‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ - பாபி சிம்ஹாவை மிஞ்சுவாரா ராகவா லாரன்ஸ்

'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Update:2023-11-07 00:00 IST
Click the Play button to listen to article

எப்போதுமே பண்டிகை என்றாலே வீட்டில் புது ஆடைகள் என்று மட்டுமில்லாமல், அதோடு சேர்த்து புது திரைப்படங்கள் வெளியாவதும் வழக்கமான ஒன்றுதான். அதிலும் தீபாவளி என்றாலே எந்த ஹீரோக்களின் படம் திரைக்கு வந்து போட்டி போடப் போகிறது என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எப்போதுமே தொற்றிக்கொள்ளும். அந்த வகையில் இந்த வருடம் தீபாவளிக்கு கார்த்தி நடிப்பில் 'ஜப்பான்' மற்றும் ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் 'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' ஆகிய திரைப்படங்கள் வெளிவரவுள்ளன. இதில் குறிப்பாக 'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' படத்திற்கு மட்டும் மிகப்பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. காரணம் 'ஜிகர்தண்டா' முதல் பாகம் ரசிகர்களிடத்தில் ஏற்படுத்திய தாக்கம் தான். அதிலும் அசால்ட் சேதுவாக நடித்திருந்த பாபி சிம்ஹாவின் கதாபாத்திரத்தை இன்றளவும் யாரும் மறந்திருக்க மாட்டார்கள். அப்படிப்பட்ட கதாபாத்திரத்தை இரண்டாம் பாகமான 'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' படத்தில் பாண்டியாக மாற்றியுள்ள இயக்குனர், அதில் ராகவா லாரன்ஸை நடிக்க வைத்துள்ளார். முதல் பாகத்தில் பாபி சிம்ஹா மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி தேசிய அளவில் கவனம் பெற்ற நிலையில், அவரையும் மிஞ்சிய திறமையை வெளிப்படுத்தி ராகவா லாரன்ஸ் கவனம் பெறுவாரா என்பது குறித்த அலசலை இந்த தொகுப்பில் காணலாம்.

தமிழ் சினிமாவை புரட்டிப் போட்ட 'ஜிகர்தண்டா'

கடந்த 2014 ஆம் வருடம் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான படம் 'ஜிகர்தண்டா'. இந்த படத்தில் சித்தார்த், பாபி சிம்ஹா, லட்சுமி மேனன், கருணாகரன் மற்றும் குரு சோமசுந்தரம் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். மேலும் விஜய் சேதுபதி இந்த படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடித்திருந்தார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்த இப்படத்திற்கு, காவேமிக் யு . ஆரி ஒளிப்பதிவு செய்திருந்தார். ஏற்கனவே, விஜய் சேதுபதி, ரம்யா நம்பீசனை வைத்து 'பீட்சா' என்ற படத்தை எடுத்து கவனம் பெற்றிருந்த கார்த்திக் சுப்புராஜ், இதில் மதுரையை கதைக் களமாக வைத்து தனது பாணியில் ஒரு வித்தியாசமான கேங்ஸ்டர் கதையை கூறி இருந்தார். சினிமா எடுக்க ஆசைப்படும் ஒரு இளைஞன் கேங்ஸ்டர் படம் எடுப்பதற்காக மதுரையில் நிஜமாகவே ஒரு ரவுடி கூட்டத்தை கண்காணிக்கிறான். அவர்களின் நடவடிக்கைகளை அறிந்து கொள்ள முயற்சிப்பதற்காக என்னென்ன மாதிரியான ரிஸ்க் எல்லாம் எடுக்கிறான் என்பதுதான் படத்தின் முதல் பாதி கதை. பின்னர் அந்த ரவுடி கும்பலிடம் சிக்கி அவர்களை வைத்து படம் எடுக்கும் சூழ்நிலைக்கு ஆளாவதும், அந்த இக்கட்டான சூழ்நிலையை எப்படி சாதூர்யமாக கையாண்டு அந்த வில்லனை ஜோக்கராக மாற்றி தப்பிக்கிறான் என்பதுதான் படத்தின் முழுக்கதை. காமெடி கலந்த திரில்லர் படமாக உருவாகி, ஆகஸ்ட் 1, 2014 அன்று வெளியான இந்தப் படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதில் இயக்குனராக சித்தார்த்தும், இரக்கமற்ற கேங்ஸ்டர் கும்பல் தலைவனாக பாபி சிம்ஹாவும் நடித்திருந்தனர். ஹீரோவுக்கு முக்கியத்துவம் உள்ள கதை போல் படத்தின் தொடக்கம் அமைந்திருந்தாலும், வில்லனுக்கு அதிக ஸ்கோப் உள்ள படமாக படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டிருந்தது. இதனால் பாபி சிம்ஹா அந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டதோடு, பார்வையாளர்கள் மற்றும் விமர்சகர்களிடமிருந்து பாராட்டுகளையும் அள்ளிக் குவித்தார். ஒரு கட்டத்தில் நடிகர் சித்தார்த் தனது கதாபாத்திரம் சரியாக அமைக்கப்படாததால் மிகவும் வருந்தியதோடு, பல மேடைகளில் இயக்குனருக்கு எதிராக தனது ஆதங்கத்தையும் வெளிப்படுத்தி இருந்தார்.


