தெறிக்கவிட்ட "ஜெயிலர் 2" அறிவிப்பு! மீண்டும் பட்டையை கிளப்ப வரும் "சூப்பர் ஸ்டார் முத்துவேல் பாண்டியன்"
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘கூலி’ படத்தைத் தொடர்ந்து சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகவுள்ள ‘ஜெயிலர் 2’ படத்தில் நடிக்கவுள்ளார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘கூலி’ படத்தைத் தொடர்ந்து சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகவுள்ள ‘ஜெயிலர் 2’ படத்தில் நடிக்கவுள்ளார். சில தினங்களுக்கு முன்பு வெளியான ‘ஜெயிலர் 2’ படத்தின் ப்ரோமோ வீடியோ ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில், தற்போது வெளிவந்துள்ள ப்ரோமோ வீடியோ குறித்தும், முந்தைய பாகமான ‘ஜெயிலர்’ படமானது தமிழ் சினிமாவில் எவ்வளவு பெரிய வெற்றியையும், தாக்கத்தையும் ஏற்படுத்தியது என்பது பற்றியும் விளக்கமாக இங்கே காணலாம்.
மாஸ் கிளப்பிய ‘ஜெயிலர்’ படம்
2023ஆம் ஆண்டில் இயக்குநர் நெல்சன் திலீப்குமாரின் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி மெகா ஹிட்டடித்த திரைப்படம் 'ஜெயிலர்'. சன் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் கலாநிதி மாறன் தயாரித்த இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். இப்படத்தில் ரஜினிகாந்த் ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி முத்துவேல் பாண்டியன் என்ற கதாபாத்திரத்தில் மாஸாகவும், ஆக்ஷனிலும் ரசிகர்களை ஈர்த்து அதகளம் செய்திருந்தார். மேலும் சிவராஜ்குமார், மோகன்லால், சுனில் குமார், தமன்னா, ஜாக்கி ஷராஃப், வசந்த் ரவி, யோகி பாபு, ரம்யா கிருஷ்ணன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். இந்த திரைப்படத்தின் கதை என்று பார்த்தால், முத்துவேல் பாண்டியன் (ரஜினிகாந்த்) ஓர் ஓய்வு பெற்ற சிறை அதிகாரி. அவர் சென்னையில் தனது மனைவி (ரம்யா கிருஷ்ணன்), மகன் அர்ஜுன் (வசந்த் ரவி), மருமகள் மற்றும் பேரன் ரித்விக் ஆகியோருடன் அமைதியாக வாழ்ந்து வருகிறார். இந்த நேரம் சென்னையில் சிலை திருட்டு உள்ளிட்ட சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டுள்ள விநாயகனை (வில்லன்) தேடி செல்லும் போலீஸ் அதிகாரி வசந்த் ரவி, திடீரென காணாமல் போகிறார். இதனால் குடும்பத்தில் சிக்கல் உருவாகுகிறது. இந்நிலையில் மகன் உயிரிழந்ததாக தகவல் வரும்போது, ரம்யா கிருஷ்ணன் ரஜினியை குற்றம் சொல்கிறார். இதற்கிடையே வில்லன் விநாயகன் முத்துவேல் பாண்டியனின் பேரனை குறி வைக்கிறார். இதனை அறிந்த முத்துவேல் பாண்டியன், தனது குடும்பத்தைப் பாதுகாக்க மீண்டும் அதிரடி ஆக்ஷனில் களமிறங்குகிறார். இந்த நேரம் அவரது நண்பர்கள் சிவராஜ்குமார் மற்றும் மோகன்லாலின் உதவியுடன், விநாயகன் மற்றும் அவரின் கூட்டத்தை கண்டறிந்து துவம்சம் செய்யும். முத்துவேல் பாண்டியன், இறுதியில், மகனின் மர்மமான உண்மையையும் தெரிந்து கொள்கிறார்.
ஜெயிலர் பாகம் ஒன்றின் போஸ்டர்
இப்படியான மாஸ், ஆக்ஷன், குடும்ப பாசம், திரில்லர் உள்ளிட்ட அம்சங்கள் கொண்ட இந்த படத்தில், திரைக்கதையில் மாஸாக பட்டையை கிளப்பி இருந்த இயக்குநர் நெல்சன், கதாபாத்திரங்களின் தேர்விலும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருந்தார். குறிப்பாக, மலையாள சினிமாவின் சூப்பர் ஸ்டார் மோகன்லால் மற்றும் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார் ஆகிய இருவரும் கேமியோ ரோல்களில் தோன்றி மிரட்டியது, மக்களிடத்தில் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தியது. வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற இப்படம், உலகம் முழுவதும் ரூ. 650 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்ததோடு, அந்த ஆண்டின் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் படமாக ரஜினிக்கும் அமைந்தது. மேலும் ஜெயிலர் திரைப்படத்தில் பழைய ரஜினியை பார்க்க முடிந்ததாக பல ரசிகர்கள் அப்போது சிலாகித்ததோடு, ‘பாபா’ படத்துக்கு பிறகு சந்திரமுகியில் ரஜினி எப்படி சிறப்பாக திரும்பி வந்தாரோ, அதுபோலவே இந்த படத்திலும் ரஜினிகாந்த் சூப்பரான கம்பாக் கொடுத்துள்ளார் என பலரும் அப்போது பாராட்டி இருந்தனர்.
