ஒரே ஆண்டில் அடுத்தடுத்து 5 படங்கள் - மகிழ்ச்சியில் பொங்கும் கிரித்தி ஷெட்டி

கிரித்தியை தவிர வேறு யாராலும் அந்த கதாபாத்திரத்தை சிறப்பாக கையாண்டிருக்க முடியாது என சொல்லும் அளவிற்கு தனது யதார்த்தமான நடிப்பால் அந்த கதாபாத்திரத்திற்கு உயிரூட்டி இருப்பார்.

Update: 2024-03-04 18:30 GMT
Click the Play button to listen to article

சிறுவயதிலிருந்தே நடிப்பு மீது காதல். நடனத்தின்மீது ஆர்வம். வீட்டிற்கு ஒரே மகள் செல்ல மகள் என்பதால் கேட்பதெல்லாம் கிடைத்திருக்கிறது. ஆனால் மிக இளம்வயதிலேயே நடிக்கும் வாய்ப்பு கிடைத்தாலும் எதிர்பார்த்த அங்கீகாரமும் புகழும் கிடைக்கவில்லை. முதலில் சிறுசிறு வேடங்களில் தோன்றிய அந்த பெண், தனது பெயரில்தான் அதிர்ஷ்டம் இல்லையோ என நினைத்து பெயரையும் மாற்றினார். அதுவே அவரது வெற்றிப்பாதைக்கு அடித்தளமாக அமைந்தது. அவர்தான் இப்போது தெலுங்கு திரையுலகில் முன்னணி ஹீரோயினாக உருவெடுத்துக்கொண்டிருக்கும் நடிகை கிரித்தி ஷெட்டி. இவருடைய திரைப்பயணம் எப்படி ஆரம்பித்தது? திடீரென பிரபலமானது எப்படி? என்பது குறித்தெல்லாம் இக்கட்டுரையில் காணலாம்.

கிரித்தி ஷெட்டி - ஓர் அறிமுகம்

மங்களூருவை பூர்வீகமாகக் கொண்ட துளு பேசும் குடும்பத்தைச் சேர்ந்த கிருஷ்ணா ஷெட்டி மற்றும் நீத்தி ஷெட்டி ஆகியோரின் ஒரே மகள் கிரித்தி ஷெட்டி. பிஸினஸ் மேனான கிருஷ்ணா ஷெட்டியின் குடும்பம் மும்பையில் வசித்ததால் கிரித்தி பிறந்து வளர்ந்தது எல்லாமே அங்குதான். இதனால் இவருக்கு, கன்னடம், துளு, இந்தி, மராத்தி மற்றும் ஆங்கிலம் போன்ற பல மொழிகள் அத்துப்படி.


பெற்றோருடன் மற்றும் சிறுவயதில் கிரித்தி ஷெட்டி

சிறுவயதிலிருந்தே நடனத்தின்மீது இருந்த ஆர்வத்தால் பரதநாட்டியத்தை முறைப்படி கற்றுள்ளார் கிரித்தி. செல்ல மகள் என்பதாலேயே கேட்டது அனைத்தும் கிடைத்திருக்கிறது. அதனாலேயே சிறுவயதிலிருந்தே மாடலிங் மற்றும் விளம்பர படங்களில் நடித்து வந்துள்ளார். அப்போதிருந்தே கேமரா மற்றும் லைட்ஸ்மீது கிரித்திக்கு ஒரு ஈர்ப்பு. அதனால் பள்ளி காலத்திலேயே சிறுசிறு கதாபாத்திரங்கள் தேடிவர நடித்தபடியே படிப்பையும் தொடர்ந்திருக்கிறார். லைஃப் பாய், டைரி மில்க் போன்ற விளம்பரங்கள் மூலம் பிரபலமடைந்த கிரித்தி, சினிமா ஹீரோயின் ஆகவேண்டும் என்ற கனவோடு நடிப்பு பயிற்சி பள்ளியில் சேர்ந்தார். முதலில் தியேட்டர் ஆர்ட்டிஸ்டாக பலரின் கவனத்தையும் ஈர்த்தார். அப்போதே சில இயக்குநர்களுக்கு இவரது நடிப்பு பிடித்திருக்கிறது. ஆனால் ‘சடரமே’ கன்னட ட்ரமா மூலம் கிடைத்த பெயர்தான் கிரித்திக்கு திரை வாய்ப்பை பெற்றுத்தந்தது. அப்படி 2009ஆம் ஆண்டு வெளியான கன்னட படம் ‘சரிகமப’ மூலம் திரைத்துறைக்குள் நுழைந்தார். இருப்பினும் படிப்பு முக்கியம் என்பதால் திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் பி.எஸ்சி சைக்காலஜியும் படித்து முடித்துள்ளார்.


பல மொழிகளில் கிரித்தியின் ஹிட் படங்கள்

வாழ்க்கையையே மாற்றிய பெயர் மாற்றம்

வைஷ்ணவ் தேஜ் மற்றும் விஜய் சேதுபதி காம்போவில் உருவான படம் ‘உப்பேனா’. விஜய் சேதுபதி வில்லன் கதாபாத்திரத்தில் மிரட்டியிருப்பார். அவருக்கு எப்படி இப்படம் தெலுங்கு திரையிலகில் பெயரையும் புகழையும் பெற்றுத்தந்ததோ அதே அளவுக்கு இன்னொருவரும் இந்த படத்தால் புகழ்பெற்றார். அவர்தான் கிரித்தி ஷெட்டி. 17 வயதிலேயே ஹீரோயினாக இவர் நடித்த இப்படம் இவருக்கு வெற்றிப் படமாக அமைந்தது என பலர் நினைப்பார்கள். ஆனால் அதுதான் இல்லை. இப்படத்தில் கிரித்தி ஷெட்டியாக அறிமுகமாவதற்கு முன்பே பலமொழிப் படங்களில் சிறுசிறு கதாபாத்திரங்களில் நடித்திருந்தார். அழகர்சாமி குதிரை, கொண்டான் கொடுத்தான், பாண்டியநாடு, சிவிலி, மாங்கா போன்ற படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் சாதாரண லுக்கில் நடித்திருந்தார் இவர். அப்போது அவர்பெயர் அத்வைதா. ஆனால் தனது சொந்த பெயர் மற்றும் பர்சனாலிட்டி தனக்கு அங்கீகாரத்தை பெற்றுத் தரவில்லை என கருதிய அவர் பின்னர் தனது பெயரை கிரித்தி ஷெட்டி என மாற்றினார். பெயரோடு சேர்த்து தனது லுக்கையும் மாற்றிவிட்டார். அதன்பிறகு ஹீரோயினாக நடித்த முதல்படம்தான் ‘உப்பேனா’. அதற்கு முன்பே ‘சூப்பர் 30’ என்ற இந்தி படத்திலும் நடித்திருந்தார்.


கிரித்தியை டிரெண்டாக்கிய நடன பாடல்கள்

கிரித்தியை தவிர வேறு யாராலும் அந்த கதாபாத்திரத்தை சிறப்பாக கையாண்டிருக்க முடியாது என சொல்லும் அளவிற்கு தனது யதார்த்தமான நடிப்பால் அந்த கதாபாத்திரத்திற்கு உயிரூட்டி இருப்பார். அந்த படம் ரூ.100 கோடி வசூல் சாதனையும் படைத்தது. அடுத்து நானி, சாய் பல்லவியுடன் இணைந்து நடித்த ‘ஷியாம் சிங்கா ராய்’ படமும் ஹிட்டித்தது. அதன்பிறகு நாக சைதன்யாவுடன் ஜோடி சேர்ந்த ‘பங்கர்ராஜு’, தமிழ் மற்றும் தெலுங்கில் வெளிவந்த ‘தி வாரியர்’, ‘மச்சேர்லா நியோஜகவர்கம்’, ‘அ அம்மாயி குறிஞ்சி மீக்கு செப்பாலி’ என 2022-இல் மட்டும் இவர் நடிப்பில் அடுத்தடுத்து 4 படங்கள் வெளியாகின. 2023-இல் ‘கஸ்டடி’ வெளியானதை அடுத்து இந்த ஆண்டு தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் என 5 படங்களை கைவசம் வைத்திருக்கிறார். நான்கே ஆண்டுகளில் அசுர வளர்ச்சியடைந்து தற்போது தென்னிந்திய திரையுலகின் இளம் கனவு கன்னியாக வலம்வருகிறார் இந்த கிரித்தி ஷெட்டி.

