படங்கள்! - சினிமா டாக்ஸ்

அர்ஜூனின் மகன் அபிமன்யுவை தனக்கு மிகவும் பிடிக்குமெனவும், கடந்த 10 ஆண்டுகளாக அவரை காதலித்து வருவதாகவும் கூறியிருக்கிறார் சாய் பல்லவி. அவருடைய இந்த பேச்சு தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இந்தியில் அறிமுகமானாலும் தெலுங்கில் நாக சைதன்யா ஜோடியாக ‘தண்டலே’ என்ற படத்திலும் நடித்துவருகிறார்.

Update:2024-07-16 00:00 IST
Click the Play button to listen to article

இந்த ஆண்டின் முதல் பாதியில் கோலிவுட் டல்லடித்த நிலையில் இரண்டாம் பாதியில் களைகட்ட துவங்கியிருக்கிறது. அடுத்தடுத்து ரிலீஸுக்கு போட்டிபோடும் பெரிய ஸ்டார்களின் படங்கள், பெரிய பட்ஜெட்டில் கமிட்டாகும் நடிகர்கள் என சினிமா குறித்த அப்டேட்ஸ்களுக்கு பஞ்சமில்லை என்றே சொல்லலாம். அத்துடன், தான் காதலில் இருப்பதாக சாய்பல்லவி தெரிவித்துள்ளார். இப்படி இந்த வாரம் ட்ரெண்டில் இருக்கும் சினிமா செய்திகளை பார்க்கலாம்.

‘மங்காத்தா - 2’ஐ எதிர்பார்க்கலாமா?

அஜித்தின் மாஸ் ஹிட் திரைப்படங்களில் ஒன்று வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவான ‘மங்காத்தா’. இந்த படத்தை இன்றுவரை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். பல வெற்றிப்படங்களின் இரண்டாம் பாகம் தொடர்ந்து வெளியாகி வரும் நிலையில் ‘மங்காத்தா’ இரண்டாம் பாகம் குறித்து அஜித்திடம் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்தனர். இந்நிலையில் படத்தின் இயக்குநரான வெங்கட் பிரபு அஜித்தை நேரில் சந்தித்திருக்கிறார். அஜர்பைஜானில் ‘விடாமுயற்சி’ படப்பிடிப்பில் இருக்கும் அஜித்தை சந்தித்து பேசிய புகைப்படம் தற்போது சமூக ஊடகங்களில் பரவி வைரலாகி வருகிறது.


‘விடாமுயற்சி’ படப்பிடிப்பில் அஜித்தை சந்தித்த இயக்குநர் வெங்கட் பிரபு

முதன்முதலாக விஜய்யை வைத்து ‘கோட்’ படத்தை இயக்கியிருக்கும் வெங்கட் பிரபு, இப்போது அஜித்தை சந்தித்திருப்பதால் ‘மங்காத்தா - 2’ குறித்து இருவரும் பேசியிருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே அஜித் ஓகே சொன்னால் இரண்டாம் பாகத்தை எடுத்துவிடலாம் என்று வெங்கட் பிரபு சொல்லியிருந்த நிலையில், இந்த சந்திப்பு ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

காதலில் சாய்பல்லவி?

தெலுங்கு, தமிழ் மற்றும் மலையாளம் என பல மொழிகளில் முன்னணி கதாநாயகியாக வலம்வருபவர் சாய் பல்லவி. சமீபத்தில்தான் இவருடைய தங்கை பூஜா கண்ணனுக்கு நிச்சயதார்த்தம் நடந்தது. அப்போதே சாய் பல்லவி திருமணம் குறித்து ரசிகர்கள் கேட்கத் தொடங்கினர். ஆனால் தொடர்ந்து திரைப்படங்களில் பிஸியாக ஓடிக்கொண்டிருக்கும் பல்லவி, இதுகுறித்து வாய்திறக்காமல் இருந்தார். இப்போது இந்தியில் ரன்பீர் கபூருடன் இணைந்து ‘ராமாயணம்’ படத்தில் நடித்துவருகிறார். இந்நிலையில் அவரது காதல் குறித்து மனம் திறந்துள்ளார் சாய்பல்லவி.


தனது காதல் குறித்து மனம்திறந்த சாய் பல்லவி

அந்த பேட்டியில், மகாபாரதம் மீது தனக்கு மிகுந்த மரியாதை உண்டு எனவும், அதில் அர்ஜூனின் மகன் அபிமன்யுவை தனக்கு மிகவும் பிடிக்குமெனவும், கடந்த 10 ஆண்டுகளாக அவரை காதலித்து வருவதாகவும் கூறியிருக்கிறார் சாய் பல்லவி. அவருடைய இந்த பேச்சு தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இதனிடையே தெலுங்கில் நாக சைதன்யா ஜோடியாக ‘தண்டலே’ என்ற படத்திலும் நடித்துவருகிறார். அடுத்து அமீர்கானின் மகனான ஜூனைத் கானுடன் சேர்ந்து மற்றொரு பாலிவுட் படத்திலும் நடிக்கவிருக்கிறார்.

வேட்டையனுக்காக ரிலீஸ் தேதி மாற்றிவைப்பு?

ரஜினி நடிப்பில் உருவாகிவரும் ‘வேட்டையன்’ திரைப்படத்தின் இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் படம் அக்டோபரில் ரிலீஸாகும் என கூறப்பட்டிருந்தது. இப்படத்தில் அமிதாப் பச்சன், ஃபகத் பாசில், ராணா போன்ற பான் இந்தியா ஸ்டார்கள் நடித்திருப்பதால் படத்தின்மீதான எதிர்பார்ப்பு மிகவும் அதிகமாகவே இருக்கிறது. இருப்பினும் படம் ஆயுத பூஜைக்கு வெளியாகுமா? அல்லது தீபாவளிக்கு வெளியாகுமா? என்பது குறித்து அறிவிக்கப்படவில்லை. இதற்கிடையே அஜித்தின் ‘விடாமுயற்சி’யும் அதே சமயத்தில் வெளியாக தயாராகி வருகிறது.


அடுத்தடுத்து ரீலீஸாகவிருக்கும் ‘வேட்டையன்’ மற்றும் ‘விடாமுயற்சி’

இந்த இரண்டு படத்தில் ஒன்று ஆயுத பூஜையை முன்னிட்டும் மற்றொன்று தீபாவளியை முன்னிட்டும் வெளியாகலாம் என்று சொல்லப்படுகிறது. இந்நிலையில் சூர்யா நடிப்பில் உருவாகியிருக்கும் ‘கங்குவா’ திரைப்படத்தின் ரிலீஸ் குறித்து அப்படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா பேசியிருக்கிறார். படத்தின்மீது நம்பிக்கை இருந்தாலும் ரஜினியுடன் மோதுவது ரிஸ்க் என்று கூறியிருக்கிறார். அதனால் ‘கங்குவா’ திரைப்படம் எப்போது ரிலீஸாகும் என்பது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகலாம்.

அதற்குள் ‘இந்தியன் - 3’ ட்ரெய்லர்?

கமல் நடிப்பில் ‘இந்தியன் - 2’ திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பின்போதே நிறைய சிக்கல்கள் ஏற்பட்ட நிலையில் பல்வேறு போராட்டங்கள் மற்றும் தடைகளுக்குப் பிறகு ஒருவழியாக படம் ரிலீஸாகியிருக்கிறது. மேலும் இப்படம் கடந்த மாதமே ரிலீஸாகும் என்று கூறப்பட்ட நிலையில், அடுத்த பாகத்திற்கான வேலைகளும் தொடர்ந்து நடைபெறுவதாகக் கூறி ரிலீஸ் தேதியை மாற்றிவைத்தார் இயக்குநர் ஷங்கர்.


6 மாதங்களுக்குள் ‘இந்தியன் -3’ஐ எதிர்பார்க்கலாம் - இயக்குநர் சங்கர்

இந்நிலையில் ‘இந்தியன் - 2’ படத்தின் ப்ரமோஷனில் கலந்துகொண்ட ஷங்கரிடம் அடுத்த பாகம் குறித்த அப்டேட்டை கேட்டபோது, ஆறு மாதங்களுக்குள் ‘இந்தியன் -3’-ஐ எதிர்பார்க்கலாம் என்று கூறியிருக்கிறார். கூடுதலாக, ‘இந்தியன் -2’ முடிவில் ‘இந்தியன் - 3’ ட்ரெய்லரை பார்க்கலாம் என்றும் கூறியிருக்கிறார். இதனால் கமல் ரசிகர்கள் மகிழ்ச்சியில் இருக்கின்றனர்.

‘காஞ்சனா - 4’ குறித்து ராகவா லாரன்ஸ்...

2011ஆம் ஆண்டு ‘காஞ்சனா’ திரைப்படத்திற்கு பிறகு அதன் அடுத்தடுத்த பாகங்களை இயக்கி ரசிகர்களுக்கு ஹாரர் விருந்தளித்தார் ராகவா லாரன்ஸ். குறிப்பாக, அந்த படங்களில் கோவை சரளா - ராகவா லாரன்ஸ் காம்போ காமெடிக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. அதனைத் தொடர்ந்து ‘சந்திரமுகி -2’, ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ என இரண்டு படங்களில் நடித்தார் லாரன்ஸ்.


‘காஞ்சனா - 4’ படத்திற்கான கதையை எழுதியாகிவிட்டது; விரைவில் படப்பிடிப்பு - ராகவா லாரன்ஸ்

தற்போது லோகேஷ் கனகராஜ் தயாரிக்கும் ‘பென்ஸ்’ என்ற படத்தில் நடித்துவருகிறார். இதனிடையே காஞ்சனா அடுத்த பாகம் குறித்து ரசிகர்கள் கேட்க ஆரம்பித்துவிட்டனர். இந்நிலையில் சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ‘காஞ்சனா - 4’ படத்திற்கான கதையை எழுதி முடித்திருப்பதாகவும், விரைவில் படப்பிடிப்பு தொடங்கும் எனவும் கூறியிருக்கிறார்.

பிரம்மாண்ட பட்ஜெட்டில் களமிறங்கும் சிம்பு

‘லிட்டில் சூப்பர் ஸ்டார்’ என ரசிகர்களால் அன்பாக அழைக்கப்படும் சிம்பு, கடந்த சில வருடங்களுக்கு முன்பு சினிமாவிலிருந்து விலகிவிட்டதாக செய்திகள் வெளியாகின. அதற்கேற்றவாறு உடல் எடை கூடி, நடிப்பதற்கு ஆர்வம் காட்டாமல் இருந்துவந்தார். திடீரென உடல் எடையை குறைத்து பழைய தோற்றத்திற்கு மாறிய சிம்புவை கைதூக்கிவிட்டது ‘மாநாடு’. அதன்பிறகு அடுத்தடுத்து படங்களில் கமிட்டாகி வருகிறார். குறிப்பாக கமலுடன் ‘தக் லைஃப்’ திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடித்துவருகிறார்.


‘தக் லைஃப்’ திரைப்படத்திற்கு பிறகு பெரிய பட்ஜெட்டில் கமிட்டாகும் சிம்பு

இந்நிலையில் பான் இந்தியா படம் ஒன்றில் சிம்பு கமிட்டாகி இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அந்த படத்தின் பட்ஜெட் 180 கோடி எனவும், சில முக்கியமான தயாரிப்பு நிறுவனங்கள் இணைந்து அப்படத்தை தயாரிக்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த படத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன் லால் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவிருப்பதாகவும், இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் சொல்லப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்