ஜெயிலருக்கு முன்! ஜெயிலருக்கு பின்!
ஜெயிலர் படத்தின் சண்டை காட்சியில் அடியாட்களுடன் சூப்பர் ஸ்டார்
தமிழ் சினிமாவில் கடந்த நாற்பது ஆண்டுகளாக வெற்றிகளை குவித்து சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ரஜினி, என்னதான் தென்னிந்திய சினிமாவின் நட்சத்திர நடிகராக மிளிர்ந்து வந்தாலும், 2023-ஆம் ஆண்டு சமயத்தில் அவர் நடிப்பில் வெளியான பெரும்பாலான திரைப்படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறாமல்தான் இருந்தன. சொல்லப்போனால் ‘எந்திரன்’ படத்திற்கு பிறகு அவர் நடிப்பில் வெளியான ‘கபாலி’, ‘பேட்ட’ படங்களை தவிர ‘கோச்சடையான்’, ‘லிங்கா ‘, ‘காலா’, ‘2.0’, ‘தர்பார்’ என பெரும்பாலான திரைப்படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. குறிப்பாக ஜெயிலருக்கு முன் வெளியான ‘அண்ணாத்த’ திரைப்படம் கடுமையான விமர்சனத்தை எதிர்கொண்டு மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது. இதன் காரணமாக கட்டாய வெற்றியை எதிர்நோக்கிதான் ‘ஜெயிலர்’ திரைப்படம் அப்போது வெளிவந்தது. இந்த படம் ரஜினிக்கு மட்டும் அல்ல, இயக்குநர் நெல்சனுக்கும் மிக முக்கியமான திரைப்படமாகவே அந்த சமயம் சொல்லப்பட்டது.
'அண்ணாத்த' காளையன் ரஜினிகாந்த்
காரணம் ‘கோலமாவு கோகிலா’ திரைப்படத்தின் மூலம் தனது இயக்குநர் பயணத்தை தொடங்கிய நெல்சன் திலீப்குமார், அடுத்ததாக சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ‘டாக்டர்’ படத்தின் மூலம் ரூ. 100 கோடி கிளப்பில் இணைந்து பெரிய வெற்றி பெற்றிருந்தார். இதனால், நெல்சனின் அடுத்த படத்திற்கான எதிர்பார்ப்பு எகிறி இருந்தது. அதனைத் தொடர்ந்து, சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அனிருத் இசையுடன் விஜய்யை கதாநாயகனாக கொண்டு ‘பீஸ்ட்’ படத்தை இயக்கினார். ஆனால், பெரும் எதிர்பார்ப்புடன் வெளியான ‘பீஸ்ட்’, ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெறவில்லை. இந்த படம் பல விமர்சனங்களுக்கும், ட்ரோல்களுக்கும் ஆளாகியது. இந்த நிகழ்வுகளின் பின்னணியில், நெல்சன் ரஜினிகாந்துடன் இணைந்து ‘ஜெயிலர்’ படத்தை இயக்கப்போவதாக அறிவிக்கப்பட்டது. விஜய் ரசிகர்களிடமிருந்து வந்த கடுமையான விமர்சனங்களால் நெருக்கடியில் இருந்த நெல்சனின் திறமையை பற்றிய கேள்விகளும் அப்போது எழுந்தன. “இவரால் ரஜினியை வைத்து வெற்றிப் படம் எடுக்க முடியுமா?” என்ற சந்தேகமும் பலரிடம் அப்போது நிலவியது. ஆனால், எதிர்பார்ப்புகளை மீறி, ‘ஜெயிலர்’ திரைப்படம் திரையரங்குகளில் மாபெரும் வெற்றியைப் பெற்றது. இது ரஜினி ரசிகர்களுக்கு பேரானந்தத்தை வழங்கியது. இந்த மகிழ்ச்சியின் வெளிப்பாடாக, படத்தின் தயாரிப்பாளர் கலாநிதி மாறன் முதலில் நடிகர் ரஜினிகாந்துக்கு செக் வழங்கி, பின்னர் அவருக்கு BMW X7 கார் ஒன்றை பரிசாக அளித்தார். அதேபோல, ரஜினியின் கம்பேக்கிற்கு காரணமாக இருந்த இயக்குநர் நெல்சனுக்கும் செக் வழங்கி, அவருக்கு Porsche கார் ஒன்றை பரிசளித்தவர், இசையமைப்பாளர் அனிருத்துக்கும் செக் வழங்கி, அவருக்கும் Porsche கார் ஒன்றை பரிசாக வழங்கி ஆச்சரியத்தை ஏற்படுத்தினார்.