'ஜிகர்தண்டா' முதல் பாகத்தில் தோன்றிய சித்தார்த், பாபி சிம்ஹா கதாபாத்திரங்கள்

அசால்ட் சேதுவாக அசத்திய பாபி சிம்ஹா

வில்லனாக மட்டுமல்லாமல் ஹீரோ, குணச்சித்திரம் போன்ற எந்த மாதிரியான கதாபாத்திரம் கொடுத்தாலும் அதில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி பலரையும் கவர்ந்தவர் பாபி சிம்ஹா. அந்த வகையில் இவர் நடிப்பில் வெளிவந்த பல திரைப்படங்கள் ரசிகர்களிடம் மிகுந்த கவனம் பெற்றிருந்தாலும் 'ஜிகர்தண்டா' படத்திற்கு மட்டும் தனி இடமுண்டு. காரணம், இதில் அவர் ஏற்றிருந்த 'அசால்ட் சேது' கதாபாத்திரம் இந்திய அளவில் அவருக்கு கவனத்தைப் பெற்றுத் தந்ததோடு, சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருதையும் பெற்று கொடுத்தது. இது தவிர விஜய் அவார்ட்ஸ், தமிழ்நாடு ஸ்டேட் அவார்ட் உள்ளிட்ட விருதுகளையும் இப்படத்தின் மூலம் அவர் பெற்றார். சொல்லப்போனால் இப்படம் ரிலீஸ் ஆன சமயத்தில், இது சித்தார்த் படம் என்றுதான் பல ரசிகர்கள் திரையரங்குக்குள் நுழைந்தனர். ஆனால் படம் பார்க்க வந்தவர்களை எல்லாம் 'அசால்ட் சேது' கதாபாத்திரம் மிரட்டி உலுக்கியதோடு, வயிறு குலுங்க சிரிக்கவும் சிந்திக்கவும் செய்து பார்த்தவர்களை மிரள வைத்தது. இப்படத்தில் 'அசால்ட் சேது' இது நம்ம படம்டா’ என்று ஒரு வசனம் சொல்லுவார்,... அதற்கேற்றார் போலவே 'ஜிகர்தண்டா' திரைப்படம் அசால்ட் சேதுவின் படமாகவே மாறிப்போனது.


'அசால்ட் சேதுவாக' பாபி சிம்ஹா 

அந்த அளவிற்கு தனது சிறந்த நடிப்பை பாபி சிம்ஹா இப்படத்தில் வெளிப்படுத்தியிருந்தாலும், துவக்கத்தில் 'அசால்ட் சேது' கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதியை நடிக்க வைக்கத்தான் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் விரும்பினாராம். ஆனால் சில காரணங்களால் அந்த கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதியால் நடிக்க முடியாமல் போனதால், சிறு வயது அசால்ட் சேதுவாக கௌரவ தோற்றத்தில் நடித்திருந்தார். பின்னர் அந்த வாய்ப்பு பல போராட்டங்களுக்கு பிறகு பாபி சிம்ஹாவுக்கு சென்றது. இருப்பினும் கார்த்திக் சுப்புராஜுக்கு அவர் மீது பெரிய அளவில் நம்பிக்கை இல்லாமல்தான் இருந்ததாம். அதனால் கடைசிவரை அந்த கதாபாத்திரத்திற்கு பாபி சிம்ஹாவை நடிக்க வைப்பதில் இயக்குனருக்கு குழப்பம் இருந்துள்ளது. ஆனால் அவரது கேள்விக்குறியை, ஆச்சரியக் குறியாக மாற்றும் விதமாக பாபி சிம்ஹா அந்த கதாபாத்திரத்தில் மிகவும் தத்ரூபமாக நடித்து பலரின் பாராட்டுகளையும் பெற்றார். குறிப்பாக 'அசால்ட் சேது' கதாபாத்திரத்தை பார்த்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மிகவும் பாராட்டியிருந்தார். அதனாலேயே, பின்னாளில் கார்த்திக் சுப்புராஜ் ரஜினியுடன் இணைந்து ‘பேட்ட’ படத்தை இயக்கும் வாய்ப்பும் கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்க ஒன்று.

தீபாவளி சரவெடியாக 'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்'

‘ஜிகர்தண்டா’ படத்திற்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியை தொடர்ந்து, இப்படத்தின் இரண்டாம் பாகம் எப்போது வரும் என ரசிகர்கள் நீண்ட நாட்களாக காத்திருந்தனர். இருப்பினும் வருடங்கள் கடந்ததே தவிர அது குறித்த அறிவிப்பு எதுவும் வெளிவரவில்லை. இந்நிலையில் கடந்த 2022 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், ஜிகர்தண்டா படத்தின் 2ம் பாகத்தை தான் இயக்கவுள்ளதாக கார்த்திக் சுப்புராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்திருந்தார். அதுவும் ஒரு அழகான வீடியோ எடிட்டின் மூலம் பகிர்ந்திருந்த அந்த பதிவு வைரலானதோடு, ரசிகர்களின் ஆர்வத்தையும் எகிற வைத்தது. குறிப்பாக அசால்ட் சேதுவின் அடுத்த அவதாரத்தை பார்க்க ஆர்வமாக இருப்பதாக பல ரசிகர்கள் அந்த விடியோவிற்கு கீழ் பதிவிட்டிருந்தனர். ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ என பெயரிடப்பட்டிருந்த அப்படத்தை கார்த்திக் சுப்பராஜ் தனது ஸ்டோன் பெஞ்ச் நிறுவனத்தின் மூலம் பைவ் ஸ்டார் கதிரேசனுடன் இணைந்து தயாரிப்பதாக அறிவித்திருந்தார். படத்தின் நடிகர்கள் குறித்து அறிவிக்கப்படாத நிலையில், கடந்த ஆண்டு டிசம்பரில் 'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' படத்தின் டைட்டில் மற்றும் டீசர் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அதில் மௌத்தார்கன்னுடன் ஒருபுறம் எஸ்.ஜே.சூர்யா ஆச்சரியம் கொடுக்க, மறுபுறமோ மாஸ் என்ட்ரி கொடுத்து வித்தியாசமான கெட்டப்பில் பட்டையை கிளப்பியிருந்தார் ராகவா லாரன்ஸ்.


'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' படத்தில் எஸ்.ஜே.சூர்யா மற்றும் ராகவா லாரன்ஸ் வேட தோற்றங்கள் 

இதன் மூலம் இவர்கள் தான் படத்தின் முதன்மை கதாபாத்திரங்கள் என்ற தகவல் வெளிவந்ததை அடுத்து 'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகரிக்க துவங்கியது இப்படத்தின் ஷூட்டிங்கானது தமிழ்நாடு மற்றும் கேரளாவில் பல சுவாரசியமான இடங்களில் நடந்து வந்த அதே வேளையில் தினம் தினம் புது புது அப்டேட் வெளியாகி ரசிகர்களை குதூகலப்படுத்தியது. அதன்படி, ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே.சூர்யா இருவரும் பிரதான கதாபாத்திரங்களில் நடித்துள்ள இப்படத்தில் மலையாள நடிகை நிமிஷா சஜயன் நாயகியாக நடித்துள்ளதாக தகவல் வெளியானது. இந்த நேரத்தில்தான் கடந்த செப்டம்பர் 11 ஆம் தேதி 'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' படத்தின் டீசர் வெளியாகி பலரின் கவனத்தைப் பெற்றது. 1975-ஆம் ஆண்டு காலகட்டத்தில் நடக்கும் ஒரு பீரியட் படமாக படத்தின் டீசர் காட்சியளித்ததோடு, ‘ஜிகர்தண்டா’ முதல் பாகத்தைப் போலேவே இந்த படத்திலும் படத்தை இயக்குவது தான் கான்சப்டாக கார்த்திக் சுப்புராஜ் வைத்துள்ளார் என்பது தெளிவாக தெரிந்தது. மேலும் இந்த முறை எஸ்.ஜே.சூர்யா இயக்குனராகவும், கடந்த முறை பாபி சிம்ஹா ஏற்றிருந்த கேங்க்ஸ்டர் கதாபாத்திரத்தில் ராகவா லாரன்ஸும் நடித்து படத்திற்கு புதிய லுக் கொடுத்திருந்த விதம் பலரால் ரசிக்கப்பட்டது. குறிப்பாக கார்த்திக் சுப்புராஜ் நிகழ்த்தியுள்ள இந்த மேஜிக் தீபாவளி அன்று சரவெடியாய் திரையரங்குகளில் வெளியாகிறது என்ற தகவல் டீசரில் அறிவிக்கப்பட்ட நிகழ்வு, மீண்டும் அசால்ட் சேதுவை வேறொரு பரிமாணத்தில் காணும் மனநிலைக்கு கொண்டு சென்றுள்ளது.


கேங்க்ஸ்டர் ரோலில் காட்சியளிக்கும் ராகவா லாரன்ஸ் 

பாபி சிம்ஹாவை மிஞ்சுவாரா ராகவா லாரன்ஸ்

'ஜிகர்தண்டா' படத்தின் முதல் பாகத்தைப் பொறுத்தவரை நடிகர் சித்தார்த் தான் படத்தின் கதாநாயகன் என்றாலும், பட ரிலீசுக்கு பிறகு அசால்ட் சேதுவாக நடித்திருந்த பாபி சிம்ஹா தான் படத்தின் ஹீரோவாக மாறினார். சொல்லப்போனால் படத்தின் ப்ரோமோஷன் தொடங்கி டிரெய்லர் வரை எந்த இடத்திலும் பாபி சிம்ஹாவை பெரிய அளவில் முன்னிலை படுத்தாமல் தான் படம் ரிலீஸ் ஆனது. இருப்பினும் அதத்னையையும் மீறி அவர் சாதித்துக் காட்டினார். ஒருமுறை பாபி சிம்ஹா ‘ஜிகர்தண்டா’ படத்தில் தனக்கு கிடைத்த வாய்ப்பு குறித்து பேட்டியளித்திருந்த போது " 'அசால்ட் சேது' கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக நிறைய சிரமப்பட்டேன், கார்த்திக் சுப்புராஜை தினமும் தொல்லை செய்வேன். பின்னர் அந்த கதாபாத்திரம் உறுதியானதும் நான் வெயிட் குறைத்தேன். அதன்பிறகு நல்ல வெயிட்டும் போட்டேன். இந்தப் படத்துக்காக எனக்கு விருது எல்லாம் கிடைக்கும் என்று நினைக்கவில்லை. ஆனால், இந்தப் படம் 'தளபதி', 'நாயகன்' போல நல்ல பெயர் வாங்கும் என்ற நம்பிக்கை மட்டும் என்னிடம் அதிகமாகவே இருந்தது'' என அவர் கூறியிருந்தார். அந்த நம்பிக்கை தான் அவருக்கு வெற்றியாக கை கூடியது. ஆனால் 'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' படத்தை பொறுத்த வரை படத்தின் ப்ரோமோஷன் துவங்கி டீசர் வரை அனைத்திலுமே ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே.சூர்யா கதாபாத்திரங்கள் சமமாக காட்சிப்படுத்தப்பட்டு இருந்தன. சொல்லப்போனால் ராகவா லாரன்ஸ் கதாபாத்திரத்திற்கு கூடுதல் கவனம் கொடுக்கப்பட்டு, அடுத்தடுத்த பாடல்கள் அவரை முன்னிலைப்படுத்தியே வெளிவந்த வண்ணம் உள்ளன. மேலும் டீசரிலும் மாஸான விஷயங்கள் ராகவா லாரன்ஸிற்காகவே புகுத்தப்பட்டிருந்தது.


பாபி சிம்ஹா மற்றும் ராகவா லாரன்ஸ்

இது 'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' படத்திற்கு பிளஸ் பாயிண்டாக அமைந்தாலும், ராகவா லாரன்ஸின் கதாபாத்திரத்திற்கு கூடுதல் பளுவாக மாறியுள்ளது. காரணம், 'ஜிகர்தண்டா' முதல் பாகம் வெளிவந்த சமயம் பாபி சிம்ஹாவிற்கு எந்த அழுத்தமும், அவர் மீதான எந்த எதிர்பார்ப்பும் மக்களிடம் இல்லை. இதனால் முழு சுதந்திரத்துடன் எந்த சஞ்சலமும் இல்லாமல், அவரால் திறமையை வெளிப்படுத்த முடிந்தது. ஆனால் ராகவா லாரன்ஸிற்கோ ஏற்கனவே பாபி சிம்ஹா செய்த விஷயத்தை ரிப்பீட் செய்யக்கூடாது என்ற கட்டாயமும், அவரையும் மிஞ்சிய நடிப்பு திறமையை வெளிப்படுத்த வேண்டிய சூழ்நிலையும் ஏற்பட்டுள்ளது. இதில் கூடுதல் சிரமம் என்னவென்றால், இந்த படம் பீரியட் படம் என்பதனால் அந்த கால சூழ்நிலைக்கு ஏற்றார் போன்ற வசனத்தைப் பேசி, எதிரே நிற்கும் நடிப்பு அரக்கன் என அழைக்கப்படும் எஸ்.ஜே.சூர்யாவின் நடிப்பையும் மிஞ்சிய திறமையை வெளிப்படுத்த வேண்டிய நிர்பந்தம் ராகவா லாரன்ஸுக்கு ஏற்பட்டுள்ளது தான். ஏற்கனவே 'காஞ்சனா' போன்ற படங்களில் ஆக்ரோஷமான நடிப்பினை வெளிப்படுத்தியுள்ள லாரன்ஸ், 'இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம்' போன்ற பீரியட் படங்களில் நடித்த அனுபவமும் இதில் கைகொடுக்கும் என நம்பலாம். 'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' படத்தின் முதல் பாடல் வெளியீட்டின் போது மேடையில் பேசிய ராகவா லாரன்ஸ் " 'ஜிகர்தண்டா' முதல் பாகத்திலேயே நான் நடிக்க வேண்டியது, ஆனால் அப்போது தெலுங்கில் நான் பிஸியாக இருந்ததால் நடிக்க முடியாமல் போனது. பின்னர் அந்த படம் ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்பை பெற்றபோது, அதில் நடிக்க முடியாமல் போனதற்கு மிகவும் வருந்தினேன். ஆனால் இப்போது மகிழ்ச்சி அடைகிறேன். காரணம், அந்த படத்தில் நடிக்காமல் போனதனாலதான் தற்போது 'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' படத்தில் அதையும் மிஞ்சிய கதாபாத்திரத்தில் நடிக்கக்கூடிய வாய்ப்பு எனக்குக் கிடைத்துள்ளது'' என பேசியிருந்தார். இந்த எதிர்பார்ப்பும், நம்பிக்கையுமே ராகவா லாரன்ஸையும் வெற்றிப்பாதைக்கு அழைத்து செல்லும் என நம்பலாம்.

Tags:    

மேலும் செய்திகள்