தொடர் தோல்விகளிலிருந்து மீண்டு வெற்றி பாதைக்கு திரும்புமா பாலிவுட்?
கடந்த சில ஆண்டுகளாக பாலிவுட் திரையுலகம் கடினமான காலத்தை சந்தித்து வருகிறது. பலவீனமான திரைக்கதை மற்றும் சுவாரஸ்யம் இல்லாத கதைக்களங்களைக் கொண்ட மசாலா திரைப்படங்கள் தான் தற்போது வெளியாகிவருகிறது. இதனால் ஹிந்தி சினிமா வெற்றி படங்களை கொடுக்க தடுமாறுகிறது. இந்த வருடத்தில் பாலிவுட்டில் இதுவரை சுமார் 45 படங்களுக்கு மேல் வெளியாகியிருக்கும் ஆனால் ஒரு படங்கள் கூட பெரிய வெற்றியடையவில்லை. சமீபத்தில் வெளியான மைதான் திரைப்படம் விமர்சனம் ரீதியாக பேசப்பட்டாலும் பெரிய வசூலை அடையவில்லை
கடந்த சில ஆண்டுகளாகவே பாலிவுட் திரையுலகம் கடினமான காலத்தை சந்தித்து வருகிறது. பலவீனமான திரைக்கதை மற்றும் சுவாரஸ்யம் இல்லாத கதைக்களங்களைக் கொண்ட மசாலா திரைப்படங்கள்தான் அங்கு அதிகம் வெளியாகி வருகின்றன. இதனால் ஹிந்தி சினிமா வெற்றி படங்களை கொடுக்க தடுமாறுகிறது. இந்த வருடத்தில் பாலிவுட்டில் இதுவரை சுமார் 45 படங்களுக்கு மேல் வெளியாகியிருக்கும். ஆனால் ஒரு படம்கூட பெரிய வெற்றியடையவில்லை. சமீபத்தில் வெளியான மைதான் திரைப்படம் விமர்சன ரீதியாக பேசப்பட்டாலும் பெரிய வசூலை அடையவில்லை. இதனால் நல்ல தரமான படங்களுக்காக மக்கள் காத்துக்கொண்டிருக்கின்றனர். இப்பொழுது பெரிய ஹீரோக்களின் படங்கள் பெரிதாக வெளியாகாததால் ஏற்கனவே வெளியாகி பெரிய வெற்றியடைந்த படங்களை மீண்டும் ரீ ரிலீஸ் செய்து கொண்டாடி வருகின்றனர். இந்த வருடத்தில் ஹிந்தி திரையுலகில் பெரிதும் எதிர்பார்த்து தோல்வியடைந்த படங்களை பற்றியும், கொண்டாடப்படும் ரீ-ரிலீஸ் செய்யப்பட்ட படங்களை பற்றியும் இக்கட்டுரையில் காணலாம்.
விஜய்சேதுபதி கதாநாயகனாக அறிமுகமான மெர்ரி கிறிஸ்துமஸ் திரைப்படத்திலிருந்து ஒரு காட்சி
அந்தாதுன் இயக்குநரின் அடுத்த படைப்பு - மெர்ரி கிறிஸ்துமஸ் :
மும்பை மாநகரம் 'பம்பாய்' என அழைக்கப்பட்ட காலத்தில், ஒரு கிறிஸ்துமஸ் பெருநாளிற்கு முந்தைய நாள் மாலை 'துபாயிலிருந்து' ஏழு ஆண்டுகளுக்குப் பிறகுத் தன் வீட்டிற்கு வருகிறார் ஆல்பர்ட் (விஜய் சேதுபதி). அன்றிரவு அவர் ஹோட்டல் ஒன்றுக்குச் செல்ல, அங்கே தன் மகளுடன் வந்த மரியாவிடம் (கத்ரீனா கைஃப்) நட்பாகிறார். டேட்டிங்காக விரியும் அந்தச் சந்திப்பைத் தொடர்ந்து, எதிர்பாராத விதமாக இருவரும் ஒரு பிரச்சினையில் சிக்கிக்கொள்கின்றனர். அதன்பிறகு அந்த ஓர் இரவிற்குள் இருவருக்கும் நடக்கும் சம்பவங்கள்தான் ஶ்ரீராம் ராகவனின் மெர்ரி கிறிஸ்தமஸ் திரைப்படம். பெரிதும் எதிர்பார்க்கபட்ட இத்திரைப்படம் மக்களால் வரவேற்கப்படவில்லை. அந்தாதுன் இயக்குநரின் படத்தை பாலிவுட் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்த நிலையில் விஜய்சேதுபதியை கொண்டாட தவறிட்டனர்.
நீண்ட இடைவேளைக்கு பின் ஜோதிகா நடிப்பில் ஹிந்தியில் வெளியான "சைத்தான்"
பாலிவுட்டில் ஜோதிகாவின் கம்பேக் - சைத்தான் :
வார இறுதியை பண்ணை வீட்டில் குடும்பத்துடன் கொண்டாட கபீர் (அஜய் தேவ்கன்) தனது மனைவி ஜோதி (ஜோதிகா) மற்றும் குழந்தைகள் ஜான்வி (ஜான்கி பொடிவாலா), துருவ் (அங்கத் ராஜ்) உடன் செல்கிறார். போகிற வழியில் வனராஜ் (மாதவன்) என்பவரை சந்திக்கிறார். சட்டென குடும்பத்தினருடன் நட்பாக பழக ஆரம்பித்துவிடுகிறார் வனராஜ். அப்போது ஜோதிகாவின் மகளுக்கு லட்டு ஒன்றை கொடுக்கிறார். அந்த பெண்ணும் ஆசையாய் அதை வாங்கி சாப்பிடுகிறார். பின்னர், இவர்கள் பண்ணை வீட்டுக்குச் செல்ல, பின்னாடியே மாதவனும் வருகிறார். அதன் பின்னர்தான் வசியம் செய்த லட்டு கொடுத்து மகளை வனராஜான மாதவன் ஆட்டிப் படைக்க ஆரம்பித்ததும், இதுவரை நட்பாக பழகியது இதற்குத்தானா என்றும் குடும்பத்தினர் அதிர்ச்சியடைகின்றனர். மேலும், மகளை வைத்தே குடும்பத்தில் உள்ளவர்களை கொல்ல உத்தரவிடுவது, டார்ச்சர் செய்வது என அந்த சிறுமியை கொடுமைப்படுத்துகிறார் மாதவன். தனது மகளையும் குடும்பத்தையும் அந்த சாத்தானிடம் இருந்து காப்பாற்ற அஜய் தேவ்கன் என்ன செய்கிறார் என்பதுதான் இந்த படத்தின் கரு. பேய் படத்துக்கு உண்டான அனைத்து மிரட்டல்களும் இருந்தாலும், படத்தின் கிளைமேக்ஸ் மற்றும் மாதவன் அந்த பெண்ணை பாடாய் படுத்துவதற்காக சொல்லப்படும் காரணங்களும் பெரிதாக ரசிகர்களை ஈர்க்க தவறின. அதனாலேயே மக்கள் இந்த படத்தை கொண்டாடவில்லை. மாதவனின் நடிப்பு மட்டுமே இந்த படத்தில் சிறப்பாக இருந்தது. குஜராத் மொழியில் வெளியான வஸ்த் என்கிற படத்தின் ரீமேக்தான் இந்த படம். வஸ்த் படம் மக்களை கவர்ந்தது போல் சைத்தான் படம் மக்களை கவரவில்லை.
நீண்ட நாட்களுக்கு பின் ஹிரித்திக் ரோஷனின் கம்பேக் திரைப்படம் "ஃபைட்டர்"
நீண்ட நாட்களுக்கு பின் ஹிரித்திக் ரோஷனின் படம் :
கடந்த ஆண்டு ஷாருக்கான், தீபிகா படுகோன், ஜான் ஆபிரகாம் நடித்து வெளியான பதான் திரைப்படம் 1000 கோடி வசூலை ஈட்டி ஷாருக்கானுக்கு மிகப்பெரிய கம்பேக் கொடுத்தது. ஒரே வருடத்தில் ஹாட்ரிக் ஹிட் அடித்தார் பாலிவுட் கிங் கான். அதே பாணியை தற்போது ஹிரித்திக் ரோஷன் கடைபிடித்துள்ளார். இந்தியா-பாகிஸ்தான் கதைகளை பெரிய திரையில் சொல்வதில் பாலிவுட்டுக்கு நிகர் இல்லவே இல்லை. ஃபைட்டர் டிரைலரே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. படம் எந்த காலகட்டத்தில் நடந்தது என்பது வெளிப்படையாகக் கூறப்படவில்லை என்றாலும், புல்வாமாவில் இந்திய விமானப்படைகள் மீது நடந்த மிக மோசமான பயங்கரவாத தாக்குதல் மற்றும் அதன்பிறகு பாலகோட்டில் எல்லை தாண்டி இந்தியா நடத்திய தாக்குதல் குறித்து போதுமான விஷயங்கள் படத்தில் அதிகமாக இருக்கின்றன. ஆனால் இதேபோல் பல கதைகள் வந்ததால் படத்தை ரசிகர்கள் விரும்பவில்லை. இந்தியா, பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே பிரச்சினை என்கிற திரைக்கதையில் பல படங்கள் பாலிவுட்டிலேயே வந்துள்ளன. அதே போல்தான் இந்த படமும் இருந்ததாக ரசிகர்களுக்கு சலிப்பு தட்டியதால், அதிக பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட இத்திரைப்படம் வசூலை குவிக்க தவறியது.
விமர்சன ரீதியாக வெற்றிபெற்ற மைதான் :
ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் மைதான் படமும் ஒன்று. 1960 களில் நடந்த கால்பந்தாட்டத்தை பற்றிய படம்தான் மைதான். இன்றளவிலும் இந்தியாவில் பெரிதாக கால்பந்துக்கென்று ரசிகர்கள் இல்லை. அதேபோல் 1960களில் கால்பந்து அணி அடிப்படை வசதிக்காக மிகவும் கஷ்டப்பட்டது. அப்பொழுது இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்த சையது அப்துல் ரஹீம், 1962 ஆசிய போட்டியில் இந்திய அணி தங்கப்பதக்கம் வெல்வதற்கு மிகமுக்கிய காரணமாக இருந்தார். அவரது வாழ்க்கை வரலாறுதான் இந்த மைதான் திரைப்படம். விமர்சன ரீதியில் பெரிதாக இந்த படம் பேசப்பட்டாலும், பெரிதாக வசூலை குவிக்க தவறியது. மக்கள் மத்தியில் நன்கு பேசப்பட்ட இப்படம் 2 வாரங்களில் திரையரங்கில் இருந்து நீக்கப்பட்டது. அதற்கு காரணம் ஓடிடி தளத்தில் முன்னதாகவே இந்த படத்தை வெளியிடுவதற்கான தேதியை அறிவித்துவிட்டார்கள். அதனால் இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றாலும், பாலிவுட்டில் தோல்வி படமாகவே அமைந்தது.
பெரிய வசூலை குவிக்க தவறிய அஜய் தேவ்கனின் "மைதான் "
ரீ-ரிலீஸ் செய்யப்படும் ஹிந்தி படங்கள் :
பெரிய நடிகர்களின் படம் பெரிதாக வெற்றி பெறாத காரணத்தினால் பழைய படங்களை ரீ-ரிலீஸ் செய்து பாலிவுட் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். ரன்பிர் கபூரின் "ஏ ஜவானி ஹை தீவானி ", "வேக் அப் சித்", குறிப்பாக ரன்பிர் கபூருக்கு மிகப்பெரிய தோல்வி படங்களாக அமைந்த தமாஷா மற்றும் ராக்ஸ்டார் திரைப்படங்கள் இப்பொழுது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. அதன்பிறகு ஷாருக்கானின் ஸ்வதேஸ், டான், மை நேம் இஸ் கான் போன்ற படங்களை ரசிகர்கள் மீண்டும் ரசித்து வருகின்றனர். இப்படி பழைய படங்கள், புது படங்களை காட்டிலும் வசூலை குவித்து வருகின்றன. அதனால் மிகப்பெரிய வெற்றிக்கு ஹிந்தி சினிமா காத்துக்கிடக்கின்றது. இதனால் இந்த வருடத்தில் வெளியாகவிருக்கும் சபீரா, சித்தாரே சமீன் பர், சிங்கம் அகைன் போன்ற படங்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.
இந்நிலையில், ஆண்டின் முதல் பாதியில் தோல்வியில் துவண்டு போயுள்ள பாலிவுட் உலகம், சரிவிலிருந்து மீண்டு வெற்றி பாதைக்கு திரும்புமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.