'பீஸ்ட்' திரைப்படத்தில் துப்பாக்கியுடன் ஒரு காட்சியில் நடிகர் விஜய்
மீண்டும் வரும் முத்துவேல் பாண்டியன்
‘ஜெயிலர்’ படத்தின் மாபெரும் வெற்றிக்கு பின், ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த ‘லால் சலாம்’ மற்றும் ‘வேட்டையன்’ ஆகிய இரு படங்களும் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றியடையவில்லை. இவற்றில், ‘வேட்டையன்’ படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும், வசூலில் ஓரளவுக்கு மட்டும் வெற்றி கண்டது. இதற்கு பிறகு ரஜினிகாந்த் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் ‘கூலி’ படத்தில் நடித்து வருகிறார். இதேசமயம், ‘ஜெயிலர்’ படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து, இதன் இரண்டாம் பாகத்திற்கான கதையை இயக்குநர் நெல்சன் உருவாக்கி வந்தார். இந்த நேரத்தில் தான் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, சில நாட்களுக்கு முன்பு ‘ஜெயிலர் 2’ படத்தின் ப்ரோமோ வீடியோவை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டது. அந்த ப்ரோமோவில் இயக்குநர் நெல்சன் மற்றும் இசையமைப்பாளர் அனிருத் இருவரும் ஒரு அறையில் பேசிக் கொண்டிருக்கும் காட்சி தொடங்குகிறது. அப்போது அந்த அறையில் திடீரென துப்பாக்கிச்சூடு நடைபெறுகிறது. இந்த பரபரப்பான சூழலில், ரஜினிகாந்த் அந்த அறைக்குள் நுழைகிறார். அவர் வீசும் கையெறி குண்டு வெடித்து அறை முழுவதும் புகை மண்டலமாகிறது. அதன் பின், சுவரை உடைத்துக்கொண்டு உள்ளே நுழையும் வில்லன்களை, ரஜினி தனக்கே உரிய ஸ்டைலில் வீழ்த்தும் மாஸ் காட்சிகள் அந்த ப்ரோமோவில் இடம்பெற்றிருந்தன.
மீண்டும் முத்துவேல் பாண்டியனாக கலக்கவரும் ரஜினிகாந்த்
முந்தைய பாகத்தை போலவே, இரண்டாம் பாகத்திலும் ஆக்ஷன் காட்சிகள் அனல் பறக்கும் என்பது உறுதியாகும் வகையில் ‘ஜெயிலர் 2’ படத்தின் ப்ரோமோ வீடியோ அமைந்திருந்ததை பார்த்த ரசிகர்கள் அதனை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து கொண்டாடி வருகின்றனர். தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் இந்த ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ள நிலையில், அனைத்து தரப்பு ரசிகர்களிடத்திலுமே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. தற்போது ரஜினிகாந்த், லோகேஷ் கனகராஜ் இயக்கும் ‘கூலி’ படத்தில் நடித்து வருவதால், அந்த படப்பிடிப்பு முடிவடைந்ததும் ‘ஜெயிலர் 2’ படப்பிடிப்பை தொடங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, மகாராஷ்டிரா உள்ளிட்ட பல மாநிலங்களில் இதன் படப்பிடிப்பு நடைபெற உள்ளதாக கூறப்படும் நிலையில், முதல் பாகத்தில் பணிபுரிந்த தொழில்நுட்ப கலைஞர்களே இதிலும் பணி புரிவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.‘ஜெயிலர் 2’ படத்தில் ரஜினியுடன் வேறு யார் யார் நடிக்க உள்ளனர் என்பது விரைவில் அறிவிக்கப்படும் என கூறப்படுகிறது. இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு ‘ஜெயிலர் 2’ படத்தின் அறிவிப்பு ப்ரோமோ வீடியோவின் மேக்கிங் காட்சிகள் வெளியிடப்பட்டு ரசிகர்களின் எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது. இந்த எதிர்பார்ப்புகளை ‘ஜெயிலர் 2’ படம் உறுதியாக நிறைவேற்றும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை!