அடுத்தடுத்து வெளியாகும் திரைப்படங்கள் - குஷியில் கல்யாணி பிரியதர்ஷன்

அடுத்தடுத்து தனது இரண்டு திரைப்படங்கள் மலையாளத்தில் வெளியாவதால் எந்த கதாபாத்திரத்தை மக்கள் அதிகம் விரும்புவார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்திருப்பதாக கூறுகிறார் கல்யாணி.

Update:2023-11-21 00:00 IST
Click the Play button to listen to article

திரையுலகைப் பொருத்தவரை வாரிசுகளுக்கு வாய்ப்பு என்பது பிறருடன் ஒப்பிடுகையில் சற்று சுலபமாகத்தான் கிடைத்துவிடுகிறது. ஆனால் அதில் ஒரு சிலர் விதிவிலக்காக இருக்கிறார்கள். எந்தத் துறையாக இருந்தாலும் என்னதான் பெற்றோர் பிரபலமானவர்களாக இருந்தாலும், தங்கள் திறமையினால்தான் சாதிக்கமுடியும். அந்த வரிசையில் தற்போது மலையாளம், தெலுங்கு மற்றும் தமிழ் என பிஸியாக ஓடிக்கொண்டிருக்கிறார் கல்யாணி பிரியதர்ஷன். பிரபல மலையாள இயக்குநர் பிரியதர்ஷன் மற்றும் நடிகை லிஸ்ஸியின் மகள்தான் இவர். சினிமா உலகில் துணை தயாரிப்பு வடிவமைப்பாளராக தனது பயணத்தைத் தொடங்கிய கல்யாணியின் சினிமா அறிமுகம் மற்றும் திரைப்பயணம் குறித்த ஓர் தொகுப்பைப் பார்க்கலாம்.

கல்யாணி பிரியதர்ஷனின் திரை அறிமுகம்

பிரபல மலையாள இயக்குநர் பிரியதர்ஷனின் மூத்த மகள் கல்யாணி. சென்னையிலுள்ள லேடி ஆண்டாள் பள்ளியில் தனது பள்ளிப்படிப்பை முடித்த இவர், சிங்கப்பூரில் மேற்படிப்பு படித்து முடித்துவிட்டு, நடிப்பின்மீது இருந்த ஆர்வத்தால் அங்குள்ள ஒரு நாடக்குழுவில் இணைந்து பணிபுரிந்திருக்கிறார். பின்னர், நியூயார்க்கிலுள்ள பார்சன்ஸ் ஸ்கூல் ஆஃப் டிஸைனில் கட்டடக்கலை வடிவமைப்பு படித்திருக்கிறார். படிப்பை முடித்த கையோடு இந்தியா திரும்பிய கல்யாணி, சிறுசிறு வேலைகளில் ஈடுபட்டு, பின்னர் 2013ஆம் ஆண்டு பாலிவுட்டில் ‘கிரிஷ் 3’ திரைப்படக்குழுவில் இணைந்தார். அந்தப் படத்தில் பிரபல திரை கலை வடிவமைப்பாளர் சாபு சிரிலுடன் இணைந்து, துணை தயாரிப்பு வடிவமைப்பாளராக பணிபுரிந்தார். இதற்கிடையே அவரது அப்பாவும், அம்மாவும் கருத்து வேறுபாட்டால் விவாகரத்து பெற்று பிரிந்தனர். இதனால் சற்று திரையுலகில் இருந்து ப்ரேக் எடுத்த கல்யாணி, பின்னர் தமிழில் ‘இருமுகன்’ திரைப்படத்தில் துணை கலை இயக்குநராக பணியாற்றினார்.


கல்யாணி பிரியதர்ஷனின் குடும்பம் மற்றும் அறிமுக திரைப்படம்

திரைக்கு பின்னால் பணிபுரிந்த கல்யாணிக்கு 2017ஆம் ஆண்டு திரைக்கு முன்னால் தோன்றும் வாய்ப்பு கிடைத்தது. அதுவும் இதுவரை தான் பணிபுரிந்த பாலிவுட், கோலிவுட்டில் இருந்தோ அல்லது தனது அப்பா, அம்மா இருவரும் பிரபலமாக இருந்த மலையாள சினிமாவில் இருந்தோ வரவில்லை. ‘ஹலோ’ திரைப்படத்தின்மூலம் தெலுங்கு திரையுலகில், ஹீரோயினாக அறிமுகமானார். அகில் அக்கினேனி ஹீரோவாக நடித்த அந்த திரைப்படத்தை அவருடைய தந்தையும், நடிகருமான நாகர்ஜூனா அக்கினேனி தயாரிக்க, விக்ரம் கே. குமார் இயக்கியிருந்தார். முதல் படமே மாஸ் ஹிட்டானதால் விருதுகளும், அடுத்தடுத்த பட வாய்ப்புகளும் கல்யாணிக்குத் தேடிவந்தன.

பிரபலமாக்கிய தமிழ் மற்றும் மலையாளப் படங்கள்

‘ஹலோ’ படத்திற்காக SIIMA -வின் சிறந்த அறிமுக நடிகை தெலுங்கு, சிறந்த தென்னிந்திய அறிமுக நடிகைக்கான ஃபிலிம்பேர் விருது, தென்னிந்திய சர்வதேச திரைப்படங்களில் அறிமுக நடிகைக்கான விருது மற்றும் ஜீ தெலுங்கு அப்சராவின் அறிமுக ஹீரோயின் விருது போன்ற பல விருதுகள் கிடைத்தன. அடுத்தடுத்து பல வெற்றிப்படங்களை கொடுத்த கல்யாணிக்கு, சாய் தரம் தேஜ் மற்றும் நிவேதா பெத்துராஜுடன் இணைந்து நடித்த‘சித்ரலஹரி’ திரைப்படம் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. தெலுங்கு படங்கள் கைவசம் இருந்தாலும் கல்யாணிக்கு தமிழ் மற்றும் மலையாள திரையுலகில் இருந்தும் வாய்ப்புகள் தேடிவந்தன. 2019ஆம் ஆண்டு ‘ஹீரோ’ திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக தமிழில் அறிமுகமானார். அடுத்த ஆண்டே, ‘வரனே ஆவஷ்யமுண்டு’ என்ற திரைப்படத்தின்மூலம் மலையாளத்திலும் அறிமுகமானார். இந்தப் படத்திற்காக, SIIMA -வின் சிறந்த அறிமுக நடிகை மலையாளம் விருதையும் வென்றார்.


கல்யாணி பிரியதர்ஷனின் பிரபல திரைப்படக் காட்சிகள்

என்னதான் பிற மொழிப்படங்களில் நடித்துக்கொண்டிருந்தாலும் அப்பா, அம்மா இருவரும் பிரபலங்களாக வலம்வந்த திரையுலகம் ஆயிற்றே. அதனாலேயே சென்னையில் பிறந்து வளர்ந்த கல்யாணிக்கு மலையாளம் சரியாக பேச வராவிட்டாலும் மலையாள பட வாய்ப்புகள் அடுத்தடுத்து வரிசைகட்டி வந்தன. இதனால் தெலுங்கு திரையுலகிற்கு சற்று ப்ரேக் கொடுத்துவிட்டு மலையாளம் மற்றும் தமிழ்ப்படங்களில் பிஸியானார். தமிழில் முன்பே சில படங்களில் நடித்திருந்தாலும், சிம்புவுடன் ஜோடிசேர்ந்த ‘மாநாடு’ திரைப்படம்தான் இவரை மக்கள் மத்தியில் பிரபலப்படுத்தியது. அதேபோல மலையாளத்திலும் பிரணவ் மோகன்லாலுடன் இணைந்த‘ஹிருதயம்’ திரைப்படம்தான் ரசிகர் பட்டாளத்தை உருவாக்கித் தந்தது. அதனைத் தொடர்ந்து, ‘ப்ரோ டாடி’, ‘தள்ளுமலா’ போன்ற படங்கள் மெஹா ஹிட்டடித்தன. அதனைத் தொடர்ந்து கல்யாணி நடித்திருக்கும் இரண்டு படங்கள் அடுத்தடுத்து வெளியாகின்றன.

அடுத்தடுத்து போட்டி போடும் ‘ஆண்டனி’ மற்றும் ‘சேஷம் மைக்கில் ஃபாத்திமா’

இரண்டு திரைப்படங்களின் ப்ரொமோஷன்களும் ஒரே நேரத்தில் மாறி மாறி நடந்துவந்த நிலையில் ‘சேஷம் மைக்கில் ஃபாத்திமா’ நவம்பர் 17ஆம் தேதி வெளியானது. முதலில் இத்திரைப்படம் நவம்பர் 3ஆம் தேதி வெளியாகவிருந்த நிலையில், ரிலீஸ் தள்ளிவைக்கப்படுவதாக அக்டோபர் 30ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. இத்திரைப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் கல்யாணி பிரியதர்ஷன். பொதுவாகவே விளையாட்டுப் போட்டிகள் என்றாலே ஆண்களின் கமென்ட்ரிதான் இடம்பெறும். தற்போது சில சர்வதேசப் போட்டிகளில் பெண்கள் கமென்ட்ரி கொடுத்தாலும், உள்ளூர்ப் போட்டிகளை பொருத்தவரை ஆண்கள்தான்.


‘ஆண்டனி’ மற்றும் ‘சேஷம் மைக்கில் ஃபாத்திமா’ திரைப்படங்களின் போஸ்டர்கள்

ஆனால் கிராமத்தில் பிறந்த ஒரு பெண் உள்ளூர் கால்பந்து போட்டி ஒன்றுக்கு எதேச்சையாக கமென்ட்ரி கொடுக்க, அது மக்களிடையே பாராட்டைப் பெறுகிறது. தனது திறமையைப் பார்த்து தானே வியந்துபோன அப்பெண், கமென்ட்ரி கொடுப்பதையே தனது கனவாக்கிக்கொண்டு அதற்காக முயற்சிக்கிறார். தனது கனவை நனவாக்குவதற்கு வரும் தடைகள் மற்றும் அதனை சமாளித்து எப்படி வெற்றிபெறுகிறாள் என்பதை கதைக்களமாகக் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கிறது ‘சேஷம் மைக்கில் ஃபாத்திமா’. அறிமுக இயக்குநர் மனு சி குமார் இப்படத்தை இயக்க, சுதன் சுந்தரம் மற்றும் ஜெகதீஷ் பழனிசாமி ஆகியோர் தயாரித்துள்ளனர். ஹெஷாம் அப்துல் வஹாப் இசையமைத்திருக்கிறார். இந்தத் திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸை நெட்ஃப்ளிக்ஸ் பெற்றிருக்கிறது. ஓடிடியில் டிசம்பர் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த திரைப்பட அனுபவம் குறித்து கல்யாணி பகிர்கையில், “முதலில் இப்படத்தின் கதையை கேட்டவுடனே மலையாளத்தில் நன்றாக பேசத் தெரியாதே என்று சற்று பயப்பட்டேன். பின்னர் அதையே சேலஞ்சாக எடுத்துக்கொண்டேன். பிற படங்களில் எனக்கு இருந்த மொத்த டயலாக்குகளின் அளவுக்கு இந்தப் படத்தில் 10 நிமிட டயலாக் இருந்தது. சொந்த குரலில் டப்பிங் செய்யவேண்டாம் என முதலில் யோசித்தார்கள். இருப்பினும் பிற ஆர்டிஸ்டுகளின் உதவியுடன் நானே டப் செய்துமுடித்தேன். இப்போது என்னால் ஓரளவுக்கு நன்றாகவே மலையாளத்தில் பேசமுடிகிறது” என்றார்.


திரை அனுபவம் குறித்து பகிரும் கல்யாணி

வருகிற 23ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது ‘ஆண்டனி’. ஜோஷி இயக்கியுள்ள இத்திரைப்படத்தில் ஜோஜு ஜார்ஜ் மற்றும் கல்யாணி பிரியதர்ஷன் ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். பான் இந்தியா படமாக உருவாகியுள்ள இத்திரைப்படத்தில் பாக்ஸராகத் தோன்றுகிறார் கல்யாணி. இத்திரைப்படத்திற்கு ராஜேஷ் வர்மா கதை எழுத, ஜஸ்டின் சாக் பால் தயாரித்திருக்கிறார். இத்திரைப்படத்தில் நைலா உஷா, ஆஷா ஷரத் மற்றும் செம்பன் வினோத் ஜோஸ் போன்ற பிரபலங்களும் இணைந்திருக்கின்றனர். இத்திரைப்படத்தின் ட்ரெய்லர் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ள நிலையில், படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது என்றே சொல்லலாம்.

இத்திரைப்படம் குறித்து கல்யாணி கூறுகையில், பாக்ஸராக திரையில் தோன்ற தனது நடை மற்றும் பாவனைகளை மாற்றிக்கொண்டாராம். ஃபாத்திமா கதாபாத்திரத்திற்கு பேச்சு எவ்வளவு முக்கியமோ அதுபோலத்தான், ‘ஆண்டனி’ திரைப்படத்தில் பாக்ஸராக தோன்ற உடல் மற்றும் முகபாவனைகள் மிக முக்கியமாக இருந்ததாகக் கூறுகிறார். மேலும் இதற்காக நிறைய பயிற்சிகளையும் பெற்றதாகக் கூறியிருக்கிறார் கல்யாணி. அடுத்தடுத்து தனது இரண்டு திரைப்படங்கள் மலையாளத்தில் வெளியாவதால் எந்த கதாபாத்திரத்தை மக்கள் அதிகம் விரும்புவார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்திருப்பதாக கூறுகிறார் கல்யாணி.

Tags:    

மேலும் செய்திகள்