சிறிய வயதில் அசுர வளர்ச்சி

நன்றாக நடனம் ஆடும் ஹீரோக்களுக்கென்றே ரசிகர் பட்டாளம் எப்போதும் இருக்கும். சிறு வயதிலிருந்தே நடனம்மீது ஆர்வம் இருந்ததால் அதற்கான பயிற்சியும் பெற்றிருக்கும் கிரித்தியின் வளைவு மற்றும் நளினம் கலந்த நடனத்திற்கென்றே மொழி தெரியாதவர்கள்கூட ரசிகர்கள்தான். அப்படி ‘தி வாரியர்’ படத்தில் இடம்பெற்ற ‘come on baby let's go on the bullet’ பாடல்தான் கிரித்தியை தெலுங்கு மட்டுமில்லாமல் பிற மொழிகளிலும் அறிமுகம் செய்து வைத்தது என்றே சொல்லலாம். அந்த அளவிற்கு சோஷியல் மீடியாக்களில் இந்த பாடலுக்கு டான்ஸ் ஆடி ரீல்ஸ் செய்து ட்ரெண்டாக்கினர் நமது இணையவாசிகள்.


‘ஜீனி’  படக்குழு மற்றும் போஸ்டர் - ‘அஜயண்டே ரண்டம் மோஷனம்’ மலையாளப்பட போஸ்டர்

தொடர்ந்து ‘பங்காரா’ மற்றும் ‘பொரி சூப்பரோ’ போன்ற பாடல்களிலும் தனது நடனத் திறமையை வெளிப்படுத்தியிருந்தார் கிரித்தி. சோஷியல் மீடியா மூலம் கிடைத்த புகழால் ஏற்கனவே தென்னிந்திய அளவில் ரசிகர்களை பெற்றிருந்தாலும் தமிழில் சூர்யாவுடன் இணைந்து ‘வணங்கான்’ படத்தில் நடித்துக் கொண்டிருந்தார். பாலா இயக்கத்தில் உருவாகிவந்த இப்படத்திலிருந்து சூர்யா விலகிய நிலையில், கிரித்தியும் வெளியேறினார். இருப்பினும் சூர்யாவுக்கு பதிலாக அருண் விஜய் ஹீரோவாக நடித்துள்ள இப்படம் மே மாதம் திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. இந்நிலையில், ஜெயம் ரவிக்கு ஜோடியாக ‘ஜீனி’ என்ற படத்தில் நடித்திருக்கிறார் கிரித்தி. ஏ.ஆர் ரகுமான் இசையமைத்திருக்கும் இப்படத்தை மேல் இண்டர்நேஷனல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. இப்படத்தில் கிரித்தி ஷெட்டியுடன் கல்யாணி பிரியதர்ஷன், வாமிகா கபி ஆகியோரும் இணைந்துள்ளனர். ரூ.100 கோடி செலவில் பிரம்மாண்டமாக உருவாகியிருக்கும் இப்படம் இந்த ஆண்டில் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே ‘அஜயண்டே ரண்டம் மோஷனம்’ என்ற மலையாளப்படத்தில் டோவினோ தாமஸுடன் இணைந்து நடித்திருக்கிறார் கிரித்தி. தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் என இந்த ஆண்டில் மட்டும் 5 படங்கள் வெளியாக இருப்பதால் மகிழ்ச்சியில் இருக்கிறார். தெலுங்கைப்போல பிற மொழிகளிலும் கிரித்திக்கு அங்கீகாரம் கிடைக்குமா? என்பதை பொருத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

Tags:    

மேலும் செய்திகள்